திரை உலகின் முதல் பின்னணி பாடகர் திருச்சி லோகனாதன் அவர்களின் நூற்றாண்டு!தமிழ் சினிமா எத்தனையோ பின்னணி பாடகர்களை கடந்து வந்துவிட்டது. ஆனால் இந்தத் திரை இசை தேரை முதலில் வடம் பிடித்து இழுத்தவர் திருச்சி லோகநாதன் என்பது நம்மில் பலருக்கும் தெரியாது! ஆம் திரை உலகின் முதல் பின்னணி பாடகர் இவர் தான்! அவரை தெரியாவிட்டால் என்ன? ஆசையே அலைபோலே’, ‘வாராய் நீ வாராய்’, ‘உலவும் தென்றல் காற்றினிலே’, ’கல்யாண சமையல் சாதம்’, ‘புருஷன் வீட்டில் வாழப் போகும் பொண்ணே’ – திருச்சி லோகநாதன் அவரது குரலை இந்தத் தமிழ் உலகம் மறக்கவில்லை. இன்றும் அவரதுகுரல் ஒவ்வொரு வீட்டு மணவறையிலும் மந்திரம் போல ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது.
இப்படி அவர் பாடி, சாகா வரம் பெற்ற பாடல் தான் ‘புருஷன் வீட்டு வாழப் போகும் பெண்ணே.. தங்கச்சி கண்ணே.. சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே’. இப்பாடல் வரிகளில் கடமை தவறாத அண்ணன் தனது தங்கைக்கு தரும் அறிவுரைகள் அடங்கியதாக இந்தப் பாடல் வெளிப்பட்டது. இந்தப்பாடல் அன்றைக்கு பட்டித் தொட்டி எங்கும் போய் முட்டியது. இதையும் மீறி ஒவ்வொரு திருமண வீட்டிலும் மங்கல இசையாக நின்று நிலைத்தது. இந்தப் பாடலை பாடிய போது திருச்சி லோகநாதனுக்கு 34 வயது. இப்படி திரை இசை பின்னணி உலகம் இருக்கும் வரை அழியாத புகழை ஈட்டிய லோகநாதனின், தந்தை பெயர் சுப்பிரமணியன். 1924 ஆம் ஆண்டு ஜூலை 24ம் நாள் விஸ்வகர்மா சமூகத்தில் பிறந்த திருச்சி லோகநாதனுக்கு அப்பாவின் நகை செய்யும் தொழிலில் ஆர்வமில்லை. திருச்சி மலைக்கோட்டைக்குப் பக்கத்தில் தான் வீடு. மனதின் அளவை விட, மனதுக்குள் இருந்த சங்கீதப் பித்து, மலையளவு இருந்தது. அரை நிஜார் பைகளுக்குள்ளே அந்தக்காலத்து இசை ஞானியான ஜி.ராமநாதனின் பாடல்களை நிரப்பி வைத்துக்கொண்டு, எப்போதும் பாடிக்கொண்டே இருப்பார். ‘லோகு நல்லாப் பாடுறாம்பா. எங்கே… ஒரு பாட்டுப் பாடு லோகு’ என்று கேட்டதும் காவிரி வெள்ளமென கரை புரண்டோடி வந்தது போல், உதடு தாண்டி வந்து விழுந்தன பாட்டுகள். கேட்டதும் பாடியதும் முதல் முயற்சி; பயிற்சி. பின்னர், நடராஜன் என்பவரிடம் சங்கீதம் பயின்றார். அங்கே தான் இன்னும் இன்னுமாகப் பட்டை தீட்டப்பட்டார். அந்தச் சிறுவயதிலேயே உச்ச ஸ்தாயிக்குச் சென்றுவிட்டு, அழகாகக் கீழிறங்கிய சங்கதிகளில் சொக்கிப் போனார்கள் திருச்சியில். காலமும் நேரமும் சேர்ந்து வந்தது. எந்த ஜி.ராமநாதனின் இசையில் திளைத்தாரோ… அதே ராமநாதன் இசையில் முதன் முதலாகப் பாடினார். அந்தப் பாட்டு… ‘வாராய் நீ வாராய்… போகுமிடம் வெகு தூரமில்லை… நீ வாராய்’! ‘வாராய்….’ என்று திருச்சி லோகநாதன் குரலுக்காகவே ஒவ்வொரு முறையும் தியேட்டருக்கு ஓடி வந்தார்கள் ரசிகர்கள். வாய்ப்புகளும் அப்படித்தான் வந்தன அவருக்கு. உற்சாகமான பாடல், வாழ்க்கையையே வெறுத்த பாடல்… இந்த இரண்டும் கிழக்கு, மேற்கு. ஆனால், இந்த இரண்டுக்கும் பொருந்துகிற குரலைக் கொண்டவர் தான் திருச்சி லோகநாதன். ‘ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே’ என்று இவர் பாடினார். டெண்ட் கொட்டகையில் மணல் திட்டில் உட்கார்ந்திருந்த ரசிகர்களை அப்படியே ஓடத்தில் ஏற்றிக்கொண்டு ஒரு ரவுண்டு வருவார்.
இவரது முதல் திரை இசை பிரவேசம் 1947ல் நடந்தது. தனது 23 வயதில் திரை இசை உலகில் முதல் பின்னணி பாடகராக அவர் கால் பதித்தார். அன்று முதல் அவரது குரலைக் கேட்க மக்கள் தவம் கிடந்தனர். ஜூபிட்டர் பிக்ச்சர் தயாரிப்பில் வெளியான ‘ராஜகுமாரி’ தான் தமிழ் சினிமாவில் முதல் பின்னணி குரலை பயன்படுத்திய திரைப்படம். ‘ராஜகுமாரி’ மூலம் திரை உலகில் பின்னணி பாடகர் வாழ்க்கை தொடங்கிய திருச்சி லோகநாதன், தனது இறுதிகாலம் வரை கோவிந்தராஜூலு நாயுடு, வேதா, டி.ஜி. லிங்கப்பா, எஸ்.வி.வெங்கட்ராமன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, டி.ஆர்.ராமநாதன், தக்ஷ்ணாமூர்த்தி, கண்டசாலா, ஏ.எம்.ராஜா, ஜி.ராமநாதன் என்று ஏகப்பட்ட இசையமைப்பாளர்களின் இசையில் இடை விடாமல் பாடினார். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருண்டது இவரது திரை இசைச் சக்கரம். மக்கள் லோகநாதன் என்றால் மயக்கும் அளவுக்கு தன் ஆளுமையை கூட்டினார் லோகநாதன்.
பொதுவாக லோகநாதனின் பாடல் களம் நையாண்டி தனம் நிரம்பியது. மேற்கொண்டு காதல் ரசம் தவழும் வரிகளையும், சோகம் பிழியும் வரிகளையும் அவர் பாடியுள்ளார். ‘சின்னக்குட்டி நாத்தனா, சில்லறையை மாத்தினா.. குனங்குடி போற வண்டியில குடும்பத்தையே ஏத்தனா’ பாடல் அதற்கு சரியான சாட்சி. ‘ஆரவல்லி’ படத்தில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் வரிகளில் ஜி.ராமநாதன் இசையில் வெளிப்பட்ட இந்தப் பாடல் அன்றைக்கு குத்துப்பாட்டு கலாச்சாரத்தில் கரை புரள செய்தது. அதே போல தான் ‘கையில வாங்கினேன் பையில போடல காசு போன இடம் தெரியல’ பாடலும். மாதக் கடைசியில் மனிதன் சந்திக்கும் பொருளாதார சிக்கலை இப்பாடல் சிறப்பாக வெளியே சொன்னது. ‘இரும்புத்திரை’யில் வெளியான இந்தப் பாடல் இன்று வரை ஒரு மாஸ்டர் பீஸ். ‘நாலு வேலி நிலம்’ படத்தில் கு.ம.பாலசுப்பிரமணியன் வரிகளில், ‘ஊரார் உறங்கையிலே.. உற்றாரும் உறங்கையிலே.. நல்ல பாம்பு வேடம்கொண்டு நான் வருவேன் சாமத்திலே’ என்ற பாடலை இன்று மணிக்கணக்காக கேட்டாலும் மயக்கம் விட்டு அகலாது. கே.வி. மகாதேவனின் இசையில் இந்தப் பாடல் உருவானது. இப்படி ‘ஆசையே அலை போல’, ‘உலவும் தென்றல் காற்றினிலே’ எனப் பட்டியல்கள் பல நீளும். அதிகம் ரசிகர்களை லோகநாதனுக்கு பெற்று தந்த படம் ‘மாயா பஜார்’. ரங்காராவ் நடிப்பில் உருவான ‘கல்யாண சமயல் சாதம்’ பாடலை இவர் தான் பாடி கொடுத்திருந்தார். இவரது குரலுக்கு ஏற்ப ரங்காராவின் அங்க அசைப்பு உச்சம் பெற்றிருந்தது.
லோகநாதனுடன் இணைந்து அதிகம் டுயட் பாடியவர்கள் இருவர். ஜிக்கியும் லீலாவும் தான் அவர்கள். இவர்களுடன் சேர்ந்து பாடினால் பாடல் சக்சஸ் எனக் கூறும் அளவுக்கு ரசிகர்கள் மனதில் ஆழப்பதிந்தார் லோகநாதன். பி.சுசீலாவுடன் இவர் பாடிய ‘அடிக்கிற கைதான் அணைக்கும்’ பாடல் மயக்கத்தின் உச்சத்திற்கு கொண்டு போய்விடும். ‘அடுத்த வீட்டுப் பெண்’ படத்தில் ‘கண்களும் கவி பாடுதே’ பாடலை சீர்காழி கோவிந்தராஜனுடன் சேர்ந்து லோகநாதன் பாடி இருந்தார். சங்கீத சாம்ராஜ்யத்தில் தனி ஆவணம் என இந்தப் பாடலை சொல்லலாம். லோகநாதனின் குரல் அதிகம் சிவாஜி கணேசனுக்கும், எஸ்.எஸ். ராஜேந்திரனுக்கும் பொருந்தி வருவதாக அன்றைய ரசிகர்கள் நம்பினர். அதில் உண்மையும் இருக்கவே செய்தது. ‘கப்பலோட்டிய தமிழன்’ படத்தில் பாரதியாரின் வரிகளில் உருவான ‘என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்’ பாடலை லோகநாதனை விட வேறு எவராலும் அன்றைக்கு உயிர் கொடுத்திருக்க முடியாது என பலரும் புகழ்ந்தது தனிக் கதை. இப்படி லோகநாதன் தொட்டது எல்லாம் துலங்கியது.
அதன் பிறகு சுதந்திர தாகம் அவரை ஆட்கொண்டது. தேசிய உணர்ச்சி, இசை பயிற்சி, திரை இசை ஈர்ப்பு என பல வழிகளில் லோகநாதனின் மன உலகம் பயணிக்கத் தொடங்கியது. பிறகு நகைச்சுவை நடிகை சி.டி.ராஜ காந்தத்தின் மகள் ராஜலெட்சுமி மணந்த இவருக்கு டி.எல்.மகாராஜன், தீபன் சக்ரவர்த்தி, தியாகராஜன் என மூன்று பிள்ளைகள். ‘பூங்கதவே தாழ் திறவாய்’ பாடலை பாடிய தீபன் சக்ரவர்த்தி இவரது மகன்தான்.
1989 நவம்பர் 17 இந்த உலகை விட்டு பிரிந்த அவரது புகழ், அவரது பாடல் வரிகளை போலவே ‘உலவும்தென்றல் காற்றினிலே’ ஒலித்துக் கொண்டே இருக்கிறது
இந்த ஆண்டு திருச்சி லோகனாதன் என்ற மாபெரும் பின்னணி பாடகரின் நூற்றாண்டு என்பது நம் சமூகத்திற்கு பெருமை சேர்க்கும் விஷயமாகும்!
Be the first to comment on "திரை உலகின் முதல் பின்னணி பாடகர் திருச்சி லோகனாதன்"