ஓவிய உலகின் இளையராஜா!

ஓவிய உலகின் இளையராஜா விஸ்வகர்மா சமூகத்தை சார்ந்தவர். தன்னுடைய பிரசித்தி பெற்ற ஓவியங்களால் அவரை இந்த உலகம் இளைய ராஜாவாக போற்றி கொண்டாடியது.இவரை இனி யாராலும் வெல்ல முடியாது என்று காலம் அவரை அழைத்துக் கொண்டான் போலும்!

இந்த மாபெரும் கலைஞரை இழந்த அவர் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகளே இல்லை!

அன்னாருக்கு பொள்ளாச்சி விஸ்வகர்மா நல அமைப்பு விஸ்வாஸ் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

அவரது மறைவையொட்டி விகடனில் வெளிவந்த கட்டுரை அனைவரின் பார்வைக்கு:

அரசமரத்தடியில் வெள்ளைப் பிள்ளையார் முன்பு மனமுருகப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் அந்தக் குழந்தைகளைப் பார்க்கும்போது நாமும் அவர்களோடு பிரார்த்திக்கத் தொடங்கிவிடுகிறோம்; பாவாடைத் தாவணியில் பெண்ணொருத்தி மாவரைத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கும் ஒருவருக்குத் தன்னுடைய அண்ணன் அல்லது அக்காளின் மகள் முகம் தவறாமல் வந்துசெல்லும்; திண்ணையில் பூத்தொடுத்துக் கொண்டிருக்கும் பெண்ணின் முகத்தில் இறங்கியிருக்கிறது இளமையின் பூரணம்; கோயில் குளத்தில் இறங்கிப் பூக்களைக் கரைக்கும் பெண் ஒட்டுமொத்த குளத்தையும் தீர்த்தமாக்குகிறாள் – நம் காலத்தின் மகா கலைஞன் ஓவியர் இளையராஜாவின் ஓவியங்களில் வெளிப்படும் தருணங்கள் இவை!

இளையராஜா ஓவியம்
இளையராஜா ஓவியம்
 

ஓவியமா, ஒளிப்படமா என்று பார்க்கும் எல்லோரையும் ஒரு நொடி திகைப்பிலும் ஆழ்த்தும், வியப்பிலும் ஆழ்த்தும் தத்ரூப ஓவியங்களின் அரசன் இளையராஜா. ஆனந்த விகடனில் 2010-ம் ஆண்டு முதல் வெளிவரத் தொடங்கிய இளையராஜாவின் ஓவியங்கள், நாடு கடந்து உலகம் முழுவதும் புகழ்பெறத் தொடங்கின. நம் காலத்தின் தனித்துவமான கலைஞனாக இயங்கிவந்த இளையராஜா, நேற்று நள்ளிரவு 12 மணியளவில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்; அவருக்கு வயது 43.

கும்பகோணம் அருகே செம்பியவரம்பல் எனும் கிராமத்தில் பிறந்த இளையராஜா, ஐந்து அண்ணன்கள், ஐந்து அக்காக்கள் கொண்ட மிகப் பெரிய குடும்பத்தில் கடைசி பையனாகப் பிறந்தார். கும்பகோணம் நகர உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பு முடித்த இளையராஜா, கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் ஓவியப் படிப்பை முடித்தார். கிராமத்துத் தமிழ்ப் பெண்களின் அன்றாடங்கள் இளையராஜாவின் ஓவியங்களில் அற்புதத் தருணங்களாக வெளிப்பட்டன; அவை ஆனந்த விகடனில் தொடர்ந்து வெளிவந்து உலகளவில் புகழ்பெற்றன.

ஓவியர் இளையராஜா
ஓவியர் இளையராஜா
 

“யதார்த்த பாணி ஓவியங்களில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கிக்கொண்டவர் ஓவியர் இளையராஜா. அவருடைய ஓவியங்கள் ஓவியர் ரவிவர்மாவின் தம்பியான ஓவியர் ராஜ ராஜ வர்மாவின் ஓவியங்களை எனக்கு நினைவூட்டியவை. நிறங்களை அவர் இவ்வளவு நுட்பத்துடன் பயன்படுத்துவதைப் பார்த்து வியப்பாக இருக்கும். காவேரிக் கரை சார்ந்த பெண்களின் உலகம் தி.ஜானகிராமன் முதல் தஞ்சை ப்ரகாஷ் வரை இலக்கிய உலகில் பதிவானது உண்டு. அதை ஓவியத்தில் கொண்டு வந்தவர் இளையராஜா” என்கிறார் ஓவியர் சந்தோஷ் நாராயணன்.

“இளையராஜா 17, 18 வயதுப் பையனா இருந்தப்போ, அவன் படிச்ச கும்பகோணம் டவுன் ஹைஸ்கூல் ஓவிய ஆசிரியர் அவனை என்கிட்ட அழைச்சிட்டு வந்து கும்பகோணம் ஓவியக் கல்லூரில சேருவதற்குப் பயிற்சி கொடுக்கச் சொல்லிக் கேட்டுக்கிட்டார். அவனோடு சேர்ந்து நிறைய மாணவர்கள் என்கிட்ட அப்போ பயிற்சில இருந்தாங்க. ஆனா, சேர்ந்த ஒருவாரத்துல அவனோடு பயிற்சில இருக்க மாணவர்களுக்கு பாடம் எடுக்கிற அளவுக்கு இளையராஜா நான் சொல்லிக் கொடுத்த விஷயங்களைக் கத்துக்கிட்டான். அந்தளவுக்கு அதீத திறமை அவனுக்கு. நாங்களெல்லாம் ரொம்பக் காலம் கஷ்டப்பட்டு கத்துக்கிட்ட விஷயத்தை ரொம்ப இயல்பா 15 நாட்கள்ல அவன் கத்துக்கிட்டான்” பெருமை பொங்க பேசுகிறார், இளையராஜாவின் ஓவிய ஆசிரியர் ஓவியர் மனோகரன்.

ஓவியர் இளையராஜா
ஓவியர் இளையராஜா
 

“எங்கு சென்றாலும் நான், இளையராஜா, சிவபாலன் எல்லாம் ஒன்றாகத்தான் செல்வோம். அமெரிக்கா, ரஷ்யா, சிங்கப்பூர்னு எல்லா நாடுகளுக்கும் நாங்க ஒன்றாகத்தான் பயணம் செஞ்சிருக்கோம். ஒருமுறை அமெரிக்காவுல நியூயார்க் பக்கத்துல பிராங்க்ஸ்’ங்கிற இடத்துல நாங்க ‘ஸ்பாட் பெயின்ட்டிங்’ பண்ணிட்டு இருந்தோம். அப்போ அங்கிருந்த அமெரிக்க ஓவியர்கள் அவர்கள் ஓவியம் வரைவதை நிறுத்திவிட்டு எங்களைக் கவனிக்க ஆரம்பிச்சாங்க; கொஞ்ச நேரத்துல பார்த்தா எல்லாருடைய பார்வையும் இளையராஜாமேல இருந்தது. ஓவியர்கள் மட்டுமில்லாமல், அங்கு கூடியிருந்த மக்கள் எல்லோரும் இளையராஜா ஓவியத்தைப் பார்த்து பிரமிச்சுப் போய் பாராட்டி மகிழ்ந்தாங்க. இதே மாதிரியான அனுபவங்கள், பாராட்டுகள் இளையராஜா போன எல்லா இடங்களிலும் அவனுக்கு கிடைச்சிருக்கு; தமிழர்கள் மட்டுமில்ல, உலகம் முழுக்க அவனுக்கு ரசிகர்கள் இருக்காங்க!

‘புது வீடு கட்டியிருக்கேன், கீழயே ஸ்டுடியோவும் போட்டிருக்கேன் நீங்க அவசியம் வந்து பார்க்கணும் சார்’னு போன் பண்ணி கூப்பிட்டான். புது ஸ்டுடியோவுல ஆரம்பிச்சிருக்க புது ஓவியங்களோட படத்தை வாட்ஸ்அப்-ல அனுப்பிருந்தான்… அதை முடிக்காமலேயே போய்ட்டான்” குரல் உடைகிறது மனோகருக்கு.

இளையராஜா ஓவியம்
இளையராஜா ஓவியம்
 

நிதானித்துக் கொண்டு மீண்டும் தொடர்ந்த மனோகர், “யதார்த்த பாணி ஓவியங்களை மட்டுமே வரைவேன்னு பிடிவாதமாக இருந்து இத்தனை சின்ன வயசுல சென்னையில் தனித்து வளர்ந்திருக்கிறது ஒரு ஓவியராகச் சாதாரண விஷயம் கிடையாது. சம்பிரதாயத்துக்காகச் சொல்லவில்லை… இளையராஜாவின் இழப்புங்கிறது உண்மையிலேயே ஈடுசெய்ய முடியாத இழப்பு. உண்மையில் இனிமேல் யாராவது பிறந்துதான் வரவேண்டும்” என்றார்.

“நானும் இளையராஜாவும் ஓவியர் மனோகர் சாரின் மாணவர்கள். நான் முதலில் அவரிடம் சேர்ந்தேன்; அவன் வந்ததும் மனோகர் சார் என்னிடம் சேர்த்துவிட்டார். அங்கிருந்துதான் எங்கள் நட்பு தொடங்கியது. மனோகர் சாருடன் இருந்ததால், வாட்டர் கலரில் எங்களுக்கு மோகம் அதிகம். அதில் தான் எங்கள் கலைப் பயணம் தொடங்கியது. மனோகர் சாருக்குப் பிறகு, கல்லூரியில் எங்கள் பேரைக் குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் வரைந்தோம்; அப்படித்தான் நாங்கள் வெளியுலகுக்குத் தெரியத் தொடங்கினோம்” என்று தங்கள் தொடக்கக் கால நினைவுகளைப் பகிர்கிறார் ஓவியர் சிவபாலன்.

“இளையராஜா தமிழ்ப் பெண்களை அதிகம் வரைய ஆரம்பித்தான். தனக்கென்று ஒரு பாணியைத் தமிழ்நாட்டில் முன்னெடுத்தான். நவீனக் காலத்தில் அந்த முறையைத் தான் கடைப்பிடிப்பேன் என்று பிடிவாதமாக இருந்தது ரொம்பப் பெரிய விஷயம்; உலகம் எத்தனை நவீனமாக ஆனாலும், தன்னுடைய கடைசி காலம் வரை யதார்த்த பாணி ஓவியங்களைத்தான் வரைவேன் என்று எப்போதும் பேசிக் கொண்டிருப்பான்” பெருமை பொங்கக் கூறுகிறார் சிவபாலன்.

தத்ரூப ஓவியங்களின் அரசன் இளையராஜா மரணம்… சிறு அலட்சியத்தால் மாபெரும் கலைஞனை இழந்துவிட்டோம்!

ஓவியர்கள் எல்லாம் பெரும்பாலும் ஒரே பாணியில் மட்டும்தான் வரைவார்கள்; ஆனால் இளையராஜா வாட்டர் கலரில் முதன்மையாக இயங்கினாலும், அவன் இயங்காத ஓவிய முறையே கிடையாது. காலையில் வாட்டர் கலர், மதியம் ஆயில் பெயின்ட்டிங், இரவு அக்ரலிக் எனப் பலவிதமான ஓவிய முறைகளில் இயல்பாக ஈடுபடுவான். பழைய மாஸ்டர்கள் யாருமே இப்போது இல்லாத நிலையில், ஓவியர்களில் தனித்துவமான கலைஞனாக வளர்ந்துவரும் கலைஞர்களுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கினான் இளையராஜா; தென்னிந்திய ஓவியர்களுக்கே ஓர் முன்னுதாரணமாக இருந்தான். அவனுடைய இழப்பு ஈடுசெய்ய முடியாதது!” துக்கம் மேலிடப் பேசுகிறார் சிவபாலன்.

நன்றி: விகடன்

Be the first to comment on "ஓவிய உலகின் இளையராஜா!"

Leave a comment

Your email address will not be published.


*