அனறைய சோழ/சேர நாடுகளின் பெரிய ஊர் கருவூர்! திருச்சியில் இருந்து ஒன்னரை மணி நேரப் பயணத்தில் போயிறலாம்! அங்கு பிறந்தவர் தான் நம்ம கருவூரார்! சிற்பங்கள் செய்யும் விஸ்வகர்மா குலத் தம்பதியர்க்கு மகவாய்ப் பிறந்தார்! தில்லை நடராஜப் பெருமானின் திருவுருவம் இவர் செய்ததே என்று சொல்லும் ஒரு சுவையான கதையும் உண்டு! * இவர் குரு = போகர் சித்தர்! (நவபாஷாண முருகனைத் தந்தவர்)* இவர் சீடர் = இடைக்காட்டுச் சித்தர்! (தாண்டவக்கோனே என்று பாடல்கள் பாடியவர்) குருவான கருவூரார், சீடரான இடைக்காடர் இருவருமே சித்தர்கள் அல்லவா! சித்தர்கள் யோக மயமான சிவபெருமானைத் தானே வணங்குவார்கள் பெருமாளை வணங்குவார்களா என்ன? நம்மாழ்வார் திருவாய் மொழியைத் “தமிழ் வேதம்” என்று முதலில் பாராட்டியதே, சிவச் செல்வரான இடைக்காட்டுச்சித்தர் தான்! சைவ நூல்களையோ, ஏனைய வைணவ நூல்களையோ சொல்லாது, நம்மாழ்வாரை மட்டும் “தமிழ் வேதம்” என்றார்கள் சித்தர்கள்! வேதத்தை, அதன் சாரம்மாறாமல், தமிழ்ப் படுத்தியதால் தான், “தமிழ்வேதம்” என்று இதை மட்டும் குறிப்பிட்டுச் சொன்னார்! கருவூர் சித்தரும், திருவரங்கத்துநம்பெருமாளைப் போற்றிப் பாடி, அவர் கையால் பிரசாதம்வாங்கினார்! அப்படியே ஒரு வம்பிலும் சிக்கிக் கொண்டார்! பதிவின் இறுதியில் பார்ப்போம்.
அன்று தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்)!
மாமன்னன் இராசராசன், இனி வரப் போகும் தமிழ்ச் சமுதாயத்துக்கும் சேர்த்தே தந்த கலைப் பொக்கிஷம்! ஆனால் அன்று பார்த்து, சிவலிங்கம் நிறுவனம் ஆகவில்லை! (பிரதிஷ்டை)! பெருவுடையார் = பேருக்கு ஏற்றாற் போலே பெரிய பெரிய உடையார் தான்! பெரிய சிலை அல்லவா! அதற்கு முன்பு அப்படி ஒருசிலையைச் சிற்பிகளும் செய்ததில்லை! அப்படியே செய்தாலும், அதைக் கருவறைக் குழியில் இறக்கியதும் இல்லை!அனுபவம் இன்மை! ஆனால் கும்பாபிஷேக (மூர்த்தி ஸ்தாபன) நாள் அதுவுமா இப்படி ஒருதடங்கலா? சிவலிங்கத்தை உள்ளே இறக்கிய சில நிமிடங்களில், கனம்தாங்காமால், சிவலிங்கம் ஒரு பக்கமாய்ச் சாய்ந்து விட்டதே! கோணலான சிவலிங்கமா? ஐயகோ! இராஜராஜனுக்கு நெஞ்சே வெடித்து விடும் நிலைமை! கோயிலைப் பார்த்துப்பார்த்துக் கட்டியது இதற்குத் தானா? அஷ்ட பந்தனம் என்னும் அந்தக் கலவை கெட்டிப் பட மாட்டேங்கிறது! தலைமைச்சிற்பி, இராஜராஜப் பெருந்தச்சரான குஞ்சரமல்லனும் எவ்வளவோ போராடிப் பார்க்கிறார்! ஹூஹூம்! இதோ, கருவூரார் வந்து நிற்கிறார்! இராஜராஜனின் பெருமதிப்பைப் பெற்றவர்! தாம் கொண்டு வந்த மூலிகைப் பொருட்களைக் காய்ச்சி, கலவை செய்கிறார் கருவூரார்! அந்தணர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பு மக்களையும் பணியில் ஈடுபடுத்துகிறார்! புதிய கலவை காய்ச்சப்பட்டு, தொட்டி தொட்டியாக ஊற்றப்படுகிறது! கொதிக்கக் கொதிக்க, கருவறைக் குழிக்குள் ஊற்றப்படுகிறது! ஆகா! சிவலிங்கத்தின் மேலேயே கால் வைத்து ஏறிவிட்டாரே கருவூரார்! அதை முட்டி, மோதி, கட்டி, இழுத்துச் சமநிலைப் படுத்த…மருந்து இறுக, இறுக… தஞ்சைப் பெருவுடையார் நின்று விட்டார்! அஷ்டபந்தன மருந்து நின்று விட்டது! அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம்!! மன்னன் மனங்குளிர, மக்கள் மனங்குளிர, அடியார்கள் மனங்குளிர, ஆண்டவனும் மனங்குளிர்ந்தான்! பல காலம் கழித்து, தஞ்சையில் இருந்து கிளம்புகிறார் சித்தர்! பூலோக வைகுந்தம் என்ற போற்றப்படும் திருவரங்கம் நோக்கிச் செல்கிறார் கருவூர் சித்தர்! தன் சீடன் இடைக்காட்டுச் சித்தன், திருவாய்மொழி நூலை அப்படிச் சிலாகிக்கிறானே!
தமிழ் வேதம்-ன்னு வேற சொல்லுறான்! அதுவும் வேதம் ஓத, குல உரிமை வேண்டும்-ன்னு சொல்லப்படுகிறதே! அப்படி இருக்க, ஒரு வேளாளச் சிறுவன்-மாறன் நம்மாழ்வான், தமிழ் வேதம் செய்தாlingamனா? அப்படி என்ன தான் இருக்கு அதுல? இன்னிக்கு அதையும் பார்த்து விடலாம்! அவர் திருவரங்கம் வந்து சேர்ந்தது தான் தாமதம்…….
தமிழோசை வேகமாய் முன் செல்ல,
இறைவன் பரபரத்து, தமிழின் பின் செல்ல,
இவர்கள் வேகத்துக்கு ஈடு கொடுக்க மாட்டாமல்,
வேத கோஷ்டி இறைவன் பின்னால் ஓடி வர…
வீதியுலாவில், நம்மாழ்வாரின் சந்த ஓசையில்
பெருமாளே மயங்கி, மாறனுக்குப் பின்னாலே செல்கிறான்! தொண்டர்கள் தலைவனைப் பின் தொடர்வார்கள்! இங்கே தலைவனோ, பயபக்தியுடன், தொண்டர்களைப் பின் தொடர்கிறானே? அநதக் காட்சியைக் கண்ணுக்கு நேராகப் பார்க்கிறார்! காதுக்கு நேராகக் கேட்கிறார் சித்தர்! அடங்கெழில் சம்பத்து — அடங்கக் கண்டு “ஈசன்” அடங்கெழில் அஃதென்று — அடங்குக உள்ளே! உள்ளம் உரை செயல் — உள்ள இம் மூன்றையும் உள்ளிக் கெடுத்து இறை — உள்ளில் ஒடுங்கே!! அற்றது பற்றெனில் — உற்றது வீடு, உயிர் செற்றது மன்னுறில் — அற்றிறை பற்றே!!! ஈரடிகளில் ஈர்த்து விட்டதே! சகல வேத ஞானமும் சட்டென்று புரிந்து விட்டதே! அதற்கு மேல் ஒன்றும் பேச முடியவில்லை கருவூராருக்கு! அரவணைத் துயிலும் மாயோன் அரங்கனைக் கண்குளிரத் தரிசிக்கிறார்! தரிசித்து முடித்து வெளியே வந்தால், அவர் காலடிகளில் ஒரு தாசி விழுகிறாள்…பேரு அபரஞ்சி!
பேரழகி! அரங்கனைத் தரிசித்த மாத்திரத்தில், இப்படித் தான் ஆளனுப்பிக் கள்ளத்தனம் செய்வானோ? அவளோ சிரிக்கிறாள்! கரு ஊரில் சிக்காத கருவூரார், என்ன விஷயம்? என்பது போல் ஒரு பார்வையை வீசுகிறார்! சற்று முன் கேட்ட வேத கோஷத்தில், யோக சாதனையில், தனக்குள்ள சில ஐயங்களைத் தீர்க்கச் சொல்லிக் கேட்கிறாள் இவள்! ஆகா! இப்படியும் ஒரு தாசியா? பாட்டுக்கு நடனம் மட்டுமே ஆடாமல், அதன் பொருளையும் கேட்ட விதம் அவருக்கு மிகவும் பிடித்து விட்டது! அவள் ஆர்வத்தைப் பாராட்டி ஐயத்தை அங்கேயே தீர்த்து வைக்கிறார்! அடங்குக உள்ளே! உள்ளில் ஒடுங்கே!-ன்னு சித்த புருஷ லட்சணத்தை இப்படி ரெண்டே சொல்லில் சொல்லவும் முடியுமோ? அவளுக்கு விளக்கத்தை எடுத்துச் சொல்லச் சொல்ல, சித்தருக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி! மகிழ்வில் கடவுளையே அதட்டுபவர் அல்லவா கருவூரார்! முன்பு நெல்லையப்பர் படாத பாடு பட்டாரே இவரிடம்! இப்போதும் அதே தொனியில் கருவூர் சித்தர்…” ரங்கா, உன் கழுத்து மாலையை என்னிடம் கொடு”! திருக்கழுத்து மாலை! பவழ வாய் கமலச் செங்கண்ணனின் பவழ மாலை கருவூரார் கைகளில்வந்து விழுகிறது! “அபரஞ்சி, என்னை வியப்பில் ஆழ்த்தி விட்டாய்! இதை என் பரிசாக வைத்துக் கொள்! நீ எப்போது நினைத்தாலும் நான் வருவேன்” என்று சொல்லி விட்டுக் கிளம்பி விட்டார்!
சித்தர்கள் தான் ஓரிடத்தில் இருக்க மாட்டார்களே! மறுநாள் காலை… கோயிலுக்குள் வந்த அபரஞ்சியின் கழுத்தில் அரங்கப் பழவம்! அவள் மீது ஆளுக்கு ஒன்றாய் குற்றச்சாட்டு அடுக்குகிறார்கள்! பஞ்சாயத்து நடக்கிறது! கருவூரார் கொடுத்த பரிசு என்பதை அவள் சொல்ல…பிடி கருவூராரை! ஹா ஹா ஹா! காற்றைப் பிடிக்கத் தான் முடியுமா? அபரஞ்சி, கருவூராரை மனதால் வேண்டி, “இப்படி விளக்கம் சொல்லி இக்கட்டு கொடுத்து விட்டீர்களே சுவாமி”, என்று அழுகிறாள்! கருவூரார் அங்கே மீண்டும் வந்து, மாயக் கள்வனைச் சாட்சிக்கு அழைக்கிறார்! அரங்கன் அசரீரியாய்ச் சாட்சி உரைக்க…திருவரங்கக் கோயில் ஸ்தனத்தார்கள், கருவூராரை நிற்க வைத்துப் பேசியமைக்கு மன்னிப்பு கேட்கிறார்கள்! கருவூரார் பின்னர் கருவூருக்கே திரும்புகிறார்! கருவூர் சித்தர் காட்டில் போய் இருக்காமல், சமூகத்திலேயே இருந்து விட்டார்! அவர் சொல்லும் கருத்துக்கள் வெட்டு ஒன்னு, துண்டு ரெண்டாக இருக்கு! ஆன்மீகப் போலித்தனங்களை அவர் சாடச் சாட, அவர் மேல் வெறுப்பும், பொறாமையும், பகையும் சொந்த ஊரிலேயே எழுகிறது! குறிப்பாகப் போலியாக நியமங்கள் செய்யும் சைவ அந்தணர்கள் சில பேர், அவர் மேல் அதீத பகைமை கொள்கின்றனர்! கருவூரார் ஒரு துர்வேத நிபுணர் என்று குறுநில மன்னனிடம் ஓதி ஓதி, மனதைக் கரைக்கிறார்கள்! மது-மாமிச படையல் வைப்பவர், வாம பூஜை செய்பவர் என்றெல்லாம் காட்ட வேண்டி, சில அத்வைதிகளே அவர் வீட்டில், மது-மாமிசம் ஒளித்து வைக்கின்றனர்! ஆனால் சோதனையில் அவை யாகத் திரவியங்களாக மாறி இருப்பது தெரிய வர, அந்த வைதீகர்களுக்குப் பெருத்த அவமானம்! அதிக ஆள் பலம், சிஷ்ய பலம் இல்லாத கருவூராரை ளிதாக அடித்துத் துவைத்து விடலாம் என்று அந்தப் போலி அந்தணர்கள் சிலர் கிளம்ப, சித்தர் சிரிக்கிறார்! பயந்து ஓடுவது போல் நடித்து ஆட்டம் காட்டுகிறார்! கரூர் ஆனிலையப்பர் கோயிலுக்குள் ஓடுகிறார்! பசுபதீஸ்வரர் = ஆனிலையப்பர்! அவர் கருவறைக்கு உள்ளேயே நுழைவதைக் கண்டு இவர்கள் இன்னும் சீற்றம் அடைய, “ஆனிலையப்பா!” என்று கூவிச் சிவலிங்கத்தை இறுக்கித் தழுவிக் கொள்கிறார் கருவூரார்! கருவில் ஊறாக் கருவூரார், இறைவனுடன் கலந்து மறைந்த காட்சி! தஞ்சைப் பெரிய கோயிலில், கருவூரார்-இராசராசன் ஓவியம் இன்றும் ஆனிலையப்பர் கோயிலில் கருவூராரின் சிற்ப வடிவம் உள்ளது! தஞ்சை பெரிய கோயிலிலும் அவரது சிலை வடிவம் பின்னாளில் பிரதிஷ்டை செய்யப்பட்டது!
வாங்க, கதை முடிந்து, தேவாரத் தமிழிசை கேட்போம்!
தேவாரத் தொகுப்பில், கருவூரார் பாடல்கள் ஒன்பதாம் திருமுறை! பத்து சிவத் தலங்களைப் பாடுகிறார் சித்தர்! இராஜராஜ சோழன் பால் வைத்த அன்பால், தஞ்சை இராச ராசேச்சரம், கங்கை கொண்ட சோழேச்சரம் ஆகிய தலங்களையும் பாடியுள்ளார்! மெட்டும், ராகங்களும் தானாகவே அமையும் இனிய இசைப் பாடல்கள்! “திருவிசைப்பா” என்று போற்றப் படுகிறது! அதில் ஒன்றைக் காண்போம்! கேட்போம்! இதோ சொல்லிக் கொடுக்கிறாரு, கூடவே சொல்வோம்!
பவளமே மகுடம்! பவளமே
திருவாய்! பவளமே திருவுடம்பு!
அதனில் தவளமே களபம்!
தவளமே புரிநூல்!
தவளமே முறுவல் ஆடு அரவம்!
துவளுமே கலையும்!
துகிலுமே ஒருபால்!
துடியிடை இடமருங்கு ஒருத்தி!
அவளுமே ஆகில், அவரிடம்
களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே! *
ஈசனின் ஜடா மகுடம், செவ்விதழ், உடம்பு = மூன்றுமே பவளம்! அப்படிச் செக்கச் சிவந்த சிவப்பு! * ஈசனின் மேனியில் பால் வெண்ணீறு, முப்புரி நூல், சிரித்து வளையும் பாம்பு = மூன்றுமே தவளம் (வெண்மை)! அப்படிப் பால் வெளுத்த வெளுப்பு! இப்படிச் சிவப்பும் – வெளுப்புமான கலவையில் சிவபெருமான் ஒரு பக்கமாய் மின்னதுவளும் மேகலை (ஒட்டியாணம்)சேலைத் துகில் துடிக்கும் இடுப்பு =இப்படி மூன்றுமான முக்கண்ணிஒ ருத்தியாய் நிற்கிறாள்! =அவள் இந்தப் புறம், அவனின் அந்தப் புரம்!* அவளே நின்று விட்ட படியால் இனி அவரும் < நின்று விடுவார்! எங்கேதிருக்களந்தை என்னும் ஆதித்தேச்சரம்! நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ளகளப்பாழ் (களப்பாள்) என்ற ஊர்! அதுவே திருக்களந்தை!அங்கு தான் இப்படி ஒரு சிவ-சக்தி தரிசனத்தை நமக்குக் காட்டுவிக்கிறார் கருவூர் சித்தர்!பவளமே மகுடம்! தவளமேதிருச்சிற்றம்பலம்!
திருச்சிற்றம்பலம்! கருவூர் சித்தர் திருவடிகளே சரணம்!!
Hi Very useful information thank you. I need Karuvurar Palathiratu Padalgal
I need to know about karuvuraar’s medicine
Bhogar perumaanai maranthuvitteergale… Avarum Viswakarma Thane….
Bhogar perumaanai maranthuvitteergale… Avarum Viswakarma Thane….
Very nice and good
goodnews
தங்கள் கட்டுரையை “கம்மாளர்
கலைக் களம் ” என்ற முகனூல் குழுவில் பகிர்ந்துள்ளேன் !!!
தங்கள் சேவைக்கு நன்றி !!!
அருமை. வாழ்த்துக்கள் போகர் விஸ்வகர்மா பற்றி எப்போது பதிவு போடுவீர்கள் ???
போகர் 7000 நூல் வாங்கி படிக்கவும்
அருமையான தகவல்
மனம் நெகிழ்கிறது
கருவூராரின் வாரிசு விபரம் தொடர்பு எண் கிடைக்குமா அன்பரே?