மதுரையிலிருந்து ஏறத்தாழ 120 கிமீ தொலைவில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கயத்தாறை “வெட்டும் பெருமாள்” என்ற குறுநில மன்னன் ஆட்சி செய்து வந்தான். அவனது ஆட்சி சீரும், சிறப்பும் பெற்று விளங்கக் காரணமாகத் திகழ்ந்தவர் அவருடைய மதியமைச்சர் என்பதும், அவரது பெயர் “சிவராமலிங்க ஆச்சாரியார் “ என்பதும் கயத்தாறில் இன்று கர்ண பரம்பரைச் செய்தியாகத் திகழ்வதை நாம் உணர முடிகிறது. இவ்வாறாக நம் கருத்தைக் கவரும் கயத்தாறு. என்னும் ஊரில், “மர வேலை மாமன்னர்” என்று நம்மவராலும், வெள்ளையராலும் பாராட்டிச் சீராட்டப்பட்ட” மரவேலை மயன் ” ஒருவர் வாழ்ந்து வந்தார்.
பதக்கங்கள் பல பெற்ற பெருமைக்குரியவராகத் திகழ்ந்த அச்சான்றோரின் பெயர் “சங்கரநாராயணன் ஆச்சாரியார்” என்பதாகும். மதியமைச்சரின் வம்சாவளியான அச்சான்றோர், அன்பும், பண்பும் ஒருங்கே அமையப்பெற்ற தம் துணைவியார் அன்னபூர்ணம் என்பவருடன். இல்லறமாம் நல்லறத்தைச் சீரும் சிறப்புமாய் இனிதே நடத்தி வந்தார். ”அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் போஒய்ப் பெறுவ எவன்!” என்ற. செந்நாப்போதரின் செம்மொழிக்கிணங்க வாழ்க்கை நடத்திய அன்னாருக்கு 24.10.1905 அன்று தெய்வத் திருவருளால்’ ஓர் ஆண் குழந்தை பிறந்தது. ௮ந்த ஆண் குழந்தையே பின்னாளில் விடுதலைப் போரில் வீரச் செயல் பல புரிந்த தியாகி கே.எஸ். முத்துசாமி ஆச்சாரியார் என்பதாகும்.
கயத்தாறில் வாழ்ந்து வந்த முத்துசாமியின் பெற்றோர், தொழில் முன்னேற்றம் குறித்து விருதுநகர் சென்றடைந்தனர், துள்ளித் திரிந்த முத்துசாமி, பள்ளிப்பருவம் எய்தியதும் பள்ளிக் கணக்குப் பயில சத்ரிய வித்யா சாலை எனும் பள்ளியில் சேர்க்கப்பட்டார். முத்துசாமி படித்துக்கொண்டிருந்த அந்த பள்ளியில் அவருக்கு மிக நெருங்கிய நண்பர் ஒருவர் இருந்தார். முதல். வகுப்பிலிருந்தே முத்துச்சாமி அருகில் அமர்ந்திருந்த அவரும் முத்துசாமியும் ஈருடலும் ஓருயிருமாக பழகி வந்தார்கள். பிற்காலத்தில் ” விருதுநகர் இரட்டையர்” என்று தமிழ்நாடு அரசு வெளியிட்ட. (பள்ளிப் பாடநூலான) இந்திய வரலாறு, என்னும் நூல் இதை விளக்குகிறது
முத்துசாமி சுறுசுறுப்பும், ஆர்வமும் துடிப்பும் மிக்கவராகத் திகழ்ந்தார். அதன் காரணமாக அவரிடம் மிகுந்த மரியாதையும் ஈடுபாடும் வைத்திருந்த அவரது நண்பர் பொதுவாக அமைதியாகவே இருப்பார். எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாகவே செல்லும் பழக்கம் இருந்தது. பாடசாலையும் அங்கு கற்பிக்கப்பட்ட பாடங்களும் முத்துசாமிக்குப் பாரமாகத் தோன்றியது. அடிக்கடி அங்கு நிகழும் ஊர்வலங்களும் போராட்டங்களும் இரும்பை ஈர்க்கும் காந்தமாய் அவரை ஈர்க்கத் துவங்கின. சுதந்திரப் போராட்ட உணர்வு, தீ சுவாலை பெருநெருப்பாய்த் எரிந்தது.
எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த முத்துசாமி தன் பள்ளிப்படிப்பிற்க்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து வெளியேறிவிட்டார் இவர் வெளியேறியதால் முதல் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை இவருடன் ஒன்றாகவே படித்துப்பழகி இவரிடம் மிகுதியான பற்றும் மரியாதையும் ஈடுபாடும் கொண்டிருந்த அந்த நண்பரும் வெளியேறி விட்டார். முத்துசாமி போலவே சுதந்திர உணர்வு எனும் சுட்டெரிக்கும் பெரு நெருப்பு அவரையும் பற்றி படர்ந்திருந்தது. பின்னாளில் கர்மவீர் என்ற என்ற சிறப்புப் பெயருடன் உலகம் போற்ற வாழ்ந்த “உத்தமக் காமராசரே” அந்த நண்பர்.
இடமிருந்து மூன்றாவதாக காமராஜர் அருகில் அமர்ந்திருப்பவர் பிரம்மஸ்ரீ கே எஸ் முத்துசாமி ஆச்சாரியார்
இருவரது மூளைக்குமே ஏட்டுக்கல்வி எட்டவில்லை போலும்! ஆனால் 15 வயது இளம் பருவத்திலேயே பெரிய அரசியல் வாதிகளுக்கு கூட இல்லாத அளவில் அரசியல் அறிவும் ஆர்வமும் இருவருக்கும் ஏற்பட்டிருந்தது. விதியின் விளையாட்டை யாரே நிர்ணயிக்க வல்லார்? முதல் உலகப் பெரும்போர் அன்ணிபெசன்ட் அம்மையார் துவங்கிய ஹோம் ரூல் இயக்கம் 1919ல் ஜாலியன் வாலாபாக்கில் நிகழ்ந்த மிருகத்தனமான படுகொலைகள் காங்கிரசை தலைமையேற்றுப் புது வழிகாட்டிய புனிதன் காந்திஜியின் அறப் போராட்டங்கள் ஆகியவற்றில் முத்துசாமிக்கு அளவற்ற ஈடுபாடு ஏற்பட்டது. அதன் விளைவாக 1920 ஆம் ஆண்டில் ஓத்துழையாமைப் போரில் குதித்தார் அப்போது அவருக்கு 15 வயது ஆகியிருந்தது. மனவேகத்திற்கு உடல் வேகம் ஈடுகொடுக்க வேண்டாமா சிறுவனால் என்ன சாதித்திருக்க இயலும் என்கிறீர்களா? ஒத்துழையாமை இயக்கப் போராட்டம் பற்றிய சுவரொட்டிகளை வெள்ளையருக்குத் தெரியாமல் இரவோடிரவாக வீதிகளில் உள்ள சுவர்களில் ஒட்டுதல், வீடுதோறும் சென்று துண்டுப் பிரசுரங்களை வழங்குதல், போராட்டப் பெருந்தலைவர்களின் உடனிருந்து போராட்டம் வெற்றி பெற அவர்களுக்குத் தேவையான சிறு சிறு உதவிகள் செய்தார்.
1923-ஆம் ஆண்டு மதுரை மாநகரில் கள்ளுக்கடை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டம் வெற்றிகரமாக நடைபெற அனைத்துச் செயல்களையும் மேற்கொண்ட முத்துசாமி ஆச்சாரியார், தாமும் அப்போராட்டத்தில் குதித்ததுடன் காமராசரையும் தீவிரமாக ஈடுபட வைத்தார். பின்னர் நிகழ்ந்த நாகபுரிக கொடிப் போராட்டத்தில் நேரடியாகக் கலந்துகொள்ள அவரால் இயலவில்லை. ஆகவே போராட்டத்தின் நோக்கம், செயல்பாடு, விளைவு முதலியன பற்றிய செய்திகளை விருதுநகர் வட்டார மக்களிடையே திறம்பட எடுத்துரைத்து, சுதந்திரக் கனல் தணியாதவாறு சுடர்விட்டு ஒளிவீச ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்.
விருதுநகர் என்றழைக்கப்படும் அன்றைய விருதுபட்டி, (திகவின் முன்னோடியாக கருதப்படும்) ஜஸ்டிஸ் கட்சியின் கோட்டையாக விளங்கியது அந்தக் கோட்டையைத் தகர்க்கும் மாபெரும் பொறுப்பை அன்றைய காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆர்வமும், துடிப்பும், சுறுசுறுப்பும் தியாக உணர்வும் கொண்ட முத்துசாமி ஆச்சாரியாரிடம் ஓப்படைத்தனர். அவர் தனது உயிர் நண்பரான காமராசரையும் அப்பணியில் இணைத்துக்கொண்டார். அன்றைய நிலையில் வி.வி.இராமசாமி நாடார், செந்தில்குமார் நாடார் போன்ற பிரமுகர்கள் வலிமை மிக்க ஜஸ்டிஸ் கட்சித் தூண்களாகத் திகழ்ந்தனர். இத்தகையோரை எதிர்த்து அரசியல் நிகழ்த்துவது என்பது. பகீரதப் பிரயாத்தனமாகும். ஆனால் திறமையும், தேர்ச்சியும் பெற்ற முத்துசாமி ஆச்சாரியார் முன்னணி வீரராய் நின்று போராடி வெற்றியும் பெற்றார். அதற்கேற்ற அரசியல் சாணக்கியத் தனத்தை இயற்கையிலேயே முத்துசாமி பெற்றிருந்தார். இக்காரணத்தினாலேயே எதையும் திட்டமிட்டுச் செயல்பட்டு எதிரிகளை முறியடிப்பதில் கைதேர்ந்தவர் என்று பழம் பெரும் தேச பக்தர்களால் இவர் புகழப்பட்டார்.
விருதுநகரில் கிருஷ்ணசாமிப் பாவலர் என்பவரது கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் அந்தக் கூட்டத்தில் மாபெரும் குழப்பத்தினை ஏற்படுத்தினர், பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். கூட்டம் நடைபெற விடாமலும், கூட்டத்தினரைக் கலைந்து ஓடும்படிச் செய்ததிலும் ஜஸ்டிஸ் கட்சியினர் அன்று வெற்றி பெற்றனர்; ஆனால் அடுத்த நாளே அதே இடத்தில் ஊர்வலத்தோடு கூட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார் தியாகி முத்துசாமி ஆச்சாரியார்.
இந்நிகழ்ச்சியை 1968-ஆம் ஆண்டில் வெளிவந்த “பாரதம்” என்னும் இதழ் கீழ்க்கண்டவாறு விவரித்துக் காட்டியுள்ளது.”கிருஷ்ணசாமிப் பாவலர் என்பவரது கூட்டம் விருதுநகரில் ஏற்பாடாயிற்று ஜஸ்டிஸ் கட்சி நரிகள் ஊளையிட்டுக் கூட்டத்தைக் கலைத்து விட்டன. ஆனால் அடுத்த நாளே, அதே இடத்தில் கூட்டம் ஊர்வலத்தோடு நடத்தப்பட்டது. மூளை முத்துசாமியுடையது: செயல் காமராஜருடையது; கிருஷ்ணசாமிப் பாவலரை ஒரு வண்டியில் அமர்த்தி முத்துசாமியும் காமராஜரும் ஆளுக்கொரு பக்கம் நின்று அழுத்திப் பிடித்துக்கொண்டு ஊர்வலம் நடத்தி பின்னாலேயே மற்றொரு வண்டியில் கத்தி, கம்பு, சோடா பாட்டில் சகிதமாக ஊர்வலம் சென்றது. எவ்விதமான அசம்பாவிதமும் இன்றிக் காங்கிரஸ் கூட்டம் நன்கு முடிந்தது காங்கிரசின் மானம் காப்பாற்றப்பட்டது.
விருதுநகரில் அடுத்து நடந்த காங்கிரஸ் தலைவர் வேலூர் குப்புசாமி முதலியார் கூட்டமும் திட்டமிட்ட கலவரத்தால் கலைந்தது. இரண்டாம் நாள் நிகழ்வுற்ற கூட்டத்தில் முத்துசாமி ஆச்சாரியார் பேசினார்; அவரது சொற்பொழிவைக் கேட்ட மக்கள் மகுடி. கேட்ட நாகமாயினர். கலவரம் ஏதுமின்றிக் கூட்டம் அமைதியாக நடந்தது. ” 1922 ஆம் ஆண்டில் சி. ஆர் தாஸின் சுயராஜ்ய கட்சி துவங்கிற்று சட்டசபை நுழைவை வற்புறுத்தும் அக்கட்சியை முத்துசாமியும் ஆதரித்தார். அப்போதுதான் எஸ் சீனிவாச ஐயர், ஏ ரெங்கசாமி ஐயங்கார் எஸ் சத்தியமூர்த்தி ஆகிய தலைவர்களின் தொடர்பும், நட்பும் கிட்டிற்று. சட்டசபை நுழைவு தேவை என்றார் சி.ஆர்.தாஸ் சத்தியமூர்த்தி அதனை ஏற்றார். ராஜாஜி உடனே அதனை எதிர்த்தார். 1930ல் அண்ணல் காந்தியடிகள் உப்புச் சத்தியாக்கிரகத்தைத் துவங்கினார். தண்டியாத்திரை வடக்கே; வேதாரண்ய யாத்திரை தெற்கே; காந்திஜியின் தலைமை வடக்கே; ராஜாஜியின் தலைமை தெற்கே , காந்திஜி கைதானார். அவர் கைதான சில மணி நேரங்களிலேயே விருதுநகரில் அரசாங்கத்திற்கு எதிராக உப்புச் சத்தியாக்கிரகத்தைப் புகழ்ந்து பேசிய குற்றத்திற்காக தமிழகத்திலேயே முதன்முதலாகக் கைது செய்யப்பட்டார் முத்துசாமி ஆச்சாரியார்!
சிறந்த தேசபக்தரான முத்துசாமி ஆச்சாரியார் 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4ஆம். தேதியன்று தமது சொந்த ஊரான கயத்தாறைச் சேர்ந்த தாயம்மாள் என்பவரைத் தமது வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக்கொண்டார். இருமணம் முடிந்த ஐந்தாம் நாளில் அதாவது 1930 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9ஆம் தேதி மணமுடித்த பூவாசமும் புது மாப்பிள்ளைக் கோலமும் கலையும் முன்பே கைதாகி ஒருவருட சிறைத்தண்டனை பெற்றார். பெல்லாரி, வேலூர், திருச்சி ஆகிய சிறைகளில் அவரது தண்டனைக் காலங்களைக் கழிக்க நேரிட்டது. திருமணமான 5ஆம் நாளே கணவனைப் பிரிந்து வாடிய அவரது மனைவியின் நிலையை நினைக்கும்போது கல்நெஞ்சும் கரைவதாயிற்று. சிறையிலிருந்து விடுதலை பெற்றபின், முத்துசாமி ஆச்சாரியார் இராமநாதபுரம் மாவட்டக் காங்கிரஸ் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். குமாரசாமி ராஜா தலைவராக இருந்தார். மாவட்டக் காங்கிரஸின் காமராசர் சாதாரண உறுப்பினராக இருந்து வந்தார்.
1932-ல் அந்நியத் துணி மறுப்புப் போராட்டம்: துவங்கிற்று. அதிலும் குதித்தார் முத்துசாமி. ஒரு பிரசங்கத்திற்காகக் கைது செய்து ஓராண்டு சிறைத்தண்டனையும் விதித்தது வெள்ளை ஏகாதிபத்தியம் . திருச்சி வேலூர் சிறைகளில் ராஜாஜி, பட்டாபி சத்தாராமையா, சத்தியமூர்த்தி பிரகாசம்: பக்தவத்சலம் முதலிய தலைவர்களோடு சேர்ந்து முத்துசாமி ஆச்சாரியாரும் சிறைவாசம் அனுபவித்தார். 1930ல் உப்புச் சத்தியாக் கிரகத்தின் போதும் 1932ல் அந்நியத் துணி மறுப்பு இயக்கத்தின் போதும் கைதாகி ஒவ்வொரு ஆண்டும் சிறைத்தண்டனை பெற்ற தியாகி முத்துசாமி 1933ல் காமராசருடன் சேர்ந்து காமராஜ் அண்டு கோ என்ற பெயரில் இன்ஷூரன்ஸ் கம்பெனி ஒன்றினை ஆரம்பித்தார். ஏற்கனவே தியாகி முத்துசாமி ஆச்சாரியார் அவர்கள் பால்பண்ணை, செங்கல் சூளை மற்றும் ஓடு தயாரித்தல். கோழிப்பண்ணை தவிர விவசாய வேலைகளிலும் அவ்வப்போது ஈடுபட்டி ருந்தார்.
இந்நிலையில் 1933ல் சென்னைச் சதிவழக்கு என்ற பெயரால் தேசியவாதிகள் மீது தொடரப்பட்ட சர்வ மாகாணச் சதி வழக்கில் காமராசரையும் சேர்க்கப் போலீசார் முயன்றனர். உதகமண்டலம் வரவிருந்த வங்க அடக்குமுறைக் கவர்னர் சர்.ஜான் ஆண்டர்சனைச் சுட்டுக் கொல்ல சதி நடந்ததாகவும் அதற்குக் காமராஜ் தான் பொறுப்பு என்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் அது வெற்றி பெறாமல் போகவே, அடுத்து ஒரு சதி வழக்கைச் ஜோடித்தனர் .” ஸ்ரீவில்லிப்புத்தூர் விருதுநகர் போலீஸ் ஸ்டேஷன் வெடி குண்டு வழக்கு “என்ற மற்றொரு வழக்கைத் தயார் செய்தனர் .
கே.எஸ்.முத்துசாமிமுதல்எதிரி; காமராஜ்2 வது எதிரி; நிருபர் மாரியப்பன் 3 வது எதிரி; நாராயணசாமி 4 வது எதிரி; வெங்கடாச்சலம் என்பவர் அப்ரூவராக மாறினார், விருதுநகரில் “பாம்பே ஷோ ஒன்று நடந்தது.அ.தில் முத்துசாமி இரவு 2 மணி வரை விருதுநகர் சப்-இன்ஸ்பெக்டர் அனந்தராம் கிருஷ்ணனுடன் இருந்தார் ஆனால் அதே இரவில் தான் விருதுநகர் போலீஸ் ஸ்டேசன். மீது வெடிகுண்டு வீசியதாக வழக்கு. ஜோடிக்கப்பட்டது. சென்னையிலிருந்து சி.ஐ.டி இன்ஸ்பெக்டர் தோத்தாத்திரி ஐயங்கார் அதற்காகவே விருதைக்கு வந்து அந்த வழக்கை ஜோடித்தார்: ஆனால் அதில் பொய்ச்சாட்சி’ சொல்வதற்கு விருதுநகர் சப் இன்ஸ்பெக்டர் அனந்த கிருஷ்ணன் மறுத்து விட்டார். அதனால் அவருக்கு மாற்றல் உத்தரவு பெற்று வேறு ஊருக்கு சென்றார்.
சிவகாசி காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் பார்த்தசாரது அய்யங்கார், (பின்னாளில் சென்னை மானில ஐ ஜி யாக இருந்து சென்னை விமான நிலையத்தில் கவர்னர் ஜெனரல் ராஜாஜியை வரவேற்க சென்ற காமராசரை அவமானப்படுத்தியவர்.) இந்த வழக்கை ஜோடிப்பதில் முழுப்பங்கு வகித்தவர். அப்ரூவர் வெங்கடாசலத்தை அடித்து உதைத்துச் சித்ரவதை செய்து ஒரு ஒப்புதல் கடிதம் வாங்க நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கச் செய்தார். ஆனால் மனச்சாட்சியை மதித்து நடக்கும் அப்ரூவர் வெங்கடாச்சலம் தான் கொடுத்த ஒப்புதல் கடிதம் போலீசாரின் சித்ரவதைக்குப் பணிந்துதான் என்று நீதிபதியின் முன்பு கூறிவிட்டார்.பிரபல பத்திரிகை ஆசிரியர் போத்தன் ஜோசப் அவர்களின் சகோதரரும் வழக்கறிஞருமான ஜார்ஜ் ஜோசப், முத்துசாமி, காமராஜ் ஆகியோர்க்காக வாதாடி வழக்கில் வெற்றிப் பெற்றார். இந்த வழக்கை விசாரித்த அடிஷனல் முதல் வகுப்பு மாஜிஸ்டிரேட் ஜே பி.எல்.மன்றோ போலீஸ் தரப்பின் சாட்சியங்கள் நம்பத்தகுந்தவையாக இல்லை. இவ்வளவு அறிவுள்ள இளைஞர்கள். ஒரு வெடிகுண்டுச் சதியை இவ்வளவு பலவீனமாகத் திட்டமிட மாட்டார்கள் என்று கூறி முத்துசாமி உட்பட அனைவரையும் விடுதலை செய்தார்
இந்த வழக்கு தடந்துகொண்டிருந்தபோது தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்த காந்திஜி ராஜபாளையத்தில் குமாரசாமி ராஜா இல்லத்தில் இருந்த டாக்டர் ராஜனிடம் இந்த வழக்கைத் தீவிரமாக நடத்துமாறு கூறினார். டாக்டர் ராஜன் வழக்கு வெற்றி பெறப் பெரிதும் உதவியாக இருந்தார். 1937ல் சட்டசபைத் தேர்தல் நடந்தது. விருதுநகர் தொகுதியில் ஜஸ்டிஸ் கட்சியின் சார்பில் வி.வி,ராமசாமி போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரசின் சார்பில் காமராஐரையே நிறுத்தவேண்டும் என்று கே. எஸ். முத்துசாமி வாதாடினார். காமராஜரை நிறுத்தினால் “வெற்றிபெறமுடியாது என்று தமிழக பார்லிமெண்ட் போர்டு தலைவர் சத்ய மூர்த்தியும் முத்தாங்க்க முதலியாரும் மறுத்தனர். முத்துசாமியோ மிகவும் பிடிவாதமாக இருந்தார். அப்போது காங்கிரஸ் மாநாடும் வந்தது. அதற்கு சென்ற முத்துசாமி மத்திய பார்லிமெண்ட் பொர்டு தலைவரான வல்லபாய் பட்டேலிடமே வாதாடி விருது நகர் தொகுதிக்கு காமாராஜரையே ஏற்குமாறு செய்து திரும்பினார். சத்ய மூர்த்தியையும் முத்துரங்க முதலியாரையும் எதிர்த்து ஒருவர் சீட்டு வாங்கினாறென்றால் அது “இந்த முத்துசாமி” தான்என்று அக்காலத்தில் வியந்து பேசப்பட்டது. தேர்தலில் விருதுனகர் தொகுதியில் அருப்புக்கோட்டை தாலுகா பொருப்பை முத்துசாமியும்,சாத்தூர் தாலுகா பொருப்பை காமராசரும் கவனிப்பது என்று முடிவு செய்தனர். இறுதியாக முத்துசாமி ஆச்சாரியாரின் முனைப்பான முயற்சியால் காமராசர் வெற்றி பெற்றார்.
முத்துசாமி ஆச்சாரியார் பொறுப்பு வகித்த அருப்புக்கோட்டையில் பெற்ற அதிகவாக்குகளே காமராசரின் வெற்றிக்கு வழிகோலுவதாக அமைந்தது. 1938 ஆம் ஆண்டில் தியாகி முத்துசாமி ஆச்சாரியார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டில் அவர் விருதுநகர் நகராட்சியின் துணைத் தலைவராகவும் பணிபுரிந்தார். ஐஸ்டிஸ். கட்சியைச் சிதைத்துச் சன்னாபின்னமாக்கிய தியாகி கே.எஸ் .முத்துசாமி ஆச்சாரியார், “
“மக்கள் உரிமை காக்கும் மாவீரன் கே. எஸ்.எம்” என்று 1938 ஆம் ஆண்டு வெளியான: “ஹரிபுரா காங்கிரஸ் மலர்” என்ற இதழ் பாராட்டியுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது ‘ 1938 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சென்னை சட்டமன்ற காங்கிரஸ் கட்சி விவரக் குறிப்பேட்டிலும் தியாகி முத்துசாமி ஆச்சாரியார் அவர்களது புகழ் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் காங்கிரஸ் இயக்க ஸ்தாபன வேலைகளிலே தவிர்க்க முடியாதவர்கள் எனக் கருதப்பட்ட “விருதுநகர் இரட்டையர்கள்” எனப் புகழ் பெற்றவர்கள் “காமராசரும் , முத்துசாமி ஆச்சாரியாருமே !” 1977ஆம் அண்டு தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் வெளியிட்ட 4ஆம் வகுப்பிற்கான “இந்திய வரலாறு” என்ற பாடநூலில் இராமநாதபுரம் மாவட்டத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.
இந்தியத் திருநாடு விடுதலை பெற்று 25 ஆண்டுகள் நிறைவடைந்ததன் நினைவாக விடுதலைப் போராட்டத்தின் போராட்டத்தில் ஆற்றிய பங்கு பணிகளின் நினைவாக அப்போதைய பாரதப்பிரதமர் இந்திரா காந்தி இந்தியத் திருநாட்டின் சார்பில் தியாகி முத்துசாமி அவர்களுக்கு 15.08.1972 அன்று தாமிரப்பட்டயம் வழங்கிச் சிறப்பித்தார்.
சுமார் 80 ஆண்டு காலம் தமிழக அரசியலைத் தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக்கொண்டு பல மந்திரி சபைகளை ஆக்கவும், அழிக்கவும் செய்த வல்லவர். நேருஜியின் மரணத்திற்குப் பின்னர் இந்தியாவின் பிரதமர் பதவிக்கு எழுத்த போட்டியை மூன்று முறை சமாளித்த இந்திய அரசியல் வழிகாட்டி என்றெல்லாம் புகழப்படும் தலைவர் காமராசருக்கே ஆரம்ப கால அரசியல் வழிகாட்டியாக இருந்த பெருமை ஒருவருக்கு உண்டென்றால், அவர் பழம்பெரும் தேசபக்தர்களால் கே .எஸ் .எம் என்று அழைக்கப்படும் விருதுநகர் கே .எஸ் முத்துசாமி ஆச்சாரியார் அவர்களே ஆவார்! என்று தேசிய முற்போக்கு வார ஏடான “பாரதம்” என்னும் ஏடு “‘ காமராசரின் அரசியல் வழிகாட்டி “ என்ற தலைப்பில் தியாகி கே .எஸ் முத்துசாமி ஆச்சாரியார் அவர்களை பற்றிக் கூறியுள்ளதை நினைவு கூர்வதில் பெருமையடைகிறோம்!
காமராசர் என்ற மாமனிதர் ஒரு மாபெரும் மாளிகையாக கம்பீரமாக நம் கன் முன்னே காட்சி தருகிறார் என்ரால் அந்த மாளிகையின் அஸ்திவாரமாக, அடித்தளமாக அமைந்திருந்தவர் தியாகி கே எஸ் முத்துசாமி ஆச்சாரியார் என்பது உண்மை! வெறும் புகழ்ச்சிமில்லை தியாகச் செம்மல் என திக்கெட்டும் புகழப்பெற்ற கே எஸ் முத்துசாமி ஆச்சாரியார்அவர்கள் தாயம்மாள் எனும் நலற செல்வியின் நயமிகு துணையுடன் இல்லறம் நத்தி வந்தார். இராமச்சந்திரன், இந்திராவதி என்னும் இரு பிள்ளைகள் உண்டு. 16.12.1972ல் மறைந்தார். அவர் ஒரு விஸ்வகர்மா சகாப்தம்!.
நன்றி: விஸ்வகுல விலாசம் நவம்பர் -2022.
குறிப்பு:பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் உத்தரவுக்கிணங்க மறைக்கப்பட்ட சுதந்திர போராட்ட விரர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த பொதிகை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிரம்மஸ்ரீ.கே எஸ் முத்துசாமி ஆச்சாரியார்! பாரத பிரதமர் மோடிக்கு நன்றி!
Be the first to commenton "“தியாக செம்மல்” கே.எஸ். முத்துசாமி ஆச்சாரியார்!"
Be the first to comment on "“தியாக செம்மல்” கே.எஸ். முத்துசாமி ஆச்சாரியார்!"