சுதந்திர போராட்ட வீரர் தியாகி மாயாண்டி பாரதி

சுதந்திர போராட்ட வீரர் தியாகி மாயாண்டி பாரதி
ஐ. மாயாண்டி பாரதி  (1917 – 24 பிப்ரவரி 2015)  இந்திய விடுதலைப் போராட்ட வீரர், இதழாளர் எழுத்தாளர், நகைச்சுவைப் பேச்சாளர், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் சமிதியின் தலைவர் பொதுவுடைமைப் போராளி என்று பல பரிமாணம் கொண்டவர்.
தமிழ் நாட்டில் அமைந்துள்ள மதுரை நகரின் மேலமாசி வீதியில் 70ஆம் எண் வீட்டில் வாழ்ந்த விஸ்வகர்மா சமூகத்தை சார்ந்த  இருளப்பன் ஆசாரி – தில்லையம்மாள் தம்பதியருக்கு 11ஆவது குழந்தையாக 1917 ஆம் ஆண்டில் பிறந்தார்.
மாணவத் தொண்டர்
1930 ஆம் ஆண்டில் மரைக்காடு என்னும் வேதாரண்யத்தில் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரகத்தில் மாயாண்டி பாரதிக்கு அண்ணனான கருப்பையா கலந்துகொண்டார். இதனால் மாயாண்டி பாரதிக்கு விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாடு ஏற்பட்டது. இதனால் 1932 ஆம் ஆண்டு நடைபெற்ற கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை மாயாண்டி தன் மாணவ நண்பர்களுடன் சென்று வேடிக்கை பார்த்தார்.  அதன் பின்னர் தன் நண்பர்களோடு சேர்ந்து லஜபதிராய் வாலிபர் சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கினார். அந்த அமைப்பின் வழியாகக் காங்கிரசு நடத்தும் போராட்டங்களுக்கு உதவத் தொடங்கினார். அப்பொழுது பாரதியார் மீது தீவிர ஈடுபாடு கொண்டிருந்த மாயாண்டி தனது  பெயரை மாயாண்டி பாரதி என மாற்றிக்கொண்டார்
1934 ஆம் ஆண்டில் காந்தியடிகள் மதுரைக்கு அரிசன நிதி திரட்டுவதற்காக வந்தபொழுது அவரைச் சந்தித்தார்.
1935 சூலை 9 ஆம் நாள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துச் செல்லும் போராட்த்தில் பங்கு பெற்றது குறித்து பிரம்மஸ்ரீ மாயாண்டி பாரதி ஒரு பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“1939, ஜூலை 8ம் தேதி மீனாட்சியம்மன் கோவிலுக்குள் பல ஹரிஜனங்கள், நாடார் சமூகத்தவருடன் “வந்தே மாதரம்”ன்னு கத்திக் கொண்டே உள்ளே நுழைந்தோம். வைத்தியநாதய்யர் கம்பீரமாக முன்னாடிப் போறார். அப்போ இந்த சமூகத்தவங்க நுழையக் கூடாதுன்னு வச்சிருந்தாங்க.  அதை ஒரே நாளில் தகர்த்து மீனாட்சியம்மன் கோவிலில் நுழைந்து கும்பிட்டாங்க.. பொற்றாமரைக் குளத்தில் குளிச்சாங்க.. அதுக்கு நாங்க பட்டப்பாடு கொஞ்ச நஞ்சமல்ல. எண்பது பேருடன் போயிட்டு திரும்பினோம். அப்போ கோவிலில் டிரஸ்டியா இருந்த ஆர்.எஸ்.நாயுடு ஒத்துழைச்சாலும், திரும்பினதும் இன்னும் எதிர்ப்பு. வைத்தியநாத ஐயர் மீது கேஸ் போட்டாங்க.. ராஜாஜி முதல்வராக வந்ததும் யாரும் கோவிலுக்குள் நுழையலாம்னு சட்டம் போட்டதாலே அந்தக் கேஸ் அடிபட்டுப் போச்சு”.
காங்கிரசு ஊழியர்
1938 ஆம் ஆண்டு முதல் மாயாண்டி பாரதி நேரடி அரசியல் நடவடிக்கையில் ஈடுபடத் தொடங்கினார். அவ்வாண்டு இராசபாளையத்தில் தமிழ் மாகாண காங்கிரசு மாநாடு நடபெற்றது. அம்மாநாட்டிற்கு ‘திருப்பூர் குமரனுக்கு நினைவுச் சின்னம் எழுப்புக’ என்னும் கோரிக்கையைத் தன் நண்பர்களோடு இணைந்து பிரச்சாரம் செய்தவாரே சென்றார். அங்கே ம. கி. திருவேங்கடம், கே. இராமநாதன், சக்திதாசன் சுப்பிரமணியன் ஆகியோரின் நட்புக் கிடைத்தது. அவர்களின் அழைப்பின்பேரில் இதழியப் பணியாற்ற  1939  ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மாயாண்டி  பாரதி  சென்னைக்குச்  சென்றார். காங்கிரசு இயக்கத்தில் இணைந்தார்.
இந்து மகா சபை தலைவர் சாவர்க்கரை மதுரைக்கு அழைத்து வந்த மாயாண்டி பாரதி:
பின்னர் 1940 ஆம் ஆண்டில் மதுரைக்குத் திரும்பினார். 1939 ஆம் ஆண்டில் இந்திய முசுலீம்கள் பாகிஸ்தான் கோரினர். இதனால் இந்திய தேசிய காங்கிரசில் இருந்த முசுலீம்கள் முக்கியத்துவம் இழந்தனர். பாகிஸ்தான் கோரிக்கை எதிர்த்து இந்து மகா சபை உருவாக்கப்பட்டது. 1940 ஆம் ஆண்டில் மாயாண்டி பாரதி மதுரை இராமநாதபுரம் மாவட்ட இந்து மகாசபை அமைப்புச் செயலாளராக இருந்தார் அப்பொழுது இந்து மகா சபை தலைவர்   சாவர்க்கரை மதுரைக்கு அழைத்து வந்தார்
அப்பொழுது இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்தது. இளைஞர்கள் படையில் சேர்க்கப்பட்டார்கள். அதனை எதிர்த்துச் சாத்தூர் பகுதியில் போர் எதிர்ப்புக் கூட்டங்கள் நடத்தினார். இதனால் 1940ஆம் ஆண்டில்  கைது செய்யப்பட்டு திருவில்லிபுத்தூர் சிறையில் அடைக்கப்பட்டார். ஆறு மாதச் சிறையும் 50 ரூபாய் தண்டமும் சிவகாசி நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டது. பின்னர் அவர் மதுரை, திருச்சி, வேலூர், கோயமுத்தூர் சிறைகளுக்கு மாற்றப்பட்டு 1941  மார்ச் 21 ஆம் நாள் விடுதலை செய்யப்பட்டார்.  மீண்டும் சிறைவாசலில் கைதுசெய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் பாதுகாப்புக் கைதியாகச் சிறையில் இருந்தார்.  1942ஆம் ஆண்டில் விடுதலை பெற்ற அவர், வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின்பொழுது பாதுகாப்புக் கைதியாக மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். 1943ஆம் ஆண்டில் வெளியே வந்த அவர் மீண்டும் கைது செய்யப்பட்டபொழுது, அவ்வண்டிக்கு பின்னால் ஓடிவந்த அவர் தாயார் மரணமடைந்தார். சிறையில் இருந்த மாயாண்டி பாரதியால் தன் தாயின் இறுதிச்சடங்கில் கூடக் கலந்துகொள்ள முடியவில்லை. மாயாண்டி பாரதி சிறையில் இருந்தபொழுது, இந்து மகாசபையினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்து மகா சபையிலிருந்து விலகினார்.
1939 ஆம் ஆண்டில் சென்னைக்குச் சென்ற மாயாண்டி பாரதி முதலில் திரு. வி. க. ஆசிரியராக இருந்த நவசக்தி இதழில் துணையாசிரியராகப் பணியாற்றினார். அங்கு பரலி சு. நெல்லையப்பரைச் சந்தித்தார். அதே ஆண்டில் லோகசக்தி என்னும் இதழில் மாயாண்டி பாரதி தொடர்ந்து கட்டுரைகள் எழுதினார். அவ்விதழில் 1939 அக்டோபர் 1 ஆம் நாள் போருக்குத் தயார் என்னும் கட்டுரையை எழுதினார்.  இக்கட்டுரையை வெளியிட்டதற்காக அவ்விதழுக்கு 750 ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது. அதனைக் கட்ட முடியாததால் அவ்விதழ் நின்றுபோனது.
எனவே மாயாண்டி பாரதி உள்ளிட்ட இளைஞர்கள் இணைந்து பாரதசக்தி என்னும் இன்னொரு இதழைத் தொடங்கினர். இவ்விதழில் 1939 ஆம் ஆண்டில் வீரபாண்டிய கட்டபொம்மன், சுபாஷ் சந்திரபோசு, எம். என். ராய். மாசேதுங் ஆகியோரைப் பற்றிய கட்டுரைகளை எழுதினார். 1939ஆம் ஆண்டில் படுகளத்தில் பாரததேவி, கம்பெனியைக் கலக்கிய கட்டபொம்மன் ஆகிய கட்டுரைகளை எழுதியதற்காகக் கைது செய்யப்பட்டார்.
1941 ஆம் ஆண்டில் கோயமுத்தூர் சிறையில் இருந்தபொழுது பொதுவுடைமைத் தலைவர்களான ஜமத்கனி, வி. பி. சிந்தன், கே. ஏ. தாமோதரன் ஆகியோரை மாயாண்டி பாரதி சந்தித்தார். அவர்கள் நடத்திய மார்க்சிய வகுப்பால் ஈர்க்கப்பட்டு, பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்தார்
1941ஆம் ஆண்டில் மதுரை ஹார்விமில் தொழிலாளர் போராட்டத்தில் அவர் கலந்துகொண்டார். அதனால் மீண்டும் கைது செய்யப்பட்டு மதுரை, திருச்சி, வேலூர் சிறைகளில் அடைக்கப்பட்டார்.
நெல்லைச் சதி வழக்கு
1950 ஆம் ஆண்டில் பொதுவுடைமைக் கட்சியினர் மீது அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. பலரும் கொல்லப்பட்டனர். அக்கொலைகளுக்கு பழிவாங்கும் நோக்கில், தூத்துக்குடிக்கு அருகில் உள்ள மீளவிட்டான் தொடர்வண்டி நிலையத்தில் தண்டவாளத்தைப் பிரித்துச் சரக்குத் தொடர்வண்டியின் 25 பெட்டிகளையும் 2 இந்திரங்களையும் மாயாண்டி பாரதியை உள்ளிட்ட பொதுவுடைமைக் கட்சியினர் கவிழ்த்தனர். அவ்வழக்கில் மாயாண்டி பாரதிக்கும் மேலும் பதின்மருக்கும் இரண்டை வாழ்நாள் தண்டனை வழங்கப்பட்டது. குற்றம் சுமத்தப்பட்ட 100 பேரில், மீதமிருந்தவர்களுக்கு குறைந்த கால அளவுத் தண்டனைகள் வழங்கப்பட்டன. மதுரைச் சிறையில் 4ஆண்டுகள் தண்டனை அனுபவித்த மாயாண்டிபாரதி உள்ளிட்டவர்கள், தமிழகத்தில் நடந்த பெரும் போராட்டங்களுக்குப் பின்னர், 1954 ஆம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்டனர்
கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்த ஜீவா, பாலதண்டாயுதம் உட்பட பல தலைவர்களுடன் ஐம்பது வருஷங்களுக்கு மேலாக நெருக்கமாகப் பழகியிருந்த மாயாண்டி பாரதி தனது இறுதி நாட்களில் கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றி வேதனையுடன்  சொல்கிறார்.
கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாகப் பிரிந்ததில் எனக்கு உடன்பாடில்லை… தேசியத்தையும், காந்தியைப் பற்றியும் அதற்காகப் பாடுபட்ட தியாகிகளைப் பற்றி பேசினாதாலோ என்னவோ, என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கி விட்டார்கள்… இப்போது பத்து வருஷங்களாக தியாகிகளுக்காக பாடுபடுவதுதான் வாழ்க்கையா இருக்கு.
ஜீவா எவ்வளவு அருமையான, எளிமையான மனிதர்? அவர் மாதிரி மனுஷங்க இப்போ கம்யூனிஸ்ட் கட்சியில் ஏன் இல்லை? அல்லது அப்படி இருக்கிறவங்களுக்கு ஏன் மரியாதை இல்லை?
நாங்க எல்லாம் பதவி, பட்டம்னு எதையும் எதிர்பார்த்து இருக்கலையே?” கரகரப்பான குரலில் சொல்லும் மாயாண்டி பாரதியின் மேலமாசி வீதி வீட்டில் தங்கியிருந்து இசைக்குழு நடத்திக் கொண்டிருந்த பிள்ளைகள் பாவலர் வரதராஜனும், இளையராஜாவும்.
(– 2003 – ல் மணா எழுதிய ‘கனவின் பாதை’ நூலிலிருந்து…)
குடும்பம்
மாயாண்டி பாரதி, தனது  36 வயதில் எட்டயபுரத்தில் பிறந்த பொன்னம்மாள் என்பவரை 1954ஆம் ஆண்டில் மணந்தார். இத்தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை.
மாயாண்டி பாரதி மதுரை காக்காதோப்பு சந்தில் உள்ள பாரதமாதா இல்லத்தில் தன் மனைவி பொன்னம்மாளுடன் வசித்து வந்தார். உடல் நலக் குறைவு காரணத்தால் மாயாண்டி பாரதி தனது 98 வது வயதில் 2015 பிப்ரவரி 24 அன்று காலமானார்.

Be the first to comment on "சுதந்திர போராட்ட வீரர் தியாகி மாயாண்டி பாரதி"

Leave a comment

Your email address will not be published.


*