ஆச்சார்யா மரபினர்

(ஆதிச்சநல்லூர் ஆய்வுகள் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி)

கல்வெட்டு எஸ்.இராமச்சந்திரன்

(தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கொற்கை அகழ்வைப்பகக் காப்பாட்சியராக பணிபுரிந்தவர்)
…ஆனால் அரசர்கள் குடி என்பது சமூகப்படி நிலையில் மிக உயர்ந்த நிலையிலிருந்த குடியாகும். நிர்வாகம், நீதி பரிபாலனம், போர்ப்படைகளை வழிநடத்துதல் போன்ற, ‘அரச தர்மம்’ சார்ந்த முறையான உயர் கல்வியை அரச குடியினர் பெற்றிருந்தனர். அத்தகைய நிலையில் அரச குடியினர்க்கு மிக நெருக்கமான குடியினராகக் கருதப்பட்ட ஆசான் குடியினர் அல்லது ஆசிரியக் குடியினர் யாராக இருந்திருக்கலாம்? (தொல்காப்பியப் பாயிரத்தில் குறிப்பிடப்படும்) அதங்கோட்டாசான் போன்றோரின் குலமாகக் கருதத்தக்க அரசகுலமும், சங்கறுத்து வளையல் செய்கிற நக்கீரரின் குலமாகிய கொல்லர் குலமுமே ஆசிரியர் குலம் எனக் குறிப்பிடத்தக்கவையாகக் தோன்றுகின்றன. இவ்விரு சமூகப் பிரிவினர் தவிர வானநூல், சோதிடம் போன்ற அறிவியல் துறைகளில் நிபுணர்களாக இருந்த வள்ளுவர் குலத்தவரும் ஆசான் பதவிக்குப் பொருத்தமானவர்களே. இவர்களுள் கொல்லர் சமூகப் பிரிவினைச் சேர்ந்த, சங்கறுத்து வளையல் செய்யும் பிரிவினர், ‘வேளாப்பார்ப்பனர்’ (வேள்வி செய்யாத பிராமணர்) என்றே சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றனர்.5 நக்கீரர் பற்றிய பிற்காலக் கதைகள், அவர் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவராக இருந்ததோடு, “ஆரியம் நன்று தமிழ் தீது” என்றுரைத்த குயக்கோடன் என்பவனை மந்திரச் செய்யுளால் உயிரிழக்கச்செய்து பின்னர் மன்னித்து உயிர்ப்பித்தார் என்றும் குறிப்பிடுகின்றன.6 இத்தகைய பல குறிப்புகளைச் சங்க கால வாழ்வியலோடு தொடர்புபடுத்திப் பார்த்தால் அரசர்களின் படைக் கலன்கள், மணிமுடி போன்றவற்றையும் அரியணை அல்லது அரசு கட்டில், அரண்மனை முதலானவற்றையும் உருவாக்கிப் படைத்தளித்த விஸ்வகர்ம சமூகத்தவரே ஆசான்களாக இருந்திருக்க வேண்டும் என நாம் முடிவு செய்யலாம்.
ஆதிச்சநல்லூர்ப் புதைகுழிகளில் கண்டறியப்பட்ட பல்வேறு உலோகப் பொருள்களை உருவாக்கியவர்கள் சமூக அந்தஸ்தில் உயர்வாகக் கருதப்பட்ட ஆச்சார்ய மரபினராகவே இருந்திருக்க வேண்டும். இத்தகைய தச்சர் – கொல்லர் சமூகத்தவரின் தலைநகர இருக்கையாகத் திகழ்ந்தமையால்தான் (கொல்லுத் தொழில் இருக்கை) கொற்கை என்ற ஊர்ப்பெயர் உருவாகி இருக்கவேண்டும். கொற்கை, ஆதிச்சநல்லூரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கொற்கையிலிருந்து 7 கி.மீ. தொலைவில் நக்கீரரை நினைவூட்டும் வகையில் கீரனூர் என்ற ஊரும் உள்ளது.
வேள்வி செய்யாத பார்ப்பனர்’ எனச் சங்க இலக்கியம் குறிப்பிடுவது வேறொரு வகையிலும் கவனத்துக்குரியதாகும். வேள்விச் சடங்குகளைப் புறக்கணித்த வைதிக சமயத்தவரை விராத்யர் எனப் புராணங்களும், தர்ம சாஸ்திர நூல்களும் குறிப்பிடுகின்றன. முதுமக்கள் தாழிப் பண்பாடு அதாவது இரும்பு யுகத்தை அறிமுகப்படுத்திய பெருங்கற்படைப் பண்பாடு என்பதே விராத்யர்களுடைய பண்பாடுதான் என்பது அறிஞர் அஸ்கோ பர்போலா அவர்களின் கருத்து.7கி.பி. 16ஆம் நூற்றாண்டில் கமலை ஞானப்பிரகாசரால் எழுதப்பட்ட ‘சாதிநூல்’, விஸ்வகர்ம சமூகத்தவரை ‘விராத்யர்’ பிரிவிலேயே சேர்க்கிறது.8
விஸ்வகர்ம சமூகத்தவர் பலர், சமண பெளத்த சமயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது அச்சமயங்களை ஆதரித்தனர். கருங்கல்லை மரணச் சடங்குகளோடு மட்டுமே வைதிக சமயம் தொடர்புபடுத்திற்று. பெருங்கற்படைப் பண்பாட்டின் அரச குருக்கள் மரபினரான விஸ்வகர்ம சமூகத்தவர், சமண பெளத்தப் பள்ளிகளை உருவாக்கவும், அப்பள்ளிகளுள் கற்படுக்கைகள் அமைக்கவும், கற்படுக்கைகள் அமைக்கப்பட்ட செய்தியைக் கல்வெட்டு எழுத்தின் மூலம் அறிவிக்கவும் செய்தனர். எழுத்து என்ற சொல் தொடக்கத்தில் ஓவியத்தையே குறித்தது. ஓவிய எழுத்துகளிலிருந்தே ஓரொலிக்கு ஓர் எழுத்து என்ற அகர ஆதி எழுத்துகள் உருவாயின. எனவே, ஓவியச் செந்நூல் உருவாக்கிய விஸ்வகர்ம சமூகத்தவரே எழுத்துகளை வடிவமைத்திருக்க வேண்டும். ‘கண்ணுள் வினைஞர்‘ எனச் சங்க இலக்கியங்கள் இவர்களைக் குறிப்பிடும் சொல்லாட்சியையும் எழுத்தினைக் குறிப்பதற்கு வடமொழியில் வழங்குகிற ‘அக்ஷரம்’ (அக்ஷம் = கண்) என்ற சொல்லையும் ஒப்பிட்டால் இவ்வுண்மை புலப்படும். ‘அக்ஷசாலி‘ என்ற தொடரின் திரிபான ‘அக்க சாலி’ என்பதே கன்னட மொழியில் பொற்கொல்லர்களைக் குறிக்கப் பயன்படும் சொல்லாகும்.
அரசர்களின் மனையை – அரண்மனையை வடிவமைக்கும் ஸ்தபதியை ‘நூலறி புலவர்’ என நெடுநல்வாடை (வரி 76) குறிப்பிடுகிறது. சரியாகச் சொல்வதானால் அவர்கள் நூல் அறிபுலவர்கள் மட்டுமல்லர், நூல் உருவாக்கிய புலவர்கள். இத்தகைய விஸ்வகர்ம சமூகத்தவரின் பங்களிப்பு, சங்க காலச் சமூகத்தின் வாழ்வியலில் முதன்மையான ஒன்றாக இருந்திருக்க வேண்டும். குறிப்பாகச் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த பாண்டிய மன்னர்களுக்கே, பாண்டிய அரசகுலம் உருவான காலப்பகுதியிலும் எழுத்தறிவு சார்ந்த நிர்வாக நடைமுறைகள் உருவான காலப்பகுதியிலும் விஸ்வ கர்ம சமூகத்தவர் தாம் குலகுருக்களாக இருந்திருக்க வேண்டும். அத்தகைய மக்கட் பிரிவினர் தாம் ஆதிச்சநல்லூரில் உலோக நாகரிகத்தை அறிமுகப்படுத்தினர் என்ற வரலாற்று உண்மையைப் பாண்டிய மன்னர்களின் முத்துபடு துறைமுகமாக இருந்த கொற்கை மூதூரின் வரலாற்றுடன் இணைத்து ஆராய்ந்தால்தான் தமிழக வரலாற்றின் தொடக்கப்பகுதி துலக்கமுறும். அத்தகைய ஆய்வில் தொல்லியல் அறிஞர்களும், தமிழறிஞர்களும் இணைந்து ஈடுபடவேண்டும் என்பதே நமது விண்ணப்பம்.
(ஆதிச்சநல்லூர் ரயில் நிலையம் பற்றிய ஒரு வேடிக்கையான செய்தி: 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆதிச்சநல்லூர் ரயில் நிலையம் அமைக்கப்பட்டு ரயில் பாதை போடப்பட்டபோது, ஆழ்வார் திருநகரியிலிருந்த சடகோபாச்சாரியார் வைணவ மடத்துக்குரிய துண்டு நிலமொன்றின் ஊடாக ரயில் பாதை போடநேர்ந்தது. அம்மடத்தின் அதிபர், நிலத்தை ரயில்வே துறையிடம் ஒப்படைக்க மறுத்துவிட்டார். பிரிட்டிஷ் அரசு, அந்நிலத்துக்கு வருட வாடகையாக நான்கணா கொடுப்பதாகத் தீர்மானித்தது. வைணவ மடாதிபதி அதனை ஏற்றுக்கொண்டார். நான்கணா ஆண்டு வாடகை, நானறிந்தவரை 2000ஆம் ஆண்டு வரை கொடுக்கப்பட்டு வந்தது. தற்போதும் தென்னக ரயில்வே சார்பில் 25 பைசா கொடுக்கப்பட்டு வருகிறதா எனத் தெரியவில்லை.)

அடிக்குறிப்புகள்:

“திருவழுதி வளநாட்டுத் திருவெள்ளூரில் சேனாவரையன் தத்தன் அந்தரி” – கோ மாறஞ்சடையனின் சுசீந்திரம் கல்வெட்டு (Travancore Archaeological Series Vol. III, no. 27.)
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கொற்கை அகழ்வைப்பகக் காப்பாட்சியராக நான் பணிபுரிந்தபோது 6. 10. 1995 அன்று கள ஆய்வு மேற்கொண்டு கண்டறிந்தது.
7 .03. 1999 அன்று கள ஆய்வில் கண்டறிந்த கல்வெட்டுகள்.
அகநானூறு
தொல்காப்பியம், பொருளதிகாரம், செய்யுளியல், ‘‘நிறை மொழி மாந்தர் ஆணையிற்கிளந்த மறைமொழிதானே மந்திரம் என்ப” என்ற நூற்பாவுக்கான நச்சினார்க்கினியர் உரை.
”Arguments for the Aryan origin of South Indian Megaliths”, Asko Parpola, Published by the State Dept. of Archaeology, Tamilnadu, 1970.
கமலை ஞானப்பிரகாசரின் ‘சாதிநூல்’, பதிப்பாசிரியர்கள்: சந்திரசேகர நாட்டார், சண்முக கிராமணி, மயிலை, 1870. (உ.வே.சா. நூலகத்தில் அச்சுப்பிரதி உள்ளது.)

1 Comment on "ஆச்சார்யா மரபினர்"

  1. P.Balaguru Acharya | April 23, 2017 at 3:17 pm | Reply

    It is very good article for knowing about viswakarmas.i am very proud to be a viskarma…

Leave a comment

Your email address will not be published.


*