பிள்ளையார் கோயில்களையும், சிவன்கோயில்களையும் கட்டுவித்த கம்மாளர்கள்!
கோவை, ஜூன் 21: சத்தியமங்கலம் அருகே கணக்கம்பாளையத்தில் 800 ஆண்டுகள். பழமையான கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.
தூக்கநாயக்கன்பாளையம் வரலாற்று ஆய்வாளர் ராமசாமி, தொல்லியல் ஆய்வாளர் கருப்புசாமி ஆகியோருடன் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சுந்தரம் கணக்கம்பாளையத்தில் உள்ள கல்வெட்டுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
கணக்கம்பாளையம் பகவதியம்மன் கோவில் நுழைவு வாயிலுக்கு அருகில் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் ஒரு பலகைக்கல்லில் கல்வெட்டு உள்ளது.
கல்வெட்டில் மொத்தம் 12 வரிகள் இருந்தன. ஏழு வரிகளும் நேர்த்தியாக ஒன்றாக இருக்குமாறு எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன. ஸ்வஸ்திஸ்ரீ என கல்வெட்டு தொடங்குகிறது. முதல் மூன்று வரிகளில் கல்வெட்டின் காலத்தைக் கணிக்க முடிந்தது. அரசன், கொங்கு நாட்டை ஆண்ட இரண்டாம் குலோத்துங்கன்.
கல்வெட்டில் அரசனின் ஆட்சியாண்டு 13-ஆவது என உள்ளதால், கல்வெட்டின் காலம் கி.பி. 1219-ஆம் ஆண்டு எனத்தெரிகிறது. எனவே, கல்வெட்டு 800 ஆண்டு பழமையானது. இதில், எழுகரை நாட்டுக் கம்மாளர்கள், குளமாணிக்கம் என்ற ஊரில் சில வரி நீக்கங்களைக் கொடையாக அளித்துள்ளனர் என்னும் செய்தி உள்ளது. குளமாணிக்கம் என்னும் ஊரின் பெயர் கல்வெட்டில் ‘குள மாணிக்கமான அக்கைசாலை நல்லூர்! எனக் குறிப்பிடப்படுகிறது. அக்கசாலை என்னும் சொல் குறிப்பாக காசு, பொன் அணிகலன்கள் செய்யுமிடத்தைக் குறிக்கும். பொன்னால் அணிகலன்கள் செய்யும் பொற்கொல்லர்களும் அக்கசாலைகள் என அழைக்கப்பட்டனர். குளமாணிக்கமான அக்கசாலை நல்லூர் எனக் கல்வெட்டு குறிப்பிடுவதை ஆராயும் போது, குளமாணிக்கம் என்னும் பழம்பெயருள்ள ஊரில் அக்கசாலையான காசு அச்சடிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட்டதால், அக்கசாலை நல்லூர் என்னும் புதிய பெயர் வழங்கியிருக்கக் கூடும் என்று தெரிகிறது. இக் குளமாணிக்கம் என்னும் ஊர் தற்போதைய கணக்கம்பாளையமாக இருக்கலாம். எழுகரை நாடு என்பது ஏழூர்நாடு என்றும் கல்வெட்டுகளில் வழறது. இது தற்போதைய நாமக்கல் வட்டத்தில் அமைந்த பகுதி என்று கூறப்படுகிறது.
எழுகரை நாட்டுக்கம்மாளர்கள் குளமாணிக்கத்தில் அக்கசாலையில் பணி புரிந்திருக்கின்றனர். அவர்கள் கோயில்களுக்குச் கொடை அளித்துள்ளனர். பிள்ளையார் கோயில்களையும், சிவன்கோயில்களையும் கட்டுவித்துள்ளனர் என்ற செய்தியும் கல்வெட்டில் இருந்து தெரிய வருகிறது என வரலாற்று ஆய்வாளர் ராமசாமி. தொல்லியல் ஆய்வாளர் கருப்புசாமி கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சுந்தரம் ஆகியொர் தெரிவித்தனர்
நன்றி: தினமணி ஞாயிற்றுக்கிழமை22, ஜூன் 2014
Be the first to comment on "800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கூறும் செய்தி"