எம். கே. தியாகராஜ பாகவதர்

காலத்தைவென்றவர்
 (மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜ பாகவதர்)
mkt
“பாகவதர் என்ற சொல்லுக்கு இசைப்புலவர் என்ற பொதுவான பெயரிருந்தாலும் தமிழ்நாட்டில் அச்சொல் குறிப்பாக தியாகராஜ பாகவதரைத்தான் குறிப்பிட்டு வந்தது. ஒரு காலத்தில் திரை உலகின் ஒலியும் ஒளியுமாக விளங்கிய திரு பாகவதருக்கு தமிழ் மக்களின்உள்ளத்திலே ஒரு நிரந்தரமான இடம் உண்டு.”       தியாகராஜ பாகவதர் 01-11-1959 ல் மறைந்தபோது ஆனந்த விகடன்
சுருக்கமாக எம்.கே.டி என அழைக்கப்படும் இவர் மார்ச் 1, 1910 மாயவரத்தில் விஸ்வகர்மா குடும்பத்தில் பிறந்தவர். இவர்களது பெற்றோர் மாயவரம் திரு கிருஷ்ணமூர்த்தி- மாணிக்கத்தம்மாள் ஆவார். தமிழ்த் திரைப்படத் துறையின் முதல் சூப்பர் ஸ்டார் (உயர் நட்சத்திர) அந்தஸ்து பெற்ற கதாநாயகன் மற்றும் ஏழிசை மன்னர் என போற்றப்படும் மிகச் சிறந்த கர்நாடக சங்கீத தமிழ் பாடகரும் ஆவார். இவருடன் உடன் பிறந்த சகோதரர்கள் இருவர். ஒருவர் எம்.கே. கோவிந்தராஜ பாகவதர் கர்நாடக சங்கீத வித்துவான். இன்னொருவர் எம்.கே.சண்முகம். 1934 ஆம் ஆண்டு பவளக்கொடி என்கிற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிய எம்.கே.டி சுமார் 14 தமிழ்த் திரைப்படங்களில் நடித்தவர், அதில் 6 படங்கள் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக வலம் வந்தவை.. 1944 இல் வெளிவந்த இவரின் சாதனைப் படமான ஹரிதாஸ் 3 வருடம் ஒரே திரையரங்கில் (சென்னை பிராட்வே திரையரங்கு) ஒடி 3 தீபாவளிகளைக் கண்ட் ஒரே இந்தியப்படம் இதுதான். எம்.கே.டியின் திரைப்பாடல்கள் பெரும்பாலும் இறைப்பற்றுடனும், தென்னிந்திய பாரம்பரிய இசையை சார்ந்தே இருக்கும். இவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு பாடலெழுதும் ஆஸ்தான பாடலாசிரியரான பாபநாசம் சிவன், இவருக்கென தனித்துவமான பாடல்களை இயற்றுவதில் வல்லவராய் இருந்தார். பாபநாசம் சிவன் இயற்றியப் பல பாடல்கள் எம்.கே.டி யின் புகழை உயர்த்தின, மக்களிடையை பெரும்புகழையும் பெற்றன. அவற்றில் சில,
 • உன்னை அல்லால்,
 • நீலகண்டா,
 • அம்பா(ள்) மனம் கனிந்துருகியுனது கடைக் கண் பா(ர்),
 • சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே(ன்) சுவாமி சுப்ரமணிய(ன்)உனை மறந்தேன்,
 • ஞானக்கண் இருந்திடும் போதினிலே,
 • பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர் புண்ணியமின்றி விலங்குகள் போல்,
 • மன்மத லீலையை வென்றார் உண்டோ,
எம்.கே.டி பாடல்களை 41/2 கட்டை சு(ரு)தியில் பாடக்கூடியவர். குரலில் பெண்களின் நளினத்தன்மை மிகுந்திருக்கும் பல நேரங்களில் பெண் பாடுவது போல் தோன்றுவதுண்டு. சு(ரு)தியின் உச்சநிலையிலையிருந்து உடனே கீழே இறங்கிப்பாடும் வல்லமை பெற்றவர். வார்த்தைகளை உடைத்து உடைத்துப் பாடுவதில் வல்லவர். இறுதியில் வல்லினமெய் தெரியாமல் பாடக்கூடியவர். அவரின் கர்நாடக இசை சாதகத்துக்குச் சான்றாக தஞ்சை அருகே நடந்த நிகழ்வை கூறுவர். தஞ்சாவூர் அருகே உள்ள மாவூரில் இசைக் கச்சேரி செய்யும் பொழுது இரவு அங்கிருக்கும் அரவை இயந்திர நிறுவனத்தின் வழக்காமான நேரச் சங்கொலி (மாவு மில் சங்கு) முழங்கியது, அந்த இடையூரைப் பொருட் படுத்தாமல் (பாடுவதை நிறுத்தாமால்), அந்த சங்கொலிக்கு நிகராக தன் குரலை இழுத்து (தம் கட்டி பாடுவது) அது முடியும் வரை பாடினார். மக்களின் கவனம் முழுவதும் அசையாமல் அவரின் குரலின் மீதுதான் இருந்தது.ஹ ரிதாஸ் படத்தில் வரும் பாடலான மன்மதலீலை என்ற பாடல் சாருகேசி எனும் பாரம்பரிய இசையில் (கிளாசிக்கல்) பாடப்பட்டது. அந்த பாடலுக்குப் பிறகே பிற கர்நாடக இசை வித்துவான்கள் சாருகேசி இசையை கச்சேரியில் பயன்படுத்த ஆரம்பித்தனர். இதை பிரபல கர்நாடக இசை விமர்சகர் சுப்புடு கூறுகையில் “”சாருகேசியை பிரபலமாக அறிமுகப்படுத்தியவர் தியாகராஜ பாகவதர், என்றால் அது மிகையாகாது”” என்று வர்ணிக்கின்றார். அவரின் இசையை செல்வந்தர் முதல் பாமரர்கள் வரை அனைவரும் பாகுபாடின்றி ரசித்தன்ர். அனைவருக்கும் புரியும்படி எளியத் தமிழில் பாடினார்.
அன்றைய காலகட்டத்தில் நாடக மோகம் அதிகமிருந்த காலகட்டமானாதால், திரைப்படத்திற்கு நாடகக் கலைஞர்களையே தேர்வு செய்தனர். நாடகக் கலைஞர்களுக்கு நடிப்புடன் பாடவும் தெரிந்திருக்கவேண்டும் ஆகையால் பாரம்பரிய இசைக்கலைகளை கற்றுத் தேர்ச்சி பெற்றிருந்தனர். பாகவதரும் அவ்வாறு தேர்ச்சி பெற்றவராவார். அவரின் இசைப்புலமைக்கு போட்டி போட்டுக் கொண்டு திரைப்படமெடுக்க பல செல்வந்தர்கள் மதுரை டாக்கிஸ் என்ற குழு அமைத்து படமெடுக்க முன்வந்தனர். மதுரை செல்வந்தரால் மதுரை டாக்கீஸ் நிறுவனத்தால் எடுத்து திரையிடப்பட்ட சிந்தாமணி படம் அமோக வெற்றிபெற்றதினால் அத்திரையரங்கு சிந்தாமணி திரையரங்கம்என்று பெயர் பெற்று இன்று வரை அவ்வாறே அழைக்கப்படுகின்றது. அவரின் சிகையலங்காரம் பாகவதர் சிகையலங்காரம் என்று அனைவராலும் அன்றைய நிலையில் பின்பற்றபட்டு அனைத்து தரப்பினரும் அலங்கரித்து கொண்டனர். இந்த புகழை வெகு விரைவில் அடைந்த அவருக்கு வீழ்ச்சியும் வெகு விரைவில் அவரை சந்தித்தது. சென்னையில் (அன்றைய மதராஸ்) மிகப் பரப்பரப்பாகப் பேசப்பட்ட லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் பாகவதர் மற்றும் அவரின் திரையுலக ஆத்ம தோழரான என்.எஸ்.கிருஷ்ணன் உடன் கைது செய்யப்பட்டு 4 வருடம் சிறைத் தண்டனைப் பெற்றார்.
தண்டனை காலத்திலேய இவரின் வழக்கு மறு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளபட்டு லண்டன் பிரிவியு கவுன்சிலில் பிரபல வழக்குரைஞர் எத்திராஜ் அவர்களால் இவர்கிளன் இருவருக்காக வாதாடப்பெற்று, 1948 இல் இருவரும் குற்றமற்றவர்கள் என இரண்டு வருட சிறைக்குப்பின் விடுவிக்கப்பட்டனர். (ஆனால் இந்த குற்ற பாதிப்பு அவரின் நெஞ்சை தொடர்ந்து வருத்தி கொண்டிருந்தது உண்மை.) இருப்பினும் சிறை விடுதலைக்குப்பின் அவர் நடித்த திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. சிறைக்குப்பின் பலர் படமெடுக்க முன்வந்தாலும் பாகவதர் அவற்றை ஒதுக்கித் தள்ளினார். அவரின் கஷ்ட காலத்தில் உதவாத திரைப்படத்துறையை வெறுத்து ஒதுக்க ஆரம்பித்தார். அதன் பின் சொந்தப் படங்கள் எடுத்து தோல்வியைத் தழுவினார். அதன் பின் மேடைக் கச்சேரிகளை மட்டும் பண்ணிக் கொண்டு வந்தார். அதிலும் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறமுடியவில்லை. காரணம் கர்நாடக இசைக்கச்சேரிகள் ஒரு சாதிப் பிரிவினரின் கையிலிருந்ததை அவர் உணர்ந்திருந்தார். தெலுங்கு கீர்த்தனைகள் பாடுபவர்கள் மத்தியில் தமிழிசைப் பாடல்கள் மட்டுமே பாடுவேன் என்று கடைசிவரை நிருபித்தவரும் அவர்தான். ஆகையால் இவருக்காக சபாக்களை ஒதுக்க யாரும் முன் வரவில்லை. இவர்கள் ஒதுக்கினால் என்ன? ஒதுக்கா விட்டால் என்ன? தான் ஒரு மக்கள் கலைஞன் என்று மக்களுக்காக பாடுவதை தொடர்ந்து கொண்டிருந்தார். அன்றைய கால கட்டத்தில் இவரின் கச்சேரிகளை காண மக்கள் மின்சாரக் கம்பத்தில் ஏறி நின்று கொண்டு கேட்டனர். அம்மாதிரி சமயத்திலே ஒரு சிறுவன் மின்சாரம் தாக்கி மரணமடைந்த சம்பவங்களும் நிகழ்ந்த்து உண்டு. பாகவதர் அச்சிறுவனின் குடும்பத்துக்கு பின் 5000 ரூபாய் நிதியுதவி அளித்தார். இது அன்றைய நாட்களில் மிக்பெரியத் தொகை. ஒருமுறை திருச்சிக்கு காரில் பயணமான பொழுது இவரின் கார் புதுக்கோட்டை வழியாக தொடர் வண்டி பாதையைக் கடக்க முற்படுகையில் அளவுக்கதிமான கூட்டம் இவரின் காரை கடக்க விடாமல் சூழ்ந்து கொண்டது. ரயில் வண்டியின் கார்ட் இதையறிந்து வண்டியை நிறுத்திவிட்டு பாகவதரை பாட வற்புறுத்தினார். பாகவதர் வேறுவழியின்றி அங்கு பாடிய பிறகு தான் தொடர் வண்டி அங்கிருந்து நகர்ந்தது. அந்தளவுக்கு இவரின் மீதும், இவர் இசையின் மீதும், மோகம் கொண்டவர்கள் இருந்தனர். இவரின் ரசிகராகவும் நண்பராகவும் விளங்கிய மதுரை டி.பி சொக்கலால் பீடி அதிபர் ஹரிராம் சேட் இவருக்கு மிக உயர்ந்த பாண்டாக் கார் பரிசளித்தார்.
இவரின் ரசிகராக வீட்டை விட்டு ஒடி வந்த கோபால், ரசிகரானப் பிறகு எம்.கே.டி கோபால் எனப் பெயர் மாற்றிக்கொண்டு எம்.கே.டி யின் ஆத்ம நண்பனாக மாறினார். ஒரு முறை எம் கே டி யின் வைர மோதிரம் கிணற்றில் விழுந்ததை அனைவரும் திடுக்கிட்டு நிற்கையில் அக்கிணற்றில் யாரும் எதிர்பாராத வகையில், உயிரைப் பற்றிக்கவலைப்படாமல் குதித்து அம்மோதிரத்தை கண்டு பிடித்து கொடுத்தார், அது முதல் ஆத்ம ரசிகனாகவும், நண்பனாகவும் எம்.கே.டி யுடனே இருந்துவரலானார். பலருக்கு உதவி செய்வதில் பாகவதர் தயாள குணம் கொண்டவர். சேமிப்பு குணம் அற்றவுர். படங்களில் இருந்து ஒய்வு பெற்ற சமயத்தில் தன்னையே நம்பி இருந்த பாடலாசிரியர் பாபநாசம் சிவனுக்கு ஏற்பட்ட பொருளாதார சிக்கலை உணர்ந்து, அவர் கேட்காமலேயே தான் சாப்பிடுவதற்கும், விருந்தினர்களை உபசரிக்கவும் பயன்படுத்தும் தங்கதட்டையே கொடுத்துதவியவர். தனது வழக்கை சிக்கலின்றி முடித்து வைத்த வழக்குரைஞர் எத்திராஜிக்கு ஒரு தங்கத்தட்டை அளித்து பெருமைப்படுத்தியவர். இப்படி உதவிய பாகவதர் குடும்பம் மிகப் பெரிய பொருளாதார இக்கட்டையும் சந்தித்தது. இன்றைய பல ஜாம்பவானகள் அனைவரும் வந்து காத்திருந்த அவரது வீட்டில் வறுமைத் தாண்டவமாடியது. பாகவதரின் கடைசி காலம் மிகவும் சோகமயமானது. வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாத சூழ்நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். மருத்துவத்திற்காக கூட யாருடைய தயவையும் அவர் நாடவில்லை. பலத்திரைக்கலைஞர்கள் விழா எடுத்து நிதி திரட்டும் ஆலோசனையைக் கூறியும் அதை ஏற்க மறுத்து விட்டார். சிவகாமி படத்தின இறுதி காட்சிகள் கோயில்களில் எடுக்கப்பட்டது. அக்காட்சிகளின் பொழுதே அவர் அதிக நலிவடைந்திருந்தார். அவரின் காடசிகளுக்கு வாயசைக்க முடியா நிலைமைக்கு தள்ளப்பட்டவரானார். கண்கள் பழுதடைந்த நிலையில் காட்சிகளில் நடிக்க தடுமாறினார். . சிந்தாமணியில் பாடிய இப்பாடலே அவர் வாழ்க்கையின் இறுதி நிலையாயிற்று.
……..ஞானக்கண் ஒன்று இருந்திடும் போதினிலே (பொழுதினிலே), ஊனக்கண் இழந்ததால் உலகிற்குறையுமுண்டோ…….. என்று அவர் அப்படத்தில் பார்வையிழந்த நிலையில் பாடிய நிலைமைக்கு தள்ளப்பட்டவரானார். இறுதியில் நவம்பர் 1, 1959, ஈரல் நோயினால் பாதிப்படைந்தவராக சென்னை பொதுமருத்துமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் அங்கு காலமானார்.
இன்றும் அவரின் திரைப்பாடல்களைக் கேட்கும் ரசிகர்கள் இருக்கின்றனர். அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில், இவருக்கு ரசிகர்கள் இன்றளவிலும் உள்ளனர்.. இவருக்கென தனி ரசிகர் மன்றமும் அங்கு உள்ளது, என்பது இவரின் மங்காதப் புகழுக்கு சான்று.
பாகவதர் வாழ்க்கையில் சில நெகிழ்வான நிகழ்ச்சிகள்:
பாகவதர் சிறுவனாக நாடக உலகத்தில் பிரவேசித்த காலத்தில் குருவாக இருந்தவர் நடராஜ வாத்தியார். பிற்காலத்தில்வாத்தியாரின் நலனுக்காக நாடகம் நடத்தி அதில் வந்த பணத்தை அப்படியே அவருக்குக் கொடுத்து உதவினார் பாகவதர் திருச்சி வானொலியில் நிரந்தர வித்வானாக இருந்த சமயம். அன்று அவர் கச்சேரிக்குத் தம்பூரா போட இருந்த கலைஞரை மாற்றும்படிக் கேட்டுக் கொண்டார். ஏனென்று தெரியாதபோதிலும் அவரை மாற்றினார்கள் வானொலி நிலையத்தார். அந்தக் கலைஞர் ஒரு காலத்தில் தனக்கு சங்கீதம் சொல்லிக் கொடுத்த குரு. என்று பாகவதர் சொல்லித்தான் மற்றவர்களுக்குத் தெரிந்தது. வாழ்க்கைத்தரம் சரிந்து விட்ட நிலையில் குரு தம்பூரா போட வர நேர்ந்தது. அதை விரும்பாத பாகவதர் தனக்குக் கிடைத்த சன்மானத்தொகையை குருவுக்கே கொடுத்து விட்டார். . ஒருமுறை நாகர்கோவிலில் என்.எஸ்.கே வீட்டில் புதுமனை புகு விழாவில் பாகவதரின் கச்சேரி நடந்தது. என்.எஸ்.கே பாகவதருக்கு எல்லோர் முன்னிலையிலும் ஒரு வைர மோதிரம் வழங்கினார். அந்த மோதிரத்தை கச்சேரியில் சிறப்பாக வயலின் வாசித்த வயலின் வித்வானுக்கு அன்பளிப்பாக அளித்து விட்டார் பாகவதர். கலைஞர்களை கவுரவிக்கும் சிறந்த பண்பு பாகவதரிடம் இருந்தது.
ஒரு துறையில் பெயரும் புகழும் பெற்றவர் அதே துறையில் இன்னொருவன் முன்னேறி தன்னை மிஞ்சப் பார்க்கும் போது அவனை முன்னுக்கு வரமுடியாமல் தடுக்க முயற்சி செய்வவர். ஆனால் பாகவதர் தன்னைப் பின்பற்றி யாராவது பாடினால் மிகவும் சந்தோஷப்படுவார்.
ஒருமுறை கன்னியாகுமரி மாவட்டதில் உள்ள மண்டைக்காடு என்ற இடத்தில் பாகவதர் கச்சேரிக்கு ஏற்பாடாகி இருந்தது. கச்சேரி ஏற்பாடு செய்தவர்கள் இலவசம் என்று அறிவித்திருந்த போதிலும் கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக நிர்வாகிகள் கட்டணம் வசூலிக்கலாம் என பாகவதரை நிர்பந்தம் செய்தார்கள். ஆனால் இலவசமென்று அறிவித்துவிட்டு கட்டணம் வசூலிப்பது தவறு என்று தனக்கு வந்திருக்கக்கூடிய பல ஆயிரம் ரூபாய் வருமானத்தையும் லட்சியம் செய்யாமல் கூறினார்.
பாகவதர் திரை இசை உலகின் உச்சத்தில் இருந்தபோது தங்கத்தட்டில்தான் சாப்பிடுவாராம். ஒரு முறை கவிஞர் சுரதா அவர் இல்லத்திற்கு சாப்பிடச் சென்ற போது அவருக்கு வாழை இலை போட்டார்கள் ஆனால் பாகவதர், “அவர் என்னுடன் விருந்தாளியாக இருக்கும் வரை அவருக்கும் தங்கத் தாம்பாளத்தில் தான் உணவளிக்க வேண்டும்” எனக் கட்டளை இட்டாராம்.
பாகவதருக்கு செல்வந்தரான ஒரு முஸ்லீம் நண்பர் இருந்தார். அவரின் இரு மகன்களுக்கும் கருத்து வேறுபாடு இருந்தது.  அந்த நண்பர் மகன்கள் பேரில் கோபங்கொண்டு தான் சம்பாதித்ததை எல்லாம் பாகவதர் பெயருக்கு எழுதிப் பதிவு செய்து விட்டார். ஆனால் அந்த நண்பர் ஆத்திரத்தால்தான் அப்படிச் செய்து விட்டாரென புரிந்து கொண்டு அந்த முஸ்லீம் நண்பரின் மகன்கள் இருவரையும் கூப்பிட்டு அறிவுரை கூறினார் பாகவதர். அந்தப் பெரியவர் மறைந்ததும் அவருடைய மகன்கள் பேரில் சொத்துக்களை சரி சமானமாகப் பிரித்து அவர்களுக்கே அளித்து விட்டார். தனக்கு சிரமமான நேரங்களில் கூட தர்ம நியாயங்களுக்கு எதிராக எதுவும் அடைய
விரும்பாதவர் அவர்.
விதி வசத்தால் பாகவதர் சிறை செல்ல நேர்ந்த போது 12 படங்களுக்கு முன்பணம் வாங்கி இருந்தார். படத் தயாரிப்பாளர்கள் கொடுத்த முன் பணத்தை திருப்பிக் கேட்டார்கள். அந்த சிரமமான நேரத்திலும் அந்தப் பணத்தை யெல்லாம் மிகுந்த சிரத்தையோடு திருப்பிக் கொடுத்தார்.
முடிசூடா மன்னராக வாழ்ந்த பாகவதர் தன் கடைசிக்காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டார். நண்பர்கள் யாரும் உதவ முன்வரவில்லை.  திரு. எம்.ஏ வேணுவிடம் சென்று “நான் முன்போலப் பாட முடியாது. நான் பாடி நடிப்பதாக இருந்த ராஜயோகி படத்தின் பாடல்களை உபயோகித்துக் கொள்ளுங்கள்” என்றார். அதன்படி வேணு அவர்கள் படம் எடுத்தாலும் படம் முடிவதற்குள் அவர் உடல் நலிவடைந்து காலமாகிவிட்டார். பாகவதர் இல்லாததால் படம் வேறு விதமாக அமைந்து ஓடவில்லை.
கலைஉலகில் தனக்கென்ற ஒரு இடத்தைப்பிடித்த கலைஉலகின் முடிசூடிய மன்னன் தியாகராசபாகவதர் அவர்களின் நூற்றாண்டில் விஸ்வாஸ் இந்த கட்டுரையை வெளியிட்டு பெருமை கொள்கிறது.
எம்.கே.தியாகராஜ பாகவதர் பாடிய முத்தான சில பாடல்கள் செவிக்கினிமை கேட்டு மகிழ::
http://radiospathy.blogspot.com/2010/03/blog-post_21.html

5 Comments on "எம். கே. தியாகராஜ பாகவதர்"

 1. Dr.S.Soundarapandian | November 10, 2018 at 9:39 am | Reply

  Tamilnadu govt. should come forward to give MKT award to best Tamil singers. Also they should uplift MKT’ family.

 2. No one can replace MKT’s place for another 1000 years.

 3. No one can replace MKT’s voice for the next 1000 years

 4. Vera level MKT

 5. மிகப் பெரிய இயற்கை இசைமேதை.

  அவரின் இழப்பு தமிழருக்கும் தமிழ் இசைக்கும் பெரிய இழப்பு, அதிர்ஷடமின்மை.

  அவரது வாழ்க்கை புகழுடனே சென்றிருந்தால் நல்ல பாடல்கள் கிடைத்திருக்கும்.

  தெலுங்கு, சமஸ்கிருத இசைக் கோர்வைகள் தமிழிலும் வந்திருக்கும்.

  பிறவிக் கலைஞனை விதியும் சூதும் கொன்று விட்டது.

  பாரதி, பட்டுக்கோட்டையார், பி யு சின்னப்பா தேவர் இவர்களது இளவயது இழப்பைச் போல் பாகவதரின் இழப்பும் நமது துர்ப்பாக்கியம்.

  வாழ்க அவர் புகழ்!!!

Leave a comment

Your email address will not be published.


*