வரலாற்றில் விஸ்வகர்ம சமூகத்தவர்!

வரலாற்று இயக்கப்போக்கில் முதன்மை வகித்த விஸ்வகர்ம சமூகத்தவர்கள்

(மஞ்சுளா நவநீதன் கட்டுரையை முன்வைத்துச் சில கருத்துகள் – எஸ். இராமச்சந்திரன் அவர்களது கட்டுரையிலிருந்து சில பகுதிகள்.)

(கல்வெட்டு எஸ்.இராமச்சந்திரன் அவர்கள் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கொற்கை அகழ்வைப்பகக் காப்பாட்சியராக பணிபுரிந்தவர்)
….களப்பிரர் ஆட்சி என்பதே வருணாஸ்ரம அமைப்பில் உரிய அங்கீகாரம் பெறாத போர்க்குடியினரைப் படைகளாகக் கொண்டு எழுச்சிபெற்ற வைசிய மற்றும் சூத்திரரின் ஆட்சிதான் எனத் தோன்றுகிறது. அரசன் கோயில் அகப்பரிசாரகராக அங்கீகரிக்கப்பட்டு க்ஷத்திரிய வருணத்தின் கீழ்நிலையில் இருந்த பலரும் இந்தக் கூட்டணியில் இணைந்திருக்க வாய்ப்பிருக்கிறது. சபரர்களின் மலையாகிய சபரிமலையிலிருந்த எயினர் தெய்வமாகிய வன்புலி வாகனன், பெளத்த மதம் சார்ந்த வணிகர்களின் தெய்வமாக – ஐயப்பனாக – மாற்றமடைந்த நிகழ்வும் இக்காலகட்டத்துக்கு உரியதெனக் கொள்ளலாம். கிராதர் என்ற சொல் பிராகிருத மொழிக் கல்வெட்டுகளில் சிலாதர் எனக் குறிப்பிடப்படுகிறது. வணிகச் சாத்துகளுக்குக் காவலர்களாக இருந்த சிலதர், வணிகர் சமூகப் பெண்டிர்க்கு அந்தப்புரக் காவற் பெண்டுகளாகப் பணிபுரிந்த சிலதியர் பற்றியெல்லாம் சங்க இலக்கியங்களில் சில குறிப்புகள் உள்ளன9. ஏவற்சிலதியர் (சிலப்பதிகாரம் 5:51) என்ற தொடருக்கு ‘மடைப்பள்ளியார் அடியார்’ என அடியார்க்குநல்லார்10 உரை கூறுகிறார். அரசன் கோயிலில், அதாவது அரண்மனையில் மடைப்பள்ளித் தொழிலாகிய சமையல் முதலிய பணிகளைச் செய்த பரிசாரகப் பெண்டிர் போன்றே வணிகர்களின் மாளிகைகளில் இவ்வேவற்சிலதியர் பணிபுரிந்தனர் எனலாம். சங்ககாலத் தலைமக்களுக்கு நற்றாய் எனப்பட்ட உண்மைத்தாய் தவிரச் செவிலித்தாய் எனப்பட்ட வளர்ப்புத்தாயரும் உண்டு. இச்செவிலித்தாயரைக் காவற்பெண்டுகள் என்று குறிப்பிடுவர். “சிற்றில் நற்றூண் பற்றி” எனத்தொடங்கும் காவற்பெண்டின் பாடிய புறநானூற்றுப் பாடலைப் (பா 86) படித்தாலே இச்செவிலித்தாயர் ஏவற்சிலதியர் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களே எனப் புலப்படும். கண்ணகியின் செவிலித்தாயாகிய காவற்பெண்டு பாடிய உரைப்பாட்டு நடை சிலப்பதிகாரம் வரந்தருகாதையில் குறிப்பிடப்படுகிறது. வீரயுகத்தின் சில தன்மைகளை முதன்மையான சமூக இயல்புக் கூறுகளாகக் கொண்டிருந்த சங்க காலத் தமிழ்ச் சமூகம் கி.பி. 4-5ஆம் நூற்றாண்டுகளில் வளர்ச்சிபெற்று நுகர்வுப்பொருள்கள் முதலிய பல்வேறு வகைப் பொருள் பரிவர்த்தனையை அடிப்படையாகக் கொண்ட நகரத்தார் (வணிகர்) சமூகத்தின் தலைமையில் அமைந்த நாகரிகச் சமூகமாக மாறுகிற நிகழ்வுக்கு இவை எடுத்துக்காட்டுகள் ஆகும்.
இந்த வரலாற்று இயக்கப் போக்கில் ஏவற்சிலதியரை விட முதன்மையான பங்கு வகித்தவர்கள் விஸ்வகர்ம சமூகத்தவர்கள் என்று தோன்றுகின்றது. படைப்பு என்பது விஸ்வகர்மாவின் செயலாகும். தச்சர், கொல்லர் போன்ற படைப்பாளர் சமூகத்தவரின் உதவியின்றி எந்த ஒரு சமூகமும் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது. போர்க்கருவிகள் தொடங்கி போருக்குப் பயன்படும் ரதங்கள் (தேர்கள்), அரசனுக்குரிய மணிமுடி, உயர் வர்க்கத்தவருக்குரிய அணிகலன்கள் வரை நுணுக்கமும் கைவினை வேலைப்பாடுகளும் நிறைந்த உலோகப் பொருள்கள் மற்றும் மரப் பொருள்களை உருவாக்கியவர்கள் விஸ்வகர்ம சமூகத்தவரே. சங்க இலக்கியத்தில் சங்கறுத்து வளையல் செய்கின்ற கொல்லர் சமூகப் பிரிவினர் ‘வேளாப்பார்ப்பனர்‘ (யக்ஞச் சடங்குகள் செய்கின்ற பிராம்மணர்களிடமிருந்து வேறுபட்ட பிராம்மண சமூகத்தவர், அதாவது வேள்வி செய்யாத பிராம்மணர்) எனப்பட்டனர்11. இப்பிரிவைச் சேர்ந்த நக்கீரர் பாண்டிய மன்னர்களால் நிறுவப்பெற்ற மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவராக இருந்தவரென்று திருவிளையாடற்புராணத்தின் (கி.பி. 13-14ஆம் நூற்றாண்டு) மூலம் தெரிய வருகிறது. சங்க இலக்கிய நெடும்பரப்பில் இடம்பெற்ற பக்தி இலக்கியமான திருமுருகாற்றுப்படை என்ற மந்திரக் கவிதை நூல் (வழிபடுபவரின் மேனியின் கண்ணே முருகனை ஆற்றுப்படுத்துகின்ற மந்திர சாஸ்திர நூல்) இச்சமூகத்தைச் சேர்ந்தவராகக் கருதப்படும் ஒரு நக்கீரரால் இயற்றப்பட்டதாகும். நக்கீரர் என்பது பரம்பரைப் பெயராகக்கூட இருக்கலாம். “மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்” என்று இவரைக் குறிப்பிடுவர். நெடுங்கணக்கு எனப்படும் தமிழ் எழுத்துகளைக் கற்பிக்கும் ஒருவரைக் கணக்காயனார் எனக் குறிப்பிடுவது மரபு. எழுத்தறிவும், – சொல்லப்போனால் எழுத்துகளின் பல்வேறு வகைகளை – கண்ணெழுத்து எனப்படும் சித்திர வடிவக் கருத்தெழுத்துகள், ஓரொலிக்கு ஓரெழுத்து என்ற அடிப்படையில் அமைந்த அகரம் ஆதியாக உள்ள உயிர் மற்றும் மெய் எழுத்துகள் ஆகியவற்றை வடிவமைக்கின்ற அடிப்படைக் கல்வியறிவும், சொல்லில் இடம்பெறுகின்ற எழுத்துகளின் அடைவு முறை, உச்சரிப்பு முறை முதலிய மொழி மரபும் (Orthography) – சொற்களைக் கையாள்கின்ற திறனும் கைவரப் பெற்றவர்க்கே மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் பதவி கிட்டியிருக்க முடியும். வடமொழியைப் புகழ்ந்தும், தமிழ் மொழியைப் பழித்தும் பேசிய கோடன் என்ற பெயர்படைத்த குயவர் குலத்தவன் ஒருவனை அறம்பாடி நக்கீரர் கொன்றதாகவும், பிற புலவர்கள் வேண்டிக்கொண்டதற்கிணங்க அவனை மன்னித்து உயிர்ப்பித்ததாகவும் ஒரு பழங்கதை வழங்குகிறது12. இவ்வாறு மந்திரக் கவிதை இயற்றக்கூடிய ஆற்றலும், ஆளுமையும் விஸ்வகர்ம சமூகத்தவருக்கு இருந்தது என்பதற்கு வேறு சான்றுகளும் உண்டு. கி.பி. 8-9ஆம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட பல்லவ மன்னர்களின் செப்பேடுகளில் பல்லவ குலத்தவரின் வம்சாவளிப் பெருமைகளைப் பாடல் வடிவில் இயற்றியவர்கள் காஷ்டகாரி என்ற பட்டப் பெயருடைய வெண்கலக் கொல்லர் சமூகத்தவரே. அது போன்றே, கி.பி. 9-10ஆம் நூற்றாண்டுகளில் பொறிக்கப்பட்ட பாண்டிய மன்னர்களின் செப்பேட்டுச் சாசனங்களில், பாண்டிய மன்னர்களின் வம்சாவளிப் பெருமைகளைக் கவிதை வடிவில் இயற்றியவர்கள் ‘பாண்டிமாராயப் பெருங்கொல்லன்‘ போன்ற பட்டம் பெற்ற விஸ்வகர்ம சமூகத்தவரே. எத்தனையோ கால மாற்றங்களுக்குப் பிறகும் இன்று வரை தச்சுக்கழித்தல் என்ற மந்திரச் சடங்கு செய்தல், ஆசாரியன் என்ற பட்டம் புனைதல் போன்ற வரலாற்று எச்சங்கள் விஸ்வகர்ம சமூகத்தவரிடம் நீடித்து வருவதை நாம் காண முடியும்.
விஸ்வகர்ம சமூகத்தைச் சேர்ந்த பொற்கொல்லன் பாண்டிய மன்னனிடத்தும், நிர்வாக அமைப்பிலும் மிகுந்த அதிகாரம் செலுத்தக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருந்தமைதான் சிலப்பதிகார நாயகன் கோவலன் கொலையுண்ணவும், மதுரை எரியுண்ணவும் காரணமாயிற்று. அதன் பின்னர் பாண்டிய நாட்டில் மழை பொய்த்துப்போய் வெப்புநோயும் அம்மைநோயும் பரவி மக்கள் துயருற்றமையால் கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழியன் நங்கையின் (கண்ணகியின்) சீற்றத்தைத் தணிப்பதற்காகப் பொற்கொல்லர் ஆயிரவரைக் கொன்று களவேள்வி செய்தான் எனச் சிலப்பதிகாரம் உரைபெறு கட்டுரை குறிப்பிடுகிறது. தலைநகரான மதுரையை விட்டுத் தென்பாண்டி நாட்டின் ஒரு கோடியிலுள்ள கொற்கைக்குத் தன் ராஜதானியை மாற்றவேண்டிய நிர்ப்பந்தம் பாண்டிய அரசனுக்கு நேர்ந்திருக்கிறது என்றால் மதுரையில் ஒரு ஜனநாயக எழுச்சி ஏற்பட்டு அந்நகரம் பாண்டிய அரச வம்சத்தவர் அல்லாத வேறு யாராலோ கைப்பற்றப்பட்டுவிட்டது என்பதுதானே பொருள்! இதைத்தான் கருநட மன்னன் மதுரையை வலிந்து கைப்பற்றியதாகச் சேக்கிழார் (பெரியபுராணம், மூர்த்திநாயனார் புராணம், பா 11-12) குறிப்பிடுவதாகத் தோன்றுகிறது. வட கர்நாடகத்திலுள்ள ஐயப்பொழில், வாதாபி ஆகிய இடங்களில் உருவான ஐந்நூற்றுவர் எனப்பட்ட வணிகக் குழுவினர் முன்னோடிகள் (கி.பி. 5ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து வாதாபி பகுதியில் மேலைச் சாளுக்கிய மன்னர்களின் ஆதரவுடன் வணிகர்கள் கோயில்கள், பள்ளிகள் எழுப்புதல் ஆகிய பணிகளில் ஈடுபட்டனர் என்பதற்குக் கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன) களப்பிரர் படையெடுப்புடன் சேர்ந்து பாண்டிய நாட்டுக்குள் நுழைந்து மதுரைப் பகுதியிலும், செட்டி நாட்டுப் பகுதியிலும் வேரூன்றியிருக்கக்கூடும். இது சற்றொப்ப கி.பி. 4ஆம் நூற்றாண்டில் நடந்திருக்கலாம். இதனையடுத்துக் கொற்கையும் குறுகிய காலத்தில் களப்பிரர் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது என்று தெரிகிறது. கொற்கையில் வாழ்கின்ற பெண்டிர் அச்சுதக் களப்பாளனின் புகழைப் பாடியதாக ஒரு பழம்பாடல் யாப்பருங்கல விருத்தியுரையில் மேற்கோளாகக் காட்டப்படுகிறது13. கொற்கையில் குளித்தெடுக்கப்பட்ட முத்துகள் மதுரையிலிருந்த களப்பிரரின் கருவூலத்தைச் சென்று சேர்ந்திருக்க வேண்டும். அது மட்டுமின்றி, பாண்டி நாட்டின் அனைத்துத் துறைமுகங்களிலும் களப்பிரரின் ஆதிக்கம் வேரூன்றியிருக்க வேண்டும். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த, பொன்னமராவதி அருகிலுள்ள பூலாங்குறிச்சிக் கல்வெட்டு ‘கோச்சேந்தன் கூற்றன்’ என்ற மன்னனின் பெயரைக் குறிப்பிடுகிறது. இவன் களப்பிர அரசனாக இருக்க வாய்ப்புள்ளது. இக்கல்வெட்டில் “வேள்மருகன் மகன் கடலகப் பெரும்படைத் தலைவன் எங்குமான்” என்பவன் குறிப்பிடப்படுகிறான். கடலகப் பெரும்படை என்பது கப்பல் படையாகவே இருக்க வேண்டும். களப்பிரர்களிடம் மிகுந்த வலிமையான கடற்படை இருந்திருக்கிறது என இதன் மூலம் நாம் புரிந்துகொள்ளலாம். கி.பி. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிற, இலங்கை அனுராதபுரம் பிராமிக் கல்வெட்டினை (“தமெட கரவா மஹா நாவிக”) ஆதாரமாகக் கொண்டு சிந்தித்தால் கரவா என்று சிங்கள மொழியிலும், கரையார் என்று தமிழிலும் வழங்கப்பட்ட மகாநாவிகர்கள் அல்லது மாநாய்கர்கள், குறிப்பாகத் தமிழை (தமெட)த் தாய்மொழியாகக் கொண்ட கடற்படைத் தலைவர்கள் எழுச்சி பெற்றுச் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டனர் எனத் தெரிய வருகிறது. எனவே, களப்பிரர்களிடம் இருந்த கடற்படை இத்தகைய மாநாய்கர்களின் கடற்படையாகவே இருந்திருக்க வேண்டும். இலங்கை அனுராதபுரம் கல்வெட்டு பெளத்த சமய சார்புடையதாகும். களப்பிரர்கள் பெளத்த சமயத்தையும் ஆதரித்துள்ளார்கள் என்பதற்கு ஆதாரமுள்ளது14. கண்ணகியை மாநாய்கன் குலக்கொம்பு என்றே சிலம்பு (1:23) குறிப்பிடுகிறது. கண்ணகி வைசியர்-சூத்திரர் கூட்டணி வடிவில் எழுச்சிபெற்ற களப்பிரர் ஆட்சியின் வலிமை வாய்ந்த ஓர் அங்கமான கரையார் சமூகத்தின் பிரதிநிதியாக இருந்திருப்பின் அது ஆச்சரியப்படத்தக்கதல்ல15. பூலாங்குறிச்சிக் கல்வெட்டில் குறிப்பிடப்படும் ‘வேள் மருகன் மகன்’ என்ற அடைமொழி பூர்விகத் தமிழக ஆட்சியாளர்களான வேளிர் குலத்தவருடன் இவர்கள் கொண்ட மண உறவைக் குறிப்பிடுகிறது எனத் தெரிகிறது. கடற்படைக்குத் தேவையான கப்பல்களைக் கட்டுகின்ற தச்சர் சமூகத்தவர் பெருமளவில் அணிமாறிக் களப்பிரர் ஆட்சிக்கு ஆதரவாளர்களாக மாறியிருக்கக்கூடும். யாகச் சடங்குகளையே முதன்மையான வழிபாட்டு நெறியாக ஏற்ற வைதிக சமயத்திற்கு மாறுபட்டுச் சிலை வழிபாட்டை முதன்மையான ஒரு வழிபாடாக ஏற்ற ஜைன, பெளத்த சமயங்களில் சிலை வடித்த சிற்பிகள் மற்றும் வேளாப்பார்ப்பனராகிய பொற்கொல்லர் முதலிய விஸ்வகர்ம சமூகத்தவருக்கு முதன்மையான அந்தஸ்து வழங்கப்பட்ட காரணத்தால், விஸ்வகர்ம சமூகத்தவர் பெருமளவில் களப்பிரரால் ஆதரிக்கப்பட்ட ஜைன, பெளத்த சமயங்களை ஆதரித்திருக்க வாய்ப்புண்டு16.
கி.பி. 8ஆம் நூற்றாண்டுத் தமிழ் எழுத்துகளில் எழுதப்பட்டிருந்தாலும் 5ஆம் நூற்றாண்டுக்குரிய அமண்சேர்க்கை பருத்திக்குன்று பள்ளிச் சந்தத்தைக் குறிப்பிடுகின்ற பள்ளங்கோயில் செப்பேடு விஸ்வகர்ம சமூகத்தவரால் பொறிக்கப்பட்ட செப்பேடு என்பதோடு பருத்திக்குன்று சமணப்பள்ளியும் விஸ்வகர்ம சமூகத்தவரால் உருவாக்கப்பட்ட ஒன்றே. புதுக்கோட்டை சிவகங்கை மாவட்டங்களின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பூலாங்குறிச்சியில் பாறை ஒன்றில் பொறிக்கப்பட்டுள்ள பிராமிக் கல்வெட்டு கி.பி. 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதை இக்கட்டுரையில் முன்னரே குறிப்பிட்டுள்ளேன். பல கோணங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இக்கல்வெட்டைப் பொறித்தவரும் கணக்காயர் பதவியைத் தக்க வைத்துக்கொண்ட விஸ்வகர்ம சமூகத்தவரே என்பதை நாம் எளிதில் உணர்ந்துகொள்ள முடியும். இக்கல்வெட்டில் கடலகப் பெரும்படைத் தலைவன் எங்குமான் என்பவனால் எடுப்பிக்கப்பெற்ற தேவகுலங்கள் இரண்டும், மதிரை உலவியத்தான் குளத்தின் வடபுறத்தில் தாபதப் பள்ளியுள் வசிதேவனாரு கோட்டமும் குறிப்பிடப்படுகின்றன. இத் தேவகுலங்களையும், கோட்டத்தையும் எழுப்பியவர்கள் விஸ்வகர்ம சமூகத்தவரே என்பதில் ஐயமில்லை17.
இப்பிரதேசத்துக்கு அருகில் செட்டிநாட்டுப் பகுதியிலுள்ள பிள்ளையார்பட்டியில் கி.பி. 6ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அல்லது இடைப்பகுதியில் குடைவிக்கப்பட்ட பிள்ளையார் உருவச் சிற்பத்துடன் கூடிய குடைவரை உள்ளது. இக் குடைவரையை உருவாக்கிய தலைமை ஸ்தபதி எருக்காட்டூர் கோன் பெருந்தச்சன் என்பவரின் பெயர் இக் குடைவரையில் கல்வெட்டாகவும் பொறிக்கப்பட்டுள்ளது18. பொதுவாக அரசர்களின் ஆதரவுடன் கோயில்கள் எழுப்பப்படுவதும், அத்தகைய கோயில்களை உருவாக்குகின்ற ஸ்தபதிகளுக்கு அரசர்களின் பெயருடன் கூடிய பட்டம் சூட்டப்படுவதும்தாம் வழக்கம். உதாரணமாக, தஞ்சைப் பெரிய கோயிலை உருவாக்கிய ஸ்தபதியான குஞ்சரமல்லன் என்பவருக்கு ராஜராஜப் பெருந்தச்சன் என்று ராஜராஜ சோழனால் பட்டப்பெயர் சூட்டப்பட்டது. இது போல, அரசனின் பெயர் இணைந்த பட்டப்பெயராக இல்லாமல் எருக்காட்டூர்க் கோன் பெருந்தச்சன் என்ற பெயர் பிள்ளையார்ப்பட்டிக் குடைவரையை உருவாக்கிய ஸ்தபதியின் பெயராகக் குறிப்பிடப்படுவது சிந்திக்க வைக்கிறது. ஆந்திர மாநிலத்தின் கடற்கரைப் பகுதியையும் நல்லமலை, ஸ்ரீசைலம் போன்ற மலைப்பிரதேசங்களையும் மையமாக வைத்துத் தம் ஆட்சியை நிறுவிய பல்லவர்கள், கி.பி. 5-6 நூற்றாண்டுகளில் களப்பிரர்களிடமிருந்து காஞ்சிப் பகுதியைக் கைப்பற்றியிருக்கக்கூடும் என்று தெரிகிறதே தவிரக் காஞ்சியைத் தாண்டித் தம் ஆட்சியை விரிவுபடுத்தியிருக்கிறார்கள் என்றோ தமிழகத்தின் பெரும்பகுதியைத் தம் நேரடி நிர்வாகத்தில் வைத்திருந்தார்கள் என்றோ சொல்ல இயலவில்லை. எனவே, பிள்ளையார்பட்டிக் குடைவரையை உருவாக்கியவர்கள் களப்பிர அரசர்களாகவே இருக்க வாய்ப்பிருக்கிறது. அப்படியென்றால் அவ்வரசர்களின் ஆதரவில் குடைவரையை உருவாக்கிய ஸ்தபதி சுயமாகத் தம் பெயரைக் குடைவரையில் பொறிக்கத்தக்க அளவுக்கு அவருக்குச் செல்வாக்கும் அதிகாரமும் வழங்கப்பட்டிருந்தன என்பதுதானே பொருள்?
விநாயகர் வழிபாட்டைப் பொருத்தவரை தமிழகத்திலுள்ள மிகப் பழமையான ஒரு குடைவரை என்று பிள்ளையார்பட்டிக் குடைவரையைக் குறிப்பிடுவதில் தவறில்லை. இது தேவார காலத்திற்கு முற்பட்டதாகும். இக்குடைவரையில் ஹரிஹரன் சிற்பமும் குடைவிக்கப்பட்டுக் காட்சியளிக்கிறது. ஹரிஹரன் சிற்பத்தின் காலம் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. இச் சிற்பம் கி.பி. 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும். பாண்டியர் ஆட்சி மீண்டும் நிலைநாட்டப்பட்ட பிறகு சைவம், வைணவம் என்ற இரு சமயங்களும் பெருநெறிகளாக அங்கீகரிக்கப்பட்டதன் அடையாளமாக இக்குடைவரையில் ஹரிஹரன் சிற்பம் குடைவிக்கப்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. பாண்டியர்கள் ஆட்சிக் காலத்தில், குறிப்பாகக் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் சமண அல்லது பெளத்த சமயம் சார்ந்த பாழிகள் சில சிவாலயங்களாக மாற்றியமைக்கப்பட்டன என்று பொருள்படும் வகையில் ஒரு செப்பேட்டுக் குறிப்புள்ளது. விஸ்வகர்ம சமுகத்தைச் சேர்ந்த பாண்டித் தமிழாபரணன் என்ற சிறப்புப் பெயர் பெற்ற பாண்டிமாராயப் பெருங்கொல்லனாகிய சிரீவல்லவன் என்பவர், “அத்புதம் எனும் பாழிக்கண் அவிர் சடை முனி அறன் வேண்ட நற்பரசு நிர்மித்த மாமுனி மனு வழிவந்தோன்” எனத் தன்னைக் குறிப்பிட்டுக்கொள்கிறார் (பராந்தக வீரநாராயணனின் தளவாய்புர சாசனம், வரி 230-231)19. “அத்புதம் என்று குறிப்பிடத்தக்க பாழிகளில் சிவனது வேண்டுகோளின்படி சிவனது ஆயுதமாகிய மழுவினைப் பொறித்து வைத்தவனின் வம்சத்தைச் சேர்ந்தவன்” என்பது இதன் பொருள். சைவ, வைணவ சமயங்களின் எழுச்சிக்கு முற்பட்ட வழிபாட்டுத்தலம் என்பதற்கான துல்லியமான அடையாளங்களுடன் எஞ்சி நிற்கின்ற இக்குடைவரை தமிழ்ச் சமூகத்தில் வணிகர்களின் ஆதிக்கம் நிலவிய காலகட்டத்தின் சின்னமாக இன்றும் நின்று நிலவுகின்றது என்பதில் ஐயமில்லை…

17 Comments on "வரலாற்றில் விஸ்வகர்ம சமூகத்தவர்!"

  1. KT Subramanian | March 16, 2017 at 3:19 pm | Reply

    Super

  2. நண்பர் இராமச்சந்திரன் அவர்களே!
    கோடி வணக்கங்கள்!
    நல்ல ஆராய்ச்சி தங்களது !
    தொடர்ந்து செய்யுங்கள்!
    தமிழ்ச் சமுதாயத்திற்குத் தங்களைப்போன்ற ஆய்வாளர்களே தேவை !

  3. s parthasarathy | February 7, 2018 at 3:29 pm | Reply

    அற்புதம் வாழ்துக்கள்

  4. Nagarajkokila | March 13, 2018 at 5:05 pm | Reply

    Nis

  5. A, Nagarajan | May 15, 2018 at 1:13 pm | Reply

    Very good message and it will use our community both elders and younger and thanks a lot for your efforts

  6. அருமை,விஸ்வகர்மாவின் பெருமை

  7. Thank you for your information

  8. Dr.K.Dhanasekaran,Ph.D., | February 6, 2019 at 5:08 am | Reply

    நல்ல ஆராய்ச்சி.தொடர்ந்து செய்யுங்கள்!

  9. Dr.K.Dhanasekaran,Ph.D., | February 6, 2019 at 5:55 pm | Reply

    The Vishwakarma have held a higher social status for many years, and believe that the trades which they traditionally follow are superior to the work of a manual labourer because they require artistic and scientific skills as well as those of the hand.
    Source: https://en.wikipedia.org/wiki/Vishwakarma_(caste)

  10. Dr.K.Dhanasekaran,Ph.D., | February 19, 2019 at 7:16 pm | Reply

    The World’s First Veda Rig Veda Says “Sri Vishwakarma is the Creator of All gods including God Brahma, God Vishnu, God Siva and the Whole Universal”. Not Only Rig Veda also Yajur veda, Sama veda , Atharvana Veda and all Vedas Celebrate Sri Vishwakarma as The Lord of Gods. People are indicated in Vedas as Speical Creation. They are not Created by Sri Brahma who creates other People, Animals, Birds and Etc. Vishwakarma People are Created from five heads by Sri Vishwakarma who Creates All Gods and Whole Universe. They have Separate Identities, Rites, Rogations and Individual Heritage.
    Source:https://www.facebook.com/618519414859410/posts/history-of-vishwakarmathe-worlds-first-veda-rig-veda-says-sri-vishwakarma-is-the/646585098719508/

  11. அருள் | March 25, 2019 at 1:01 pm | Reply

    அருமை யான விளக்கங்கள் தெளிவான ஆராய்ச்சி உன்னதமான தேடல் .தொடர வாழ்த்துக்கள்

  12. Prabhaaharan | April 20, 2019 at 4:14 am | Reply

    மிக்க நன்றி அய்யா,
    அருமையான இந்தத் தகவல் களஞ்சியத்தை நான் நம் சமூக தளத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.
    மீண்டும் நன்றி!!!

  13. T.G. ARULOLI | July 3, 2019 at 6:34 am | Reply

    சீரிய சிந்தனைக்கு வித்திடும் நல்ல ஆய்வுக்கட்டுரை. கம்மாளர்களின் வரலாற்றிற்கு வளம் சேர்க்கிறது.

  14. அருமை. வாழ்த்துக்கள் போகர் விஸ்வகர்மா பற்றி எப்போது பதிவு போடுவீர்கள் ???
    போகர் 7000 நூல் வாங்கி படிக்கவும்

  15. கன்னார்,, செட்டியார் சமூகமா அல்லது விஸ்வகர்மா சமூகமா?? எந்த பிரிவில் சேரும்?? எனது தாத்தா மற்றும் உறவினர்கள் பெயர்கள் பிறகு செட்டியார் என்று வரும்.,, சந்தேகத்திற்கு விடை வேண்டும் ஐயா

  16. நல்ல செய்தி… ஆனால் பிள்ளையார்பட்டி திருக்கோவில் கி.மு காலங்களில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது

  17. K T Raveendran | November 17, 2022 at 1:29 pm | Reply

    மிக்க நல்ல ஆய்வுச்செய்தி மேலும் எமக்கு இலங்கை வாழ் விஸ்வகர்மாக்களின் வரலாறும் தேவையாக உள்ளது…..

Leave a comment

Your email address will not be published.


*