பழனி மலையில் உள்ள அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி – மூலவர் திருவுருவச்சிலை உருவாக்கியவர் நமது போகர் சித்தர் என்பது உலகறிந்த உண்மை. இவர் ஒன்பது விஷங்களை கட்டி அதை நன்மை பயக்கும் வகையில் சரியான கலவையாக கலந்து நவபாஷாண முருகன் சிலையை உருவாக்கினார். இது போன்றசிலைகளை உருவாக்க கூடாது என்ற எதிர்ப்புகள் இருந்தும் மானிட நலனுக்காக அவர் இந்த சிலையை உருவாக்கினார். இன்றளவும் பழனி முருகன் சிலையில் உள்ள புனிதமான நவபாஷாணம் மூலமாக தீர பல நோய்கள் தீருகின்றன என்பதை நாமே கண்கூடாக பார்க்கிறோம்.
“பாங்கான பாடாணம் ஒன்பதினும் பரிவான விபரம்தான் சொல்லக் கேளு
கௌரி கெந்திச்சீலைமால் தேவி கொடு வீரம்கச்சால் வெள்ளை
பகர்கின்ற தொட்டினொடு சூதம்சங்கு பூரணமாய் நிறைந்த சிவசக்தி
நலமான மனோம்மணி கடாட்சதாலே நண்ணிநீ ஒன்பதையும் கட்டுகட்டு“ – போகர்
ஒன்பது வகையான பாஷாணங்களாகிய:
1. கௌரிப் பாஷாணம் : Arsenic pentasulfide
2. கெந்தகப் பாஷாணம் : Sulfur
3. சீலைப் பாஷாணம் : Arsenic Di sulphite
4. வீரப் பாஷாணம் : Mercuric Chloride
5. கச்சாலப் பாஷாணம் : சரியான ஆய்வு அறிவிக்கை கிடைக்கவில்லை
6. வெள்ளைப் பாஷாணம் : Arcenic Tri Oxide
7. தொட்டிப் பாஷாணம் : சரியான ஆய்வு அறிவிக்கை கிடைக்கவில்லை
8. சூதப் பாஷாணம் : Mercury
9. சங்குப் பாஷாணம் : சரியான ஆய்வு அறிவிக்கை கிடைக்கவில்லை
இவைகளை பல செய்முறைகளுக்கு உட்படுத்தி அவற்றை சுத்திகரித்து பழனி தண்டாயுதபாணி விக்கிரகம் வடிவமைக்கப்பட்டதாக போகர் இப்பாடலில் கூறியிருக்கிறார். இன்றளவும் இதன் செய்முறை புதிராகவும், நவீன அறிவியலுக்கு சவால் விடும்விதமாக அமைந்திருப்பதால் தண்டாயுதபாணி சிலை என்பது ஆச்சரியமாக கருதப்படுகிறது. இச்சிலைகான வழிப்பாடு, திருமுழுக்கு விதிமுறைகள் புலிப்பாணி சித்தர் மறைப்பொருளாக இயற்றி வைத்திருக்கும் ஒரு சில குறிப்புகளின் வாயிலாக கிடைக்கப் பெருகிறது.
“பாரப்பா மலையதுவின் உச்சியிலே
பாங்கான போகருட சமாதியருகே
கட்டான பாடாணவகை எட்டுடனொன்று
காணவே சேர்த்துவார்த்த சிலைதானும்
நண்ணவே பிரதிட்டைதான் செய்து
நவிலுவேன் பூசைசோ டசமுஞ்செய்ய
ஆற்றினேன் பூசைவிதிகள் தானும்
ஆரப்பா அறிவார்க ளாருமில்லை.” – புலிப்பாணி
(இச்சிலை தற்போது சேதமடைந்து விட்டது. எனவே இச்சிலைக்கு அபிடேகம் நடைபெறுவதில்லை)
போகர் ஒரு விஸ்வகர்மா
போகரின் முழுப்பெயர் போக நாதன் என்பதாகும். இவர் தன்னை போக நாதன், கைலாஷ போக ரிஷி எனக்கூறிக்கொள்கிறார். வைகாசித் திங்கள் பரணி நட்சத்திரம் இரண்டாம் பாதத்தில் பிறந்த போகர் பல இடங்களில் தனது பாடல்களில் விஸ்வகர்மா என்று சொல்லுகிறார். இவர் பழநி மலை,அடிவாரத்தில் உள்ள வைகாவூரில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருடைய பட்டனர் திருமூலர் என்ற பெயர் பெற்ற மருத்துவ சித்தர் (திருமந்திரம் எழுதியவர் அல்ல) ஆவார்.இவர் பல மருத்துவ நூல்களை எழுதியுள்ளார். திருமூலர் 8000 நூலே அன்றி சுருக்கமாக மருத்துவம் 5000, மருத்துவம் 3000,மருத்துவம் 1000,மருத்துவம் 333 என்ற நூல்கள் இவரால் எழுதப்பட்டுள்ளன. இந்த நூல்களை தனது பட்டனர் மூலமாக போகர் கற்றுக் கொண்டார்.
போகர் 7000 என்ற நூலில் ஒரு பாடலில் மிகத்தெளிவாக தன்னை விஸ்வகர்மா என்று அறிமுகப்படுத்துகிறார். இதோ அந்த பாடல்:
உரைத்தோமே எந்தனிட சாதிமார்க்கம் வுத்தமனே விஸ்வகர்ம மென்னலாகும்
நிரைத்ததொரு ரோமரிவி சாதிபேதம் நிலையான வலைவீசுஞ் சாதியப்பா
திரைத்ததொரு எந்தனது தலைமுறைதானப்பா திரளான பதினெட்டு தலைமுறையாகும்
வரைத்ததொரு ரோமரிவி தலைமுறைதானப்பா வாகான பனிரெண்டு தலைமுறைதானாமே
(பாடல்:5699 போகர் 7000)
போகர் சீனரா?காலங்கி நாதரிடம் போகர் சீடராக இருந்துள்ளார் என சில கருத்துக்கள் நிலவுவதை வைத்து சிலர் சீனதேசத்தவர் என கூறுகின்றனர். ஆனால் போகர் சீன தேசத்தவர் என்பதற்கு எந்த நூலிலும் ஆதாரம் கண்டுபிடிக்கப்படவில்லை. தம் இனத்தவரான காலங்கி நாதர் சீனா சென்று ஆசிரியப்பணி மேற்கொண்டிருப்பதை அறிந்து இவரும் சீனா சென்றிருக்ககூடும் என்று சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஒரு பாடலில் சாத்திரங்களையும் அதில் மறைந்து கிடக்கும் உட்பொருளையும் அறியவே சீனா சென்று காலங்கி நாதரிடம் கல்வி கற்றேன் என்று குறிப்பிடுகிறார். தமது ஆசிரியர் காலங்கி நாதர் பற்றி குறிப்பிடும் போதெல்லாம் ஐயன் காலங்கி, என்னை ஈன்ற காலங்கி என உயர்வாக தந்தைக்கு ஒப்பாக வைத்து கூறுவதை காண்கிறோம். மேலும்போகர் சீடர் புலிப்பாணி வரலாறு பற்றிய பாடல் ஒன்றில் புலிப்பாணியை விளிக்கும் போது கோனான உன்பாடம் காலங்கி நாதன் எனக் கூறுகிறார். எனவே காலங்கி நாதரிடம் புலிப்பாணிக்கும் தொடர்பு இருந்தது தெளிவாகிறது. மேலும் அந்தக் காலத்தில் தமிழகத்தில் போகர், போகி> போகியர்>ஓரம் போகியர் போன்ற பெயர்கள் வழக்கத்தில் இருந்துள்ளன. ஆகவே போகர் தமிழ் நாட்டில் பிறந்தவர் தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. போகர் சீனாவிலிருந்து தாயகம் திரும்பும்போது உலக நாடுகளில் 70 க்கும் மேற்பட்ட நாடுகளை சுற்றி வந்துள்ளார். 16 அரசர்களை கண்டு பேசியிருக்கிறார். இவர் வாழ்ந்த கால கட்டத்தில் விமானமோ பேருந்து வசதிகளோ இல்லாததால் குவிக்க என்னும் வான்கூடு (HOT AIR BALLON) கப்பல், புகை ரதம் முதலியவற்றின் உதவியால் உலகினை சுற்றி வந்தார். சீனா, ரோம், ஜெருசலம், மெக்கா, பாரீஸ் மங்கோலியா கிரீன்லாந்து வரை, இவர் பயணம் செய்துள்ளார். வடஅமெரிக்காவில் உள்ள கிரவுஞ்ச்தீவைக் கூட கண்டு வந்துள்ளார்
பயின்ற நூல்கள்:
போகர் சித்த மருத்துவத்தில் கரை கண்டவர் என்பதை அவரது நூல்கள் உறுதி செய்கிறது. இவர் கற்ற மருத்துவ நூல்கள் அகத்தியர் 800, சௌமியம் 8000(2-982), தன்வந்திரி 4000, கோவை 16 காலங்கி 5000 முதலியவை குறிப்பிடத்தக்கவை.
இவரது நூல்கள்:
போகர் 64 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.இவர் எழுதிய நூல்களில் சோதிடம் 100 குறுக்கிட, சோடசம் 8 போன்ற நூல்கள் இவரால் குறிப்பிடப்பட்டாலும் இவைகள் நமக்குகிடைக்கவில்லை. இவர் எழுதிய நூல்களுக்கு பெரிதும் துணையாக இருந்த நூலகம் திபெத் பகுதியில் இருந்த சமஸ்கிருத நூலகமாகும் என்று சொல்லப்படுகிறது. போகர் தமிழில் இயற்றியுள்ள எழுத்து படைப்புகளுக்குள் ஒரு சிலவற்றே அறியப்பட்டுள்ளன. போகர் தமிழில் இயற்றியதாக சுமார் 64 நூல்கள் இதுவரைகண்டறியப்பட்டுள்ளன. இவர் எழுதியதாக சுமார் 26,307 பாடல்கள் கிடைக்கப்பெறுகின்றன. இதுவரை 23 நூல்கள் மட்டுமே அச்சிடப்பட்டுள்ளன. இதன் மூலம் 11,000 பாடல்கள் வெளிவந்தமை தெளிவாகிறது.
இவர் தம் சுவடிகள் பெரும்பாலும் சென்னை சுவடி நூலகம், தஞ்சை சரஸ்வதி மகால், சென்னை சித்த மருத்துவ மேம்பாட்டு குழு, புதுச்சேரி பிரெஞ்சு கழகம், தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை, கேரள பல்கலைக்கழக சுவடி மையம், முதலிய இடங்களில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
போகர் தமிழில் இயற்றியுள்ள நூல்கள் சிலவற்றின் பெயர் பட்டியல்;
-
போகர் 7000 (சப்த காண்டம்)
-
ஜெனன சாகரம் 550
-
நிகண்டு 1700
-
வைத்தியம் 1000
-
சரக்குவைப்பு 800
-
கற்பம் 360
-
உபதேசம் 150
-
இரணவாகமம் 100
-
ஞானசாராம்சம் 100
-
கற்ப சூத்திரம் 54
-
வைத்திய சூத்திரம் 77
-
முப்பு சூத்திரம் 51
-
ஞான சூத்திரம் 37
-
அட்டாங்க யோகம் 24
-
பூசா விதி 20
-
வாண சாஸ்திரம்
அறிந்த மொழிகள்:
இவர் தமது நூல்களில் சமஸ்கிருதம், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், சீனம் போன்ற மொழிச்சொற்கள் பரவிக்கிடப்பதால் இம்மொழிகளில் நல்ல தேர்ச்சியை போகர் பெற்றிருந்தார் என அறிகிறோம். ரோமரிஷியின் நூல்களை வடுக (தெலுங்கு) மொழியிலியே படித்தேன் என்கிறார். லத்தீன் மொழியிலும் நல்ல தேர்ச்சி பெற்றவர் என்பதை போகர் ஒரு பாடலில் குறிப்பிடுகிறார். சமஸ்கிருத மொழியை ஒரு நிர்வாண பாஷை என்கிறார். சீனாவில் கல்வியை சில காலம் கற்றுக்கொண்ட பின்னர் அஙேயே ஆசிரியராக பணி செய்கிறார்.சீனாவில் இவர் செய்த கல்வி கற்பித்த செய்திகள் இவரது நூலில் பரவிக்கிடக்கிறது. சீன அரசர் போகரின் மருத்துவ அறிவை பாராட்டி சிவராஜயோகி (அரசவை மருத்துவராக) நியமித்துள்ளார். இவருடைய பல சீடர்களாக பல சித்தர்களை குறிப்பிட்டாலும் போகரின் நூல்களில் அதற்கு ஆதாரம் எதுவுமில்லை. தனது நூல்களில் புலிப்பாணி ஒருவரையே தனது மாணாக்கராக குறிப்பிட்டுள்ளார். புலிப்பாணியும் தனது நூல்களில் “நிகழ் சித்தர் போகருடைய பாதம் காப்பு” எனக்கூறுவதால் போகரும் புலிப்பாணியும் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள் என்பதும் போகருடைய சீடருமாவார் என்பதையும் இது உறுதிப்படுத்துகிறது.
புலிப்பாணி பாரதி கூறும் மெகன்ஸி ஆவணத்தில் பின்வரும் குறிப்புகள் காணப்படுகின்றன:
1.போகர் பழநி முருகப்பெருமானுக்கு அபிசேக பூஜைகள் செய்து வந்தார்.
2.தனக்குப் பின்னர் தனது சீடரான கன்னடியர் வம்சத்தில் வந்த புலிப்பாணியிடம் பூஜை செய்யும் உரிமைகளை கொடுத்தார்
3.பின்னர் தனது குகைக்கு சென்று கடும் தவமியற்றினார் என்றும் அப்போது பாலும் பழமும் மட்டுமே உண்டு வந்தார்
4.கோவில் மூலவரான முருகப்பெருமானின் நவபாசான சிலையை உருவாக்கியவர் என்றும் மெக்கன்சியின் கையெழுத்து பிரதியிலும் கையெழுத்து பிரதியிலும் காட்டப்படுகிறது.
முக்தி அடைந்த இடம்:
பழனியில் மட்டுமே இவரது சமாதி இருப்பதால் இங்கு தான் முக்தி அடைந்தார் என்பதில் சந்தேகமில்லை. இப்போது அவரது சமாதி போகர் சந்நிதி என பூஜிக்கப்படுகிறது. இந்த சந்நிதியின் கீழே ஜீவசமாதி அடைந்தார் என்றும், இந்த சன்னிதியிலிருந்து கருவறை வரை சுரங்கம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இவ்வளவு சிறப்பிற்குரிய விஸ்வகர்மா போகர் பெருமானின் மூல மந்திரம் இதோ:
போகர்மூலமந்திரம்:
ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்த சுவாமியே போற்றி!