“மாந்தை”

மாதோட்டம் இலங்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க துறை முகமாகும். ஆரம்பகாலத்தில் இலங்கை முக்கிய துறைமுகப் பட்டணமாக திகழ்ந்த மாதோட்டம் என்னும் நகரமே அநுராதபுரம் (புலத்திநகரம் பொலனறுவை). கண்டி, திருகோணமலை ஆகிய நகரங்களுக்கெல்லாம் பழமை வாய்ந்த நகரமாகக் கருதப் படுகின்றது.
இலங்கையின் வடமேற்குப் பகுதியாகிய மன்னார் மாவட் டத்தில் பல கிராமங்களடங்கிய ஒருபகுதியை இன்றும் “மாந்தைப் பற்று” என்ற அழகிய தமிழ்ப் பெயராலே அழைக்கப்படுகின்றது. மாந்தை என்னும் பெயர் சங்ககால இலக்கியங்களிலும் மிக முக்கியமாகப் பதியப்பட்டுள்ளது.
மாந்தை அல்லது மாதோட்டம் என்னும் நகர் கம்மாளரால் கட்டப்பட்ட நகராகும். மிகப்பலம் பொருந்திய இச்சாதியார் பன்னெடுங்காலமாகப் இப்பகுதியை ஆட்சி செய்தார்கள் என ஒல்லாந்து தேசத்தைச் சேர்ந்த பற்றலொக்கி தானெழுதிய “இலங்கை” என்னும் நூலில் கூறியுள்ளார்.
“கொள்ளா நரம்பினிமிரும் பூசல் இரைதேர் நாரை யெய்திய விடுக்கும் துறைஎகழு மாந்தை யன்ன”
என நற்றிணையும்,
“நன்னகர் மாந்தை முற்றத் தொன்னார் பணிதிரை கொணர்ந்த பாடு சேர் நன்கலம்” என அகநானூற்றிலும்,
“வண்டு பண்செய்யும் மாமலர் பொழில் மஞ்சை நடமிடும் மாதோட்டம்” எனச் சம்பந்தரும்,
“வாழையாம் பொழில் மந்திகள் களிப்புற மருவிய மாதோட்டம்”எனவும்,
“பொன்னிலங்கிய முத்து மாமணிகளும் பொருந்திய மாதோட்டம்”எனவும்,
“மானமும் பூகமும் கதலியும் நெருங்கிய மாதோட்டம் நன்னகர்”
எனத் தேவாரங்களும் புகழ்ந்து பாராட்டிய நகர் மாதோட்ட நகராகும்.
இந்த மாதோட்ட நகரை, இலங்கையை வடிவமைத்த படைத்தல் கடவுளான விஸ்வகர்மாவின் மூன்றாவது மகனான துவட்டாச் சாரியாரே உருவாக்கினார். இவர் சிறந்த கட்டிடக் கலைஞர் திரிகாலமும் உணர்ந்த ஞானி. உலோகங்களை உருக்கி உருவங்களைச் செய்யும் ஆற்றல்மிக்கவர் ஆயகலைகள் அறுபத்தினான்கிற்கும் அதிபதி. விஞ்ஞான விற்பன்னர். வித்தைகள் பலதில் வித்தகர். சகலகலாவல்லவர். இதனால் மனிதரில் மாணிக்கம் என மக்கள் அழைத்தார்கள். இதன் பெறுபேறாக “மாதுவட்டா” என்னும் பெயர் மக்களால் வழங்கப் பட்டது. இக்காரணத்தில் அவரால் உருவாக்கப்பட்ட பகுதியை மாதுவட்டாபுரம் எனப் பெயரிட்டு அழைத்தார்கள். இது காலப் போக்கில் மாதோட்டம் என மருவியது. என பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளைதான் எழுதிய இலங்கைத் தமிழர் வரலாற்றில் கூறியுள்ளார்.
ஈழநாட்டின் வரலாற்றை கூறும்பாளி நூல்களான மகாவம்சம், அதன் பின் தோன்றிய சூளவம்சம் போன்ற நூல்கள் மாதோட் டத்தை மகாதித்த என்று குறிப்பிட்டுள்ளன. மா என்றால் பெரிய என்றும் தித்த என்றால் பாளி மொழியில் இறங்குதுறையைக் குறிக்கும். சிங்கள மொழியில் “மாதொட்ட”, “மான் தொட்ட” என்று அழைக்கப்படுகின்றது. சிங்கள இலக்கியங்கள் இதனை “மாவத்து தொட்ட” என அழைக்கின்றன. ஆனால் தமிழரும் தமிழ் இலக்கியங்களும் “மாதோட்டம்” என்றே அழைத்து வருகின்றன.
கந்தபுராணத்திலுள்ள தகூரிணகைலாய மான்மியத்தில் இது மாதுவட்டாபுரம் எனக் கூறப்படுகின்றது. இது சம்மந்தமாக தட்சண கைலாய புராணத்தில் ஒருகதை கூறப்படுகின்றது. “அதாவது துவட்டாரச்சாரியார் பாலாவியில் நீராடி கேதீச்சுவரை பூசித்து தவமியற்றினார் என்றும் நீண்டநாள் தவத்தின் மகிமையால் சிவபெருமான் தோன்றி இன்று முதல் இத்தலம் “துவட்டாபுரம்” என அழைக்கப்படும் என கூறியதாக அக்கதை தொடர்கின்றது.
இவ்வாறு பல பெயர்களால் அழைக்கப்பட்ட மாதோட்டத்தின் தோற்றத்தைப் பற்றிக் கூறும் சான்றுகளாக, தட்சணகைலாய புராணமும் மாந்தைப் பள்ளும், முதலியார் சி. இராசநாயகம் எழுதிய “புராதன யாழ்ப்பாணமும் விஸ்வபுராணமும் கதிரை மலைப்பள்ளும்” இப்பொழுது காணப்படுகின்றன.
மாதோட்டத்தில் படைத்தல் கடவுள் விஸ்வகர்மாவின் சந்த தியிரான ஐவகைக் கம்மளார்கள் வாழ்ந்தார்கள் என்றும் மாந்தையை ஆண்ட அரசர்கள் கம்மாள வம்சத்தவர்கள் என்றும் முதலியார் சி.இராசநாயகம் தாம் எழுதிய”புராதன யாழ்ப்பாணம்” என்னும் நூலில் கூறியுள்ளார். அதையே தட்சண கைலாய புராணமும், மாந்தைப் பள்ளும், விஜயதர்ம நாடகம் என்னும் நூல்களும் கூறுகின்றன.
மாதோட்டம் பற்றிய மிகமிகப் பழைய குறிப்பு மகாவம்சத்தில் காணப்படுகிறது. அதாவது விஜயன் இலங்கை வந்து குவேனி யைத் திருமணம் செய்து அவளின் உதவியோடு காளிசேனன் என்னும் மன்னனைக் கொலை செய்து, அவனின் சிற்றரசையும் தன்னாட்சியுடன் இணைத்தவுடன் குவேனியைக் காட்டுக்குத் துரத்திவிட்டு பின் தனக்குப் பட்டத்து அரசியாக பாண்டிய நாட்டு இளவரசியை வரவழைத்தபோது, பாண்டிய மன்னன் தன் மகளையும் எழுநூறு தோழிப் பெண்களையும் அவர்களுடன் பதினெட்டுக் குடிகளையும் சேர்ந்த ஆயிரம் கம்மாளக் குடும்பங்களையுைம் அனுப்பினான். அவர்கள் வந்திறங்கிய அதாவது அவ்வளவு பெரிய திரளான பரிவாரங்கள் வந்திறங்கிய இடத்துக்கு மாதித்த என்று பெயருண்டாகியது என மகாவம்சம் கூறுகின்றது. இது கி. மு. 6ம் நூற்றாண்டில் நடைபெற்றது.
இக்கருத்து மிகவும் தவறான கூற்று என இலங்கை வரலாறு அறிந்தவர்கள் கூறுகின்றார்கள். ஏனெனில் மாதோட்டத்தில் ஒருபலம்மிக்க நாகராட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது இலங்கையில் இயக்கர்களைப் பகைத்துக் கொண்ட விஜயன் பலமிக்க நாகராட்சியையும் பகைக்க விரும்பி இருக்கமாட்டான். மாதோட்டத்தில் தான் கம்மாளர்களின் ஆட்சியும் ஆட்பலமும் கூட இருந்தது. இலங்கையை ஆண்ட முன்னரசர்களான குபேரன், இராவணன்,பத்மாசூரன் போன்றோரும்பத்மாசூரனின் தந்தை பிரபாகரன் கம்மாள இளவரசிகளைத் திருமணம் செய்துள்ளார்கள். இதனால் விஜயன் இயக்கரின் எதிர்ப்பைச் சமாளிக்க பக்கத்திலுள்ள பலமிக்க ஆட்சியாளர்களின் உதவியைப் பெறும் நோக்கோடு மாந்தை இளவரசியைத் திருமணம் செய்தான் என்பதே உண்மையாகும். இதை அடிப்படையாக வைத்தே மாந்தை மன்னன் தன் மகளுக்குப் பாது காப்புக்கு 1000 கம்மாளக்குடும்பங்களை உடனனுப்பினான். அவ்வாறில்லாது பாண்டியனின் சம்மந்தமாக இருந்திருந்தால் பாதுகாப்புக்கு படைப்பிரிவை அனுப்பியிருப்பான். அதைவிட்டுக் கம்மாளரை ஏன் அனுப்பவேண்டும்? அவ்வளவு தொகையான கம்மாளர்கள் பாண்டியநாடு முழுவதையும் சல்லடை போட்டாலும் கிடையாது. எனவே பாண்டிய நாட்டு இளவரசி என்பது, மகாவம்சத்தாரின் கற்பனை. மாந்தை இளவரசி என்பது சரியானதாகும். மாந்தை இளவரசிகள் நாகர் பரம்பரை யைச் சேர்ந்தவர்கள். நாகர்களைப் பற்றிய மிகத் தாறுமாறான கருத்துக்களை அதாவது நாகர்கள் பேய் பிசாசுகள் என்ற கருத்துக்களை மகாவம்சம் கூறியுள்ளது. அதேநாக பரம்பரையில் விஜயன் பெண்ணெடுத்தான் என எழுதினால் மல்லாந்துபடுத்துக் கொண்டு எச்சிலைத் துப்பியவன் கதை தங்களுக்கும் ஏற்படும் என்றும் விஜயன் மூலம் ஒரு புனித இனத்தை உருவாக்கத் திட்டமிட்டு இயக்கப் பெண்ணான குவேனியைக் காட்டுக்குத் துரத்திய மகாவம்சத்தார் மீண்டும் நாகரோடு தொடர்பைக் காட்டவிரும்பாததாலே பாண்டியநாட்டு இளவரசியின் கதை புகுத்தப் பட்டது. ஆனால் விஜயன் திருக்கேதீச்சரத்திற்குத் திருப்பணி வேலை செய்தான் என கியு. நெவில் கூறியுள்ளார். விஜயனுக்கும் மாந்தைக்குமுள்ள தொடர்பையே இது காட்டுகிறது. எனவே விஜயனின் இரண்டாம் தாரம் பாண்டிய இளவரசி அல்ல மாந்தை இளவரசியாகும் என அறிஞர் பொ. சங்கரப்பிள்ளை தானெழுதிய “நாம் தமிழர் “ என்னும் நூலில் கூறியுள்ளார்.
விஜயன் கதை ஒரு கட்டுக் கதை எனச் சிங்கள அறிஞர்கள் கூறுகின்றார்கள். ஆனால் அவர்களும் சிங்கள இனத்தின் உண்மையான ஊரறிந்த பூர்வீகத்தை மறைக்கவே கூடியளவு கவனம் செலுத்துகின்றார்கள். எனவேதான் இலங்கையின் இனப் பிரச்சனை தொடர்கதையாகின்றது. விஜயன் தமிழன், ஒரு சைவன் எனப் பல ஆதாரங்கள் வெளிவந்த பின்பே விஜயன் கதை கட்டுக் கதை எனச் சிங்கள அறிஞர் சிலர் கூற முன்வந்துள் ளர்கள். அப்படியானால் சிங்களவரின் உண்மையான மூதாதை இலங்கையின் பூர்வீகக் குடியளான நாகர், இயக்கர் என்பதை ஏன் அவர்கள் இன்னும் மறைக்க வேண்டும். இதைச் சிங்கள வர்கள் ஏற்றுக்கொண்டால் பிரச்சனையே தீர்ந்துவிடும். மறைந்து விடும்.
கி.மு. 161ம் ஆண்டில் எலேல மன்னனின் மாமன் மருமகன், எல்லாளனுக்கும் மருமகன் துட்டகைமுனுவுக்கும் நடைபெற்ற போரைக் கேள்வியுற்றுத் தன் மாமனாகிய எலேல மன்னனுக்கு உதவுவதற்காகப் பல்லுக்கன் என்ற இளவரசன் பெரும்படை யோடுமாதோட்டத்தில் வந்திறங்கினான். ஆனால் மாமன் இறந்து விட்டான் என அறிந்ததும் அவன் திரும்பிச் சென்றான். அதன் பின் கி. மு. 103ம் ஆண்டளவில் புலகத்தன் , பாகியன், பழைய மாறன், பிழைய மாறன், தாதிகன் என்போர் மாதோட்டத்தில் வந்திறங்கி அனுராதபுரத்தின் மேல் படை யெடுத்து வெற்றி கொண்டார்கள் என மகாவம்சம் கூறுகின்றது.
கி.பி.38ம் ஆண்டளவில் ஈழநாகன் என்ற மன்னனைச் சிற்ற ரசர்கள் துன்புறுத்த, அவனது பட்டத்து யானை அவனைச் சுமந்து கொண்டு மாதோட்டத் துறைமுகம் மூலம் அக்கரைக்கு அனுப்பியது என மகாவம்சம் கூறுகின்றது.
அடுத்த ஐந்நூறு ஆண்டுகளில் மாதோட்டத்தில் என்ன நடந்தது என்ற குறிப்புகள் சிங்கள வரலாற்று நூல்களில் காணப்படவில்லை. அக்கால கட்டத்தில் மாதோட்டம் சீரும் சிறப்பும் வாய்ந்த ஒருவர்த்தகத்தளமாக உருவெடுத்துக்கொண்டிருந்தது என்பதை பிறநாட்டு அறிஞர்களின் நூல்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
ஈழத்திலிருந்துதந்தமும், ஆமை ஒடும், வாசனைத்திரவியமும் உரோமபுரிக்கு வந்தன என்று கி. பி. 1ம் நூற்றாண்டில் உரோம புரியில் வாழ்ந்த ஸ்ரூபோ (Strabo) என்னும் அறிஞர் கூறுகின்றார். அதே காலப்பகுதியில் வாழ்ந்த பிளினி என்னும் அறிஞர் இலங்கை யின் பிரதான நகரமான பலேசி முண்டல் ஒரு துறைமுகத்தை அடுத்திருந்தது எனக்கூறுகின்றார். இந்தப் பலேசி முண்டல் பாலாவி முண்டல் என்றும் அதற்குப் பக்கத்திலிருந்த மகாகூர்ப என்னும் பெரிய ஏரி இப்போது கட்டுக்கரை குளம் என்றும் சிலர் கருதுகின்றார்கள். மாதோட்டம் மூலம் வந்த முத்துக்களையும் பட்டாடைகளையும் அணிந்து வாசனைப்பொருட்களைப்பாவித்து ஆடம்பர வாழ்க்கையை உரோமர்கள் நடத்தினார்கள் என பெரிபுளுஸ் (Periplus) நூல் கூறுகின்றது.
கி.பி. 1800 ஆண்டுகட்குமேலைத் தேசங்களோடு வர்த்தகம் நடாத்திய துறைமுகப் பட்டணம் மாதோட்டம் என்பது கி. பி. 2ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க பூகோள விஞ்ஞானியான தொலமி (Prolemy) தான் வரைந்த பூகோளப் படமொன்றில் இலங்கையின் அன்றைய நகரங்கள் பற்றிக் குறிப்பிடுகையில் மாதோட்டத்தை மாதொட்டு என்றும் அதை அண்டிய பிரதே சத்தை (மாந்தையை), மாந்தொட்டு எனவும் குறித்துள்ளதில் இருந்து அறிய முடிகின்றது. அது மட்டுமின்றி மாதொட்டுக்கு முன் பெரிய வர்த்தகத் தளமென குறித்து உள்ளார். மாதோட்டத் துறைமுகம் மூலம் சீன மன்னர்களும் சிங்கள மன்னர்களும் தொடர்பு கொண்டார்கள் என்பதைச் சரித்திரம் கூறுகிறது.
கி.பி 5ம் நூற்றாண்டு வரை மாதோட்டம் பிரசித்தி வாய்ந்த வர்த்தகத் தளமாக விளங்கியது என்பதை பல நாட்டு அறிஞர்கள வாயிலாக அறிகின்றோம். மாந்தையில் வாழ்ந்த பஞ்ச தொழில கர்த்தாக்களான கம்மாளர்கள் தாங்கள் செய்யும் உலோக, மர, கல், கைப்பணிப் பொருட்களை மாதோட்டத் துறைமுகம் மூலமே வெளிநாடுகட்கு அனுப்பிப் பொருளிட்டினார்கள். அதுமட்டுமின்றி ஈழத்து உணவுவகைகள், முத்துபவளம், நவரெத்தினங்கள், யானை, யானைத்தந்தம், மயிற்றோகை, கறுவாய், மிளகு, ஏலம் போன்ற வாசனைத் திரவியங்கள் இங்கிருந்துவெளிநாடுகட்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. வெளிநாட் டிலிருந்து பளிங்குப் பாத்திரங்கள், கண்ணாடிப் பாத்திரங்கள், மட்பாத்திரங்கள் அகில் சந்தனம் முதலிய பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன.
கி. பி. 4ம் நூற்றாண்டில் கலிங்க நாட்டின் இளவரசர் உலகநாதனும் இளவரசி உலகநாச்சியும் புத்தபிரானின் தந்தச் சின்னத்தைக் கொண்டு வந்தது மாதோட்டத் துறைமுகம் வழி யாகத் தான். அவர்கள் ஒரு இராப் பொழுதை அங்கே இருந்த சைவ ஆலயத்தில் கழித்தார்கள் என பாளி நூலாகியதாதவம்சம் கூறுகின்றது. இவ்வாலயம் பாடல்பெற்ற திருக்கேதீஸ்வரம் என அறிஞர்கள் கூறுகின்றனர்கள்.
இலங்கையில் ஆங்கிலத் தேசாதிபதியாக இருந்த சேர் எமர்சன் ரெனட்ன் என்பர் தான் எழுதிய “இலங்கை” என்னும் வரலாற்று ஏட்டில் மாந்தையில் பண்டுதொட்டு நுட்பமான கப்பல் கட்டும் தொழில் இருந்து வந்தது. அவை இரும்பாணி இன்றியே கட்டப்பட்டன எனக் கூறியுள்ளார்.
கி. மு. 231ம் ஆண்டில் இலங்கையை ஆண்ட சங்கதீசன் என்னும் மன்னன் தான் கட்டிய ரூபன்வெளி தாது கோபுரத்தின் உச்சியில் இடிமின்னலை தவிர்க்கக் கூடிய கருவி ஒன்றை மாந் ைகக் கம்மாளரைக் கொண்டு செய்து வைத்தான். மாந்தை யில் வாழ்ந்த கம்மாளருக்குக் காந்தத்தைக் கையாளும் திறமை மிகுந்திருந்தது என பெர்குசன் (Ferguson) என்னும் அறிஞர் தான் எழுதிய “சிலோன்” என்னும் நூலில் எழுதியுள்ளார்.
கி.பி.6ம்,7ம் நூற்றாண்டுகளில் மாதோட்டம் மிகவும் சிறப்புற்று விளங்கியது. பலநாடுகளிலிருந்து வர்த்தகர்கள் இங்கு வந்துகூடினார்கள். உலகின் பாகங்களிலிருந்தும் பண்டங்கள் மாதோட் டத்தில் வந்து குவிந்தன எனக் கிரேக்க அறிஞர் கொஸ்மன் இன்டிக்கோ பிளஸ்தேஸ் தமது நூலில் கூறியுள்ளார். வர்த்தக விருத்தியால் மாதோட்டத்தில் செல்வம் சிறப்புப் பெருகியது. மக்கள் வளமான வாழ்க்கை வாழ்ந்தார்கள். மாந்தை நகரைச் சுற்றிப் பெரிய மதிலும் நான்கு வாசல்களும் இரண்டு அகழிகளும் இருந்தன. அகலமான தெருக்களும் மாடமாளிகைகளும், கூடங் களும் மாடங்களும் நிலா முற்றங்களும், நீச்சல் தடாகங்களும் இருந்தன. திருகேதீச்சரம் புகழ்வாய்ந்த ஆலயமாக இருந்ததால் சுந்தரரும் சம்மந்தரும் பாடிப்பெருமைப்படுத்தினார்கள்.”பாலாவி யின் கரைமேல் திடமாக உறைகின்றான் திருக்கேதீச்சரத் தானே” என்றும் “வறிய சிறை வண்டு யாழ் செயு மாதோட்ட நன்னகர்” என மாதோட்டத்தின் இயற்கை அழகைப் பாடு கின்றார். திருக்கேதீச்சரம் பற்றி கதிர்காம கல்வெட்டொன்றில் பெளத்த ஆலயத்தின் பரிபாலினத்துக்குரிய விதிகளைக் குறித்துவிட்டு அவற்றை மீறுவோர் மாதோட்டத்தில் பசுவைக் கொன்ற பாவத்தை அடைவார் எனக் கூறுகின்றது.
கி. பி. 935ம் இராசசிம்ம பாண்டியன் சோழர்கட்குப் பயந்து ஈழ மன்னன் உதவியை நாடி மாதோட்டத்தில் வந்து தங்கினான் என்றும் உதவி கிடையாததால் கேரள நாட்டுக்குச் சென்றான் எனச் சூளவம்சம் கூறுகின்றது. கி. பி. 947ம் ஆண்டில் பரந்தாக சோழனின் படை இராசசிம்ம பாண்டியன் விட்டுச்சென்ற மகுடத்தை மீட்டுச்செல்ல மாதோட்டம் வந்து வெற்றி பெற்று மகுடத்துடன் திரும்பிச் சென்றது. பின் 998ம் ஆண்டு இராசராச சோழன் படைகள் மாதோட்டத்தில் வந்திறங்கி மாதோட்டத் தையும் உத்தராட்டை என்ற வடபகுதியையும் தம்வசமாக்கி னார்கள். அதன்பின் இராசேந்திர சோழன் ஈழம் முழுவதையும் கைப்பற்றி 77 ஆண்டுகள் ஆட்சி செய்தார்கள். திருக்கேதீச்சரக் கல்வெட்டு ஒன்று மாதோட்டம் பற்றிய அரிய விடயங்களைத் தருகின்றது. மாதோட்டத்தில் ஒரு பெரிய தெருவும் கம்மாளர் சேரியுமிருந்தது எனக் கூறுகின்றது. மாதோட்ட மாந்தையை ஆண்ட மயன் இராவணனுக்காக லங்காபுரியையும் வானவூர்தி ஒன்றையும் செய்து கொடுத்தான் என இராமாயணம் கூறு கின்றது.
போதிய பலமுடைய தமிழ்குடிகள் அருகில் இருந்திராவிட்டால் எல்லாளன் அன்னியரான சிங்களவரை 43 ஆண்டுகள் ஆண்டி ருக்க முடியாது. தென்னிந்தியாவிலிருந்து அடிக்கடி ஏற்பட்ட குடிவரவுகளால் அக்காலத்தில் வடபகுதி தமிழ் நாடாகவே இருந்தது. மன்னார் மாவட்டத்தில் சிங்களப் பெயர்களோ அல்ல இனங்களோ! முற்றாக இல்லாதிருப்பது குறிப்பிடத்தக்கதாகும் என வரலாற்று ஆசிரியர் எச். டபிள்யு. கோடிறிங்கன் கூறுகின்றார். இக்கூற்றின்படி மன்னார்ப் பகுதி மாதோட்டத்தை உள் வாங்கிய பகுதியாகும். மாதோட்ட ஆட்சியின் சிறப்பும் வலிமையும் புலப்படுகின்றது.
ஏறக்குறைய 1800 ஆண்டுகளுக்கு மேலாக ஈழநாட்டின் நடுநாயகமாகவும் நாகரிக தீவகமாகவும் வர்த்தக வாணிபநிலைய மாகவும் உயர்ந்து ஈழத்தின் கலாச்சாரத்தை கடல் கடந்து பரப்பிய மாதோட்டம் இன்று புதைபொருள் ஆராச்சியின் ஆய்வின் மையமாகியுள்ளது. 1981ம் ஆண்டு யப்பான் நாட்டைச் சேர்ந்த ஆய்வாளரும் வென்சவேனிய அறிஞர்களும் இப்பகுதியை ஆய்வு செய்து கொடுத்த ஆய்வறிக்கையை இலங்கை தொல்பொருள் திணைக்களம் வெளியிடாது மறைத்துக் கொண்டிருக்கின்றது. அது வெளிவந்தால் மாதோட்டத்தின் மகிமை நாடறியும், ஏடறியும் நல்லவர்கள் உள்ளம் எல்லாம் துள்ளி விளையாடும்.
பன்னூறு ஆண்டுகளாக ஈழமக்களின் வாழ்க்கையிலும் சரித்திரத்திலும், கலாசாரத்திலும், நாகரிகத்திலும் முக்கிய முதலிடத்தை வகுத்த மாதோட்டம் இன்று மறைக்கப்பட்டுள்ளது. இதை வெளிச்சத்திற்குக் கொண்டுவரவேண்டிய பொறுப்பும் கடமையும் தொல்பொருள் ஆய்வாளர்கள் கரங்களுக்கே உண்டு.
இக்கடமை காய்தல் உவர்த்தலின்றிநிறைவேறுமேயானால் உலக நாகரிகத்தின் பிறந்தகம் மாதோட்டம் என்ற உண்மை உலகெல்லாம் பரவும். வான்முட்ட இலங்கையின் புகழ் விளங்கும்.
மாதோட்டம் அல்லது மாந்தை என்னும் துறைமுகம் மன்னாருக்கு சமீபத்தில் இருந்த பண்டைய சிறப்புமிக்க நகராகும்.
இந்த நகரை விஸ்வகர்மாவின் மூன்றாம் மகனான துவட்டா என்பவரே நிர்மாணித்து அவரும் அவர் சந்ததியினரும் அதிலி ருந்து ஆண்டு வந்தார்கள். நகரை மாந்தை என்று அழைத்தார் கள். இது மாதோட்டப்பகுதியின் இராசதானியாகும். இதன் கண் அமைந்த ஆலயத்தைத் திருக்கேதீச்சரம் என்ற பெயரிட்டு அழைத்தார்கள். இத்தலமே பேர்பெற்றதும் பாடல் பெற்றதுமான தலமாகும்.
இந்நகர் பற்றி ஒல்லாந்து தேசத்தைச் சேர்ந்த யாத்திரிகரான பெற்றலோக்கி (Battiokki) என்பவர் மாந்தை அல்லது மாதோட்டம் கம்மாளரால் கட்டப்பட்ட பெருநகரமாகும். இந்நகரில் பராக்கிரம மும் செல்வமுமிக்க மக்கள் பல காலமாக வாழ்ந்து வந்தார்கள் எனக் கூறியுள்ளனர்.
துவட்டா தெய்வீகத்தச்சரும் தேவகுருவும், ஜகக்குருவுமான படைத்தல் கடவுள் விஸ்வகர்மாவின் மகனாவார். நாடு நகர் அமைப்பதில் கைதேர்ந்த சிற்பி. சகலகலாவல்லவன் திரிகால முணர்ந்தஞானி, கட்டிடக்கலை வல்லவன், கற்றுணர்ந்த மேதை. மக்கள் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்யும் ஆற்றலும் அறிவும் மிக்க சாதனையாளர். இதனால் மக்கள் அவரை மாதுவாட்டா என அழைத்தார்கள். அவரால் வடிவமைக்கப்பட்ட பகுதியை மாதுவட்டபுரம் என்றும் அழைத்தார்கள். மாதுவட்டபுரம் காலத்தால் மருவிமாதோட்டம் ஆகியது என தனது நூலில் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை கூறுகின்றார்.
மேலும் படிக்க: பூ மா செல்லத்துரை அவர்கள் எழுதிய இலங்கையில் விஸ்வகர்மா

“மாந்தை என்ற மாதோட்டம்”

மாந்தை என்பது மாதோட்டத்தின் சுருங்கிய பெயர் என்பர். இம்மாந்தோட்டப் பிரதேசத்தில் விசுவகர்மாவாற் செய்யப்பட்ட காந்தக்கோட்டை அல்லது காந்தமலை என்னும் பெயருடைய இரும்பாலாகிய கோட்டையொன்று இருந்தது எனப்பழைய நூல்களால் தெரியவருகிறது. வியாபார நோக்கமாகவோ அன்றித் தேச இயற்கையறிவு சமயஅறிவு விருத்தி நோக்கமாகவோ கடற்பிரயாணஞ் செய்த யாத்திரிகர்கள் சொல்லுகிறபடிக்கும், இந்தக் காந்தக் கோட்டையிலுள்ளார் அக்கோட்டையின் அருகில் செல்லும் கப்பல்களை ஏதோ ஒரு சூழ்ச்சியால் கரைக்குக் கிட்டுமானமாக வரச்செய்து கப்பலிலுள்ள பொருட்களைக் கொள்ளையடித்து யாத்திரிகரையும் தொந்தரவு செய்து அனுப்புவது வழக்கமென்று அறியக்கிடக்கின்றது.
பஞ்ச கம்மாளராற் பெரிதும் போற்றப்படும் நூல்களில் ஒன்றாகி விளங்குவதும் யாழ்ப்பாணத்துப் புலவருள் ஒருவரான இராமசுந்தரம் என்பவரால் இயற்றப்பட்டது மான விசுவகர்மநாடகத்தில்,
“செங்கமல மாலையணி தேவனே! மாந்தை நகர்ப்
புங்கவனே! காந்தமலைப் பூரணகெம்பீர மன்னா!”
என விசுவகர்மா துதிக்கப்படுதலாலும், “காந்தலைக் கோட்டை மேவிய காவன் மன்னவன் புகழ் கூறவே” என மேற்படி நூலிற் பிறிதோரிடத்திற் சொல்லப்படுவதாலும், இற்றைக்கு நானு}று வருடங்களுக்கு முன் பின்னாகச் சிதம்பரதாண்டவ மருதகவிராயர் என்னும் தென்னிந்தியத் தமிழ்ப்புலவர் ஒருவராற் செய்யப்பட்ட “மாந்தைப்பள்ளு” என்ற நூலில் காந்தமுறுந் தடமதிலும் கமழுமலர்ப் பொழிலுமுற்ற மாந்தை நகர்” என்று கூறப்படுதலாலும், இற்றைக்கு இருநூறு வருடங்கட்குமுன், தென்னிந்திய தமிழ்ப்புலவராகிய சிதம்பர கவிராயரால் இயற்றப்பட்ட “விசுவ புராணம்” என்னும் நூலில் “பஞ்சகிருத்திய காண்ட”த்தில்
“உத்தர திக்கினமிக்க ஊசிக்காந்தத்தினாலே
சுற்றிலு மகல நாலைந்தோசனை தூரமுள்ள
முத்திரை மிகுந்த கோட்டை சிருட்டித்தார் முத்தினத்தில்”
என்று கூறப்படுதலானும், காந்தக்கோட்டை மாதோட்டம் அல்லது மாந்தைப் பிரதேசத்திலுள்ளது என்பதும், அது உண்டாயவாறும் பிறவும் கூறப்பட்டிருத்தல் காணலாம்.
“பெரிப்பிளஸ்” என்னும் கி. பி. 1-ம் நூற்றாண்டுச் சரிதையாளன் காந்தக்கோட்டையைச் “சேர்ப்பட்டம் என்பர். “சோப்பட்டினம்” என்பதில் மதில் அல்லது எயில் விசேஷம் பெற்று அரணாக்கப்பட்ட கோட்டையையுடைய பட்டினம் எனப் பொருள்பட்டுக் காந்த மதிலரண்களை யுடையதென் இம்மாந்தை நகர்க்கோட்டையையே குறிப்பிடும். இது இலங்கையில் உள்ளதென்பது “சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த சேவகன்” என இராமாவதார விஷ்ணுவைச் சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவையிற் பரவுதலாலும் அறியலாம்.
திரிபுரங்கள்
இலங்கையில் வசித்த தானவர், அசுரர், இராக்கதர் முதலிய சாதியார் இவ்வித கோட்டைகளும் மதில் சூழ்ந்த அரண்களும் உடையராய் இருந்தார்களென்பது பண்டைப்புராண வரலாறுகளானும் தமிழ் நூற் சரிதக் குறிப்புகளானும் அறியலாம். திரிபுரம் எரியத்தேவர் வேண்டிய காலத்துச் சிவபிரான் அழற்கண்ணால் அவ்வெயில் மூன்றையும் ஒருங்கே அட்டு நீறாக்கினர். அதன்பின் அவ்விடத்து எழுந்த அரணைப்போலும் இராமபிரான் சீதாபிராட்டியாரைச் சிறைமீட்க இலங்கைக்குட் புகுந்த காலத்துக் தவிடு பொடியாக்கினர். அத்துடன் மாயம் இழைக்குங் காந்தக் கோட்டைகள் நின்றுபோகவில்லை. இதன் பின்னரும் பூர்வீக காலச் சோழமன்னன் ஒருவன் இலங்கைக் கரையிலுள்ள தூங்கெயிலொன்றை அழித்ததனாலே “தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன்” எனத் தமிழ்ச்சங்க இலக்கியங்களிலே புகழப்படுகிறான். சிலப்பதிகாரம் வாழ்த்துக் காதையில், “தூங்கெயில் மூன்றெறிந்த சோழன் காண் அம்மானை” எனக் கூறப்படுதலினாலே, இக்கோட்டைகள் பண்டைக்காலத்தில் அழிக்கப் பட்டனவே மீட்டும் மீட்டும் முன்போல மூன்றாக இயற்றப்பட்டு வந்தன என்பது தெரிகிறது. இம்மூன்று கோட்டைகளும் மூன்று வேறு வேறான சாதியார்களின் கோட்டைகளாகவும் இருக்கலாம். விசுவகர்மாவையும் அவரிடத்தில் தோன்றியவர்களாகக் கருதப்படும் பஞ்ச கம்மாளரையும் புகழ்வதற்கு எழுந்த மாந்தைப்பள்ளில்,
  • “சூரபன் மன்மனைவி பதுமகோ மளைதந்தை சுரர்புனை வற்பணிந்து கூவாய்குயிலே” எனப் பதுமகோமளையின் தந்தையாகிய தேவகம்மியனம்,
  • “இருபது கையுடையான் றனக்குமண் டோதரியை ஈந்தருள் மயனார் பண்ணைப் பள்ளயராண்டே” என இராவணன் மனைவி மண்டோதரியின் பிதாவாகிய மயனும்
  • “சித்திர ரேகையெனுந்தனதன் மகிர்தேவியே தெய்வகம்மி யன்பெண்ணென்றே கூவாய்குயிலே”
எனக் குபேரன் மனைவி சித்திரரேகையின் தந்தையும் ஆகிய மூவர் குறிக்கப்படுகின்றனர். இதனாலே நாகசாதியாராகக் கருப்படும் கம்மாள வர்க்கத்தாருக்கும் அசுர இராக்கத இயக்க வகுப்பினர்க்கும் பெண்கொடுத்தல் கொள்ளலால் ஏற்பட்ட சம்பந்த உறவும் காந்தக்கோட்டை மாந்தை நகருரிமை அசுரர், இராக்கதர், இயக்கர் என்னும் மூவகையினர்க்கும் வந்தவாறும் தெரியவருகிறது. இலங்கை யாழ்ப்பாண இந்திய சரித்திரக் கடல்களில் ஆழ்ந்து நுண்பொருள் கொண்டு ஆராய்ச்சித் துறைபோகிய திரு. ஊ. இராசநாயக முதலியார் இவ்விஷயத்தைத் தமது “பூர்வீக யாழ்ப்பாணம்” என்னும் நூலில் நன்றாக ஆராய்ந்திருக்கிறார். அதிலிருந்தே மேற்கூறிய சில குறிப்புகள் இங்கு எடுத்தாளப்பட்டன. இனி விசுவகர்மாவின் தந்தையாகிய “துவட்டா” என்பவன் பெயரால் திருக்கேதீச்சரப்பதி பண்டைக்காலத்தில் துவட்டா நகரம் என்னும் பெயர்பெற்று விளங்கியதெனத் தக்ஷ்ண கைலாய மான்மியம் முதலிய நூல்கள் கூறுவதும், மாதோட்டமே மாந்தை என்பதற்கும் இங்கே காந்தக்கோட்டைகள் இருந்தமைக்கும் போதிய சான்றாகும்.
மண்டோதரியுந் திருவாசகமும்
ஆனால் எனது ஆராய்ச்சி திருக்கேதீச்சரத்தின் பழமையையும் தேவாரப்பதிகம் பெற்ற சிறப்பையும், சைவசமயத்துக்கு இத்தலத்துடனுள்ள பண்டைத் தொடர்பையும் விளக்குவதற்கு எழுந்ததாதலாலே அவற்றை மாத்திரம் காட்டி முடிப்பது தகுதியாகும். மேற்காட்டியபடி மாந்தை அல்லது மாதோட்டத்திலுள்ள திருக்கேதீச்சரத்து நாகரோடு சம்பந்த உரிமை பூண்ட மூவகையினரும் சிவவழிபாடு உடையவராய்க் காணப்படுகிறார்கள். குபேரன் அரனது தோழனென அழைக்கப்படும் பெருவாழ்வு பெற்றவன். சூரபன்மனும் சிவனிடம் வரம்பெற்று ஆயிரத்தெட்டு அண்டங்களை நூற்றெட்டு யுகங்கள் ஆண்டு, ஈற்றில் சுப்பிரமணியப் பெருமானது ஊர்தியாகவும் கொடியாவும் விளங்கும் பேறுபெற்றான். இராவணனும் அவன் மனைவி மண்டோதரியும் ஆகிய இருவரும் சிவன் மாட்டு ஆழ்;ந்த பத்தியுடையவராய்ப் பஞ்சாட்சர செபஞ் செய்தவர்களாதலினாலே திருஞான சம்பந்த சுவாமிகளும்,
“வண்டமரோதி மடந்தை பேணின
பண்டை இராவணன் பாடியுய்ந்தன’
என மனைவியாகிய மண்டோதரியின் இயல்பாகவே கசிந்துருகும் சிவபக்தியும், வழிபாடாற்றும் முறைகளும் அவள் பர்த்தாவாகிய இராவணன் இடர்வந்த காலத்துக் கடைப்பிடித்த பத்தி வழிபாட்டினுஞ் சிறந்தனவெனக் காட்டுவான் வேண்டி மண்டோதரியை முற்கூறி, அவள் நாயகனைப் பின்னர்க் கூறினார். அதுவுமின்றி, இப்புராதன சிவஸ்தலமாகிய திருக்கேதீச்சரத்தில் மண்டோதரியின் பொருட்டு நிகழ்த்தப்பட்ட திருவிளையாடலொன்று இங்கு குறிப்பிடத்தக்கது. இவள் தந்தையாகிய மயன் இருப்பிடம் மாந்தை அல்லது மாதோட்ட நகர் என்பது மேலே காட்டப்பட்டது. இவளையுங்கொண்டு இந்நகர்க்கு அணித்தான காட்டிற் செல்லும்போது மயன் இராவணனைச் சந்தித்து அவனை வரனாக்கி மாந்தை சென்ற இராவணனுக்கும் மண்டோதரிக்கும் மணம் முடித்தமை உத்தர இராமாயணத்திற் கூறப்பட்டுள்ளது. மண்டோதரி கன்னிப் பிராயத்திற்றானே சிவபத்தி முதிர்ந்தவளாய்ச் சிவபிரானை தியானித்து நோற்றாளாக, சிவபிரான் பிரசன்னராய விடத்துத் தான் விரும்பியபோதெல்லாம் அவர் தன் முன் வந்து தனக்குக் காட்சிதரல் வேண்டும் என்ற வரத்தை இவள் பெற்றுக்கொண்டனள் என்பர். இவள் மணமுடித்தபின் ஒருநாள் தனது பள்ளியறையில் சயனத்தில் இருந்துகொண்டே சிவதரிசனம் பெற விரும்பி மனதில் தியானித்தாளாகக் கருணையங்கடலாகிய கடவுளும் மண்டோதரியின் பள்ளியறையில் தாமும் ஒரு பள்ளிக்குப்பாயம் அணிந்தவராய்க் காட்சி கொடுத்தனர். மண்டோதரி அவரைக் கண்டவுடன் அளவிறந்த ஆனந்த மேலீட்டினால் தான் இருக்குமிடம் தன் நாயகன் பள்ளியறையின் பாங்கரிலுள்ளது என்பதையும் மறந்து, பிரசன்னமாய சிவமூர்த்தத்துடன் வார்த்தையாடவும் உரத்த சத்தத்துடன் ஸ்தோத்திரிக்கவும் தொடங்கிக் கொண்டனள். இதனால் பாங்கரிலுள்ள பள்ளியறையிற் சயனித்திருந்த இலங்கேசனது நித்திரைக்குப் பங்கம் விளைய, அவனும் மனைவியினறையில் ஏதோ ஆரவாரமாயிருக்கிறதேயென அதிசயித்து, மனைவியைக் கூவியழைத்து, என்ன ஆரவாரமென்று வினாவிக்கொண்டு இவளறைக்கு வருவானாயினான். சிவபிரானும் பள்ளிக்குப் பாயந்தரித்த ஆடவன் உருவம் நீத்துக் குழந்தை யுருக்கொண்டு அங்கு வதிந்தனர். இராவணனும் மண்டோதரியின் சயன அறையில் வந்து “இங்கு இக்குழந்தை கிடக்குங் காரணமென்ன? இவ்வறையிற் ஆரவாரத்துக்கு இக்குழந்தைதான் காரணமோ?” என வினாவினான். மண்டோதரியும் தனது சேடியொருத்தி மறுநாட்காலையில் வருவதாகச் சொல்லி இக்குழந்தையைத் தன்னதிடம் அடைக்கலமாக விட்டுச் சென்றதாகக் கூற, இலங்கேசன் தன் பள்ளியறைக்கு மீண்டான். உடனே குழந்தையும் மாயமாக மறைந்து விட்டது.
மணிவாசகப்பிரான் தமது திருவாசகத்தில் மண்டோதரி கன்னியாயிருந்து நோற்று வரம்பெற்ற வரலாற்றை,
“ஏர்தரும் ஏழுலகேத்த எவ்வுருவுந்தன்னுருவாய்
ஆர்கலிசூழ் தென்னிலங்கை அழகமர் வண்டோதரிக்குப்
பேரருள் இன்பமளித்த பெருந்துறை மேயபிரானை”
எனக் குயிற்பத்திலும், மண்டோதரி மனதிற் றியானித்த மாத்திரையில் சிவபிரான் அவளுக்குக் காட்சி கொடுத்ததை,
“ பெருந்தறை யாதி அந்நாள்
உந்துதிரைக் கடலைக் கடந்தன் றோங்கு மதில் இலங்கையதனில்
பந்தை மெல்விரலாட்கருளும் பரிசறிவார் எம்பிரானாவாரே”
எனத் திருவார்த்தையிலும், பள்ளிக் குப்பாயம்தரித்த ஆடவனாகக் காட்சி கொடுத்தமையை,
“வெள்ளைக் கலிங்கத்தார் வெண்டிருமுண்டத்தர்
பள்ளிக் குப்பாயத்தர் அன்னே யென்னும்
பள்ளிக் குப்பாயத்தர் பாய்பரிமேற் கொண்டேன்
உள்ளங் கவர்வரால் அன்னே யென்னும்”
என அன்னைப் பத்திலும், பிள்ளையாய்க் கிடந்தமையை
“உங்கையிற் பிள்ளை உனக்கே யடைக்கலமென்றங்
கப்பழங்சொற் புதுக்குமெம் மச்சத்தால்”
என திருவெம்பாவையிலும் குறிப்பிட்டுள்ளார் என்பது.
மேலே காட்டிய திருவாக்கியங்களில்
“ஆர்கலிசூழ் தென்னிலங்கை”, “.உந்து திரைக் கடலைக் கடந்து” என்னுந் தொடர்களாலும், மண்டோதரி, பதுமகோமளை, சித்திரரேகை ஆகிய மூவரது தந்தையாரின் இருப்பிடம் மாந்தையிலுள்ள காந்தக்கோட்டை எனக் காட்டியவாற்றாலும், அசுரர் இராக்கதர் இயக்கர் இலங்கையில் அரசாண்ட காலந்தொட்டு “வங்கமலி கடல் மாதோட்ட நன்னகர்” எனச் சுந்தரமூர்த்தி நாயனார் திருப்பதிகத்தில் ஒதிய காலம் வரை, திருக்கேதீச்சரம் ஒரு பிரபல்ய துறைமுகப் பட்டினமாயும் சிவஸ்தலமாகவும் விளங்கிய தென்பது தெளிவாகின்றது.
இனித் தலப்பெயர் “திருக்கேதீச்சரம்” எனக் கேது என்னும் நாகராசன் பெயரால் வழங்கி வருதலாலும் மயன் விசுவகர்மா முதலியோர் நாகசாதியார் என்று சொல்லப்படுவதாலும், திருக்கேதீச்சரம் பண்டைக்காலந் தொட்டு நாகசாதியாரின் வணக்கத்துக்குரிய தலமாக இருந்ததென்பது போதரும்.
கதிரைமலைப் பள்ளு தெல்லிப்பழை வ. குமாரசுவாமி பி. ஏ. http://www.noolaham.net/project/02/198/198.htm

3 Comments on "“மாந்தை”"

  1. Dear Sir, Am Mahesh Acharya
    Your Website has most execellent creation & Simply learn all things here. Well & Good.
    I need one book from Srilanka & Book Name is :MAANTHOTTAM” written by Poobala Pillai Mayan Chellathurai.. If u have it orelse u get from srilanka pls inform me

    Thanks With Regards
    Mahesh Acharya
    9976527235

    • இணையத்தில் நூலகம் என்ற தளத்தில் உள்ளது.தரவிறக்கிக்கொள்ளலாம்

  2. முருகன் | May 2, 2020 at 8:13 am | Reply

    அருமை, நம் குல நூல்களை பிரசுரித்து இணையத்தில் வெளியிட்டால் சிறப்பாகும்..

Leave a comment

Your email address will not be published.


*