மாம்பழக் கவிச்சிங்க நாவலர்!

தமிழ்ப் பெரியசாமி
மாம்பழக் கவிச்சிங்க நாவலர்!
தமிழ் இலக்கிய உலகில் 19ம் நூற்றாண்டு, பழமை, புதுமை இரண்டையும் இணைக்கும் பாலமாக அமைந்தது எனலாம். இந்நூற்றாண்டின் தொடக்கத்தில்; மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையும் இராமலிங்க சுவாமிகளும் அவதரித்துத் தமிழுக்குத் தொண்டாற்றினர். அவர்களைத் தொடர்ந்து, கோபாலகிருஷ்ண பாரதி தொழுவூர் வேலாயுத முதலியார் பூண்டி அரங்கநாத முதலியார் தண்டபாணி சுவாமிகள் போன்றோர் தோன்றி எண்ணற்ற பாடல்களை எழுதித் தமிழ் இலக்கியத்திற்கு அணி சேர்த்தனர். இவர்கள் வரிசையில் தோன்றியவர்
பழனி மாம்பழக் கவிச்சிங்க நாவலர். திண்டுக்கல் மாவட்டம் பழனியம்பதியில் “விசுவகர்மா” எனும் தெய்வக் கம்மியர் மரபைச் சேர்ந்த முத்தையா ஆசாரி – அம்மணியம்மாள் தம்பதிக்கு 1836 இல் கவிராயர் பிறந்தார். தம் முன்னோர்களில் ஒருவர் பெற்றிருந்த “மாம்பழம்” எனும் பெயரையே, முத்தையா தமது இரு புதல்வர்களுக்கும் சூட்டினார். கவிராயர் இளைய புதல்வர். இவரது முன்னோர்கள் வேதாகமச் சாத்திரங்கள், திருக்கோயில் நிர்மாணிப்பதற்குரிய சிற்பக்கலை, புராண வகைகளை ஐயம்திரிபறக் கற்றறிந்தவர்கள். கவிராயரின் ஏழாம் தலைமுறைப் பாட்டனாரே, தற்போது மதுரையில் உள்ள புது மண்டபம் என்று அழைக்கப்படும் வசந்த மண்டபத்தை அழகுறக் கட்டியவர் ஆவார்.
பள்ளிசெல்லும் பருவத்தில் கடுமையான அம்மைநோய் ஏற்பட்டு, மாம்பழக் கவிராயருக்கு கண்பார்வை பறிபோயிற்று. எனவே முத்தையாவே தம் மகனுக்கு முதல் ஆசிரியராக இருந்து கல்வி போதித்தார். தொடர்ந்து தமிழ் இலக்கண, இலக்கியங்களை பழனி மாரிமுத்துக் கவிராயரிடம் கற்றுத் தெளிந்தார். கவிபாடும் ஆற்றல் இவரிடம் இயற்கையாகவே அமைந்திருந்தது. பழனி முருகன் பால் தீராத காதல் கொண்டு வணங்கிவந்த கவிராயர், குமரகுரு பதிகம் சிவகிரிப் பதிகம் பழனிப் பதிகம் எனும் பாமாலைகளைப் பாடினார். “பணிகொண்ட கண்டகர் பயங்கொண்ட வண்டரைப் பரிவு கொண்டாண்ட தேவே! பழகு மங்கள கீத முழவு கண்டுயிலாத பழனியம் பதிநாதனே.”(பழனிப்பதிகம்) இதுபோன்று கவிராயர் பாடல்கள் அனைத்திலும் துள்ளிக் குதிக்கும் சந்தநயம் படிப்பதற்கும், சுவைப்பதற்கும் ஏற்றவையாகும். ஆசு மதுரம் சித்திரம் வித்தாரம் எனும் நால்வகைக் கவிகளையும் நலனுறப்பாடும் ஏற்றம் பெற்றுத் திகழ்ந்தார். அத்துடன் எதையும் ஒரு தடவை கேட்டதும், திருப்பிக் கூறும் “ஏகசந்தக் கிராகியம்” எனும் ஆற்றலையும் பெற்றிருந்தார். மாம்பழக் கவிராயர் முதன்முதலில் பழனியை அடுத்துள்ள பாப்பம்பட்டி மிராசுதார் வேங்கடசாமி நாயக்கர் ஆய்குடி ஓபுளக்கொண்டம நாயக்கர் துளசிமாணிக்கம் பிள்ளை ஆகியோரைப் பற்றிப் பாடி மனம் களிக்கச் செய்தார். புகழும் புலமையும் நிறைந்திருந்தபோதும் மாம்பழக் கவிராயர், தம் மூதாதையர்களைப் போன்று தாமும் தமிழ்ப் பற்றும் கொடை நலமும் வாய்க்கப்பெற்ற தமிழரசர் அவைகளுக்குச் சென்று தமிழ்ப் புலமையைக் காட்ட வேண்டும் என்னும் தீராத வேட்கை கொண்டிருந்தார்.
இராமநாதபுரத்து சேது சமஸ்தான மன்னர்களே தமிழ் கேட்டுருகும் பண்புடையவர்கள் என்று பலரிடம் கேட்டறிந்தார். அதனால் இராமநாதபுரம் செல்ல முடிவு செய்தார். இராமநாதபுரத்தை அடைந்த கவிராயருக்குப் பல நாள்களாகியும் இராஜதரிசனம் கிடைக்கவில்லை. இவரது வருகையைப் பற்றிப் புலவர்களும் சேதுபதிக்குத் தெரிவிக்கவில்லை. இறுதியாக ஒரு புலவரின் உதவியால் சேதுபதியின் அவைக்குச் செல்லும் வாய்ப்புக் கிட்டியது. அவையில் கொலுவீற்றிருந்த சேதுமன்னர்கள் பொன்னுச்சாமித் தேவர், அவரின் சகோதரர் முத்துராமலிங்கத்தேவர் இருவர் மீதும் மாம்பழக் கவிராயர் வாழ்த்துக் கவிகளைப் பாடினார். கவிராயரின் பாடல்களைக் கேட்டு மகிழ்ந்த பொன்னுசாமித்தேவர் கவிராயரை நோக்கி, “கிரியில் கிரியுருகும் கேட்டு” என்பதை ஈற்றடியாகக் கொண்டு வெண்பாப் பாடுமாறு வேண்டினார். உடனே கவிராயர்,
 “மாலாம் பொன்னுச்சாமி மன்னர்பிரான் தன்னாட்டில்
 சேலாங்கண் மங்கையர் வாசிக்கு நல்யாழ் – நீலாம்
 பரியில் பெரியகொடும் பாலை குளிரும் ஆ
 கிரியில் கிரியுருகும் கேட்டு.”
 எனப் பாடி முடித்தார் (நீலாம்பரி, ஆகிரி என்பன இராகங்களின் பெயர்கள்).
கவிராயரின் இயற்றமிழ், இசைத்தமிழ்ப் புலமையைக் கண்டு வியந்த தேவர், மேலும் பல ஈற்றடிகளைக் கொடுத்துப் பாடக் கேட்டார். அனைத்திற்கும் கவிராயர் பொருத்தமான பாடல்களைப் பாடி மகிழ்வித்தார். தமிழ்ப் பற்றாளரான பொன்னுச்சாமித் தேவர் கவிராயரின் புலமையை மேலும் அறிய விரும்பி, “புலவரே, அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாசுரத்தில் “முத்தைத் தரு” எனத்தொடங்கி “ஓது” என்பது வரை உள்ள பகுதியை ஒரு வெண்பாவில் அமைத்துப் பாடுக” எனக் கேட்டார். ஒரு நொடியும் காலந்தாழ்த்தாத கவிராயர் தேவரைப் பார்த்து, “வரமுதவிக் காக்கு மனமே வெண்சோதி பரவிய” எனும் தொடரை முதலில் சேர்த்துக் கொள்ளுங்கள், அது வெண்பாவாகிவிடும் எனக் கூறி,“வரமுதவிக் காக்கு மனமே வெண்சோதி பரவிய முத்தைத்தரு பத்தித் – திருநகையத் திக்கிறை சத்திச் சரவணமுத்திக் கொருவித் துக் குருபரனெனவோது.”
என்று கவிராயர் பாடிய பாடலைக் கேட்டு மகிழ்ந்த தேவர் ஆச்சரியமடைந்தார். மாம்பழக் கவிராயரின் ஆழமான தமிழ்ப் புலமையைக் கண்டு உளப்புளகாங்கிதம் அடைந்த தேவர், தமிழ்ப் புலவர்களில் இவரைப் போலத் தாம் எங்கும் எப்போதும் கண்டதில்லை எனக்கூறி, தம் ஆசனத்திலிருந்து எழுந்து வந்து, அவரது வலது கரத்தைப் பற்றிக் குலுக்கி, “சபாஷ், சபாஷ்” எனப் பலமுறை கூறிப் பாராட்டினார். அத்துடன், “புலவரீர், உமது புலமை அளவிடற்கரியது. அழகும், சுவையும் ஒருங்கே சிறக்கக் கவிபாடும் திறமை வியக்கத்தக்கது. கலை மடந்தையின் பீடமெனத் திகழும் தங்களுக்கு இப்பேரவையில் “கவிச்சிங்கம்” எனும் விருதுப் பெயரைச் சூட்டுகிறேன்” என்று கூறி, மேலும் அவரை கெளரவிக்கும் வகையில் சேது சமஸ்தானத்துப் புலவராகவும் நியமித்தார். மாம்பழக் கவிச்சிங்க நாவலர் எண்ணற்ற தனிப்பாடல்களைப் பாடியுள்ளார். சேதுபதியின் வேண்டுகோளுக்கிணங்க எலிக்கும், புலிக்கும் சிலேடைப் பாடலொன்றையும் பாடி மகிழ்வித்தார“பாயும் கடிக்கும் பசுகருவாடும் புசிக்கும் சாயும் குன்றிற்றாவிச் சஞ்சரிக்கும் – தூயதமிழ் தேங்கு முத்துராமலிங்கச் சேதுபதி பாண்டியனே வேங்கையொரு சிற்றெலியாமே.கவிராயர் சேது சமஸ்தானத்தில் இருந்தபோது பல நிகழ்ச்சிகளில் பல பாடல்களைப் பாடியுள்ளார். அத்துடன் நீரோட்டக வெண்பாப் பாடுவதிலும் கவிராயர் வல்லவராகத் திகழ்ந்தார். பழனி மாம்பழக் கவிச்சிங்க நாவலரின் பாடல்கள் “கவிச்சிங்க நாவலர் பிரபந்தத் திரட்”டாக வெளியாகியுள்ளது. இதுதவிர, சந்திர விலாசம், சிவகிரியமக அந்தாதி ,திருச்செந்தில் பதிகம், பழனி நான்மணிமாலை ,திருப்பழனி வெண்பா, பழனாபுரி மாலை, குமரன் அந்தாதி ,பழனிக் கோயில் விண்ணப்பம் தயாநிதிக் கண்ணி,ஆகிய நூல்களையும் அவர் தமிழுலகிற்குத் தந்துள்ளார். இவற்றில் உள்ள சொல்லாட்சி பொருள்நயம் சந்தநடை ஆகியவை படித்தும் சுவைத்தும் மகிழுதற்குரியனவாகும். மாம்பழக் கவிச்சிங்க நாவலர் 1884ஆம் ஆண்டு மாசி மாதம் 24ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்தார். என்றாலும், சொற்சுவை பொருட்சுவை இலக்கிய நயம் சந்தநயம் கொண்ட அவரது தனிப்பாடல்கள் மற்றும் சிற்றிலக்கிய வகை நூல்கள் இன்றளவும் தமிழார்வலர்களால் சுவைக்கப்படுகிறது என்பது முற்றிலும் உண்மை.
நன்றி: தினமணி
“பஞ்சப்ரம்ம மேலோர்”
 தார்பூத்த குமுதபுயத்தர் முன்னூள் மார்பர்
தனியநும விருது முடையோர்
தருமெக்ஞ சீலர் மகுடத்பாகர் மாந்தை விஸ்தாரர்
முகில் வாகனத் தோர்
சாஸ்தர வேதாகம சமர்த்தர் காயத்ரிஜெப
சந்தி வந்தன விநோதர்
சர்வஜக சுருஷ்டி பிரதாபர் பஞ்சப்ரம்ம
சந்ததி களான மேலோர்!
முத்தமிழ் சக்ரவர்த்தி பழநி மாம்பழக் கவிச்சிங்க நாவலர்

3 Comments on "மாம்பழக் கவிச்சிங்க நாவலர்!"

 1. Mambalam. Sridar | July 16, 2017 at 7:19 am | Reply

  thanks for displaying my grand father mambalam kavirayar history and his crown on tamil literature.

  Regards & Proud
  Mambalam . M Sridar
  Pondicherry

 2. But, nobody is taking interest in publishing books about மாம்பழக் கவிச்சிங்க நாவலர்.

  • ஏற்கனவே அவரது புத்தகங்கள் நூல் வடிவில் வெளியிடப்பட்டுள்ளது

Leave a comment

Your email address will not be published.


*