” சிவகங்கையில் ஓர் சித்தர் ” ஸ்ரீமத் முத்துக்குமார சுவாமிகள்

 சிவகங்கையில் ஓர் சித்தர் ” ஸ்ரீமத் முத்துக்குமார சுவாமிகள்
மிக பழமையானதும் விஸ்வகுல ஜெகத்குரு பீடாதிபதிகள் அருளாட்சி செய்ததுமான ஸ்ரீமத் பரசமய கோளரி நாதர் ஆதீனத்தை அலங்கரித்த 31 வது பட்டம் குரு மஹா சன்னிதானம் ஸ்ரீமத் முத்துக்குமார ஸ்வாமிகளாவார்கள். கி.பி. 1681 முதல் 1741 ம் ஆண்டு வரை தொடர்ந்து 60 ஆண்டுகள் மடாதிபதியாக அருளாட்சி செய்த தவசீலர் துறவி.
அன்னாரது பூர்வீகம், பிறப்பு பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் இன்னும் தேடப்படுகின்றன. விஸ்வகுல ஆச்சார அனுஷ்டானங்களைத் தீவிரமாகக் கடைப் பிடித்தும், அதற்குகந்த மத போதனைகளை,  விஸ்வகுல மக்களுக்கு போதித்தும் வந்த இந்த மகாதவ சீலர். திக் விஜயம் என்ற பிரதேசப் பிரயாணங்கள் செய்து மக்களுக்கு ஆன்மீக தர்ம போதனைகளையும், சேவைகளையும் தொடர்ந்து வழங்கினார்கள். கிடைத்திருக்கும் தகவல்களின் படி ஸ்ரீமத் முத்துக்குமார ஸ்வாமிகளது  இரண்டு அரிய அற்புதச் சாதனைகள் புலனாகின்றன.
ஒன்று :
ஸ்வாமிகள் பிரதேசப் பயணமாக சுரண்டை மடம் சென்று வாசம் செய்து ஆன்மீகத் தொண்டு செய்து வரும் சமயத்தில் அருகிலுள்ள ஊத்துமலை ஜமீன்தார் அவர்கள் அடிக்கடி ஸ்வாமிகளைத் தரிசிப்பதும் பெருமைப் படுத்துவதும் வழக்கமாக இருந்தது. ஸ்ரீமத் முத்துக்குமார ஸ்வாமிகளின் தேஜஸ், ஒளி, தெய்வீக சித்து விளையாட்டு, பாமர மக்களுக்கு பக்தியைப் புகட்டும் அருள் சேவை, இவற்றை நேரில் கண்டும் கேட்டும் மனம் மகிழ்ந்த ஊத்துமலை ஜமீன்தார் ஸ்வாமிகளுக்கு ஐந்து கோட்டை (சுமார் 10 ஏக்கர்) விதைப்பாடு நஞ்சை நிலத்தை மானியமாக எழுதிக் கொடுத்துள்ளார்கள் (பின்னால் வந்துள்ள வழக்குகளிலும் சுரண்டையில் இந்த நம் ஆதீனத்திற்கு சொத்துச் சேர்ந்த விபரம் குறிப்பிடப்பட்டுள்ளது.)
இந்த மானிய சொத்துக்கள், சுரண்டையில் விஸ்வ குல மடமும், ஆதீன கர்த்தாக்களின் அருள் சேவையும் தொடர்வதற்குப் பெரிதும் உதவியது. ஊத்துமலை ஜமீனுக்கும் சிவகங்கை ஜமீனுக்கும் அக்காலத்திலிருந்தே திருமண சம்பந்த உறவுகள் தொடர்ந்தன. இதன் நிமித்தம் ஸ்ரீமத் முத்துக் குமார ஸ்வாமிகளும் திக் விஜயத்தில் சிவகங்கை வரை பயணம் செய்து அருளாட்சி செய்தார்கள். செட்டி நாட்டில் சைவ மதம் தழைத்தோங்கிய அக்காலத்தில் சிவகங்கை ஜமீனுக்குட்பட்ட சிவகங்கை ஊரில் அருள்மிகு காளியம்மன் கோவில் வளாகத்தில் ஆதளை மரத்தடியில் முகாமிட்டிருந்தார்கள். (தற்கால மதுரை முக்கு காளியம்மன் கோவில் வளாகம்) குதிரை மேல் சவாரி செய்து நாட்டு நடப்பை கண்காணிக்கும் ஜமீன்தார், தினமும் இந்த காளியம்மன் கோவிலைக் கடந்து செல்வது வழக்கம். ஜமீன்தார் வரும் சமயம் மக்கள் எழுந்து நின்றும், ஒளிந்து நின்றும், குனிந்து கொண்டும், மரியாதை செய்யும் அக்காலத்தில், ஜமீன்தார் ஸ்ரீமத் முத்துக்குமார ஸ்வாமிகளை வணங்கிச் செல்வதை வழக்கமாக கொண்டார்.  ஜமீன்தார் வணங்க, ஸ்வாமிகளோ எதிர் வணக்கம், ஆசீர்வாதம் என்று ஏதும் செய்யாமல் வாளாவிருந்தார். ஜமீன்தாருக்குண்டான ஆணவம் ராஜ கம்பீரம் காரணமாக ஜமீன்தாரின் முக பாவங்களிலிருந்து தன் மீது ஜமீன்தார் கோபம் கொண்டுள்ளார் என்பதை உணர்ந்து கொண்டார்கள் ஸ்வாமிகள் .
சிதறிய தேங்காய் :
ஒரு நாள் குதிரை மேல் வலம் வந்த ஐமீன்தாரை நேரில் அழைத்த ஸ்வாமிகள் ஒரு தேங்காயைக் கொண்டுவரச் செய்து அத்தேங்காயைத் தன் முன் வைத்து வணங்கினார்கள். தொடவில்லை. அத்தேங்காய் சுக்கு நூறாக உடைந்து சிதறியது.
தவவலிமை:
சிதறிய தேங்காயையும் புன்முறுவல் பூக்கும் ஸ்வாமிகளையும் நேரில் கண்ட ஜமீன்தார் பயந்தார், வியந்தார். ஸ்வாமிகள் தம்மை உதாசீனம் செய்தாரோ என்று தவறாக எண்ணியதை உணர்ந்தார். மன்னிக்க வேண்டுமென்று ஸ்வாமிகளிடம் மண்டியிட்டார். தமக்கு மேலும் கட்டளையிடுமாறு பணிந்து வேண்டி நின்றார் ஜமீன்தார்.”தமக்கு இவ்விடத்திலேயே சமாதிக்கு திருக் கோவில் அமைத்துக் கொடு” என்று ஸ்வாமிகள் ஜமீன்தாருக்கு உத்திரவிட்டார். தமது ஜமீனில் இப்படி ஒரு புண்ணிய மகான் தவசீலர் அருளாட்சி முகாமிட்டதை நன்றிப் பெருக்கோடு எண்ணி மகிழ்ந்து அந்த இடத்தையே தானமாகக் கொடுத்து திருக்கோவில் அமைத்து ஸ்வாமிகளுக்கு நித்திய பூஜைக்கு ஏற்பாடு செய்தார் ஜமீன்தார். உளம் மகிழ்ந்த ஸ்வாமிகள் சில காலம் அங்கேயே தங்கியிருந்து பின் அவ்விடத்திலேயே 1741 ல் தை மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் முக்தியடைந்தார்கள் என்பது வரலாறு .
பாரம்பரியப் பெருமை :
ஒவ்வொரு மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் பூஜை செய்வதும் ஒவ்வொரு தை மாத ரோகிணியில் குருபூஜைசெய்யும் பழக்கமும் இப்பொழுது நீங்கள் ஒன்று கூடி வழிபடும் இந்த இடம் இவ்வளவு மாட்சிமை, புனிதம்பொருந்திய இடம் என்பதை மனதில் கொண்டு நிமிர்ந்து பெருமை கொள்ள வைப்பது இந்த குருபூஜையும்  காளியம்மன் கோவில் வளாகமும் தான் .
சிவகங்கையில். சிவகங்கை விஸ்வகர்ம சமுதாய சங்கம், அவ்வூர் மதுரை முக்கு ரோட்டில் உள்ள ஸ்ரீகாளிகாம்பாள் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீமத் முத்துக்குமார ஸ்வாமிகள் (ஸ்ரீமத் பரசமயகோளரி நாதர் ஆதீனம் ஸ்ரீராஜராஜேஸ்வரி பீடம் : திருநெல்வேலி மடத்தின் 31 வது பீடாதிபதியாக அருளாட்சி செய்தவர்), அந்திமகாலத்தில் அப்பெருந்தகை வழிபட்ட உபாசனாமூர்த்தி ஸ்ரீலிங்கம் இங்கு பிரதிஷ்டையாகியுள்ளது .
சன்னதியின் சிறப்பு :
சிவலிங்கமூர்த்தி நந்தி , பலிபீடம் என்று சிறப்பாக அமையப் பெற்ற தனிக்கோவில் இந்தப் பெரும் வளாகத்திற்குள் அமைந்துள்ளது. சிவகங்கை சமஸ்தானத்து ராஜா அல்லது ஐமீன் அவர்கள் முன் வந்து தவசீலரான ஸ்ரீமத் முத்துக்குமார ஸ்வாமிகளுக்காக அவர்களின் வேண்டுகோளின் படி கட்டப்பட்ட அம்சமான கோவில் .
ஸ்ரீமத் முத்துக்குமாரஸ்வாமிகள் நெல்லை மடத்தின் 31 வது பட்டமாக ஜகத் குருவாக அருளாட்சி செய்தவர்கள். தமிழகம் முழுவதும், இந்தியா முழுவதும் புகழோச்சிய மகானது குரு பூஜை விழா, சிவகங்கை  ஊர் மக்களுக்கு மட்டும் என்று இல்லாமல், தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களிலிருந்தும் விஸ்வகுல பக்தர்கள் வந்து கொண்டாடி குரு வணக்கம் செய்து குருவருள் பெற வேண்டும்
நெல்லை, சிவகங்கை, கும்பகோணம், திண்டிவனம், அம்பாசமுத்திரம் , கோமளீஸ்வரன் பேட்டை, சதுரகிரி என்று வரிசையாகக் குருபூஜை விழாவை நடத்தி நெல்லை ஆதீன அபிமானிகளிடையே நல்ல, நெருக்கமா, நேசமான, உறவைப் பலப்படுத்தினால், நெல்லையிலுள்ள ஸ்ரீமத் பரசமய கோளரிநாதர் ஆதீனம் ஸ்ரீராஜராஜேஸ்வரி பீடம் – மடம் விரைவில் புத்துணர்ச்சி பெறும். சிவகங்கை மடமும் பலருக்கும் தெரியவரும்.

Be the first to comment on "” சிவகங்கையில் ஓர் சித்தர் ” ஸ்ரீமத் முத்துக்குமார சுவாமிகள்"

Leave a comment

Your email address will not be published.


*