மயனின் மறுஅவதாரம்

சிற்பி, டாக்டர், பத்மபூஷன் வை கணபதி ஸ்தபதி
சிற்பங்களில் வெளிப்படும் தமிழரின் அழகியலையும் மரபையும் நுட்பங்களையும் தமிழர் சிற்பக்கலை குறிக்கும். இக்கலை பண்டைக் காலம்  முதற்கொண்டே தமிழரால் வளர்த்தெடுக்கப் பட்டுள்ளது.  சங்க காலத்தில் மண், மரம், தந்தம், கல் ஆகியவற்றில் சிற்பங்கள் செதுக்கப்பட்டன. அப்படி தொன்மைவாய்ந்த பண்பாட்டுக் கலை மரபை வெளிப்படுத்தியவராகவும் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட கட்டிடக்கலையின் நீட்சியாகவும் விளங்கியவர்தான் வை. கணபதி ஸ்தபதி. உலகப் புகழ்பெற்ற சிற்பி வை. கணபதி ஸ்தபதி (6.09.2011) இன்று சென்னையில் காலமானார். 1927ல் பிறந்த அவருக்கு வயது 84.ஸ்ரீவைத்யநாத ஸ்தபதி – வெள்ளம்மாள் தம்பதிக்கு மகனாக சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் ஸ்தபதி குடும்பத்தில் பிறந்து அதே துறையில் மிகச் சிறந்த கலைஞராக மிளிர்ந்தார். இவர் துணைவியார் தட்சிணாவதி. இவரது கலைத் திறமைகளுக்குச் சான்றுகள் பல உள்ளன. சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தை வடிவமைத்தவர் இவர்தான். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகக் கட்டடமும் இவரது கைவண்ணம்தான். பல புகழ்பெற்ற இந்துக் கோவில்களை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வடிவமைத்தவர் இவர்தான். உச்சமாக, கன்னியாகுமரியில் கடல்நடுவே பாறையின் மீது கம்பீரமாக எழுந்து நிற்கும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை வடிவமைத்தவரும் கணபதி ஸ்தபதிதான். தமிழகத்திலேயே மிகப் பெரிய சிலை இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் பிரம்மாண்ட சிலையின் உயரம் 95 அடியாகும், பீடத்தின் உயரம் 38 அடியாகும். மொத்தம் 133 அடியாகும். 2004ம் ஆண்டு தென்னகத்தை சூறையாடிய கடுமையான சுனாமித் தாக்குதலின்போதும் கூட இந்தச் சிலைக்கு எந்த பாதிப்பும் வராமல் கம்பீரமாக நின்று உலகநாடுகளை வியக்க வைத்தது. சிற்பக் கலையில் சித்தராகவே வாழ்ந்த இவரை ஒரு சிற்பச்சித்தர் என்றே கூறலாம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வரலாற்றுப் புகழ்வாய்ந்த தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தைக் கட்டியெழுப்பிய தலைமைச் சிற்பி குஞ்சரமல்லன் ராஜராஜப் பெருந்தச்சன் மரபு வழிவந்த கணபதி ஸ்தபதி திராவிடக் கட்டிடக்கலை மரபில் அழியாப் புகழ்பெற்ற கோவில்கள், நினைவுச் சின்னங்களைக் கட்டியெழுப்பியவர். இது திருவாரூர் தேரைப்போல் எண்கோண வடிவில் கலைஞர் விரும்பியபடி வடித்தார். பொதுவாக கோபுர வடிவங்கள் கீழே அகண்டும் மேலே குறுகியும் இருக்கும். ஆனால் வள்ளுவர் கோட்டம் கீழே அகண்டும் நடுவில் குறுகியும் அதன் மேலே அகண்டும் உள்ளது. உச்சியில் கலசங்கள் உள்ளன. அதோடு அங்குள்ள திருவள்ளுவர் சிலையும் திருக்குறளின் எண்ணிக்கைப்படி அமைக்கப்பட்டுள்ளது. வள்ளுவர் கோட்டத்தை தமிழகத்தின் தாஜ்மகால் என்று சொல்லலாம். அவ்வளவு சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. பழந்தமிழர் புகழ் பரப்பும் சிலப்பதிகாரம் போற்றிய அழகிய பூம்புகார் நகரத்தை மீட்டுருவாக்கம் செய்ய நினைத்தார் கலைஞர். அதன்படி சிலப்பதிகாரமும் பட்டினப்பாலையும் குறிப்பிடும் பூம்புகாரை இவ்விருபதாம் நூற்றாண்டில் மறுஉருவாக்கம் செய்தவர் வை. கணபதி ஸ்தபதி. கடற்கரை ஓரம் அமைக்கப்பட்டிருக்கும் குதுப்மினாரைப் போன்ற ‘நெடுங்கல் மன்றம்’ எனும் உயர்ந்த கல்தூண் அதற்குச் சாட்சியாக இருக்கிறது. கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் குமரிமுனையில் அமைக்கப்பட்டிருக்கும் வான்புகழ் வள்ளுவர் சிலை தஞ்சை பெரிய கோயிலின் வடிவமைப்பைப் போன்றது. அதனால்தான் அது சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர்களைத் தாங்கி குறளைப்போல் உறுதியாக நிற்கிறது. சென்னை அண்ணாநகரில் உள்ள அறிஞர் அண்ணா முகப்பு வளைவைக் (ஆர்ச்) கட்டியவர். தி.மு.க. கட்சி அலுவலகம் அண்ணா அறிவாலயத்தைக் கட்டியவர். அதுமட்டுமல்லாது, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல இடங்களில் ஏராளமான சிறப்புவாய்ந்த திருக்கோயில்களைக் கட்டியவர். மாமல்லபுரம் சிற்பக் கல்லூரியின் முதல்வராக இருந்து சிறந்த பணியாற்றினார். இவரின் சீரிய பணிகளுக்காக இவருக்குப் பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டமும் மத்திய அரசின் உயர் விருதான பத்மபூஷண் உட்பட பல உயரிய விருதுகளும் வழங்கப்பட்டன. மாமல்லபுரம் அருகில் உள்ள இவரது சிற்பக்கூடத்தில் புராணகாலச் சிற்ப சாஸ்திரத்தின் முன்னோடியான மயனுக்கு அழகிய வடிவில் ஒரு கோயிலைக் கட்டும் பணியில் இறுதியாக ஈடுபட்டிருந்தார். இவர் வடித்த முதல் சிலை தனி ஒரு நபருக்காக உருவாக்கிய கண்ணகி சிலையாகும். இவர் வடித்த நூற்றுக்கணக்கான சிலைகளிலேயே இவரைக் கவர்ந்த சிலை பூம்புகாரில் உள்ள மாதவியின் சிலைதானாம். அந்தச் சிலை பார்ப்போர் உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும் அளவுக்கு அத்தனை லட்சணங்களும் அமைந்த பேரெழில் சிலையாகும்.தன் கைவண்ணத்தில் பிறந்த அந்த மாதவிச் சிலையைத் தன் மகளைப் போல் போற்றிப் பெருமை காத்து வந்தார். உலகத்திலேயே முதன்முதலாக மொழியைத் தெய்வமாக்கிக் கோவில் அமைக்கும் எண்ணம் காரைக்குடி கம்பன் கழகத்தை நிறுவியவரான கம்பன் அடிபொடி சா.கணேசனுக்கு உதித்தது. அதன் பயனாக இன்று தமிழ்த்தாய் கோவில் காரைக்குடியில் தலைநிமிர்ந்து நிற்கிறது. தமிழ்த்தாய் கோவில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பெரியார் சிலை அருகில் உள்ள கம்பன் மணிமண்டப வளாகத்தின் தென்பால் அமைந்துள்ளது. தமிழ்த்தாய்க்கு கோவில் எழுப்ப வேண்டும் என்பது சா.கணேசனின் நெடுநாள் கனவாகும். அவர் கனவை நனவாக்கும் வகையில் தமிழக அரசின் அன்றைய முதல்வர் கலைஞரால் 23-4-1975 அன்று தமிழ்த்தாய் கோவிலுக்கு கால்கோள் விழா நடந்து பணிகள் தொடங்கப்பெற்றன. இதற்காகத் தமிழக அரசின் சார்பில் ரூபாய் ஐந்து லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. சா.கணேசனும், வை.கணபதி ஸ்தபதியும் இணைந்து தமிழ்த் தாய்க்கு வடிவம் கொடுத்தனர். இவர் புகழ் குமரிமுனையில் முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் வான்நோக்கி உயர்ந்திருக்கும் வான்புகழ் வள்ளுவர் சிலைபோல் உயர்ந்திருக்கும்.
சங்கரரை நேரில் கண்ட கணபதி ஸ்தபதி
சிறு வயதில் காஞ்சிப் பெரியவரை நான் சந்தித்தது மறக்க முடியாத அனுபவம். 1957ல் எனது தந்தையார் சிற்பக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி வந்தார். அப்போது திடீரென்று வாத நோய் அவருக்கு ஏற்பட்டது. இதை நான் எனது வளர்ப்புத் தந்தை கம்பனடிப்பொடி சா. கணேசன் அவர்களிடம் கூறியபோது அவர் காஞ்சி மகா பெரியவரைப் போய்ப் பார்க்கச் சொன்னார். அப்போது சுவாமிகள் இளையாற்றங்குடியில் தங்கியிருந்தார். அது ஒரு குக்கிராமம். நான் போகும்போதே மணி இரவு ஒன்பதாகி இருந்தது. சுவாமிகள் தங்கியிருக்கும் இடத்திற்குச் சென்று, மேனேஜர் மூலம் தகவல் தெரிவித்தேன். உடனடியாக என்னை அழைத்து வரச்சொன்னார்கள். சுவாமிகளைச் சுற்றி நிறைய பக்தர்கள் கூட்டம் இருந்தது. அனைவரையும் விலக்கி என்னை அழைத்தார்கள். சுவாமிகளிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, என் தந்தையின் நிலையைப் பற்றிச் சொன்னேன். அவருக்கு குணமாகுமா, ஆகாதா, பலப்பல கோயில்களைக் கட்டிய இவருக்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டது என்றெல்லாம் சுவாமிகளிடம் கேட்டேன். சுவாமிகளோ அதற்கு பதில் ஏதும் கூறாமல், என்னைப் பற்றி, என் கல்வி பற்றி, நான் பார்க்கும் வேலை பற்றியே விசாரித்துக் கொண்டிருந்தார். எனக்கு மிகவும் கவலையாகி விட்டது. தந்தையைப் பற்றி இவர் எதுவுமே கூறவில்லையே அவருக்கு ஏதேனும் ஆகிவிடுமோ, உயிர் பிழைக்க மாட்டாரோ என்றெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் சுவாமிகளோ திடீரென்று ‘வா என்னுடன்’ என்று கூறி விட்டு நடக்கத் தொடங்கினார். வெகு தூரம் நடந்து மூத்த சுவாமிகளின் அதிஷ்டானம் அருகே சென்றவர்,  ‘இங்கேயே இரு’ என்று கூறிவிட்டு உள்ளே சென்று விட்டார். நான் வெகு நேரம் காத்துக் கொண்டிருந்தேன். மணி 12ஐக் கடந்து விட்டது. கூட்டம் கலைந்து சென்று விட்டது. நான் மட்டும் தனியே, வெளியில் காத்துக் கொண்டிருந்தேன். வெகு நேரம் சென்றிருக்கும், ‘எங்கே அந்தப் பையன்?’ என்று கேட்டுக் கொண்டே அதிஷ்டானத்தில் இருந்து வெளியில் வந்தார் சுவாமிகள். ‘இங்கே இருக்கிறேன் சுவாமி’ என்றேன் நான். சுவாமிகள் உள்ளே செல்லும் போது பாரம்பரிய தண்டத்தோடு மட்டுமே சென்றார். வரும்போது அவர் கையில் இரண்டு தேங்காய் மூடிகள் இருந்தன. வியப்புடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். பிரகாரத்தின் ஒரு மூலையில் நின்று, தண்டத்தைப் பிடித்துக் கொண்ட சுவாமிகள், என் தந்தையின் நிலையைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார். நான் சொல்லச் சொல்லக் கேட்டுக் கொண்டவர், ‘உன் அப்பாவுக்கு வந்திருப்பது பிராரப்த கர்மாவால். நீ மிகவும் அமோகமாக இருப்பாய்’ என்று சொல்லி ஆசிர்வதித்தார். இரு தேங்காய் மூடிகளையும் என்னிடம் கொடுத்து, ‘இந்த வழியாகப் போ. போகும் போது ஆஃபிஸில் போய் மேனேஜரைப் பார்த்து விட்டுப் போ’ என்றார்.
அதுவோ பயங்கரமான இருள் பிரதேசம். சுவாமிகள் சொன்ன வழியில் எப்படிச் செல்வது என்று புரியாமல் திகைத்துப்போய் நின்று கொண்டிருந்த போது, ஒரு சிறுவன், சுமார் எட்டு வயதிருக்கும். குடுமி வைத்துக் கொண்டு முன்னால் வந்தான். முகத்தில் தெய்வீகக் களை. ‘ஸ்தபதி, இந்த வழியாக என் பின்னாலேயே வாருங்கள்!’ என்று சொல்லி நடக்கத் தொடங்கினான். எனக்கு மிகவும் ஆச்சரியம். யார் இவன், எங்கிருந்து வந்தான் என்று. ஏதாவது பேய், பிசாசாக இருக்குமோ என்று சற்று பயமாகக் கூட இருந்தது. மயானக் கரை வேறு அருகில் இருந்தது. ஆனாலும் அவன் பின்னாலேயே நடக்கத் தொடங்கினேன். அவன் உருவத்தைப் பார்க்கும்போது கோபுலு வரைந்த ஆதி சங்கரர் ஓவியம் நினைவுக்கு வந்தது. அந்த உருவமே நேரில் வந்திருப்பது போலத் தோன்றியது. சில நிமிடங்களில் மேனேஜர் இருப்பிடத்தை அடைந்ததும், அவரிடம் அந்தச் சிறுவன் ஏதோ கூறிவிட்டு இருட்டில் சென்று மறைந்து விட்டான். ஸ்ரீ சங்கரர் பின்னர் மேனேஜர் என்னிடம் ஒரு ரசீதில் கையொப்பமிட்டு ஐம்பது ரூபாயைப் பெற்றுக் கொள்ளும்படிச் சொன்னார். நான் மறுத்தேன். ‘இது சுவாமிகளின் உத்தரவு. அவசியம் வாங்கிக் கொள்ள வேண்டும்’ என்றார். நானும் மறுக்க மனமின்றி அதை வாங்கிக் கொண்டேன். அதன்பின் என்னை உள்ளே சென்று உணவருந்திவிட்டுச் செல்லுமாறு கூறினார். அப்போதோ நேரம் இரவு 1 மணிக்கு மேல் இருக்கும். நானும் நல்ல பசியில் இருந்தேன். உள்ளே சென்றால் சாதம், சாம்பார், ரசம் என எல்லாம் சுடச்சுட இருந்தது. சாப்பிட்டுவிட்டு, அகால வேளை என்பதால் அங்கேயே இரவு தங்கி விட்டுப் புறப்பட்டேன். பிற்காலத்தில் காஞ்சிபுரத்தில் சுவாமிகளிடம் இதைத் தெரிவித்த போது, ‘எங்களுக்கெல்லாம் கிடைக்காத பாக்கியம் உனக்குக் கிடைத்திருக்கிறது. நாங்கள் எல்லாம் சங்கரரைப் பற்றிப் படித்துத் தான் இருக்கிறோம். ஆனால் உனக்கு அவரைப் பார்க்கும் பாக்யமே கிடைத்திருக்கிறது’ என்று கூறி சிலாகித்தார். ‘காமகோடி’ என்ற இதழில் இது குறித்து எழுதியிருக்கிறார்கள். இது என்னால் மறக்க முடியாத ஒரு அனுபவம்
– பத்மபூஷன் டாக்டர் வை. கணபதி ஸ்தபதி
ஸ்தபதியார் ஐயா அவர்களுடன்
பத்மபூஷன். டாக்டர் வை. கணபதி ஸ்தபதி அவர்களை விஸ்வாஸ்  தலைவர் ஆறு.தர்மபூபதி, திரு குமார் தர்மபூபதி  செயலாளர்  சி.எஸ் திருநாவுக்கரசு, மற்றும், பொருளாளர் அன்பழகன்  ஆகியோர்  சென்னையில்  04/04/2010  அன்று சந்தித்து ஆசிபெற்றபோது…

Be the first to comment on "மயனின் மறுஅவதாரம்"

Leave a comment

Your email address will not be published.


*