தமிழகக் கோயிற் கட்டடக்கலை வரலாறு மிகவும் தொன்மை வாய்ந்ததாகும். இதில் தமிழகத்துச் சிற்பிகளின் (ஸ்தபதிகளின்) தனித்ததொரு திறனைக் காணலாம். அவர்கள் மண், கல், மரம், சுதை, ஓவியம், பொன் போன்ற கலைகளில் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பதனைத் தொல்லியல் சான்றுகள் தெளிவாக்குகின்றன. கோயில்கள் இறைவனின் உறைவிடமாக மட்டும் அமையாமல் கலைகளோடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்யாவற்றையும் புலப்படுத்தும் கலைக்கூடங்களாகத் திகழ்கின்றன. இத்திருக்கோயில்கள் இலக்கியம், அரசியல், சமயநிலைகள், சமுதாய அமைப்பு, பொருளாதாரம், வாழ்வியல் முறைகள், கலைகளின் வளர்ச்சி என்று ஒரு நாடு பற்றிய அத்தனை செய்திகளையும் அடுக்கடுக்காய் வழங்கும் கல்வெட்டுகளைச் (1) சீராக அழகுபடப் புறச்சுவர்களில் செதுக்கியிருப்பதை இன்றும் காணலாம்.
“நூலோர்ச் சிறப்பின் முகில்தோய் மாடம், மயன் பண்டிழைத்த மரபினது தான்” என்னும் இலக்கிய அடிகள் அக்காலத்தில் சிற்பநூல்களும், சிற்பிகளும் இருந்தனர் என்பதனைத் தெரிவிக்கின்றன. (2) சுடுமண்ணால் எடுப்பிக்கப்படும் கோயிலை மண்தளி என்றும், கல்லால் கட்டப்படும் கோயிலைக் கற்றளி (3) என்றும் கூறுவர். செஞ்சிக்கருகிலுள்ள மண்டகப்பட்டு குடைவரைக் கோயிலைத் தோற்றுவித்த மகேந்திரவர்மன் இந்தக் கோயிலை நான்முகன், திருமால், சிவன் ஆகிய முப்பெரும் தெய்வங்களுக்குச் செங்கல், உலோகம், சுதை, மரம் இல்லாமல் விசித்திர சித்தனாகிய நான் தோற்றுவித்தேன் என்கிறான். எனவே, குடைவரைக் கோயில்கள் அமைக்கும் தொழில்நுட்பத்திற்கு முன் கோயில் கட்டுமானப் பொருட்களான மேற்சொன்னவைகள் அமைந்ததை அறிகிறோம். (4) எனவேதான் இத்தகைய கோயில்கள் காலத்தாலும் இயற்கையின் சீற்றத்தாலும் மக்களின் கவனக்குறைவாலும் அழிந்துவிட்டன எனலாம். எனவே, உறுதியாகச் சொல்லக்கூடிய கோயில் கட்டுமானச் சான்றுகள் பல்லவர் காலத்திலிருந்துதான் அறிய இயலுகிறது. பல்லவர் காலக் கோயில் கட்டட அமைப்பு முறையைக் குடைவரைக்கோயில்கள் (5), ஒற்றைக்கற்கோயில்கள் (6), கட்டுமானக் கோயில்கள் (7) என மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
மலைகள் சார்ந்த இடங்களில் குடைவரை மற்றும் ஒற்றைக் கற்கோயில்களை எழுப்புவது எளிதாயிற்று.மலைகளே இல்லாத இடங்களில் கற்களைச் செதுக்கிக் கட்டுவித்த கோயில்களை எடுப்பித்துக் கட்டடக்கலைக்கும், சிற்பக்கலைக்கும் பெருமை சேர்த்தனர் சோழர்காலப் பெருந்தச்சர்கள். தமிழ்நாட்டில் பண்டைக்காலம் தொட்டு ஓர் இனம் (8) ஐந்து அடிப்படைத் தொழில்களைச் செய்து தமிழ் நாகரிகத்திற்கும், பண்பாட்டுக்கும் அரும்பெரும் தொண்டாற்றி வந்திருக்கிறது. அவ்வினத்தைக் கம்மியர், கம்மர், கம்மாளர், விசுவகர்மா என்றும் மக்கள் கூறுவர். இலக்கியங்கள் கம்மர், கம்மியர், கைவினைஞர் என்றும் பேசும் (9).
சங்க இலக்கியங்கள் சிற்பிகளை நூலறிபுலவர் எனக்கூறும். (10) நூலறிபுலவர் என்பவர் கட்டடக்கலைஞர். மனைக்கட்டிடங்களோடு கோயில்களையும் வழிபடு படிமங்களையும் செய்வோர் தெய்வத்தச்சர் என்றும் அழைக்கப்பட்டனர். (11) நூலறிபுலவர் என்பவர் கலைஞராவார். இவர்களையே பெருந்தச்சர் என இலக்கியங்களும் கோயிற் கல்வெட்டுகளும் குறிபிடுகின்றன. தஞ்சைப் பெரியகோயிலை நிர்மாணித்தவர் வீரசோழன் குஞ்சரமல்ல இராஜராஜப் பெருந்தச்சன் என்றும் உத்திரமேரூர் விமானத்தை நிர்மாணித்தவர் பரமேஸ்வரப் பெருந்தச்சன் என்றும், மாமல்லபுரம் சின்னங்களைச் செதுக்கியவன் கேவாதப் பெருந்தச்சன் என்றும் கல்வெட்டுச் செய்திகளால் அறிகிறோம். பெருந்தச்சர்களே இன்றைய நாளில் ஸ்தபதி என அழைக்கப்படுகிறார்கள். ஒரு பிரதிமையைச் சமநிலையில் ஸ்தாபனம் செய்யத் தேர்ச்சி பெற்றவனே ஸ்தபதி எனப்படுகிறான். நிர்மாணப் பணிகளுக்கு ஸ்தபதி அதிபதியாகி இவரின் கீழ் சூத்ரகிராகி, வர்த்தகி, தச்சகன் எனச் சேர்ந்து குழுவாகச் செயல்படுவார்கள். (12) ஸ்தபதி என்பவர் சிற்ப வல்லுநர்களின் தலைவனாகவும் ஆசானாகவும் கருதப்படுகிறான்.
தொடக்க சோழர் காலத்தில் மண் தளிகள் கற்றளிகளாக மாற்றியமைக்கப்பட்ட செய்திகளைப் பல கல்வெட்டுகள் எடுத்துக் கூறுகின்றன. மரத்திலே செய்து அனுபவப்பட்ட காரணத்தினால் அனுபவப்பட்ட அமைப்பையே செங்கல்லிலும், கருங்கல்லிலும் ஸ்தபதிகள் வடிவமைத்தார்கள். கையாண்ட பொருள் மாறுபடினும் செய்வோன் பெயர் மாறுபடவில்லை என்பது நோக்கத்தக்கது.
மானசாரம் என்ற சிற்பநூல் சிற்பிகளின் தகுதிகள்,குணநலன்கள் முதலானவற்றை வரையறுத்துக் கூறுகிறது. ஸ்தபதிக்கு அத்தனைத் தகுதிகளும் தேவையெனக் கூறக் காரணம், அவன் தம் பணியின் உயர்வை உணர்ந்து செயலாற்றச் சீரிய பண்பும், ஒழுக்கமும், தகுதியும் பெற்று விளங்குதல் வேண்டும் என்பதேயாகும். நுண்ணறிவும், கற்பனைத் திறனும் சிறக்க அமையப்பெற்றவனே சிறந்த ஸ்தபதியாவான். எனவேதான் அவனால் மாமல்லபுரத்துக் கோயில்களையும், அதனைத் தொடர்ந்து தஞ்சை, கங்கைகொண்டசோழபுரம், தாராசுரம், திருபுவனம் ஆகிய ஊர்களில் நிகரற்ற கோயில்களையும் எழுப்பிட முடிந்தது.
பண்டைக் காலத்தில் அத்தனை தச்சர்களும் ஒரே இனத்தைச் சார்ந்தவர்களாக இருந்தனர் எனலாம். நாம் மேற்சொன்ன தச்சர்கள் அனைவரும் ஒரே சீரான திறன் கொண்டவர்களாக இருக்க முடியாது. எனவே சூத்ரகிராகி எனப்படுபவன் அத்தனை தச்சர்களுக்கும் நூலடித்துக் கொடுத்த பின்னரே தச்சன் செதுக்கிடுவான். தச்சன் எவ்வளவு திறமை படைத்தவனாக இருந்தாலும் சூத்ரகிராகியோ, ஸ்தபதியோ நூலடித்துக் குறிபோட்டுக் கொடுத்த பின்னரே செதுக்கச் செய்வது தொழில் மரபாகும்.
இன்று மாமல்லபுரம், புள்ளமங்கை, தஞ்சாவூர், தாராசுரம், கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய ஊர்களில் அமைந்துள்ள கோயில் மற்றும் சிற்பங்களைக் கூர்ந்து பார்த்தால், ஒவ்வொரு கோயிலும் மாறுபட்ட காலமாக இருந்தபோதிலும் ஒரே சிற்பியால் செதுக்கப்பட்டது போலக் காட்சியளிக்கும். பல சிற்பிகளுக்கு ஒரு சிற்பி வரைந்து கொடுத்து, குறிபோட்டுக் கொடுத்துச் செதுக்கப்பட்ட காரணத்தாலேயே கட்டட அமைப்பு, சிற்பநடை, உடை மற்றும் பாவனை அனைத்தும் ஒரே திறனோடு அமைந்துள்ளதைக் காணமுடிகிறது. இக்கட்டுப்பாடு இன்றும் பெரிய திருப்பணிகளில் கையாளப்பட்டு வரும் முறையாகும். இதன் காரணத்தாலேயே அந்தந்தக் காலத்துச் சிற்ப நடைகள் ஒரே பாங்கில் காட்சி தருகின்றன. இதனாலேயே தொல்பொருள் ஆய்வாளர்களது காலக்கணிப்புக்கு எளிதாக அமைந்துள்ளது. இல்லையேல் குழப்பமே ஏற்படும்.
சில கோயில்களில் அக்கோயிலைக் கட்டிய சிற்பியின் உருவத்தை அமைத்துப் பெருமை சேர்த்துள்ளனர் அக்கால அரசர்கள். தஞ்சை மாவட்டத்திலுள்ள கோனேரிராசபுரம் கோயிலில் அக்கற்றளியைச் செய்தவனின் உருவமும், அவன் பெயரும் கருவறையின் சுவரில் இடம்பெறச் செய்துள்ளனர். (13) இக்கோயிலைக் கட்டிய சிற்பிக்கு இராசகேசரி மூவேந்த வேளான் என்ற பட்டத்தை அளித்த பெருமையைப் படம்பிடித்துக் காட்டுவதாய் அமைகிறது.
சிதம்பரம் கோயிலின் வடக்குக் கோபுரத்தைக் கிருட்டிணதேவராயன் கட்டுவித்தார். அக்கோபுரத்தின் நுழைவு வாயிலின் பக்கச் சுவரில் நான்கு சிற்பிகளின் உருவங்களைக் காணலாம். அவ்வுருவத்திற்கு மேலே அவர்களின் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளன. (14)
சில கோயில்களில் திருப்பணிகளைச் செய்வதற்குச் சிற்பிகளும் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். இவர்களுக்கு அளிக்கப்பட்ட நிலம் சிற்ப விருத்தி, சில்பின் காணி என்று அழைக்கப்பட்ட செய்திகளைக் கல்வெட்டுகளில் காணும்போது அக்காலச் சிற்பிகள் போற்றப்பட்ட செய்தி நம்மை மகிழ்விக்கிறது.
திருவரங்கம் தெற்கு இராஜகோபுரம், கன்னியாகுமரியில் அமைந்த விவேகானந்தர் நினைவு மண்டபம், வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை, பூம்புகார் எழில் மாடம், வள்ளுவர் கோட்டம், திருவள்ளுவர் திருவுருவம் யாவும் வரலாற்றில் இடம்பெறும் இன்றைய தமிழக ஸ்தபதிகளின் கலைப்படைப்புகளாகும். தமிழக அரசும், மத்திய அரசும், சிற்பக் கலைஞர்களைப் போற்றும் வகையில் தாமரைத்திரு, கலைமாமணி, கலைச்செம்மல் போன்ற விருதுகளை வழங்கிப் போற்றப்படும் செய்தி ஸ்தபதிகளின் உள்ளத்தை நிறைவடையச் செய்கிறது.
குறிப்புகள்
-
கோயில்களை நோக்கி… டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம்.
-
தமிழகக் கோயிற்கலை – மா. சந்திரமூர்த்தி
-
அடிமுதல் கலசம் வரை கருங்கற்களால் எடுப்பிக்கப்பட்ட கோயில் கற்றளியாகும். திருச்சிக்கு அருகில் உள்ள பராந்தகசோழன் காலத் திருச்செந்துறை கோயில் இறைவன் “கற்றளிப் பெருமானடிகள்” என்று கூறப்படுவதும், இக்கோயிலை எடுப்பித்த பூதி ஆதித்தபிடாரியார் ‘நாம் எடுப்பித்த திருக்கற்றளி’ என்ற கல்வெட்டுச் செய்திகளாலும் அறியலாம். தமிழர் நாகரிகம் – ஸ்தபதி வே.இராமன், தொல்லியல் துறை வெளியீடு எண். 127.
-
அதிட்டானம் – டாக்டர். இராசு பவுன்துரை
-
உதாரணம் : மாமல்லபுரம் வராகமண்டபம், கிருஷ்ணமண்டபம், மகிஷாசுரமர்த்தினி மண்டபம்.
-
மாமல்லபுரம் ஐந்து ரதக் கோயில்கள்
-
மாமல்லபுரம் கடற்கரைக் கோயில், தஞ்சைப் பெரியகோயில்
-
ஐவகைத் தொழிலாளர்கள்
இரும்பு வேலை : கொல்லர் மரவேலை : தச்சர் பாத்திரவேலை : கன்னார் கோயில் நிர்மாண வேலை : சிற்பி பொன்வேலை : தட்டார்
-
அறக்களத் தந்தணன் ஆசான் பெருங்கனி சிறப்புடைக் கம்மியர் தம்மொடுஞ் சென்று – சிலம்பு.
-
ஒரு திறஞ் சாரா வரைநாள மையத்து நூலறிபுலவர் நுண்ணிதிற் கயிறிட்டுத் தேஎங் கொண்டு தெய்வம் நோக்கிப் பெரும்பெயர் மன்னர்க் கொப்ப மனைவகுத்து
– நெடுநல்வாடை – நக்கீரர், 75-78 பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டுமென மாலை வெண்குடை மன்னவன் விரும்பி நூலறிபுலவரை நோக்க ஆங்கவர் – சிலம்பு – வஞ்சிக்காண்டம்
-
இப் பெருந்திருநகர் படைப்பான் மயன் முதல் தெய்வத் தச்சரும்… கம்பன். தேவரும் மருங்கொளத் தெய்வத் தச்சனே… – கம்பன் – யுத்தக் காண்டம்.
-
ஸ்தபதி என்பவர் சிற்பநூல் வல்லுநர்களின் தலைவனாகவும், ஆசானாகவும் கருதப்படுகிறான். குறிப்பிட்ட அளவுகளுக்கேற்பச் செதுக்கப்பட்ட கற்களையும், சிற்பங்களையும் உரிய இடத்தில் பொருத்திக் கட்டடங்களள எழுப்பிட வல்லவன் வர்த்தகி ஆவார். சூத்ரகிராகி என்பவர் நூல்பிடித்துக் கல்லின்மீது வேண்டிய அளவுகளைக் குறியிட்டுக் கொடுப்பவர். தச்சர் என்பவர் பல்வேறு கட்டட உறுப்புகளை, உருவங்களைச் செதுக்கும் வல்லமை படைத்தவர் ஆவார்.
-
“ஸ்வஸ்தி ஸ்ரீ மதுராந்தக தேவரான உத்தம சோழரைத் திருவயிறு வாய்த்த உடையபிராட்டியார் திருக்கற்றளி எடுப்பித்த ஆலத்தூருடையான் சாத்தன் குணப்பட்டன் ஆன அரசரான சேகரன். இவன் பட்டங்கட்டினபேர் இராசகேசரி மூவேந்த வேளான்” எனக் கல்வெட்டு கூறும்.
-மன்னர்குடி அருள்மிகு இராஜகோபால சுவாமி திருக்கோயில் கும்பாபிசேக மலர்.
அருமையான பதிவு பெறுக வாழ்த்துக்கள்