தமிழுக்கு இலக்கணம்‌ தந்த முத்துவீர உபாத்தியாயர்‌!

முத்து வீரியம்‌ என்பது ஐந்திலக்கணமும்‌ கூறும்‌ ஒரு தமிழ்‌ இலக்கண நூல்‌. இந்நூலை திருச்சிக்கு அருகில்‌ உள்ள உறையூரைச்‌ சேர்ந்தவரான முத்துவீர உபாத்தியார்‌ என்பவரால்‌ கிபி 1840ல்‌ இயற்றப்பட்டது. இவர்‌ கம்மாளர்‌ மரபில்‌ உள்ள கொல்லர்‌ பிரிவை சேர்ந்தவர்‌ என்பதால்‌ கம்மாள வாத்தியார்‌ என்றும்‌, முத்துவீர உபாத்தியாயர்‌ எனவும்‌ அழைக்கப்பட்டார்‌.
முத்துவீரியம் நூல்:
எழுத்திகாரம், சொல்லதிகாரம்‌, பொருளதிகாரம்‌, யாப்பதிகாரம்‌, அணியதிகாரம்‌ என்னும் ஐந்து பிரிவுகளைக்‌ கொண்டு அமைந்தது இந்நூல்‌. ஆசிரியப்பாக்களால்‌ அமைந்த  இந்த நூலில் மொத்தம்‌ 1289 பாக்கள்‌ உள்ளன. தமிழ்‌ மரபைத்‌ தழுவி அமைந்த இந்நூல்‌ ஐந்திலக்கண நூல்களில் மிகவும்‌ விரிவானது. இது 96 வகைச்‌ சிற்றிலக்கியங்களுக்கு இலக்கணம்‌ கூறுகின்றது.
இலக்கண நூல்கள்‌ வரிசையில்‌,
அகத்தியம்‌- அகத்தியர்‌
தொல்காப்பியம்‌ – தொல்காப்பியர்‌
நேமி நாதம்- குணவீர பண்டிதர்‌
தண்டியலங்காரம் – தண்டி
நன்னூல்-பவனந்தி முனிவர்
இலக்கண கொத்து-வைத்தியனாத தேசிகர்
இலக்கண விளக்கம் – வைத்தியனாத தேசிகர்
தொன்னூல் விளக்கம்- விரமா முனிவர்
முத்து வீரியம்- முத்து வீர உபாத்தியாயர்‌
வீரசோழியம்- புத்தமித்திரர்‌
சுவாமி நாதம்-சுவாமிநாத கவிராயர்‌
இலக்கண விளக்க  சூறாவளி – சிவஞான முனிவர்‌
அறுவகை இலக்கணம்‌ – தண்டபாணி சுவாமிகள்‌
பிரயோக விவேகம்‌ – சுப்பிரமணிய தீட்சிதர்‌
இந்த நூல்கள் தமிழ் இலக்கணத்திற்கு அடித்தளங்களாகும்.
திண்ணைப்‌ பள்ளிக்‌ கூடங்களில்‌ இருந்து தமிழ்‌ மெல்ல மெல்ல நவீனக்‌ கல்வி மரபிற்குள் நுழைந்த காலம்‌. பதினெட்டாம்‌ நூற்றாண்டு. சுவடிகளில்‌ இருந்து தமிழ்க்கல்வி, பாடப்புத்தகங்களுக்கு நகர்ந்த காலகட்டம்‌. திண்ணைப்‌ பள்ளிக்‌ கூடத்தில்‌ அப்பொழுது என்ன சொல்லிக் கொடுக்கப்பட்டதோ அதன்‌ தாக்கத்தினைப்‌ பாடப்புத்தகம்‌ என்று ஒன்று முதன்‌ முதலில் தமிழுக்கு அரிமுகமானபோது காண முடிந்தது என்பதற்கு உதாரணம்‌ தமிழ்‌ எழுத்துகள்‌ 247 என்ற வழக்குதான்.
இதை முதன்முதலில்‌ பதிவு செய்த இலக்கண நூல்‌ முத்து வீரியம்‌.
முத்து வீரியம்‌. நூலின்‌ ஆசிரியர்‌, தமிழில்‌ அறியப்படுகின்ற ஆளுமைகளாய்‌ இருக்கின்ற‌ மறைமலையடிகள், ந.மு.வேங்கடசாமி நாட்டார்‌, மனோன்மணியம்‌ சுந்தரம்‌ பிள்ளை இவர்களுடைய ஆசிரியர்களின்‌ ஆசிரியர்‌. பெயர்‌ முத்துவீர உபாத்தியார்‌ (ஏ) கம்மாள வாத்தியார்‌. அவர்தான்‌ தான்‌ எழுதிய இலக்கண நூலில்‌, முதன்முதலாகத்‌ தமிழின்‌ மொத்த எழுத்துகள்‌ 247 என்று பதிவு செய்தவர்‌.
முத்துவீர உபாத்தியார்‌ திருச்சி உறையூரைச்‌ சேர்ந்தவர்‌. காலம்‌ பத்தொன்பதாம்‌ நூற்றாண்டு. பழைய இலக்கண மரபின்‌ கடைசி வாரிசு‌ என இவரைச்‌ சொல்லலாம்‌. இவர்‌ கொல்லர்‌ பிரிவைச்‌ சார்ந்தவர்‌. அதனால்‌ கம்மாள வாத்தியார்‌ என்று அழைக்கப்பட்டார்‌. இந்தச்சாதி அடையாளத்தை இங்குச்‌ சொல்லக்‌ காரணம்‌, மரபு வழிப்பட்ட தமிழ்க்கல்வி ஆங்கிலேயர்‌ வருகைக்கு முன்‌, குறிப்பிட்ட சாதி சார்ந்து இயங்கவில்லை என்ற உண்மையை கூறத்தான்‌
எந்தத்‌ தமிழ்‌ இலக்கணநூல்‌ இந்தத்‌ தொகையைச்‌ சொல்கிறது, இப்படி நாம்‌ கொள்ளும்‌ வழக்கிற்கு மரபிலக்கணத்தில்‌ என்ன ஆதாரம்‌ இருக்கிறது என்று கவலைப்படாமல்‌, தமிழ்‌ எழுத்துகள்‌ மொத்தம்‌ 247 என இன்றும்‌ இதனை நம்‌ வகுப்பறையில்‌ மாணவர்களும்‌ ஆசிரியர்களும்‌ சொல்லி வருகிறோம்‌. இப்படி ஓர்‌ இலக்கணநூல்‌ இருக்கிறது என்பதையே அதிகம்‌ பேர்‌ அறிந்திருக்க மாட்டார்‌ இந்நூலில்‌ பல சுவாரசியங்கள்‌ இருக்கின்றன.
ஆசிரியர்‌: இந்நூலாசிரியர்‌ திருச்சிராப்பள்ளியைச்‌ சேர்ந்த உறையூரில்‌ வண்டிக்காரத தெருவில்‌ இருந்தவர்‌. முத்துவீர உபாத்தியாயர்‌ என்னும்‌ பெயரினர்‌. கொல்லர்‌ மரபினர்‌. ஆதலின்‌ கம்மாள வாத்தியார்‌ என்றும்‌ அழைக்கப்பட்டனர்‌. இவர்‌ தம்‌ பெயரினாலேயே இந்நூலைச்‌ செய்தனர்‌.
இதனை,
“முத்து வீரியம்‌ எனத்தற்பெயர்‌ நிறீஇ
வகுத்தனன்‌ உறந்தை வாழிய
முத்து வீரமா முனிவன்‌ என்பவனே, ”
“முத்து விரியம்‌ எனத்தற்‌ பெயர்நிறீஇ
வகுத்தனன்‌ உறந்தை அகத்தெழுந்‌ தருளிய
முத்து வீரமா முனிவன்‌ என்பவனே”
எனவரும்‌ சிறப்புப்‌ பாயிரங்களால்‌ அறியலாம்‌. இவர்‌ தமிழ்‌ இலக்கண இலக்கியங்களைப்‌ பழுதறக்கற்றவர்‌. வடமொழியிலும்‌ வல்லுநர்‌. முத்துவீர உபாத்தியாயர்‌ என்று வழங்குதற்கேற்ப இவர்‌ பன்னருஞ்‌ சிறப்பின்‌ நல்லாசிரியராய்‌ விளங்கினர்‌. இருச்சியில்‌ SPG கல்லூரியில்‌ தமிழாசிரியராக இருந்த அமிர்தம்‌ பிள்ளை, மறைமலை அடிகளாரின்‌ சமய ஆசிரியரான சோமசுந்தர நாயக்கர், உறையூர்‌ பிச்சை இபுராகிம்‌ புலவர்‌ முதலியோர்க்குப்‌ பேராசிரியராக திகழ்ந்தவர்.
தமிழ்‌ இலக்கண மகுடத்தில்‌ ஓர்‌ மாணிக்க கல்லாக விளங்கியவர் ‌ நம்‌ விஸ்வகுல சமூகத்தின்‌ கம்மாள வாத்தியார்  என்கிற பிரம்மஸ்ரீ முத்துவீர உபாத்தியார்‌ என்பது குறிப்பிடத்தக்கது,

Be the first to comment on "தமிழுக்கு இலக்கணம்‌ தந்த முத்துவீர உபாத்தியாயர்‌!"

Leave a comment

Your email address will not be published.


*