திருச்செந்தூர் கொடி மரக்காவியம்

திருச்செந்தூர் வட்டாரத்தில் பாடப்படும் என்ற வில்லுப்பாட்டு விஸ்வகர்மா  சமூகத்தை சார்ந்த ஆறுமுக ஆச்சாரி என்ற தச்சரை பற்றிய சுவையான செய்திகளை கூறுகிரது. முன்னொரு காலத்தில்‌, செந்திலாண்டவர் கோயிலில்‌ கொடிமரம்‌ இல்லாத நிலை தோன்றியதால்‌ மாசித்‌ திருவிழா நடை பெறவில்லை. ஆகவே ஊர்மக்கள்‌ ஒன்றுகூடி, திருச்செந்தூரில்‌ தச்சுத்தொழிலில், தலை சிறந்தவரும்‌, சிறந்த முருக பக்தருமான ஆறுமுக ஆச்சாரி என்பவரிடம்‌ சென்று செந்தில்‌ முருகன்‌ கோயிலுக்குச்‌ சிறந்த முறையில்‌ கொடிமரம்‌ ஓன்று செய்து தருமாறு கேட்டுக்கொண்டனர்‌. இத்திருப்பணியை மகிழ்வுடன்‌ ஏற்றுக்கொண்ட ஆறுமுக ஆச்சாரி தமக்குத்‌ துணையாக இருபது நபர்களைத்‌ தேர்ந்தெடுத்தார்‌. தகுதியான மரத்தைத் தேர்ந்தெடுத்து, வெட்டிக்கொண்டு வருவதற்காக இருபத்தோரு நபர்களைக்‌ கொண்ட அந்தக்குழு மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள காக்காச்சி மலைப்பகுதிக்கு ஆறுமுக ஆச்சாரி தலைமையில்‌ புறப்பட ஆயத்தமாயிற்று.

புறப்படத்‌ தயாரான அந்தக்குழுவினர்‌ திருச்செந்தூர்‌ மந்தை அருகிலுள்ள வெயிலுகந்த அம்மனை வணங்கி நின்றனர்‌. அப்போது ஆறுமுக ஆச்சாரி மட்டும்‌ அம்மனின்‌ கருவறைக்குள்‌ சென்று வணங்க எஞ்சிய இருபதுபேரும்‌ வெளியில்‌ நின்று வணங்கினர்‌. கருவறைக்குள்‌ சென்று வணங்கிய அறுமுகம்‌ ஆச்சாரியாருக்குப்‌ பேரதிர்ச்சி தரும்‌ வகையில்‌ அம்மனின்‌ கண்களிலிருந்து நீர்‌ வழிந்தது! அஞ்சி நடுங்கிய ஆச்சாரியார்‌ ௮ம்மனை வேண்டி நிற்க, அவருக்கு ஓர்‌ அசரீரி கேட்டது. “குழந்தாய்‌! மிக உயர்ந்த பணிக்கு நீ செல்வது உண்மையே! இருப்பினும்‌ விதி வலியது! உன்‌ குழுவில்‌ நீ மட்டுமே உயிருடன்‌ திரும்புவாய்‌. அதை நினைத்ததும்‌ துயரத்தால்‌ கண்களிலிருந்து நீர்‌ வழிகிறது. இச்செய்தி நீ மட்டும்‌ அறிந்ததாக இருக்கவேண்டும்‌. இதுசத்தியம்‌”.

அசரீரி கேட்ட ஆச்சாரியார் அச்சத்தில் உறைந்தார். அறியாத குழுவினர்‌ மகிழ்வுடன் பயணம் தொடங்கினர் வண்டிகள்‌ சென்றன. ஆச்சாரியார் மனதிலிருந்த அச்சம் அவரை வெகுவாக வாட்டி. வதைத்தது. அனால்‌ அவர்‌ அதை  வெளியில் ‌காட்டிக் கொள்ளவில்லை. போகும்‌ வழியில்‌ இருந்த ஏர்வாடி என்னும்‌ ஊரிலிருந்த  தமது நண்பரும் புகழ்பெற்ற மந்திரவாயுமான சின்னதம்பி மரைக்காயர்  என்பவரை உதவிக்கு அழைத்தார்‌.

மரைக்காயர் மனைவி பாத்திமா முதல் நாள் இரவு  ஒரு கனவு கண்டிருந்தார். தன்‌ கணவர்‌ கொடி மரம்  செய்வதற்கு மரம் வெட்ட துணை  புரிய சென்ற இடத்தில்  வெட்டப்[பட்டு இறப்பதாக  கண்டதுவே அந்த கனவு. அதை அவர் வெளியே சொல்லாதிருக்க  அதே வேளையில் ஆச்சாரியார் வந்து கொடிமரம் வெட்ட கணவரை துணைக்கு அழைத்ததும் அவருக்கு தூக்கி வாரி போட்டது. ஆகவே கணவனை போக்கூடாது என்று சொல்லி பலமாக எதிர்ப்பு தெரிவித்து தடுத்தார். மனைவி எதிர்ப்பு தெரிவித்தை பொருட்படுத்தாமல் புறப்பட்டார் மந்திரவாதி. விதியின் வலிமை கொடுமையானதல்லவா? காக்காச்சி மலைக்கு வந்து சேர்ந்தவர்கள் மிக உயரமான உறுதியான அற்புதமான   ஒரு சந்தன மரத்தை தேர்ந்தெடுத்தனர். “இதனை வெட்ட முடிவு செய்துள்ளேன், தங்கள் கருத்து என்ன? என்று அருகிலிருந்த மரைக்காயரிடம் கேட்டார் ஆச்சாரியார். வெட்டுவதற்கு முன்பாக அந்த மரத்தின்‌ பூர்வீகம்‌ குறித்து அறிய மை போட்டுப்‌ பாத்த மரைக்காயர்‌ திடுக்கிட்டார்‌. அந்த மரத்தின் மேல் நுனியில்‌ சுடலை மாடனும்‌, கீழ்நுனியில் சங்க்கடக்காரனும்‌ உள்ளிட்ட 21 தேவதைகள்‌ அந்த மரத்தில் குடியிருந்தனர் இருப்பினும்‌ மந்திரங்களைச்‌ சொல்லி மைபோட்டு தேவதைகளை மயக்க முயற்சி செய்த மரைக்காயர்‌, தொடர்ந்து கோடாலிகளை கொண்டு அந்த மரத்தினை  வெட்டச்‌சொன்னார்‌. குழுவினர் கோடாலி கொண்டு வெட்டத் துவங்கினர்.

அப்போது யாரும்‌ எதிர்பாராத அந்தச்‌ சம்பவம்‌ நிகழ்ந்தது. அந்த மரம் கோடாலியைத்‌ திருப்பிவிட்டது. கோடாலி தெறித்து வந்து வெட்ட முயன்ற. இருபது பேர்களின்‌ கழுத்தில்‌ பட‌, அந்த வினாடியே அவர்கள்  அனைவரும் இறந்தனர். அதிர்ச்சியடைந்த ஆச்சாரியார் மந்திரவாதி மரைக்காயரை தேடி அலறிய போது அவர் ரத்தம் கக்கி  இறந்து கிடந்ததைக்‌ கண்டு நடுங்கினார்‌ உடனே ஆச்சாரியார்‌ உயிர்பிழைக்கத்‌ தலைதெறிக்க ஓடத் துவங்கினார்‌. மரத்தை விட்டிறங்கிய தேவதைகள்‌ ஆறுமுகம்‌ ஆச்சாரியாரை அவசர அவசரமாகத்‌ துரத்தத்‌ துவங்‌கின. உயிர்‌ பிழைக்க ஓடிய ஆச்சாரியார்‌ கால்‌ தடுமாறி மலையிலிருந்து உருண்டு விழுந்தார்‌. அவ்வாறு விழுந்தவர்‌ தாமிரபரணி ஆற்றின்‌ கரையில் உள்ள  சொரிமுத்து ஐயனார்‌ கோயிலில்‌ வந்து விழுந்தார்‌. உடனே ஐயனார் காலைப்‌ பிடித்துக்‌ கொண்டு தம்மைக்‌ காப்பாற்றுமாறு கதறியழுதார்.

விரட்டி வந்த 21 மாடதேவதைகளை அமைதிப்படுத்திய ஐயனார்‌ அவர்களை நோக்கி, “முருகன்‌ என்‌ சகோதரன்‌: அவன்‌ கோயிலுக்கு்‌ கொடிமரம்‌ செய்வதற்காகத்தான்‌ மரம்‌ செல்கிறது- ஆகவே தடுக்க வேண்டாம் என்று கூறினார்‌. உண்மையறிந்த தேவதைகள்  தாம் குடியிருந்த மரம் கோயிலில் கொடி மரமாய் குடியிருக்கப்போவதை எண்ணிப்‌ பெரிதும் மகிழ்ந்தன. நிகழ்ந்த சம்‌பவம் குறித்து மனதிற்குள்  மிகவும் வருந்திய ஆறுமுகம்‌ ஆச்சாரியாரை அகமகிழ்ந்து அன்புடன் ஆசிர்வதித்தன. சந்தன மரத்தினை வெட்டி, 21 மாட்டு வண்டிகளையும்‌ வரிசையாகக்‌ கட்டி, அந்த வண்டிகளில்‌ ஏற்றித்‌ திருச்செந்தார்‌ மூருகள்‌ கோயிலுக்கு அனுப்பி வைத்தன.

ஆறுமுகன்‌ அருளால்‌ ஆறுமுக ஆச்சாரி மிகச்சிறப்பான முறையில்‌ கொடிமரத்தை உருவாக்கினார்‌. அந்தச்‌ சந்தன மரமே தற்போது செந்திலாண்டவர்‌ கோயிலில் கோடானுகோடி பக்தர்கள்‌ வணங்கும்‌ கொடிமரமாக உள்ளது. இந்த அடிப்படையிலேயே தற்போதும்‌ மாசித்திருவிழா நடை பெறும்போது சுடலை மாடனுக்கும்‌ சங்கடகாரனுக்கும்‌ ஆடு வெட்டிப்‌ படைத்த பின்பே தேர்‌ ஓடத்துவங்கும்‌ என்றும்‌ குறிப்பாக சங்கடகாரன்‌ தேரின் மேலேறி, “போகலாம்‌” என்று சொன்ன பின்பே தேர்‌ ஓடத்துவங்கும்‌ என்றும்‌ பரவலாகப்‌ பேசப்பட்டு வருகிறது.

“முனைவர்‌ குரு.சண்முகநாதன்‌ எம்‌.ஏ.,எம்‌.பில்‌. பி.எச்டி…திருநெல்வேலி