-கட்டுரை ஆசிரியர் வேலுதரன், சென்னை, தொல்லியல் ஆர்வலர்
பண்டையகாலத்தில் சாதிகள் குல தொழிலின் அடிப்படையிலேயே உண்டாக்கப்பட்டன. கடந்த நூற்றாண்டுவரை பெரும்பாலும் இம்முறையே கடைபிடிக்கப்பட்டது. விஞ்ஞான வளர்ச்சி மற்றும் இயந்திர மயமாக்கல் போன்ற காரணங்களால், குறிப்பிட்ட தொழிலை மட்டும் செய்து கொண்டு இருந்தவர்கள், வேறு தொழிலை மேற்கொள்ளவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். மேலும் 21 ஆம் நூற்றாண்டில் அனைத்து தொழிகளும் கணணி மயமாக்கல், இயந்திர வளர்ச்சி, வாரிசுகளின் படிப்பு, இடம் பெயர்தல் குலத்தொழிலில் வேலை வாய்ப்பின்மை, போன்ற பல காரனங்களால் கம்மாளர்களின் பாரம்பரிய தொழில்கள் தொடர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
வலங்கையரும் இடங்கையரும்
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள சமுதாய ஆவணங்கள் புத்தகம் ஆசாரிகள் (தட்டார், கொல்லர், தச்சர், கன்னார், கல் வேலைக்காரர் என்று அழைக்கப்படும் சிற்பி ), கம்பளத்தார், செங்குந்தர், தேவேந்திரப் பள்ளர், நகரத்தார், மாதாரிகள் வன்னியர் ஆகியோர் இடங்கைச் சாதியாகவும், கவறைச் செட்டிகள், சாணார், சேணியர் ஆகியோர் வலங்கைச் சாதியாகவும் பதிவு செய்கின்றது. தொழில் அடிப்படையில் தோன்றிய வேறுபாடுகளே சாதியையும், மேல் கீழ் என்ற நிலையையும் ஏற்படுத்தியது என்பதைக் காண்கின்றோம். இந்த வலங்கை இடங்கை சமுதாயத்தினரிடையே உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற கருத்து வேற்றுமைகளும் அதனால் பூசல்களும் ஏற்பட்டுள்ளன.
ஆசாரிமார் வெற்றி செப்புபட்டயம்…
மேலே குறிப்பிடப்பட்ட வலங்கை இடங்கை சமுதாயத்தினரிடையே ஏற்பட்ட பூசலுக்கான தீர்வு தான் இந்த ஆசாரிமார் செப்புப்பட்டயம். இந்த பூசலுக்கான தீர்வு காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் இருந்த ஆவணத்தின் அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டது. (தற்போது இச்செப்புப் பட்டயம் ஈரோடு கலைமகள் கல்வி நிலைய அருங்காட்சியகத்தில் உள்ளது)
பட்டயத்தின் தொடக்கத்தில் அகவற்பா வடிவில் ஆசாரி குலப் பெருமக்கள் வரலாறு கூறப்படுகிறது. அதனை அடுத்துப் புராண மரபில் ஆசாரிகள் குலப்பெருமை விவரிக்கப் பெறுகிறது. கொங்கு 24 நாட்டு இடங்கை ஆசாரிமார்களும் கூடி புரவிபாளையம் பாளையக்காரர் கோப்பண கவுண்டர் அவர்களைக் கண்டு வணங்கிக் கணக்கன் மகன் முத்துக்குமாருக்குத் திருமணம் செய்து யானைமேல் ஊர்வலம் வந்தனர். அப்போது வலங்கைச் செட்டியார்கள் இடங்கை ஆசாரிகளுக்கு யானை மேல் ஊர்வலம் வர உரிமை இல்லை என்று தடுத்தார்கள். இரு சாராரும் வழக்கிட்டுக் கொள்ளவே காஞ்சிபுரம் சென்று காமாட்சியம்மன் சன்னதியில் செப்பேடு பட்டயம் பார்த்தனர்.
அதில் இடங்கை ஆசாரிகளுக்கு யானைமேல் ஊர்வலம் உண்டு என்று எழுதப்பட்டிருந்தது. வலங்கையார் பொய் வழக்காடியமைக்காக அவர்கள் ஒப்புக்கொண்டபடி பத்துத் தலையும் பன்னீராயிரம் பொன்னும் அபராதமாகக் கொடுத்தனர். இடங்கையார் ஆசாரிகளும் வெற்றிக் காணிக்கை இரண்டாயிரத்து இருனூறு பொன் கொடுத்தனர். கோப்பண கவுண்டரும், நாகம நாயக்கரும் பட்டயத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இந்நிகழ்ச்சி கி. பி. 1452 ஆம் ஆண்டு நிகழ்ந்ததாகவும், (ஆனி 27 ஆம் தேதி) தை மாதம் முதல் தேதி இப்பட்டயம் எழுதப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. கூடுதல் தகவலாக இங்கு குறிப்பிடப்படும் பத்துத்தலை என்பது யாதென்று தெரியவில்லை. ஆய்வாளர்களின் கூற்றுப்படி அஃது நவகண்டமாக / வீர் மரணம் (அதாவது உடம்பில் 9 இடங்களில் வெட்டிக்கொண்டு, கடைசியாக தலையை வெட்டிக்கொள்வது ) இருக்கலாம். சென்னை திருவொற்றியூரில் உள்ள நவகண்ட சிற்பங்கள், நமது கம்மாளர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் இது போன்று நிகழ்வுகள் நடந்து இருக்கலாம் என்று கருத வாய்ப்பு உள்ளது.
கோயில்கள் மற்றும் சமுதாய நலனில் கம்மாளர்களின் பங்களிப்பு..
கம்மாளர்கள் கோயில், அதனுள் உள்ள சிற்பங்கள் ஆகியவற்றை கட்டுவித்ததை கல்வெட்டுக்கள் வாயிலாக அறிகின்றோம். அதே சமயத்தில் மன்னர்கள் போலவே, கோயில்களில் காணப்படும் கட்டுமானங்களுக்கு கம்மாளர்கள் தானங்களும் செய்து உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், மேலப்பனையூர்/ சுந்தர சோழபுரத்து சிவன் கோயிலில் உள்ள 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு, “இப்பாக்கல்லு கண்மாளரில் சிவனார் கூடலூர் நாட்டு கொல்லனும், சத்தி என அழைக்கப்பட்ட கலங்காத கண்ட கொல்லன், தானம்” செய்ததாக கல்வெட்டு பதிவு செய்கின்றது. மற்றுமொரு கல்வெட்டு இப்பாக்கல் இவ்வூர் கம்மாளரில் கூத்தன் கூடலூர் நாட்டு ஆசாரி யுள்ளிட்டார் தன்மம் கூறுகின்றது. சமீபத்தில் ராமநாதபுர மாவட்டம் திருவாடனை அருகே கண்டுபிடிக்கப்பட்ட 16 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு “அரும்பொற்கூற்றத்து கள்ளக்குடியில் இருக்கும் தீக்கொல்லர் சொக்கர் ஆண்டார் என்பவர், பெருமாள் கோயில் எதிரில் உள்ள குளத்தைத் தானமாக வெட்டிக் கொடுத்ததை பதிவு செய்கின்றது.
மன்னர்கள் காலத்தில் கம்மாளர்களுக்கு அளிக்கப்பட அங்கீகாரமும் சலுகைகளும்…
அக்கால மன்னர்கள் தங்களுடைய பெயரையே தங்களால் கட்டுவித்த கோயிலின் சிற்பிகளுக்கு, முன்னொட்டாக சேர்த்து ராஜராஜப் பெருந்தச்சன் நித்த விநோதப் பெருந்தச்சன், என அழைத்து, கல்வெட்டுக்களில் பொறிக்கச் செய்து பெருமைப் படுத்தினர். செங்கல்பட்டு மாவட்டம் பூஞ்சேரி கிராமத்தில் மகாபலிபுரத்தில் உள்ள குடைவரைகளை குடைந்த சிற்பிகளின் பெயர்களை ( கெ(வா)கா பெருந்தச்சன், பய்யமிழிப்பான், கலியா(ணி) கொல்லன் (ஸெ)மகன், குணமல்லா…., சாதமுக்கியன், மேலும் நாமா திருவெற்றியூர் அ(பா) ஜர்) பாறையில் வெட்டுவித்ததை ஆயித்துக்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு பின்பும் காண முடிகின்றது.
கல்வெட்டுக்களில் கம்மாளர் பங்களிப்பு…
கோயில்களின் பராமரிப்பிற்கும் கம்மாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். அவர்களுக்கு, நிலமும், முக்கியமான வீதிகளில் வீட்டு மனைகளும் ஒதுக்கினர். இதற்கான சான்றாகக் கருதப்படுவது நாகப்பட்டினம் மாவட்டம் செம்பியன் மாதேவி என்ற ஊரில் உள்ள கைலாசநாதர் கோயில், சடையவர்மன் வீரபாண்டியணின் 9ஆம் ஆட்சி ( 1345 CE ) கல்வெட்டு கோயிலின் அருகேயே நான்மாடத் தெருவில் வாழ்ந்ததற்கான சான்றைப் பதிவிடுகின்றது. அக்கல்வெட்டு கம்மாளரை, ஆசாரி என்று பதிவு செய்கின்றது. இக்கல்வெட்டு, அவருக்கு அளிக்கப்பட்ட இடத்தை ஒத்திக்கு வைக்கவோ அல்லது விற்றுக்கொள்ளவோ உரிமை அளிக்கின்றது. (பார்வை நூல்: நாகபட்டின மாவட்டக் கல்வெட்டுகள், பக்கம் 85 – 86, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு.) மற்றும் ஒரு கல்வெட்டு முதலாம் பராந்தக சோழனின் 36 ஆம் ஆட்சி ஆண்டு (942 பொயு ) கல்வெட்டு வந்தவாசி ஆலந்தூர் சிவன் கோவிலில் கட்டிடம் கட்டியதற்காக மற்றும் புதுப்பித்ததற்காக பெருந்தச்ச தேவனுக்கும் பலதேவனுக்கும் இரும்பேடு கிராமத்தில் உள்ள நன்செய் நிலமும், விளை நிலமும், கொடுக்கப்பட்டதாக பதிவு செய்கின்றது.. (பார்வை நூல்: தமிழ்நாடு கல்வெட்டுகள் தொகுதி XIII, திருவண்ணாமலை மாவட்ட கல்வெட்டுகள் 2, பக். 124. தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு) அக்கசாலைகள் என்று அழைக்கப்பட்ட கம்மாளர் கல்வெட்டுகள் இக்கல்வெட்டு, கோபி செட்டிபாளையம் கணக்கம்பாளையம் என்ற ஊரில் தனி பலகைக் கல்லில் கானப்படுகின்றது கல்வெட்டு கூறும் செய்தி…
கொங்கு சோழர் இரண்டாம் குலோத்துங்கனின் இருபத்து மூன்றாவது ஆட்சி ஆண்டு கல்வெட்டு எழுகரை நாட்டுக் கம்மாளர்கள், குளமாணிக்கம் என்னும் ஊரில் தங்களுக்கு சலுகையாக நீக்கப்பட்ட வரிகளைக் கொடையாக அளித்துள்ளனர். கம்மாளர்கள் எனும் அக்கசாலைகள் சிவன் மற்றும் விநாயகர் கோயில்களையும் கட்டுவித்து நிர்வாகமும் செய்துள்ளனர். அதற்கு சான்றாக விளங்குபவை தான் கொற்கை, அக்கசாலை பிள்ளையார் கோயில், நெல்லை நகரத்தில் அக்கசாலை வினாயகர் கோயில், மானாமதுரையில் அக்கசாலை ஸ்ரீஅன்னதானப் பிள்ளையார் கோயில், கோவை மாவட்டம் சேவூரில் அக்கசாலீசுவரம் கோயில் (தற்போது ஆஞ்சநேயர் கோயிலாக உள்ளது ).
கம்மாளர்களுக்கு மற்ற சமுதாயத்தினரால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் கொங்கு சோழர் காலத்தில் கம்மாளர்களுக்கு, அவ்வூரில் வசிக்கும் வேளாளர்களால் கட்டுப்பாடுகள் அதிகமாக விதிக்கப்பட்டன. தெருவில் செருப்பு அணியக்கூடாது, வீட்டின் சுவற்றில் காரை பூசக்கூடாது, நல்லவை மற்றும் கெட்ட காரியங்களுக்கு பேரிகை, சங்கு ஊத கூடாது, திருமணத்தின் போது குதிரை மீது ஊர்வலம் செல்லக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கம்மாளர்கள் அரசரிடம் முறையிட்டபோது தடை விதிக்கப்படவைகளை நீக்கி உத்தரவிட்ட செய்தி, உடுமலைப்பேட்டை, கடத்தூர் கிராமத்தில் இருக்கும் கொங்கு விடங்கீஸ்வரர் கோயிலில் கல்வெட்டாக உள்ளது.. இது போன்றே கொங்கு பாண்டியர் வீரபாண்டியனின் 13 ஆம் நூற்றாண்டு அந்தியூர் செல்லீஸ்வரர் கோயில் கல்வெட்டும் இச்செய்தியையே பதிவு செய்கின்றது. மேலும் இக்கல்வெட்டு கம்மாளரின் ஐந்து பிரிவான கொல்லர், தச்சர், கன்னார், கற்சிற்பி, பொற்கொல்லர் ஆகியோரை ஆவணப்படுத்துகின்றது. இது போன்ற கல்வெட்டுக்கள் பேரூர் (தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 5, பக். 87, (A.R.No 562 of 1893) குடிமங்களம், கருர், பாரியூர், திருமுருகன்பூண்டி, அவினாசி போன்ற ஊர்களிலும் மற்ற சாதிக்கும் குறிப்பாக, நம் கம்மாளரை இழிவுபடுத்தும் விதமாக காணப்படுவது வேதனைக்கு உரியது!
இது காறும் நாம் கண்ட கோயில்களின் கல்வெட்டுக்கள், மன்னர்கள் கால ஆவணங்களான செப்புப் பட்டயங்கள் போன்றவற்றில், கம்மாளர்களின் பங்களிப்பு, அதனால் நமக்கு கிடைத்த அங்கீகாரம் போன்றவற்றைக் கண்டோம். ஆவணங்களும் கல்வெட்டுக்களும். நமது கம்மாளர் இனத்தை, பதினெண் விஷயத்தார், தட்டார், கொல்லர், தச்சர், கன்னார் கல்தச்சர் போன்ற வழக்கு சொல்லிலேயே பதிவு செய்துள்ளது குறிப்பித்தக்கது.
Be the first to comment on "கொங்கு நாட்டு கம்மாளர் பற்றிய கல்வெட்டு"