மன்னன் உயிர் காத்த சிற்பி.குப்புமுத்து ஆச்சாரியார்

நாட்டிற்காக தன் உயிர் ஈந்து மன்னன் உயிர் காத்த சிற்பி.குப்புமுத்து ஆச்சாரியார் அவர்கள் தியாக சரித்திரம்!
இதோ காலத்தால் அழிக்க முடியாத சரித்திரம்:
ஓர் ஆலய கோபுரத்தை பீரங்கியால் தாக்கித் தகர்த்து விடுவோம் என்று வெள்ளையர்கள் மிரட்டியதும், அக்கோபுரத்தைக் காக்கும் நோக்கில் சரணடைந்து, வெள்ளையர்களால் தண்டிக்கப்பட்டு, தூக்கில் தொங்கி, தங்கள் இன்னுயிரை ஈந்து, சரித்திரத்தில் இடம் பெற்ற இரு மாவீரர்களைப் பற்றி நீங்கள் அறிவீர்களா ?
அந்த மாவீரர்கள் தான் சிவங்கைச் சீமையை ஆட்சி புரிந்த மருது பாண்டிய சகோதரர்கள்.அவர்கள் காக்க விரும்பியது  களையார் கோயில் கோபுரத்தை. அக்கோபுரத்தை வானளாவ எழுப்பியதே அவர்கள்தான். அதுவும் எப்படித் தெரியுமா?
காளையார் கோயிலிலிருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மானா மதுரையிலிருந்து செங்கல் கொண்டுவர வேண்டியிருந்தது. அங்கே தான் செங்கற்சூளைகள் இருந்தன. இந்த ஊர் மண்பாண்டங்களுக்குப்  பெயர் பெற்றது. அதிலும் ‘கடம்’ எனப்படும் மண்பாண்ட இசைக்கருவி மானா மதுரை மண்ணில் செய்யப்படுவதற்கே வரவேற்பு அதிகம்.
மருது பாண்டியர்கள் எழுப்பும் காளையார் கோயில் கோபுரத்திற்குக் கற்கள் கொண்டு செல்ல வேண்டும் என்றதும், வண்டி எதுவும் வைக்காமல், இருபது கல் தொலைவுக்கும் மக்களே வரிசையாக, மனிதச் சங்கிலியாக நின்று, ஒருவர் கை மாற்றி ஒருவர் கற்களைக் கொண்டுவந்து சேர்த்து விட்டனர். மன்னர்கள் செய்யும் ஆலயப் பணி சிறப்படைவதில் மக்களுக்கு அத்தனை ஆர்வம் ! காளையார் கோயில் மிகப் பழமையானது.
அதில் முன்பே ஒரு ராஜகோபுரம் உண்டு. அது பன்னிரண்டாம் நூற்றாண்டில், சுந்தரபாண்டியனால் எழுப்பப் பெற்றது. அதை மாற்றவோ, சிதைக்கவோ கூடாது என்று கருதியே பெரிய மருது புதிய கோபுரத்தைக் கட்ட எண்ணினார். இது சோமேசர் கோயிலின் முன் 157 அடி உயரத்தில் அமைந்து, கம்பீரமாக வானைத் தொட்டாற்போல் அழகுற எழுந்து நிற்கிறது.
இக்கோபுரத்தின் உச்சியில் நின்று, தூரதரிசினி கருவி மூலம் நோக்கினால் மதுரை மீனாட்சியம்மன் கோயில் கோபுரம் தெரியும் என்கிறார்கள்.
(சில வருடத்திற்கு முன்னால் மதுரையில் தமிழ்த்தாயின் சிலையை மிகப் பிரமாண்டமாக நிறுவ எண்ணிய தமிழக அரசு, இடம் தேடி, வண்டியூர் கண்மாய் அருகே நிறுவலாம் என்று தீர்மானித்த நிலையில், அப்படி நிறுவினால் அது மருது பாண்டியர் எழுப்பிய காளையார் கோயில் கோபுரத்திற்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோபுரத்திற்கும் இடையே ஒரு பார்வைத் தடையாக அமைந்துவிடும் என்று மக்கள் கூறியதால், அத்திட்டத்தை மாற்றி வேறு இடம் தேடுவதாகப் பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. அந்த அளவு மருது பாண்டியரின் பக்தி உணர்வை மக்கள் இன்றளவும் மதித்துப் போற்றுகிறார்கள்.)
பெரிய மருது பாண்டியர், காளையார் கோயில் மீது கொண்டிருந்த பக்தியைப் போன்றே மதுரை மீனாட்சி அம்மன் மீதும் பெரும்பக்தி பூண்டிருந் தார். மீனாட்சி அம்மன் கருவறையில், அம்மன் முகத்துக்கு எதிரே தொங்கும் தூண்டா மணி விளக்குகள் இரண்டு, மருது பாண்டியர் அன்பளிப்பாக அளித்தவை. அக்காணிக்கை தீபங்கள் மருது பாண்டியரின் பக்தியை எடுத்துரைத்தவாறு இன்றளவும் அன்னை மீனாட்சி முகத்தில் ஒளிபரப்பித் தொண்டு செய்தபடி காட்சியளிக்கிறது. (இத்தீபங்களுக்கு நெய் வார்த்து ஒளிரச் செய்ய ஆவியூர் என்ற ஊரையே அவர் இறையிலியாகக் கொடுத்துள்ளார் என்பது வரலாறு.)
காளையார் கோயில் காளீசர்-சொர்ண வல்லியம்மன் சந்நதியில் உள்ள உற்சவ மூர்த்தி இறை உருவங்கள் கட்டித் தங்கத்தால் ஆனவை என்பது குறிப்பிடத்தக்கது.இக்கோயில் புதுப்பிக்கப் பெற்றபோது, ஈசனும் ஈஸ்வரியும் தேரில் எழுந்தருளித் திருவீதி உலாவர ஒரு புதிய தேரை நிர்மாணிக்க விரும்பினார் பெரிய மருது. இதற்கான பொறுப்பு மாளகண்டானைச் சேர்ந்த குப்ப முத்து ஆசாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் மிகவும் புகழ் பெற்ற சிற்பக் கலைஞர். மரச்சிற்பங்களை வடிவமைப்பதில் அவருக்கு இணை எவருமில்லை என்பார்கள். தமிழகத்தில் மட்டு மல்லாமல், இலங்கையிலும் புகழ் பெற்ற ஆலயங்கள் பல வற்றிற்கு அற்புதமான தேர்களை உருவாக்கிக் கொடுத்த பெருமை அவருக்கு உண்டு. காளீசர் ஆலயத்திற்கான புதிய தேர் செய்ய இரண்டு மருத மரங்களை அவர் தேர்ந்தெடுத்தார். பிரமாண்டமாக வளர்ந்திருந்த அம்மரங்கள் ஒரு சிற்றூரின் ஏரிக்கரையில் இருந்தன. ஆசாரியார் கை காட்டியதும் அம்மரங்களை வெட்ட முயன்றனர் அரண்மனை ஆட்கள். அவற்றை வெட்ட விடாமல் தடுத்தான் ஒரு கிழவன்.
காவலர்கள் அவனை இழுத்துத் தள்ளிவிட்டு, ‘வெட்டுங்கள் மரத்தை’ என உத்தரவிட்டதும், அக்கிழவன் ஆவேசம் வந்தவன் போன்று எழுந்தோடி வந்து, மரத்தைக் கட்டிப் பிடித்துக்கொண்டு, ‘என்னை வெட்டிவிட்டுப் பிறகு மரத்தை வெட்டுங்கள்’ என்று பிடிவாதம் பிடித்தான். அருகில் குடிசையில் இருந்து வெளியே ஓடிவந்த அவனுடைய பெயர்த்தி இன்னொரு மருத மரத்தைக் கட்டிப் பிடித்துக்கொண்டு அதையே சொன்னாள். இரு கொலை அங்கே தவிர்க்க முடியாது என்கிற நிலையில், காவலர்கள் சிவகங்கை அரண்மனைக்குச் சென்று, நடந்த சங்கதியை மருது பாண்டியர்களிடம் தெரிவித்தனர்.
காளீசன் ஆலயத் தேருக்காக இரண்டு மரங்களைக் கூடவா வெட்ட முடியாமல் போவது?’ என்கிற சினத்துடன் மருது பாண்டியர் இருவரும் புறப்பட்டு, நேராக அந்தச் சிற்றூருக்குச் சென்று, தடுத்த கிழவனை அழைத்து விசாரித்தனர்.
பெரியவரே, ஆலயத் திருப்பணியைத் தடுப்பதுபோல் இருக்கிறதே உமது செயல்! ராஜ தண்டனை சிரச்சேதமாகக் கூட இருக்கலாம் என்கிற அச்சமே உமக்கில்லையா? ஏன் தடுத்தீர், இம்மரங்களை வெட்டக் கூடாதென்று?” என வினவினார், பெரிய பாண்டியர்.
அதற்கு அந்தக் கிழவன் சிறிதும் அச்சமின்றி, “மருது பாண்டியரின் கட்டளையை மறப்பார்களா சிவகங்கை மக்கள்? அரசே, காளீசர் ஆலயத் திருப்பணியில் எனக்கு மட்டும் அக்கறை இல்லையா? புதிய தேர் உருவானால், அதில் ஈசனும் தேவியும் எழுந்தருளி மக்களுக்குத் தானே காட்சியளிப்பர்! அதைத் தடுப்பதல்ல என் நோக்கம். இவை மருத மரங்கள். அதுவும் இரட்டை மரங்கள். இவற்றை நாங்கள் வெறும் மரங்கள் என எண்ணவில்லை; மருது பாண்டியர் என்றே கருதுகிறோம். நீங்கள் இருவரும் நலமாக வாழ வேண்டும் என்று எண்ணி, ஈசனை வேண்டி, இம்மரங்களை நாங்கள் பூஜித்து வருகிறோம். அரசனும் கடவுளும் ஒன்று என்பார்கள்.
நாங்கள் மருது பாண்டியர் என்று எண்ணி வழிபடும் இம்மரங்களை வெட்டுவதற்கு எப்படி மனம் ஒப்புவோம்? சிவகங்கைச் சீமை காடுகளுக்குப் பெயர் போனது. இங்கு எத்தனையோ இலுப்பை மரங்கள் இதைவிடப் பெரிதாக, வைரம் பாய்ந்து வளர்ந்து கிடக்கின்றன. அவற்றை வெட்டித் தேர் செய்யலாமே..? என்றான். அக்கிழவன் பேச்சைக் கேட்ட பெரிய மருது சிலிர்த்துப் போனார். அந்த மருத மரங்கள் இரண்டையும் சின்ன மருது பெரிய மருது என்று அப்பெரியவர் குறிப்பிட்டுப் பேசியது, மருது பாண்டியர் மனத்தை நெகிழச் செய்துவிட் டது. உடனே அம்மரங்களை யாரும் வெட்டக் கூடாது என்று ஆணை பிறப்பித்த மன்னர் மருது, அப்பெரியவர் குடும்பத்துக்கு வேண்டிய உதவிகளைச் செய்யும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
காளையார் கோயில் காட்டிலிருந்து வேறு மரங்கள் வெட்டப்பட்டு, புதிய தேர் உருவாக் கப்பட்டது. கோயில் குடமுழுக்கு நிகழ்வையொட்டி, திருத்தேர் உலாவுக்கு ஏற்பாடு செய்யப்பெற்றது.அலங்கரிக்கப் பெற்ற திருத்தேரில் ஈசனும் ஈஸ்வரியும் ஆரோகணித்தனர். மக்கள் கூட்டமும் அலை மோதிக் காத்துக் கிடந்தது. மருது பாண்டியர்களும் வந்துவிட்டனர். பெரிய மருது வடந்தொட்டு இழுக்கவும், தேருலா புறப்பட வேண்டியது தான்.
எல்லா ஆயத்தங்களும் முடிந்துவிட்ட அந்த நிலையில் சிற்பி குப்பு முத்து ஆசாரி எதனாலோ தேர் புறப்படுவதைத் தாமதப்படுத்தியபடி இருந்தார். பிறகு பெரிய மருதுவின் அருகே வந்து, “அரசே! ஓர் விண்ணப்பம்’’ என்றார். “சிற்பியாரே! நீர் ஏதோ சொல்ல விரும்புகிறீர். ஆனால், தயங்குகிறீர். உம்மால்தான் தேர் புறப்படத் தாமதமாகிறது. எதுவானாலும் தயங்காமல் சொல்லும். நீர் கேட்ட, எதையும் நான் மறுக்க மாட்டேன்…” என்றார் பெரிய மருது. “அரசே! தேர் புறப்படுவதில் ஒரு சிக்கல் இருக்கிறது. பரிகாரம் செய்யாமல் தேர் ஓடத் துவங்கினால் பெரும் ஆபத்து விளையும். அந்தப் பரிகாரம் எதுவென்பதைச் சொன்னால் மக்கள் என்னைத் திட்டுவர்.
அதைச் சொல்லவும் அச்சமாக இருக்கிறது. அதனால்தான் தயங்குகிறேன்…” “தயங்க வேண்டாம் சிற்பியாரே! நீர் பரம்பரைச் சிறப்பு உடையவர். நாட்டு நலனுக்கு உகந்ததையே நீர் சொல்வீர், செய்வீர் என்பதை நான் அறிவேன். பரிகாரம் எதுவானாலும் கூறும். உடனே செய்துவிடுவோம்…” “ஆகட்டும் அரசே! இந்தத் தேர் நல்லபடி ஓடி, நிலைக்கு வரவேண்டுமாயின், அதுவரை தங்களின் ராஜமுத்திரை மோதிரத்தை நான் அணிய வேண்டும். செங்கோல் என் கரத்தில் இருக்க வேண்டும். தேருலா முடியும்வரை நானே அரசன் என்று தாங்கள் பிரகடனம் செய்ய வேண்டும்…” குப்பு முத்து ஆசாரியார் இதைக் கூறி முடித்த மறுகணம், “ என்ன பேராசை! நீர் இந்த நாட்டின் மன்னனா? அரசர் நெருக்கமாக இருந்து அன்பு காட்டினால், எதை வேண்டுமானாலும் கேட்பதா…?” எனக் கூச்சலிட்டனர் மக்கள். சின்ன மருதுவின் கண்களிலும் சீற்றம் தொற்றியது. வாளை உருவத் துடித்தார்.
பெரிய மருது மக்களை நோக்கிக் கையை உயர்த்தி, “அமைதி, அமைதி” என்றார். பிறகு, “ஆசாரியார் மிக உயர்ந்த சிற்பக் கலைஞர். அவர் ஒன்றும் நாடாளும் ஆசையில் இதைக் கேட்கவில்லை. இதில் ஏதோ உட்பொருள் இருக்கிறது. அதை அவரே பிறகு விவரிப்பார். இப்போது நான் அவருக்கு அளித்த வாக்குப்படி இந்தக் கணம் முதல் சிவகங்கை மன்னர் குப்பு முத்து ஆசாரியார் தான். இதோ என் ராஜ முத்திரை மோதிரம்…” என்று கூறி, அக்கணையாழியைக் கழற்றி, ஆசாரியாரின் விரலில் அணிவித்தார். செங்கோலும் கை மாறியது. வெண் கொற்றக்குடையைத் தாங்கி நின்ற பணியாளனைச் சைகை மூலம், “போ, ஆசாரியார் அருகில் குடை பிடித்து நில்” எனக் கட்டளையிட்டார்.
அதோடு நில்லடு, “சிவகங்கை அரசர் குப்பு முத்து ஆசாரியார் வாழ்க” என்று உரத்த குரலில் முழங்கினார். மக்களையும் அவ்வாறே முழங்கச் சொன்னார்.
ராஜ கட்டளை உடனே நிறை வேற்றப்பட்டது. குப்பு முத்து ஆசாரியார் நெகிழ்ந்து, நெருக்குக, கண்ணில் நீர் பனிக்க, பெரிய மருதுவையும் மக்களையும் வணங்கினார். பிறகு தேரில் ஏறி, தேரைச் செலுத்தும் பிரம்ம தேவன் சிற்பத்துக்கு அருகில் அமர்ந்தபடி, ‘தேருலா தொடங்கலாம்’ என அறிவித்தார். பெரிய பாண்டியர் வடந்தொட, சின்ன பாண்டியர் வெள்ளைக்கொடி அசைக்க, ஆயிரக்கணக்கான மக்கள் வடந்தொட்டு இழுக்க, காளையார் கோயிலின் ராஜகோபுரமே நகர்ந்து வருவது போன்று, அந்தப் பிரமாண்டமான தேர் நகர்ந்து, விரைந்து ஓடத் தொடங்கியது.
பாட்டாளி ஒருவன் நாடாளும் வேந்தனாக அறிவிக்கப்பட்ட அந்த வேளையில், காற்று சில்லென வீசத் தொடங்கிற்றாம். எங்கோ மரங்களினின்று உதிர்ந்த மலர்கள் பறந்து வந்து, ஈசனின் தேர் மீதும், சாரதி போன்று அமர்ந்திருந்த புது வேந்தன் குப்பு முத்து ஆசாரியார் மீதும் மழை போன்று உதிர்ந் தனவாம். ‘ஆனைமடு’ என்னும் திருக்குளத்தின் மதகு அருகே நீர் ஆளுயரம் எழும்பிக் குபுகுபுவெனக் குமிழியிட்டதாம்.
தேர் மிக விரைவாகத் திருவீதிகளைச் சுற்றிக்கொண்டு நிலைக்கு வந்துவிட்ட கணத்தில், எவருமே எதிர்பாராதச் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. எதன் காரணமாகவோ தேர் மிகக் கடுமையாக ஒருமுறை குலுங்கியது. அந்தக் குலுங்கலில் செங்கோல் ஏந்திய சிற்பியார் நிலை தடுமாறிக் கீழே விழுந்தார். தேரை எவராலும் நிறுத்த முடியவில்லை. முட்டுக்கட்டை, ஆரைக்கோல் போடுவோர் அலமலந்து நிற்க, அத்தேர் சிற்பிமீது ஏறி இறங்கி, நசுக்கிய பிறகுதான் நின்றது. மக்கள் பதறியெழுப்பிய ஆஹாஹாம், ‘ஓ’வென்ற அலறல், ‘ஐயோ’ என்னும் பரிதாப ஒலிகளுக்கு நடுவே மருது பாண்டியர் இரு வரும் பாய்ந்தோடிச் சிற்பியருகே மண்டியிட்டு அமர்ந்தனர். திருஷ்டி கழிக்க ஆரத்தி கொட்டியது போன்று செங்குருதி பெருகி வழிந்த நிலையிலும், உயிரைக் கையில் பிடித்தபடி குப்பு முத்து ஆசாரியார், ராஜ முத்திரைக் கணையாழியையும் செங்கோலையும் பெரிய மருதுவிடம் ஒப்படைத்தபடி, “அரசே! நான் தேர் செய்யத் தொடங்கியதும், முதல் சிற்பமான விநாயகரின் தும்பிக்கை உடைந்துபோயிற்று. உடனே நான் ஜோதிட சாஸ்திரப்படி கணக்கிட்டுப் பிரச்னம் பார்த்தேன். இந்த ஒச்சம் அரசன் உயிரைக் காவு வாங்கும்’ என்று பதில் வந்தது. நம்பிக்கையோடு தேரைச் செய்து முடித்தாலும் ஜோதிடப்படி, நாடாளும் தங்கள் உயிருக்கு ஊறு நேரக் கூடாது என்று எண்ணி, மிகுந்த துணிவுடன், சில மணி நேரம் நானே மன்னனாகும் நிலையை விரும்பிக் கேட்டுப் பெற்றேன். இனி மக்கள் தங்கள் உயிராகக் கருதும் மருது பாண்டியருக்கு ஆபத்தில்லை என்கிற மகிழ்வோடு நான் என் உயிரை ஈசனுக்கு அர்ப்பணிக்கிறேன்” என்றார். அக்கணமே சிற்பியாரின் ஆவி பிரிந்தது. மன்னன் உயிரைக் காக்கத் தன் இன்னுயிரை நீத்த அந்தச் சிற்பியாரின் தியாக உள்ளம் கண்டு மக்கள் கண்ணீர் உகுத்தனர். இன்னொரு தேருலா போன்று சிற்பியாரின் இறுதி ஊர்வலம் நிகழ்ந்தது.
மருது பாண்டிய மன்னர்கள், சிற்பியாரின் குடும்பத்தாருக்கு மாளக்கண்டான், வெற்றியூர், சிறுவயல் ஆகிய ஊர்களில் அரசருக்கே உரிய நிலங்களிலிருந்து சில காணி நிலங்களை மானியமாக அளித்தனர்.
காளையார் கோயில் தேர் குப்பு முத்து ஆசாரியாரின் புகழைக் கூறியபடி, ‘தியாகத்தேர்’ என மக்களால் கொண்டாடப்பட்டு காலங்களை வென்று நிற்கிறது. அப்படிப்பட்ட தியாகத்தேர் உள்ள மக்களால் கல் சுமந்து எழுப்பப்பெற்ற காளீசர் ஆலயக் கோபுரத்தைத்தான் சுதந்திரப்போராட்ட நாட்களில், ஆங்கிலப் படைத்தளபதி அக்னியூ என்பவன் பீரங்கிகள் கொண்டு தகர்ப்பேன் என்று அறிவிப்பு வெளியிட்டான். மருது பாண்டியர்கள் அப்போது காடுகளில் தலை மறைவு வாழ்க்கை நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர்.
வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரச் சரித்திரம் ஒரு கொடுந்தூக்குக் கயிற்றில் முடிந்து போயிருந்த நாட்கள் அவை. ஊமைத்துரைக்கு ஆதரவளித்ததாகக் கூறி, சிவகங்கைச் சீமையை வெள்ளையர்கள் சின்னா பின்னப்படுத்திக் கொண்டிருந்த துன்ப நாட்கள் அவை. தாங்கள் சரணடையாவிட்டால், காளையார் கோயில் கோபுரம் தகர்க்கப்படுமே என்று அஞ்சிய மருது பாண்டியர்கள் அக்னியூவிடம் சரணடைந்தனர். அதன் விளைவாகத் தூக்கிலிடப்பட்டு மடிந்தனர். அந்த வீர சுதந்திரப் போராட்டமெல்லாம் வேறு கதை. மருது பாண்டியர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்து, காளையார் கோயில் கோபுரத்தைக் காத்துவிட்ட உண்மை இன்றளவும் நம் நெஞ்சத்தை நெகிழ்விக்கிறது.
நன்றி!
பிரம்மஸ்ரீ கிருஷ்ண.சிவ.முத்து.தமிழ்ச்செல்வம்.எம்.ஏ,பி.எல்,.அவர்கள். மூத்த வழக்கறிஞர் மெட்ராஸ் உயர்நீதிமன்றம், சென்னை எட்டாம் தலைமுறை பரம்பரை நேரடி பிரம்மஸ்ரீ பெருந்தச்சர் குப்பமுத்து ஸ்தபதியார் அவர்களின் நேரடி மூத்த ஆண் வாரிசு