காங்கிரசில் ஒலித்த முதல் தமிழ்க் குரல்!

பிரம்மஸ்ரீ முக்கண் ஆச்சாரியார்

1887 ஆம் ஆண்டு….

அகில இந்திய காங்கிரசின் மூன்றாம் மகாசபை மாநாடு…
கிபி1887 ஆம் ஆண்டு டிசம்பர் 28 , 29 , 30 , 31 ஆகிய நான்கு நாட்கள் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் ”மக்கீஸ் கார்டன்”என்ற இடத்தில் மிகப் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட பந்தலின் கீழ் நடைபெற்றது.மாநாட்டில் கலந்து கொள்ள  பாரதம் முழுவதிலிருந்தும் 760 பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் 607  பேர் மட்டுமே கலந்து கொண்டனர். மாநாட்டிற்கு பத்ருதீன் தயாப்ஜி என்பவர் தலைமை தாங்கினார். மூன்றாவது காங்கிரஸ் மகாசபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்களில் ஏழாவது தீர்மானம் மிக முக்கியமானதாகும்.
காங்கிரசில் ஒலித்த முதல் தமிழ்க் குரல்!
பம்பாயில் நடைபெற்ற முதல் காங்கிரஸ் மகாசபைக் கூட்ட நடவடிக்கைகள் அனைத்தும் ஆங்கிலத்தில் நடைபெற்றது. ஆங்கிலம் படித்த வகுப்பாரின் கட்சியை எடுத்துக் கூறும் இடமாகவே இந்த மகாசபை இருந்தது என்று “உலகச் சரித்திரக் கடிதங்கள்” என்ற நூலில் “முன்னாள் பாரதப் பிரதமர் நேரு அவர்கள் குறிப்பிட்டுள்ளதாக, க.பொ அகத்தியலிங்கம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். ஆங்கில மோகம் அலை மோதிக் கொண்டிருந்த அக்காலத்தில்,காங்கிரஸ் மாநாட்டில் முதன் முதலில் ஆணித்தரமான கருத்துக்களை அழகுத் தமிழில் அள்ளி வீசியவரைக் கண்டு, அந்நாளில் மூக்கின் மேல் விரல் வைத்து அவரை வியப்புறத் பார்த்ததில் ஆச்சர்யமில்லை.! ஆங்கில மோகம் அடைமழை மேகமாகச் சூழ்ந்திருந்த அக்காலத்தில் தான் விஸ்வகர்மா சமுகத்தை சார்ந்த பிரம்மஸ்ரீ முக்கண் ஆச்சாரியார் அவர்கள் தான் முதன் முதலில் காங்கிரஸ் மகாசபையில் தமது கருத்துக்களை ஆணித்தரமாக தமிழில் எடுத்துரைத்தார் என்பது உலக வரலாற்றுச் செய்தியாகி விட்டது !
காங்கிரஸ் வரலாற்றில் தனிச்சிறப்புக் கொண்ட,” முதல் தமிழ்ச் சொற்பொழிவாற்றிய திரு.முக்கண்ணாச்சாரியாரை காங்கிரசை தோற்றுவித்த டாக்டர் ஹ்யூம் உத்தியோக பூர்வமான அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்! தொழிற்கல்வி பற்றிய சென்னைக் காங்கிரசின் ஏழாவது தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் முக்கண் ஆச்சாரியார் முதன்  முதலாகத் தமிழில் உரை நிகழ்த்தினார் என்று முன்னரே குறிப்பிட்டுள்ளோம். இவருடன் எஸ்.வி அய்யாசாமிப் பத்தர் எண் (213 ) மற்றும் ( எண் . 214) என், வைத்தியலிங்கப் பத்தர் ஆகியோரும் இம்மாநாட்டில் பங்கேற்றனர். முக்கண் ஆச்சாரியார் அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவின் தமிழ் மூலம் கிடைக்கப்பெறவில்லை ” ஆக்டேவியன் ஹியூம் ” தொகுத்த காங்கிரஸ் அறிக்கையில், அதன் ஆங்கில மொழி பெயர்ப்பு  உள்ளது. காங்கிரஸ் மாநாட்டில் முதன் முதலாக நிகழ்த்தப்பட்ட தமிழ்ச் சொற்பொழிவின் மூலம் கிடைக்காத நிலையில் நமக்குக் கிடைத்துள்ள ஆங்கில மொழி பெயர்ப்பின் தமிழாக்கம் இங்கு குறிப்பிடப்படுகிறது .
“தலைவர் அவர்களே, பெரியோர்களே! கல்கத்தா, பம்பாயில் நடைபெற்ற இரு காங்கிரஸ் மாநாடுகளிலும் குறிப்பிடத்தக்க குறைபாடு ஒன்று தெரிந்தது. இந்திய மக்கட் தொகையில் உத்தியோகஸ்தர்கள், தொழில் துறையாளர்,  வர்த்தகர்கள் விவசாயிகள் ஆகியோர் நான்கு முக்கிய வகுப்புகளாகும்.  இவர்களுள் தொழில் துறையாளர் அந்தக் காங்கிரஸ் மாநாடுகளில் போதுமான அளவு பிரதிநிதித்துவம் பெறவில்லை. ஆனால் அந்தக் குறைபாடு,  இந்தக் காங்கிரசில் நீங்கியது. கனவான்களே! இந்தத் தொழில் துறையாளர் பிரதிநிதிகளில் தான் ஒருவன் தஞ்சாவூர் மாவட்ட அனைத்துத் தொழில் துறையாளர் சார்பில் கும்பகோணத்தில் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூவர்,  பிரதிநிதிகளாக வந்துள்ளோம். இந்த அவையின் முன்னுள்ள தொழிற்கல்வியைப் பற்றிய விவாதம் நாட்டிற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நான் பிரதிநிதித்துவம் வகிக்கும் வகுப்பிற்குப் பெருமளவு நன்மை பயக்கும் இந்த விவாதத்தில் நான் சில சொற்கள் கூறக் கடமைப்பட்டவன். நமது நாட்டின் முன்னேற்றத்திற்காகக் காங்கிரஸ் மனப்பூர்வமாகப் பாடுபடுகிறது என்பதில் ஐயமில்லை. பெருமக்களே!  புகழொளி மிக்க ராஜ தந்திரி சர்டி மாதவராவ் அவர்கள், நடு நிலைமையுடன் பணியாற்றும்,நீதிபதி திரு.முத்துசாமி ஐயர் போன்ற ஆயிரக்கணக்கானவர்கள் உயர்ந்த பொறுப்பான பதவிகளை அலங்கரிக்கிறார்கள் என்பதைப் பார்க்கிறோம். ஆனால் இது மட்டுமே நாட்டின்  வளர்ச்சிக்கு நம்மை வழிப்படுத்தும் என நாம் எதிர்பார்ப்பது முற்றிலும் பொருந்தாது. தொழில் துறை முற்றிலும் இல்லாத நிலையில்,  வர்த்தகமோ, விவசாயமோ நாட்டின் வளர்ச்சிக்கு நம்மை வழிப்படுத்தாது. ஏனென்றால், வர்த்தகத்திற்கும், விவசாயத்திற்கும் முதன்மையான தூண்டுதல் அளிப்பது தொழில் துறையே! ஆக, நாட்டின் வளர்ச்சிக்கு முதற் காரணமாக விளங்கும் தொழில் துறையின் இன்றியமையாமையை இந்த உலகத்தில் யார்  மறுக்கத் துணிந்தவர்கள்? ஐரோப்பிய நாடுகள் தற்போது உண்மையிலேயே மகிழ்ச்சியில் திளைக்கும் வளர்ச்சிக்குத் தொழில் துறையல்லவா உதவியுள்ளது!
ஆகையினால் பெருமக்களே! நாட்டின் வளர்ச்சிக்கு  உறுதுணையாகவுள்ள கலைகளும், தொழில்களும் நலிந்து தேய்ந்து ஒழிந்து போகாமல் காப்பாற்றவேண்டியது நமது முக்கிய கடமையல்லவா?  நாட்டின் பல பாகங்களிலும் கலைகளும், தொழில்களும் ஆக்கமுடன் வளர்க்கப்பட வேண்டும் என்பதிலும் நாம் கருத்தாக இருக்க வேண்டும் கருணையும், பெருந்தகைமையும் வாய்ந்த நமது ஆட்சி, நாட்டின் தொழில் துறை முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு தொழிற் கல்விக்கான புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி, பெருமளவில் மக்கள் பயன்பெற, விரிவாகப் புகுத்த முன் வருவதில் காலதாமதம் செய்யக்கூடாது. பெருமக்களே! நமது நாடு இன்று நெருக்கடியான நிலையில் உள்ளது வரி விதிப்பு உயர்ந்து விட்டது, முறையான முன்னேற்றத்திற்கான மூலாதாரங்கள் பற்றாக்குறையாக உள்ளன . இந்த நாட்டின் செல்வம் தொடர்ந்தாற் போல வெளியேறிக் கொண்டிருக்கிறது. இந்த ஆட்சி, நாட்டின் தற்பொழுதுள்ள நிலைமையைக் கண்டும் பிடிவாதமாக அலட்சியம் காட்டி வருமாயின், இந்த ஆட்சி, இப்பொழுதுள்ள நெருக்கடி நிலையை உணர்ந்து கடுமையான முயற்சிகளை விரைந்து எடுத்து நாட்டைக் காப்பாற்றத் தவறுமாயின், நாட்டிலுள்ள எஞ்சிய செல்வமும், இந்த நாட்டை முழுமையான அழிவில் ஆழ்த்தி விட்டு, தொலைவில் உள்ள நாடுகளிடம் சென்றடையும் நாட்டை எதிர் நோக்கியுள்ள இந்தப் பேரழிவைத் தவிர்க்க, கனவான்களே! நாம் ஆட்சியாளரிடம் முறையிடுவோம். தொழிற்கல்வி நிலையங்கள் நாடெங்கும் நிறுவப்பட்டு நன்கு நடத்தப்பட வேண்டும். இந்தியர்களுக்குத் தேவைப்படும் இயந்திரப்பொருட்கள் இங்கேயே உற்பத்தி செய்யப்பட வேண்டும். இவ்வாறு உற்பத்தியில் ஈடுபடுவோர்களுக்குத் தேவைப்படும் பயிற்சி,  செய்முறைகளைப் பற்றிய படிப்பு (SKILL DEVELOPMENT) முதலானவற்றிற்கு இங்கேயே ஏற்பாடு செய்யவேண்டும். நாடு முழுவதுமாக இத்தகைய தொழில் நிலையங்களை நிறுவ இயலவில்லையென்றால், முக்கிய நகரங்களிலாவது நிறுவுமாறு, நாம் ஆட்சியாளரிடம் கேட்கவேண்டும். அதற்க்கான  மூலதனத்தை ஆட்சியாளர் தருவதானாலும் சரி, அல்லது ஆட்சியாளரின் உத்தரவாதத்தின் பேரில் பிறர் தருவதானாலும் சரி,  ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்தத் தொழில் நிலையங்களின் நிர்வாகம்,  சென்னை கலைப் பள்ளியைப்போன்று அரசாங்கத்திடமே முழுவதுமாக இருக்க விடக்கூடாது, அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலும், மேற்பார்வையிலும் உள்ள, தனியார் நிர்வாகத்தில் விடப்பட வேண்டும். இந்த நிலையங்களில் உற்பத்தியாகும் பண்டங்களை அரசாங்கம் வாங்கி ஊக்குவிக்க வேண்டும்.  இந்த முயற்சிகள் வெற்றி அடைந்தால் மேலும் பல நகரங்களில் நிலையங்களை நிறுவி விரிவு படுத்தவேண்டும். நம் நாட்டுக் கைவினைஞர்கள், தொழில் துறையாளர்களை ஊக்கப்படுத்த, அரசாங்கம் ஆங்காங்கு பொருட்காட்சிகளை நடத்த வேண்டும். பொருட்காட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில் திறமையைப் பாராட்டிப் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்குவதற்குத் திட்டங்கள் வகுக்க வேண்டும் இதற்காக எல்லா ஊராட்சிகளும், நகர்மன்றங்களும் “பரிசுநிதி ” ஒன்றை ஏற்படுத்தவேண்டும். காங்கிரஸ் இந்த வழியில் சாதனைகள் காணப்பாடு பட வேண்டும். இதனால், அழிந்துவரும் தொழில்கள் உயிர் பெற்று, முன்னேறத் தூண்டுதல் கிடைப்பதுடன், நாடும் சுயபலத்தில் நிற்க உதவும் உலக நாடுகளில் நாம் இழந்த இடத்தை மீண்டும் பெற முடியும், தொழிற்சாலைகளும்,  தொழிற்பட்டறைகளும் பெருகி – விட்டால் நமது நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் கெளரவமாக வேலை வாய்ப்புகளைப் பெறுவர். வேலை வாய்ப்பற்ற இந்த மக்கள் உயிர் வாழப் போராடுகிறார்கள்! இந்த நாட்டின் நானூற்றைம்பது இலட்சம் மக்கள் அனாதைகளாக இருக்கிறார்கள். அரசாங்கப் புள்ளி விவரங்களுக்கிணங்க ஒருநாளுக்கு ஒரு வேளைச் சாப்பாடு கூட இம் மக்களுக்குக் கிடைப்பதில்லை, இந்த அனாதைகளுக்கு ஒரு வேளை உணவேனும் தரக்கூடிய வேலை வாய்ப்புக்களை  உண்டாக்கிப் பெரும் கலைகளும், தொழில்களும் வளர்ந்தோங்கும் நன்னாளை நாம் எதிர்பார்ப்போமாக! பெருமக்களே! உங்கள் பொன்னான நேரத்தை நான் வெகுவாக எடுத்துக்கொண்டேன்! பொறுத்தருள்வீர்! உங்கள் முன் நான் பேசியதில் அற்ப விஷயங்கள் ஏதேனும் இருந்தால் பொருட்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டு என் உரையை முடித்துக்கொள்கிறேன்”
குறிப்பு: இன்றைக்கு  பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அறிமுகப்படுத்தி உள்ள  உற்பத்தியில் ஈடுபடுவோர்களுக்குத் தேவைப்படும் பயிற்சி, செய்முறைகளைப் பற்றிய படிப்பு SKILL DEVELOPMENT,  vocal for local, make in india made in India  சிறு தொழில் குறுந்தொழிலுக்கான நிதி ஆதாரங்க்கள் முத்ரா திட்டம் ஆகியவை  முக்கண் ஆச்சாரியின் கனவுகளை எதிரொலிக்கிறது. 2023 மத்திய அரசின் பட்ஜெட்டில் விஸ்வகர்மா சமூக தொழில்களை ஊக்குவிக்கும் பொருட்டு பிரதம மந்திரியின் விஸ்வகர்மா கவுஷல் சம்மான் திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்த்தின் கீழ் பயனாளிகளுக்கு மானியம், கடன் வசதி, பயிற்சி, விஸ்வகர்மா கைவினைஞர்களுக்கு நவீன திறன்களை தத்தெடுப்பதற்க்கான நிதியுதவியும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய வரலாற்றில் தேசீய அளவில் விஸ்வகர்மா இனத்திற்கு என அறிவிக்கப்பட்டு உள்ளது பெருமைக்குரிய ஒன்றாகும்
சற்றேழத்தாழ 116 ஆண்டுகளுக்கு முன்பு முழங்கப்பட்ட முக்கண் ஆச்சாரியார் அவர்களின் முதல் தமிழ்க் குரலின் தீர்க்கமும் தீட்சண்யமும் இந்தியாவின் எதிர்கால தொழில் வளர்ச்சியையும் அதை நடை முறைப்படுத்துவது பற்றியும், தெவிட்டாத சிந்தனைத் தேன் மழையாய்த் திகழ்வதை நாம் இன்றும் உணர முடிகிறதல்லவா!
” ஆக்டேவியன் ஹியூம் ” தமது அறிக்கையில் முக்கண் ஆச்சாரியார் பற்றி மிக அற்புதமாகப் பாராட்டிக் கூறியுள்ளார் ” But perhaps the most interesting feature in the debate was a long sensible, matter of fact speech in Tamil by Mr .Mookanasari of Tanjore ” ? என்று குறிப்பிடுவது நமது சிந்தையையும் , செவியையும் கவரவல்லதாயுள்ளது . | முக்கண் ஆச்சாரியாரின் முதல் முழக்கத்தைப் பற்றி அன்னிபெசன்ட் அம்மையார் அவர்களும் ” How India wrought for freedom ” என்ற நூலில் வெகுவாகப் பாராட்டியுள்ளார். ” On the following day , Resolution VII was very earnestly and competently discussed ;a working carpenter – sent with two other artisarts from Tanjore – made a very sensible speech …”
விடுதலைத் தெய்வமே உழைப்பவர்க்கெல்லாம் உணவு நீ யாவாய் ஆங்கில நாட்டில் அன்றி நாம் காணும் சோற்றுப் பஞ்சம் ,சுதந்திரதேவியே நின்னுடை இன்னருள் நிலவு நாடுகளில் தோன்றாதம்ம.. தோன்றாதம்ம” என்ற ஷெல்லியின் கவிதையைக் குறிப்பிட்ட அன்னிபெஸண்ட் ஆங்கில நாட்டில் என்பதை’ பாரத நாட்டில்’ என்று மாற்றி வாசிக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். Referring to Mr. Mokkanasari’s concluding words . . . என்று அன்னி பெசன்ட், முக்கண் ஆச்சாரியின் முதல் தமிழ்க் குரல் குறித்துத் தொடர்ந்து சொல்லிச் செல்கிறார்.
தாய்மொழியில் தான் விடுதலை உணர்வைத் தட்டி எழுப்பமுடியும் என்று 1887ல் முக்கண்ஆச்சாரி முதன் முதலாக வீரமுழக்கம் செய்து வித்திட்டார்.1920ல் நடைபெற்ற நாக்பூர் காங்கிரஸ் மாநாட்டில் அந்த உண்மை உறுதி செய்யப்பட்டது, அதன் பலம் அங்கீகரிக்கப்பட்டது.” தாய்மொழி வழிவகுத்த தந்தை’ என்று! தமிழகத்தின் தவப்புதல்வராம் முக்கண் ஆச்சாரியார் பாரத  வரலாற்றில் ஓர் உன்னதமான இடத்தைத் தமக்கென ஒதுக்கி வைத்துவிட்டார்
கும்பகோணத்தில் பண்டித மார்க்க சகாயம் ஆச்சாரியார் என்பவர் மிகப்பெரிய புலவராகத் திகழ்ந்திருந்தார். வடமொழி மற்றும் தமிழ் ஆகிய இருமொழிகளிலும் பெரும்புலமை பெற்றுத் திகழ்ந்திருந்த பண்டித மார்க்க சகாயம்ஆச்சாரியார் அவர்கள், மேலோரும், நூலோரும் போற்றும் வண்ணம் வாழ்ந்திருந்தார். வடமொழி தமிழ்மொழி ஆகிய மொழிகளில் உள்ள இலக்கண இலக்கிய நூல்களைக் கற்பித்தலிலும் ஆச்சாரியார் அவர்கள் தலை சிறந்து விளங்கினார்கள். அன்னாரது திருமகனாராக, பின்னாளில் விடுதலைப் போராட்டத் தியாக சீலரும், மாபெரும் அறிஞருமாகத் திகழ்ந்த முக்கண் ஆச்சாரியார் முன்னோர் செய்த தவப்பயனாய் வந்துதித்தார். ”கற்க கசடறக் கற்பவை” என்ற வள்ளுவரின் வாய் மொழிக்கிணங்க முக்கண் ஆச்சாரியார் தம் தந்தையிடம் வடமொழி, மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் உள்ள இலக்கண இலக்கிய நூல்களை இளமையிலேயே கற்றுத் தேர்ந்தார்.
தமிழ்த்தென்றல் என்று மாபெரும் தமிழறிஞர்களால் வியந்து போற்றிப் பாராட்டப்பட்டுள்ள அறிஞர் திரு.வி,கல்யாண சுந்தரனார் (திருவிக)  அவர்கள் தியாகி முக்கண் ஆச்சாரியாரைப் பற்றி வியந்து பாராட்டிக் கூறுகிறார்.  திரு.வி.கஅவர்கள் தொண்டர்களாலும் தமிழ் அறிஞர்களாலும்,  தொழிலாளர்களாலும் ”தமிழ்அறிஞர்” என்ற பெயரால் அறியப்பட்ட மிகப்பெரிய அறிஞர் ஆவர். அத்தகைய பேரறிஞர் நமது தியாகி முக்கண் ஆச்சாரியார் அவர்களை “அறிஞர்”  என்று தெரிவித்து, “அறிஞர் முக்கண் ஆச்சாரியார் சிறந்த தமிழ்ப்புலவர் நாவலர் என்று “மேடைத்தமிழ்” என்ற நூலில் தாம் அளித்த அணிந்துரையில் குறிப்பிடுகிறார்.
தியாகி முக்கண் ஆச்சாரியாரின் புதல்வர், திரு. டி .எம் .தெய்வ சிகாமணி ஆச்சாரியார் ஆவார். ” மேடைத்தமிழ்” என்னும் ஒப்பற்ற நூலை, திரு டி.எம் தெய்வசிகாமணி ஆச்சாரியார் அவர்கள் தமிழுலகிற்கு ஈந்தார் அந்நூல் 1952 ஆம் ஆண்டு தமிழக அரசின் இலக்கியத்திற்கான முதற் பரிசை வென்ற சிறப்புடைய நூலாகும்.  சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களில்பாடநூலாக அமைக்கப்பெறும் சிறப்பினைப் பெற்றுத் திகழ்ந்தது. இந்த நூல், தமிழ் வல்லார் டாக்டர். வரதராசனார், பண்டிதமணி மு கதிரேசச் செட்டியார்  தமிழ்த்தென்றல் திரு வி க முதலிய பல பேரறிஞரின் பாராட்டைப் பெற்றது.
திரு டி எம் தெய்வசிகாமணி ஆச்சாரியார் அவர்கள் கிடைத்தற்கறிய FRSA (LONDON) பட்டத்தைப் பெற்றவர்.”தமிழ்த்தென்றல் திரு வி க அவர்கள் “விஸ்வ குல திலகம் குலோத்தாராக” திரு.டி.எம். தெய்வ சிகாமணி ஆச்சாரியார் அவர்களைப் பற்றி “மேடைத்தமிழ்” என்னும் நூலின் அணிந்துரையில்,“மேடை சீர்பட்டால் எல்லாஞ் சீர்படும், மேடையைச் சீர் செய்யும் பல திறத் தொண்டுகளை முறை முறையே கிளந்து கூறலாம். ஈண்டு  விழுமிய ஒன்றைக் குறித்தல் சாலும்.  அது நல்லிலக்கியத் தொண்டு. அத்தொண்டில் நந்தமிழ் நாட்டில் ஒருவர் ஈடுபட்டார். அவர் எவர்? அவர் விஸ்வகர்ம மணிவிளக்கு – கலைக்கூடம்- சிற்பச்செல்வம்- திரு.தெய்வசிகாமணி ஆச்சாரியார் என்பவர். திரு. தெய்வசிகாமணி ஆச்சாரியார் 1881 ஆம் ஆண்டில் மேடைத்தமிழ் செய்த தவப்பயனால் தோன்றியவர் அவர் தந்தையார் தமிழ்க்கலைஞர் முக்கணாச்சாரியார்- தாயார் பார்வதி அம்மையார்,  ஒரு தமிழ்ச்சேயை ஈன்ற வயிற்றுக்கு எனது வாழ்த்தும் வணக்கமும் உரியனவாக !”
அறிஞர் முக்கண்ணாச்சாரியார் சிறந்த தமிழ்ப் புலவர் நாவலர் . காங்கிரஸ் மேடையில் 1887ல் முதல் முதல் தமிழ் மழை பொழிந்தவர் அவரே, அந்நாவலர் வழித்தோன்றலாகிய தெய்வ சிகாமணி ஆச்சாரியார் வழி நாவலர் இலக்கியம் – மேடைத் தமிழ் பிறந்ததில் வியப்பொன்றுமில்லை, திரு. தெய்வசிகாமணி ஆச்சாரியார் இளமையில் கற்பன கற்றார், கேட்பன கேட்டார் அவர்தம் கல்வி அறிவு ஒழுக்கத்திறன் கண்ட அரசாங்க ஊழியம் அவரை வலிந்து அணைத்தது . அன்பர் ஆச்சாரியார் வாழ்க்கையை ஒரு செல்வக் களஞ்சியம் என்று சுருங்கச் சொல்லலாம் . அவர்தம் வாழ்க்கையில் கல்விச் செல்வம், பொருட்செல்வம், மனைச்செல்வம் சேய் செல்வம் வழிவழிச்செல்வம் முதலிய செல்வங்கள் பூத்துள்ளன. இச்செல்வங்கட்கெல்லாம் உயிர்ப்பளிக்கும் ஒரு பெருஞ்செல்வம் ஆச்சாரியாரிடம் பொருந்தியுள்ளது . அது தொண்டுச் செல்வம் அதுவே செல்வத்துள் செல்வம், அச்செல்வம், தெய்வசிகாமணி ஆச்சாரியாரைத் தமக்கென வாழாது, பிறர்க்கென வாழ்வோராக்கியது.
விசுவகர்ம சமூகத்துக்கு ஆச்சார்யார் ஆற்றிய பணிகள் மலையென ஓங்கி நிற்கின்றன. கடலெனப் பரந்து கிடக்கின்றன .அவரது வாழ்க்கை பெரிதும் சமூகப்பணிக்குப் பயன்பட்டது. அதை நன்குணர்ந்த சமூகம் அவரைக்”விஸ்வகர்மா குலோத்தாரகர்” என்று போற்றித் தனது நன்றியைத் தெரிவித்தது. ஆச்சாரியாரின் சமூகப் பணிகளிடையே, நாட்டுப்பணி, சமயப்பணி, கலைப்பணி, மொழிப்பணி முதலிய பணிகளும் விரவியே நிற்கின்றன”,’என்று குறிப்பிடுகிறார்.
முக்கண்ணாச்சாரியார் அவர்களின் வாழ்க்கைத் துணைவியாக தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகை சான்ற சொற்காத்துச் சோர்விலாத பார்வதி அம்மையார் பலர் போற்றும் தெய்வீக நற்பண்புடைய பெண்மணியாகத் திகழ்ந்திருந்தார்.தியாகி முக்கண் ஆச்சாரியார் ஒருவர் மட்டுமே வெள்ளையர்களால் புகழப்பட்டு இந்திய வரலாற்று நூல்களில் இடம் பெற்று விட்ட விஸ்வகர்ம ஏந்தல் என்பதை நாம் உணர்ந்து பூரிப்படைகிறோம்
தியாகி முக்கண் ஆச்சாரியார் பற்றி அவர் தம் அருந்தவப் புதல்வர் விஸ்வகுல திலக குலோத்தராக பிரம்மஶ்ரீ  டிஎம்,தெய்வ சிகாமணி ஆச்சாரியார் FRSA (LONDON முன்னாள் மேலவை உறுப்பினர் அவர்கள் , தமது “மேடைத்தமிழ் ” என்ற நூலில் “தென் இந்திய விஸ்வகர்ம மகாநாட்டுத் தந்தையரென சிறப்புப் பெயர் வாய்ந்தவரும் அம் மத்திய சபையின் ஆயுள் காலத்தலைவரும், குடந்தை நகராண்மைக் கழகத்தின் நீடிய கால அங்கத்தினரும், அந்நகர் நிர்மாணத்தை முயன்று முடித்தவரும், ஓவிய வித்தகரும், நற்றமிழ்ப் புலவரும், சீரிய மேடைத் தமிழ் நாவலரும், மேடைத் தமிழ்ப்பேச்சின் அபிவிருத்திக்குத் தனிப் பாட சாலைகளைக் கண்டு அக்கலையை ஆர்வத்தோடு வளர்ததவரும் 1887 ஆம் ஆண்டு சென்னையில் குழுமிய மூன்றாவது இந்திய தேசியக் காங்கிரஸ் மகாசபையில் கைத்தொழில், தொழிற்கல்வி, சுதேசியம் ஆகியவை பற்றி முதல் முதல் தாய்மொழியில் பொன் மாரி பெய்து நாட்டுக்கு நல்வழி காட்டியவருமாகிய எமது நற்றந்தையர் ” என்று கூறுவது இங்கே நினைந்து இன்புறத்தக்கதாகும்!’
இப்பேற்பட்ட இந்திய தவப்புதல்வரை இந்திய அரசு பெருமைப்படுத்தாதது  வேதனை அளிப்பதாக உள்ளது.

Be the first to comment on "காங்கிரசில் ஒலித்த முதல் தமிழ்க் குரல்!"

Leave a comment

Your email address will not be published.


*