தவத்திரு பிரம்மஶ்ரீ பழனியப்ப ஸ்வாமிகள்

நம் பாரத தேசம், பல்வேறு ஞானியரும் ரிஷி முனிகளும் மனித உருவில் அவதரித்த தெய்வங்களும் நிறைந்த ஒருதேசம். அதனால் தான் ஸ்வாமி விவேகானந்தர் “பாரதம்புண்ணிய பூமி”  என்று கூறியுள்ளார். உலகிற்கே பாரதம் தான் ஆன்மீக பீடம்.  இந்தப் புண்ணிய பூமியில்  எண்ணிலடங்கா மகான்கள்  அவதரித்து இறையருளை சகலருக்கும்  பரி பூர்ணமாகக் கிடைக்கும் படிச் செய்தனர்.  அறியாமை என்னும் இருளை  அகற்றும் ஒளி விளக்காக அவதாரம்  எடுத்த மகான்கள் தங்களுக்கு  ஏற்பட்ட  ‘தன்னையே அறிவது’  என்ற தத்துவத்தை உணர்த்தியிருக்கிறார்கள்.  இப்படிப்பட்ட  மகான்கள்  தங்களை எந்தவொரு  இடத்திலும்  முன்னிலைப் படுத்திக் கொள்ளாமல்  தத்துவ  சிந்தனைகளில்  ஆட்கொண்டிருப்பார்கள்.  அவர்களுக்கே  அதுவே  ஆனந்தம்  பேரானந்தம்! அப்படிப்பட்ட மகான்களில்  ஒருவர்  பிரம்மஶ்ரீ பழனியப்ப ஸ்வாமிகள் ஆவார்! 
பொள்ளாச்சி நகரின் அருகில் ஒரு சிற்றூர், ரெட்டியாரூர்…
அந்த அழகிய கிராமத்தில் விஸ்வகர்மா குலத்தில் உதித்த  ஶ்ரீ சுப்பனாச்சாரி அவரது துணைவியார் திருமதி காளியம்மாள்  மிகுந்த  தெய்வ  பக்தி  கொண்டவர்கள்.  அவர்கள் செய்த தவப்பயனால் அவர்களுக்கு  மூன்றாம் மகனாக  ஶ்ரீ பழனியப்ப  (ஸ்வாமிகள்)  அவதரித்தார்.  ஒரு  தம்பியும்  ஐந்து  சகோதரிகளும்  அவருக்கு வாய்க்கப்பெற்றனர். இளம் வயதில் அந்த ஊரில்  பெற்றோர்கள்  அவரை  அங்குள்ள  திண்ணை  பள்ளிக் கூடத்தில்  சேர்த்தனர்.  தன்னையே அறிதல் தத்துவத்தில் திளைத்துப் போன ஸ்வாமிகளுக்கு ஐந்தாம் வகுப்பு வரையே அவரால்  படிக்க முடிந்தது.  அதற்கு மேல்  ஏட்டுப்படிப்பு  அவருக்கு  பிடிக்கவில்லை  போலும்!  ஆனால் ஆசிரியர் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்தார்.
13 வயதிலிருந்து  ஶ்ரீ கிருஷ்ணமாச்சாரியார் அவர்களிடம் வேலைக்கு அமர்ந்து தனது குலத் தொழிலான தச்சு வேலையில் பணி புரிந்தார். இவர்  தான்  ஸ்வாமிகளுக்கு  ஆன்மீக உணர்வை ஊட்டிய  குரு. தொன்னூற்றாறு தத்துவங்களையும் வாய்ப்பாடு மாதிரி அவருக்கு கற்பித்தார்.
19 வயதில் திருமணம் : ஸ்வாமிகள்  திருமதி பட்டியம்மாளை தனது வாழ்க்கை துணையாக ஏற்றுக் கொண்டு வாழ்க்கை நடத்தினார். இவரை தந்தையாக  பெறும் பாக்கியத்தை  இரு மகன்கள்  மற்றும்  இரு  மகள்களுக்கு கிடைத்தது.  திருமணம் முடிந்த  கையோடு  பொள்ளாச்சி  நகருக்கு  பெற்றோர்களுடன்  குடியேறினார்.  அங்கு சுமார் ஏழு ஆண்டுகள் தச்சு வேலை செய்து வந்தார். ஆன்மீக  தாகம் உந்த  இரவு  நேரங்களில்  தினந்தோறும் தனது  வேலையை  முடித்துக்  கொண்டு  ஆன்மீக தேடலில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு மஹான் அருணாச்சல  ஸ்வாமிகளின்   சீடரான  ராஜ ரத்தின  முதலியாருடன்  நட்பு ஏற்பட்டது.  தனது வேலை முடிந்ததும் தினமும்  இரண்டு  மணி  நேரம்  ஆத்ம  விசாரம்  செய்தார்.
26 வயதிலிருந்து தனது மாமனாரான திருமூர்த்தி ஆச்சாரியின் ஊரான பூவலப்பம் பருத்தி என்ற கிராமத்தில் மூன்றாண்டுகள்  இருந்தார். அப்போது மனையடி சாஸ்திரம் வைத்தியம் மாந்த்ரீகம் முதலியன கற்றார். அகஸ்தியம்  போன்ற பழைய  ஏடுகளையும் படித்து  முடித்தார். அப்போது  இவருடன் நெருங்கி  பழக்கிய குணங்குடி  மஸ்தான்  பரம்பரை சீடரான சடாமுடி ஞானி  இவரை கண்டனம்  செய்ததால், தான் கற்ற மாந்த்ரீகம் மற்றும்  சித்து  வேலைகளை  கைவிட்டார்.  பின்னர்  குணங்குடியார்  பாடல்களை  இருவரும் சேர்ந்து படிக்க தொடங்கினர். 
தொழில் நிமித்தமாக தனது 29 ஆம் வயதில் பழனிக்கு சென்று ஏழாண்டுகள் அங்கு தங்கியிருந்தார். அங்கு பாலைய சாமி  மடத்தில்  திருக்குறள்  கைவல்யம்  முதலியன பற்றி  பெரியண்ண  பண்டாரம், அடுக்குமொழி.  ஆவுடையப்ப  செட்டியார் மணியகாரர்,  ரிசிகேசத்து  ஸ்வாமிகள்,  சாது சாமியின்  சகோதரர்  ஆகிய   தமிழறிஞர்கள் நுணுக்கமாக  ஆராய்ச்சியில்  ஈடுபட்டிருந்தனர். ஶ்ரீ துரைசாமி  ரெட்டியாருடைய  உதவியால்  ஶ்ரீ பழனியப்ப ஸ்வாமிகளும்  அவர்களுடன்  கலந்து கொள்ளும்  அறிய வாய்ப்பு கிடைக்கப் பெற்றது. இங்கு தான் ஸ்வாமிகளின் நுண்ணறிவு சுடர் விட ஆரம்பித்தது.
அர்த்தனாரி பாளையம் பக்கம் சஞ்சரித்து வந்த தவத் திரு குகை  பெருமாள்  சித்தர் சாமியுடன் இரவு  நேரம் தங்கி  அவருக்கு சேவை  செய்து வந்தார்.  இவரே  பிரம்மஶ்ரீ பழனியப்ப ஸ்வாமிகளின் ஆன்மீக குரு ஆவார். அன்னாரது வசனங்கள்  பிரபல  சுருதி வாக்கியங்களாகவே இருந்தன. 48வது  வயதில்  அம்மிச்சிய கவுண்டனூர்  ஶ்ரீ மயில் சாமி கவுண்டர் அவர்கள் இல்லத்தில்  ஶ்ரீ சுப்பைய ஸ்வாமிகள் தொடங்கிய பகவத் கீதை, பிரம்மகீதை, ஈஸ்வர கீதை  ரிபு கீதை  குரு கீதை  ஆகிய ஐந்து  கீதைகளையும்  முறையாக  பாடம் கற்றார்.  ஞானவேட்கை  ஏற்பட்டது.  மதியந்தோறும்  75  மாதங்கள்  பல  ஊர்களுக்கும் சென்று ஶ்ரீ சுப்பையாசாமி அவர்களுடன்  உபன்யாசம்  செய்தார்.  காளியாபுரம்  போன்ற  இடங்களுக்கு  வாரந்தோறும்  சென்று வந்தார்  இவ்வாறாக  ஏழாண்டுகள் கழிந்தது.
1969 ஆம் ஆண்டு தனது 55 வது வயதில் பதினோறு நண்பர்களுடன் ரெட்டியாரூரில் கேவல அத்வைத  ஞான சபையை  தோற்றுவித்தார். அங்கு விசார  சாகரம்  நடத்தப்பட்டது. ஐந்து  ஆண்டுகள்  திருமதி பத்மாவதிசுப்பா ரெட்டியார் தோட்டத்தில் குடிசை அமைத்து கைவல்யம், நாநா சீவ வாதக்கட்டளை பாடம் நடத்தினார். கோடங்கி பட்டி  தங்க முத்துசாமி இரண்டாம் பாடசாமியாக  உதவி புரிந்து வந்தார்.
1976 ஆம் ஆண்டு ரெட்டியாரூரில் தத்துவ ஞான சபையை நிறுவி ஆழ்ந்த ஆத்ம விசாரம் மூன்று ஆண்டுகள்  நிகழ்ந்தது.  அத்துடன்  வேட்டைக்காரன் புதூர், பொள்ளாச்சி  ஆகிய இடங்களிலும் வாரந்தோறும் கீதாசார  தாலாட்டும் கைவல்ய நவனீத உரையும் நடைபெற்று  வருகின்றன  பின்னர் கோடங்கிபட்டி  ஶ்ரீ சண்முக சுந்தரகவுண்டர் வீட்டிலும் ஊத்துக்குளி ஶ்ரீ கதிர்வேல் காளிங்கராயர் அவர்கள் வீட்டிலும் அகத்தூரம்மன் கோவிலிலும் கைவல்ய உரை  வகுப்பு நடத்தி வந்தார் இடையிடையே  கோவையிலும்  வகுப்புகள்  நடத்தி வந்தார். அருட்செல்வர்  நா  மகாலிங்கம்  ஐயா அவர்களின் குடும்ப ஆதரவோடு  சபைகள் நடந்து வருகின்றன. தென் சங்கம் பாளையத்தில் எஸ் வி பி ஐயா அவர்களின் அதற்கொரு சபை நடந்து வருகிறது. 
பிரம்மஶ்ரீ பழனியப்ப ஸ்வாமிகளின் கைவல்ய நவநீத உரை மிக பிரபலமான எளிமையான உரையாகும். ஸ்வாமிகள் உபதேசித்த ஞான நூல்கள்: நாநா சீவ வாதக்கட்டளை  கீதாச்சார  தாலாட்டு, விசார சாகரம்,  விசார சந்தோரதயம்,  வேதாந்த  சூடாமணி, கைவல்ய நவனீதம் (உரையுடன்),   ஞான வாசிட்டம்  ஆகியவையாகும். 
தத்துவ ஞானம் வளர ஸ்வாமிகளால் நிறுவப்பட்ட சபைகள்:
  • ரெட்டியாரூர் தத்துவ ஞான சபை
  • பொள்ளாச்சி தத்துவ ஞான சபை
  • கோடங்கிபட்டி தத்துவ ஞான சபை
  • வேட்டைக்காரன் புதூர் தத்துவ ஞான சபை
  • தென் சங்கம் பாளையம் தத்துவ ஞான சபை
  • போடிபாளையம் தத்துவ ஞான சபை
பிரம்மஶ்ரீ பழனியப்ப ஸ்வாமிகள் தனது  2003 ஆம் ஆண்டு முக்தியடைந்தார். 
அவருடைய அதிஷ்டானம் போடி பாளையம்  தத்துவ ஞான  சபை  வளாகத்தில்  உள்ளது.  இந்த சபை பெரிதும் உதவிய ஶ்ரீ கதிர்வேல் காளிங்கராயர் அவரது துணைவியார்  மாணிக்கதாய்  அம்மா  ஆகியோர்  போற்றுதலுக்கு  உரியவர்களாகும். மகான்களின் வரிசையில் இடம் பெற்ற  தவத்திரு பிரம்மஶ்ரீ   சு பழனியப்ப  ஸ்வாமிகளின்  தத்துவ போதனைகள் அனைவரையும்  வழி  நடத்தி  செல்லும்   என்பதில்  ஐயமில்லை.