தமிழ் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்றையும் பண்பாட்டையும் கொண்ட உயர் தனிச் செம்மொழி. இத்தகைய பெருமை வாய்ந்த தமிழ் மொழியின் இணையான கூறுகளாக இயற் தமிழ், இசைத் தமிழ் மற்றும் நாடகத்தமிழ் ஆகிய மூன்றும் அடையாளப் படுத்தப்படுகிறது இதில் நாடகத் தமிழில் மட்டுமே இயலும் இசையும் இணைந்து காணப்படுகிறது. நிகழ்த்து கலை வடிவமான நாடகக் கலை பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு நாடகக் குழுவினரால் (சபா) வளர்க்கப்பட்டு வந்தது தமிழகத்தில் நாடகக் கலையை வளர்ப்பதில் பெரும்பங்காற்றியவர்கள் நாடக நடிகர்களே. திரைப்படங்களின் (1931) வருகைக்குப் பின் பல நாடக நடிகர்கள் திரைத்துறையை நோக்கிப் பயணப்படத் தொடங்கினர். அவ்வாறு திரைத்துறைக்கு சென்றவர்களில் சிலர் தன்னுடைய தனித்துவம் வாய்ந்த நடிப்புத் திறமையினால் மக்கள் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்றனர் அதில் விஸ்வகர்மா இனத்தை சார்ந்த பிரம்ம்ஸ்ரீ S.V. சுப்பையா அவர்களும் ஒருவர். 1946 முதல் 1980 முடிய உள்ள தமிழ் திரையுலக காலகட்டத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையில் இருந்த குணச்சித்திர நடிகர்களில் முக்கியமானவர் அமரர். S.V. சுப்பையா அவர்கள்.
பிறப்பு:
செங்கோட்டையை திருவிதாங்கூர் சமஸ்தான மன்னரான ஸ்ரீ மூலம் திருநாள் ராமவர்மா VI (1885–1924) அவர்கள் ஆட்சிபுரிந்து கொண்டிருந்த கால கட்டத்தில் செங்கோட்டையில் மரத் தச்சராக வேலை செய்து கொண்டிருந்த வெள்ளையன் ஆச்சாரி மற்றும் ராஜ வடிவு தம்பதியரின் மூன்று குழந்தைகளில் இரண்டாவது குழந்தையாக அக்டோபர் -20, 1920-இல் பிறந்தவர் S. V. சுப்பையா என்று அழைக்கப்படும் செங்கோட்டை வெள்ளையன் ஆச்சாரி சுப்பையா. S.V. சுப்பையா அவர்கள் தன்னுடைய ஆரம்ப பள்ளிப் படிப்பை செங்கோட்டையில் பயின்றார். அவருடைய குடும்பச் சூழல் மற்றும் நடிப்பின் மீதிருந்த ஆர்வத்தின் காரணமாக ஐந்தாம் வகுப்போடு பள்ளிப்படிப்பை நிறுத்திக் கொள்ளும் சூழ்நிலைக்கு உள்ளானார்
நாடக நடிகர்.
1931-ஆம் ஆண்டு தன்னுடைய பதினொன்றாவது வயதில் செங்கோட்டையில் இயங்கி வந்த “ஆனந்த சக்திவேல் பரமானந்த பாய்ஸ்” எனும் சிறுவர் நாடகக் கம்பனியில் சேர்ந்தார். ஆரம்ப காலங்களில் நாடக கம்பனியில் சிறு வேலைகள் செய்து வந்தவர், அதன் பின் சிறிய பாத்திரங்களை ஏற்று நடிக்கலானார் .
எட்டு ஆண்டுகள் ஆனந்த சக்திவேல் பரமானந்த பாய்ஸ் நாடகக் குழுவில் பணியாற்றிய பின் அங்கிருந்து விலகி1939-ஆம் ஆண்டு “அவ்வை” T.K. சண்முகம் சகோதர்களுடைய T.K.S. நாடகக் குழுவில் (ஸ்ரீ பாலஷண்முகானந்த சபா) இணைந்தார். அச்சமயத்தில் T.K.S. நாடகக் குழுவினர் வெற்றிகரமாகநடத்திக்கொண்டிருந்த “சிவ லீலா” எனும் நாடகத்தில் அபிஷேகப் பாண்டியன் எனும் மன்னர் கதாபாத்திரம்ஏற்று நடித்தார். மேலும் அந்நாடகக் குழுவினர் தொடர்ச்சியாக பல மாதங்கள் நடத்திவந்த மஹாபாரதநாடகத்தில் கர்ணன் வேடம் ஏற்று தன்னுடைய தனித்துவமான நடிப்பினை வெளிப்படுத்தினார் T.K.S. நாடகக் குழுவில் பணியாற்றும் பொழுது நடந்த விரும்பத்தகாத சம்பவங்களின் காரணமாக அங்கிருந்து விலகி “சக்தி” T.K. கிருஷ்ணசாமி அவர்களால் (1945-இல்) தொடங்கப்பட்ட சக்தி நாடக சபையில் இணைந்தார். சக்தி நாடக சபாவினரால் 1945-இல் அரங்கேற்றப்பட்ட கவியின் கனவு எனும் நாடகத்தில் “மகாகவி ஆனந்தர்” எனும் கதாபாத்திரத்தில் நடித்தார் நாடகாசிரியர் S.D. சுந்தரம் அவர்களால் எழுதப்பட்ட கவியின் கனவு நாடகமானது சுமார் 1500 தடவைக்கும் மேல் நடத்தப்பட்டது. இந்நாடகத்தில் நடித்ததின் மூலம் இவர், திரு. சிவாஜி கணேசன் மற்றும் திரு. M.N. நம்பியார் ஆகியோர் புகழ் பெற்றார்கள்.
திரைப்பட நடிகர்:
S.V. சுப்பையா அவர்கள் நாடகத்துறையின் மூலம் பெற்ற புகழ் மற்றும் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்புத் தேடினார். அச்சமயத்தில், இயக்குனர் P. புல்லையா அவர்கள் 1946-ஆம் ஆண்டு இயக்கிய “விஜயலக்ஷ்மி” எனும் படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடிக்க S.V. சுப்பையா அவர்களுக்கு வாய்ப்பு வழங்கினார். “பிரகதி பிக்சர்ஸ்” தயாரிப்பில் 8-11-1946-இல் வெளியான விஜயலக்ஷ்மி என்ற இத்திரைப்படமே S.V. சுப்பையா அவர்களுடைய திரைப்பயணத்தில் முதல் படமாக அமைந்தது இதனைத் தொடர்ந்து 1947-இல் வெளியான ஏகம்பவாணன் எனும் திரைப்படத்தில் சிறு வேடத்திலும், கஞ்சன் என்ற திரைப்படத்தில் “கஞ்சன் கந்தசாமி” எனும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தார்.
குடும்ப வாழ்க்கை:
S.V. சுப்பையா அவர்கள் திரைப்பட நடிகராக வளர்ந்து வரும் வேளையில் திருநெல்வேலியில் வக்கீல் குமாஸ்தாவாக பணியாற்றிய அருணாசலம் ஆச்சாரி மற்றும் சந்தானதேவி தம்பதியரின் ஒரே மகளான A. கோமதி என்பவரை 1948-ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இத்தம்பதியர்க்கு குமுதவாசினி, ருக்மணி, சரவணன், பவானி, விஜயலக்ஷ்மி மற்றும் உமாதேவி என்று மொத்தம் ஆறு குழந்தைகள் பிறந்தனர்
திரைப்பட வாழ்க்கை
S.V. சுப்பையா அவர்களின் திரைப் பயணமானது 1946-இல் தொடங்கி 1979-இல் நிறைவு பெற்றது. இவருடைய 33 ஆண்டு திரைப்பட வாழ்வில் மொத்தம் 72 திரைப்படங்களில் நடித்திருந்தார். S.V. சுப்பையா அவர்கள் கலைச் சேவை ஆற்றிய 33 வருடங்களில் 1951 மற்றும் 1953 ஆகிய இரண்டு வருடங்கள் மட்டுமே இவர் நடிப்பில் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. 1959 மற்றும் 1973 ஆகிய வருடங்களில் மட்டும் இவருடைய நடிப்பில் தலா 6 திரைப்படங்கள் வெளியாகியது. நாடகத் துறையிலிருந்து சினிமாத் துறைக்கு வந்த இவர் தன்னுடைய நாடகத் தன்மையற்ற வெகு இயல்பான நடிப்பின் மூலம் மக்களுடைய கவனத்தை ஈர்த்தார். இவர் தான் ஏற்றுக் கொண்ட பாத்திரமாகவே மாறி தன்னுடைய சிறப்பான நடிப்புத் திறனை வெளிப்படுத்திய கதாபாத்திரங்களாவன: கஞ்சன் கந்தசாமி (கஞ்சன்-1947), கருணாகரன் (மங்கையர் திலகம்-1955), சுந்தரலிங்க மூப்பனார் (பாகப்பிரிவினை-1959), முருகன் (களத்தூர் கண்ணம்மா-1960), மகாகவி பாரதி (கப்பலோட்டிய தமிழன்-1961), ஜேம்ஸ் (பாவமன்னிப்பு-1961), அய்யா (பாலும் பழமும்-1961), ராகவன் (காவல் தெய்வம்-1969), அபிராமி பட்டர் (ஆதிபராசக்தி-971), ராமு சாஸ்திரிகள் (அரங்கேற்றம்-1973) மற்றும் திருநாவுக்கரசர் (ஞானக்குழந்தை-1979) ஆகியனவாகும்.
S.V. சுப்பையா அவர்கள் “இசைப்பேரறிஞர்” M.M. தண்டபாணி தேசிகர் “நடிப்பிசைப் புலவர்” K.R. ராமசாமி, T.R. மகாலிங்கம், “மக்கள் திலகம்” எம்.ஜி.ஆர்., “நடிகர் திலகம் சிவாஜி கணேசன்”, “காதல் மன்னன்” ஜெமினிகணேசன், “திரையுலக மார்க்கண்டேயன்” சிவகுமார், கலைச்செல்வி” ஜெயலலிதா, கமலஹாசன் மற்றும் “சூப்பர் ஸ்டார்” ரஜினிகாந்த் போன்ற திரையுலக ஜாம்பவான்களோடு இணைந்து நடித்துள்ளார். குறிப்பாக ஜெமினி கணேசன் (18) மற்றும் சிவாஜி கணேசன் (17) ஆகியோருடன் அதிக எண்ணிக்கையிலான திரைப் படங்களில் நடித்துள்ளார். சக்தி நாடக சபாவில் நடிகராக இருக்கும் காலத்திலேயே சிவாஜி அவர்களோடு நட்ப்பு பாராட்டினார் இவர்கள் இருவரின் நடப்பானது சிறு சிறு மனத்தாங்கல்கள் இருந்தாலும், S.V. சுப்பையா அவர்களின் இறுதிக் காலம் வரை தொடர்ந்தது.
1948-இல் வெளியாகிய அபிமன்யு எனும் திரைப்படமே இவர் எம்.ஜி.ஆர் அவர்களோடு இணைந்து நடித்தமுதல் திரைப்படம் ஆகும் அபிமன்யு திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். அர்ஜுனனாகவும் S.V. சுப்பையா அவர்கள் சகுனி கதாபாத்திரத்திலும் நடித்திருப்பர். 1955-இல் வெளியான மங்கையர் திலகம் எனும் திரைப்படத்தில் நடிகை பத்மினி அவர்களின் ஜோடியாக S.V. சுப்பையா நடித்திருப்பார், இந்த திரைப்படமே சிவாஜியோடு இவர் இணைந்து நடித்த முதல் திரைப்படமாகும். S.V சுப்பையா அவர்கள் முதன் முதலாக ஜெமினி கணேசனோடு வள்ளியின் செல்வன் (1955) எனும் திரைப்படத்திலும் கமலஹாசனுடன் களத்தூர் கண்ணம்மாவிலும் (1960) மற்றும் ரஜினிகாந்தோடு கவிக்குயில் (1977) எனும் திரைப்படத்திலும் இணைந்து பணியாற்றினார்.
S.V. சுப்பையா அவர்கள் தமிழ் திரைத்துறையில் புகழ்பெற்று விளங்கிய தயாரிப்பு நிறுவங்களான ஜூபிடர்பிக்சர்ஸ், சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் AVM புரொடக்சன்ஸ், ஜெமினி ஸ்டுடியோஸ், தேவர் பிலிம்ஸ் மற்றும் சத்யா மூவீஸ் போன்றவற்றின் தயாரிப்பில் வெளி வந்த படங்களில் பணியாற்றினார். தயாரிப்பாளர் எனும் நிலையைத் தாண்டி AVM புரொடக்சன்ஸ் சரவணன் அவர்களோடு நடப்பு பாராட்டினார்
திரையில் S.V. சுப்பையா அவர்கள் பாடுவதாக அமைந்த சில பாடல்கள் அவருடைய பிம்பத்தை தமிழக மக்கள்மனங்களில் உறுதியாக பதியச் செய்தன. அவற்றுள் குறிப்பிடத்தகுந்தவை கப்பலோட்டிய தமிழன் (1961) திரைப்படத்தில் பாரதியார் கதாபாத்திரத்தில் S.V. சுப்பையா அவர்கள் பாடுவதாக அமைந்த பாடல்களை திருச்சி லோகநாதன் அவர்கள் பாடினார். அப்படி வெளிவந்த பாடல்களாவன “என்று தணியும் இந்த சுதந்திர தாகம்…”, “தண்ணீர் விட்டோ வளர்த்தோம்…” மற்றும் “வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்…” போன்றவைகளாகும். T.M. சௌந்தரராஜன் அவர்கள் ஆதிபராசக்தி (1971) திரைப்படத்திற்காக பாடிய “சொல்லடி அபிராமி…” எனும்பாடலை அபிராமி பட்டர் கதாபாத்திரத்தில் உணர்ச்சி ததும்ப நடித்து தன்னுடைய நடிப்பாற்றலைவெளிப்படுத்திருப்பார் S.V. சுப்பையா அவர்கள். மூன்று தெய்வங்கள் திரைப்படத்திற்காக சீர்காழிகோவிந்தராஜன் அவர்கள் பாடிய “திருப்பதி சென்று திரும்பி வந்தால் ஒரு திருப்பம் நேருமடா…” எனும் பாடலைதிரையில் பாடி மக்கள் மனதைக் கவர்ந்திருப்பார் S.V. சுப்பையா அவர்கள். “நடக்கட்டும் லீலை கருமாரி” எனும்பாடலை T.M. சௌந்தரராஜன் அவர்கள் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் (1974) படத்திற்காக பாடினார் அப்பாடல்காட்சிகளில் S.V. சுப்பையா அவர்கள் தெய்வதோடு கோபித்து கொண்டு பாடும் வகையில் உணர்வு பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இதயக்கனி (1975) படத்தில் சீர்காழி கோவிந்தராஜன், T.M. சௌந்தரராஜன்மற்றும் S. ஜானகி ஆகியோரால் பாடப்பட்ட புகழ் வாய்ந்த திரைப்பாடலான “நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற…” பாடலில் நடித்ததன் மூலம் S.V. சுப்பையா அவர்களுடைய முகமும் புகழும் பட்டிதொட்டியெங்கும்பரவியது. தேவி தரிசனம் (1980) எனும் திரைப்படத்தில் K.J. யேசுதாஸ் அவர்கள் “சக்தியில்லாமல் உலகேது” எனும் பாடலை S.V சுப்பையாவிற்காக பாடியிருப்பார். இத் திரைப்படத்தில் ஒரு ஞானத்துறவியின் வேடத்தில் நடித்த S.V. சுப்பையா அவர்களுக்கு இதுவே கடைசித் திரைப்படமாகும்
இலக்கியவாதிகளின் தொடர்பு:
சாகித்ய அகாடெமி விருது பெற்ற இலக்கியவாதியான D. ஜெயகாந்தனுடைய படைப்புகளை ஆர்வத்துடன் வாசிக்கும் பழக்கம் கொண்டவர் S.V. சுப்பையா இதன் காரணமாகவே ஜெயகாந்தனுடைய படைப்புகளை திரைப்படமாக எடுப்பதில் ஆர்வம் காட்டினார். ஜெயகாந்தன் அவர்களோடு தனிப்பட்ட முறையிலும் நெருங்கிய நட்புறவைப் பேணினார்.
சாகித்ய அகாடெமி விருது பெற்ற இலக்கியவாதியும், இயக்குனர் இமயம் K பாலச்சந்தர் அவர்களிடம்திரைப்பட நுணுக்கங்களை கற்றவருமான கோவி மணிசேகரன் அவர்கள் தன்னுடைய மனோரஞ்சிதம் எனும் நாவலைத் திரைப்படமாக (அவரே) இயக்கினார். மனோரஞ்சிதம் திரைப்படத்தின் கதாசிரியரும் இயக்குனரும் கோவி. மணிசேகரன் அவர்களே என்பதால், தான் எழுதிய கதையில் உயிரோட்டமாக நடிப்பதற்கு தகுதியான நடிகர் என்று கருதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க S.V. சுப்பையா அவர்களை தேர்வு செய்தார். துரதிஷ்டவசமாக படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட தவறான புரிதலின் காரணமாக இத்திரைப்படத்தில் இருந்து S.V. சுப்பையா அவர்கள் பாதியிலேயே விலகிக் கொண்டார்.
சாகித்ய அகாடெமி விருது பெற்ற இலக்கியவாதியும், கவிஞரும், மகாகவி பாரதியின் அணுக்க சீடருமான புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் பாரதியின் வாழ்க்கையை 1942-ஆம் ஆண்டு வாக்கில் திரைப்படமாக எடுக்க முயன்றார், ஆனால் ஒரு சில காரணங்களினால் முயற்சியானது தடைப்பட்டது. கப்பலோட்டிய தமிழன் (1961) திரைப்படத்தில் S.V. சுப்பையா அவர்கள் மகாகவி பாரதியார் பாத்திரத்தில் தத்ரூபமாக நடித்ததைக்கண்டு வியந்த பாரதிதாசன் அவர்கள் S.V. சுப்பையாவின் நடிப்பில் பாரதி திரைப்படத்தை எடுக்க இரண்டாவது முறையாக மார்ச் 1964-இல் முயற்சித்தார். ஆனால் அதற்கு அடுத்த மாதமே பாரதிதாசன் இறக்க நேரிட்டதால் அவருடைய எண்ணம் ஈடேறவில்லை. இவ்வாறாக தன்னுடைய திறமையான நடிப்பால் இலக்கியவாதிகளின் நடப்பையும் பாராட்டையும் பெற்றார் S.V. சுப்பையா அவர்கள்.
தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்:
S.V. சுப்பையா அவர்கள் 1969-இல் அம்பாள் ப்ரொடக்சன் எனும் பெயரில் சொந்தமாக திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். இத்தயாரிப்பு நிறுவனமானது ஜெயகாந்தனுடைய கைவிலங்கு எனும் நாவலை காவல் தெய்வம் எனும் பெயரில் திரைப்படமாக தயாரித்து உழைப்பாளர் தினமான மே 1, 1969-இல் வெளியிட்டது. K. விஜயன் அவர்களால் இயக்கப்பட்ட இத்திரைப்படத்தில் ராகவன் எனும் சிறை அதிகாரி கதாபாத்திரத்தில் S.V. சுப்பையாவினுடைய பண்பட்ட நடிப்பானது வெளிப்பட்டிருக்கும். S.V. சுப்பையா மீது கொண்ட உன்னத நட்பின் காரணமாக சிவாஜி அவர்கள் இத்திரைப்படத்தில் சாமுண்டி எனும் கதாபாத்திரத்தில் பணம் எதுவும் பெற்றுக் கொள்ளாமலேயே நடித்துக் கொடுத்தார்.
1979-இல் ஜெயகாந்தன் அவர்களின் பிரம்மோபதேசம் எனும் சிறுகதையை குருவே தெய்வம் எனும் பெயரில்அம்பாள் ப்ரொடக்சன் மூலம் தானே தயாரித்து, இயக்கி, நடித்துக் கொண்டிருந்தார். படம் ஆயிரம் அடியை கடந்த நிலையில் உடல் நலிவின் காரணமாக காலமானார், அத்துடன் படமும் நின்று போனது.
சுயமரியாதைக் குணம்:
எளிமையானவர், பண்பாளர், இளகிய மனம் கொண்டவர் என்று அறியப்படும் S.V. சுப்பையா அவர்கள் தான்கொண்ட கொள்கையில் சிறிதும் சமரசம் செய்து கொள்ளாத பிடிவாத குணமுள்ள சுய மரியாதைக்காரராகவும் விளங்கினார். TKS நாடக குழுவில் S.V. சுப்பையா “ஜூனியர்” நடிகராக (1939) இருந்த சமயம் இவருடன் நடித்த “சீனியர்” நடிகர்களான “நடிப்பிசைப் புலவர்” K.R. ராமசாமி மற்றும் நடிகர் “Friend” ராமசாமி ஆகியோரால் மனோரீதியிலான துன்புறுத்துதலுக்கு உள்ளானார். தொடர்ச்சியான துன்புறுத்தலைத் தாங்கிக் கொள்ளமுடியாத S.V. சுப்பையா அவர்கள் இரண்டு ராமசாமிகளையும் தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டார். இந்த பிரச்சினை TKS நாடக குழுவின் முக்கியஸ்தரான T.K. சங்கரன் அவர்களுக்கு தெரியவந்ததன் விளைவாக S.V சுப்பையா அவர்களை விசாரித்தார், அதற்கு S.V. சுப்பையா கொடுத்த தோரணையான பதிலால் ஆத்திரமுற்று S.V. சுப்பையாவை கடுமையாக அடித்து விட்டார் T.K. சங்கரன். தன்னுடைய சுயமரியாதைக்கு குறைவு ஏற்பட்டதை சிறிதும் தாங்கிக் கொள்ள இயலாத S.V. சுப்பையா அவர்கள் அன்று இரவு நடந்த நாடகத்தில் நடிக்க மறுத்து T.K. சங்கரன் அவர்களின் சகோதரரான T.K. சண்முகம் அவர்களிடம் கூறிவிட்டு (1945-இல்) செங்கோட்டைக்குத் திரும்பினார். அதன் பின் TKS நாடகக் குழுவில் மீண்டும் இணையவே இல்லை. ஆனால் பின்னாட்களில் இப்பகையை மறந்து “நடிப்பிசைப் புலவர்” K.R. ராமசாமியோடு இணைந்து “சுகம் எங்கே! (1954)” எனும் திரைப் படத்தில் நடித்தார்
இலக்கியவாதியான கோவி. மணிசேகரன் அவர்கள் S.V. சுப்பையாவை முக்கிய கதாபாத்திரமாக வைத்து தன்னுடைய மனோரஞ்சிதம் நாவலை திரைப்படமாக இயக்கிக் கொண்டிருந்தார். ஒரு நாள் அப்படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் வேளையில் இயக்குனர் கோவி. மணிசேகரன் ஒரு காட்சியை நேர்த்தியாக எடுக்கும் பொருட்டு மீண்டும் மீண்டும் பல “ஷாட்கள்” போய்க் கொண்டிருந்தார். மதிய உணவு வேளையையும் தாண்டி படப்பிடிப்பு நீடித்ததால் S.V. சுப்பையா அவர்கள் பசியின் காரணமாக உணவு இடைவேளை விடும்படி இயக்குனரை வேண்டினார். ஆனால் இயக்குனரோ இக்காட்சியை எடுத்து முடித்ததும் உணவருந்த செல்லுமாறு தயவாய் வேண்டினார். ஏற்கனவே பசியில் இருந்த S.V. சுப்பையா அவர்கள் கோபத்தில் “பிரேக்” என்று உரக்கக்கூறினார். இயக்குனர் இட வேண்டிய கட்டளையை (பிரேக்) ஒரு நடிகர் இட்டதை, ஒரு உரிமைப் பிரச்னையாக கருதிய கோவி. மணிசேகரன் அவர்கள் ஆத்திரத்தில் S.V. சுப்பையா அவர்களை “கெட் அவுட்” என்று கூறிவிட்டார். தன்னுடைய சுயமரியாதைக்கு இழுக்கு நேர்ந்ததை தாங்கிக் கொள்ள இயலாத S.V. சுப்பையா அவர்கள் கோபத்தோடு படப்பிடிப்புத் தளத்தை விட்டுச் சென்றுவிட்டார். இப்பிரச்சினையை கோவி. மணிசேகரன் இயக்குனர் சங்கத்திலும், S.V. சுப்பையா நடிகர் சங்கத்திலும் முறையிட்டனர் அப்போதைய நடிகர் சங்கத் தலைவராக இருந்த சிவாஜி அவர்கள் S.V சுப்பையாவை அழைத்து மனோரஞ்சிதம் திரைப்படத்தில் நடித்துக் கொடுக்குமாறு வேண்டினார். கோவி. மணிசேகரன் அவர்களும் S.V. சுப்பையா அவர்களிடம் வேண்டினார். அனால் யாருடைய சமாதானத்தையும் ஏற்காத S.V. சுப்பையா அவர்கள் படத்தில் நடிக்க தான் பெற்ற முன் பணத்தை தயாரிப்பாளரிடமே திருப்பிக் கொடுத்து விட்டு படத்திலிருந்து முழுவதுமாக விலகினார். பின்னர் மனோரஞ்சிதம் திரைப்படத்தில் S.V. சுப்பையாவுக்குப் பதிலாக சிவஜியின் வேண்டுதலின் பேரில் அப்போதைய நடிகர் சங்க செயலாளரான “மேஜர்” சுந்தரராஜன் அவர்கள் பணம் எதுவும் பெற்றுக்கொள்ளாமல் நடித்துக் கொடுத்தார். இருப்பினும் வேறு சில காரணங்களினால் படம் வெளியாகவில்லை
இரவு ஒன்பது மணிக்கு மேல் படப்பிடிப்பில் கலந்து கொள்வதில்லை எனும் கொள்கையையும் வைத்திருந்தார். S.V. சுப்பையா அவர்கள். S.V. சுப்பையா அண்ணன் மிகவும் வித்யாசமானவர், திடீரென படப்பிடிப்புத் தளத்தில் எல்லோரும் சாப்பிட்ட அத்தனை எச்சில் இலைகளையும் எடுத்துப் போய் குப்பைத் தொட்டியில் போட்டு விடுவார். ‘தான்’ என்ற அகந்தை ஒழிய இப்படிச் செய்வதாகக் காரணம் சொல்வார் என்று நடிகர் சிவகுமார் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவத்தின் மூலம் S.V. சுப்பையா அவர்களின் கர்வமற்ற தன்மை புலனாகிறது.
வாழ்வில் பல துயரங்களைத் தாண்டி முன்னேறிய காரணத்தினால் தயாரிப்பாளர் தொடங்கி திரைத்துறையின் கடை நிலை ஊழியர் வரை அனைவருடனும் இயல்பாக பழகக் கூடியவராக விளங்கினார் S.V. சுப்பையா. இவருடைய இத்தகைய குணத்தின் காரணமாகவே இவர் கலைச் சேவை புரிந்த 33 வருடங்களும் தொடர்ச்சியாக பட வாய்ப்பினைப் பெற முடிந்தது எனலாம்.
இயற்கை நேயர் மற்றும் ஆன்மீகவாதி:
இயற்கை மீதும் விவசாயத்தின் மீதும் மாறா பற்றுக்கொண்ட S.V. சுப்பையா அவர்கள், திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தை (Red hills) அடுத்த காரனோடைப் பகுதியில் விவசாய நிலங்களை வாங்கி விவசாயம் செய்தார் இயல்பிலேயே ஞானத் தேடல் கொண்ட S.V. சுப்பையா அவர்கள் செங்கோட்டை இரட்டைக்குளத்தின் அருகே இருக்கும் தன்னுடைய குலதெய்வமான கருப்பசாமி மீதும், அம்பாள் மீதும் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி மீதும் தீரா பக்தி கொண்டவராக விளங்கினார் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு திருப்பதிக்கு நடைப்பயணமாகவே செல்லும் பழக்கம் கொண்டிருந்தார்
காஞ்சி மகாப் பெரியவர் சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள் மீது பக்தி கொண்டவர் S.V. சுப்பையா. அதன் காரணமாக அடிக்கடி காஞ்சி சங்கரமடம் சென்று மகாப் பெரியவரை தரிசிப்பார். ஒருசமயம் காஞ்சியிலிருந்து ஆன்மீக யாத்திரை மேற்கொண்ட மகாப் பெரியவர், காரனோடையில் உள்ள S.V. சுப்பையாஅவர்களின் நிலத்தில் குடில் அமைத்து ஒரு மாத காலம் தங்கியிருந்து விட்டு யாத்திரையைத் தொடர்ந்தார். இவ்வண்ணம் மகாப் பெரியவர் தன்னுடைய இடத்தில் தங்கியிருந்ததை தன்னுடைய வாழ்வின் மிகப் பெரும் பாக்கியமாகக் கருதினார் S.V. சுப்பையா .
மரணம்:
1979-இல் கமலாக்கர காமேஸ்வர ராவ் இயக்கித்தில் வெளிவந்த ஞானக்குழந்தையும், “வலம்புரி” சோமநாதன் இயக்கித்தில் வெளியான சிகப்புக்கல் மூக்குத்தி ஆகிய இருபடங்களும் தான் S.V. சுப்பையா உயிருடன் இருக்கும் போது அவர் நடிப்பில் வெளியான கடைசிப்படங்கள் ஆகும். அதே வருடத்தில் குருவே தெய்வம் எனும்படத்தினை தானே தயாரித்து, இயக்கி நடித்துக் கொண்டிருந்தார்.படம் ஆயிரம் அடியை கடந்த நிலையில் 29-01-1980- இல் மாரடைப்பின் காரணமாக காலமானார். அவருடைய பூத உடலானது திரைத்துறைப் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின் சகல மாரியாதையுடன் கரனோடையில் உள்ள அவருடைய நிலத்தில்நல்லடக்கம் செய்யப்பட்டது. அவருடைய மரணத்திற்கு பின் K. சங்கர் இயக்கத்தில் அவர் ஏற்கனவே நடித்த திரைப்படமான தேவி தரிசனம் வெளியானது (31-12-1980) அம்பாள் மீது தீரா பக்தி கொண்டவரின் மனைவி, குழந்தைகளின் பெயர்கள் அனைத்துமே அம்பாளின் பெயர்களாகவே இருந்தது, இவருடைய மரணத்திற்கு கடைசித் திரைப்படத்தின் பெயரும் “தேவி தரிசனம்”, இவர் மரணித்த கிழமையும் அம்பாளுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை என்பது இயல்பாக அமைந்த ஒன்றா அல்லது இறைவனின் திருவிளையாடலா என்பது யாரும் அறியாத ஒன்று
புகழுரைகள்:
கலைஞர்களுக்கு கிடைக்கக்கூடிய உண்மையான கௌரவம் /விருது என்பது ரசிகர்களிடம் இருந்து கிடைக்கும் பாராட்டும் புகழுரைகளும் மட்டுமே. 1955-இல் S.V. சுப்பையா அவர்களின் நடிப்பில் வெளியான வள்ளியின் செல்வன் எனும் திரைப்படத்தில் கந்தன் எனும் கதாபாத்திரத்தில் தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்திருப்பார். இத்திரைப்படத்திற்காக அன்றைய குமுதம் இதழ் வெளியிட்ட விமர்சனத்தில் S.V. சுப்பையா அவர்களின் நடிப்பை வெகுவாகப் பாராட்டி, இத்திரைப்படத்தில் நடிகர்கள் வரிசையில் முதலிடம் பெறுபவர் S.V. சுப்பையா என்றும், அவருடைய நடிப்பானது உன்னத ரகத்தைச் சேர்ந்தது என்று புகழாரம் சூட்டியது.
பாவேந்தர் பாரதிதாசனுடைய இறுதிக் காலத்தில் அவரோடு மிகவும் நெருங்கி பழகியவரான புலவர் முருகுசுந்தரம் அவர்கள் பாவேந்தரோடு பழகிய அனுபவத்தை “பாவேந்தர் நினைவுகள்” எனும் தலைப்பில் புத்தகமாக வெளியிட்டுள்ளார் (1979). அப்புத்தகத்தில் முருகு சுந்தரம் அவர்கள், பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் மகாகவி பாரதியாக S.V. சுப்பையா அவர்களின் நடிப்பைப் பார்த்து விட்டு வெகுவாக புகழ்ந்ததை பாரதிதாசனுடைய வார்த்தைகளில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
……” அப்படியே பாரதியார் போலவே இருந்தது. ஆகா! என்ன நடிப்பு! வேறு யாரும் பாரதியார் வேடந்தாங்கி அப்படி நடிக்க முடியாது.”……
(பாவேந்தர் நினைவுகள் – பக். 126)
மேலும் S.V. சுப்பையாவை வைத்து ‘மகாகவி பாரதியார் என்ற படத்தை எடுக்க வேண்டும்! என்று பாவேந்தர் பாரதிதாசன் அடிக்கடி கூறியது தன்னுடைய நெஞ்சில் பசுமையாக இருக்கிறது என்று முருகு சுந்தரம் அவர்கள் பதிவு செய்துள்ளார். பாரதியோடு நெருங்கிப் பழகியவரான பாரதிதாசனுக்கு, பாரதியினுடைய உடல்மொழி, பேசும்விதம் அனைத்துமே தெரிந்திருக்கும், அத்தகைய பெரும் புலவரிடமிருந்து இத்தகையதொரு பாராட்டினைப் பெறுவதென்பது S.V. சுப்பையா அவர்களின் நடிப்புத் திறமைக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் என்றே கருதலாம். மேலும் பாவேந்தருடையப் பாராட்டுமொழியில் S.V. சுப்பையாவைத் தவிர வேறு யாரும் அப்படி நடிக்க இயலாது என்றும் அவரை வைத்தே தன்னுடைய கனவுப் படமான “மகாகவி பாரதியை” எடுக்க வேண்டும் என பாவேந்தர் விரும்பியது S.V. சுப்பையா அவர்களுக்கு புகழ் கூட்டுவதாகவே அமைந்துள்ளது.
கலைமாமணி கு.சா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 1979-இல் எழுதிய தமிழ் நாடக வரலாறு எனும் புத்தகத்தில் S.V. சுப்பையா அவர்களை பல இடங்களில் சிறப்பித்து கூறியுள்ளார். முழுமையான கல்வியறிவு ஏதுமின்றி நாடகத்துறையில் நுழைந்து தன்னுடைய திறமையின் மூலம் திரைத்துறையில் கோலாச்சிய நடிகர்களின் பட்டியலில் S.V. சுப்பையா அவர்களையும் குறிப்பிட்டுள்ளார். TKS மற்றும் சக்தி நாடகக்குழுக்களில் பணியாற்றி பின்னாட்களில் புகழடைந்த நடிகர்களின் பட்டியலிலும் S.V. சுப்பையா அவர்களுடைய பெயரைக் குறிப்பிட்டுள்ளார். இதுதவிர சிறந்த நடிகர்கள் மற்றும் குணச்சித்திர நடிகர்களின் பட்டியலிலும் S.V. சுப்பையா அவர்களுடைய பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது, நாடகத் துறையிலிருந்து திரைத்துறைக்கு வந்து ஜொலித்த நட்ச்சத்திரங்களின் பட்டியலில் தவிர்க்க முடியாத ஆளுமையாக S.V. சுப்பையா அவர்கள் விளங்கினார் என்பதைப் பறை சாற்றுவதாக உள்ளது.
‘கலைக்கோயில்’ திரைப்படத்தில் வீணை வித்வான் நித்யானந்தம் எனும் வேடத்தில் நடிக்க S.V. ரங்காராவை ஒப்பந்தம் செய்திருந்தார் இயக்குநர் ஸ்ரீதர். தவிர்க்க இயலாத காரணங்களினால் S.V. ரங்காராவினால் திரைபடத்தில் நடிக்க இயலவில்லை எனவே இயக்குனர் அப்பத்திரத்தில் S.V. சுப்பையா அவர்களை நடிக்கவைத்தார். இதனைக் கண்ட S.V. ரங்காராவ் “சுப்பையா ஈஸ் குட் ஆல்டர் நேட், ஆல் தி பெஸ்ட் ஸ்ரீதர்” என்று இயக்குநர் ஸ்ரீதரிடம் கூறினார். இவ்வாறு சக நடிகர்களிடமே நன் மதிப்பைப் பெற்றவர் S.V. சுப்பையா அவர்கள்.
முடிவுரை:
செங்கோட்டையில் விஸ்வகர்மா சமூகத்தில் ஒரு சாதாரண தச்சரின் மகனாக பிறந்து, அவருடைய குலத்தொழிலையே பார்க்கக்கூடிய வாய்ப்பு இருந்தும் அதில் ஈடுபடாமல் தன் முயற்சியால் நாடகத் துறையில் நுழைந்தார். நாடகத் துறையில் பல்வேறு போராட்டங்களைச் சந்தித்து படிப்படியாக தன்னையே செதுக்கிக் கொண்டு ஒரு திரைப்பட நடிகராக மாறினார். திரைத் துறையில் தன்னுடைய ஈடு இணையற்ற குணச்சித்திர நடிப்பால் பெரும் புகழ் பெற்றார். அப்புகழின் வழியே பல பெரியவர்களின் நடப்பையும் ஆதரவையும் பெற்றார். இலக்கியத் தேடலும், ஆன்மீகத் தேடலும் கொண்ட S.V. சுப்பையா அவர்கள் அனைவருக்குமே ஒரு எடுத்துக்காட்டாக விளங்கினார். இந்த இறை நேசரின் புகழ்மிகு எளியவாழ்வு அனைவரின் போற்றுதலுக்குரியதாக அமைந்தது என்பதில் சிறிதும் ஐயமில்லை.
நன்றி: புதுத்திணணை.காம் நவ 25,2020
Be the first to comment on "மக்கள் கலைஞன்”: S.V. சுப்பையா"