வெங்கனூர்க் கோயிற்சிற்பம்

மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாதையர்

கற்பனைக் களஞ்சியமென்றும் கவிதாசார்வ பௌமரென்றும் அறிஞர்களாற் பாராட்டப்படும் துறை மங்கலம் சிவப்பிரகாச ஸ்வாமிகள் பெருமையை அறியாதவர் தமிழ்நாட்டில் பெரும்பாலும் இரார்.அவருடைய கவிமாலைகளைப்புனைந்து தமிழ்நாட்டாருடைய நினைப்பில் இருந்துவரும் தலங்களுட் சிறந்தது திருவெங்கையென மருவி வழங்கும் வெங்கனூராகும். மந்திரிக் கோவை*யென்று புலவர்களால் சிறப்பித்துப் புகழப்படும் கோவையொன்றும், உலாவொன்றும், கலம்பகமொன்றும், அலங்காரமொன்றும் அத்தல விஷயமாகச் சிவப்பிரகாச ஸ்வாமிகளாற் பாடப்பெற்றுள்ளன. அது திருச்சிராப்பள்ளி ஜில்லாவில் பெரும்புலியூர்த் தாலுகாவிலே உள்ளது. அத்தலத்திலுள்ள கோயிற்சிற்பம் மிக அருமையாக அமைந்துள்ளது; ‘கருப்ப இல்லிற் கிணையில்லை யென்னும் திருவெங்கை’, ‘வல்ல கோலுக்கு வல்ல வண்ணாமலையார்கட்டு கோயில்’ (திரு வெங்கைக் கோவை), ‘மல்லலுறச் சந்தி பொருத்தித் தகுஞ்சீர் கெடாதடுக்கிப், புந்தி மகிழற் புதவணித்தார் – முந்தை யோர், செய்யுள் போற் செய்த திருக்கோயில் (திரு வெங்கையுலா), என அக்கோயில் பாராட்டப் பட்டுள்ளது. அதன் வரலாறு1 வருமாறு:-
துறைமங்கலமென்னும் ஊரில் பண்ட குலத்தில் லிங்கப்ப ரெட்டியாரென்னும் பரம்பரைச்செல்வர் ஒருவர் இருந்தார். அவருடைய குடும்பப் பெயர் வல்ல கோலென்பது. அவருக்கு அண்ணாமலை ரெட்டியா ரென்றும், நீலகண்ட ரெட்டியாரென்றும் இரண்டு குமாரர்கள் உண்டு. அவர்களுள் அண்ணாமலை ரெட்டியாரே திருவெங்கைக் கோயிலைக் கட்டியவர்.
அவர் கல்வியறிவொழுக்கமும் சிவபக்தியும் உடையவர்; தமிழ் நூற்பயிற்சியும் தமிழ்ப் புலவர்களிடம் பேரன்பு முள்ளவர். சிற்றரசர் போன்ற பெருமதிப்பு டையவர். சிவப்பிரகாச ஸ்வாமி களிட்த்தில் அளவற்ற பக்திபூண்டு பலவகையில் அவரை ஆதரித்து வந்தவர்; அவருக்காகப் பல இடங்களிற் பல வசதிகளைச் செய்து கொடுத்தவர். அவற்றுள் அவருக்காகக் கட்டுவித்த நடை வாவிகள் மிகச்சிறந்த வேலைப்பாட்டுடன் இக்காலத்திலும் காண்போர் கண் களைக் கவர்ந்து விளங்குகின்றன. மனிதர்களைப்பாடாத வீறு பெற்ற அப் புலவர் பெருமானின் அருமைத் திருவாக்கினால் உள்ளங் குளிர்ந்து புகழ்ந்த பெருமையை உடையவர் ரெட்டியார்.
‘…………………………………………..வினவினர்க்குப்
பண்டை யறத்தின் படிவமிது வென்னவுருக்
கொண்ட விலிங்கையன் குல மைந்தன் – உண்ட
படிதாங்கி மாயன்றேர்ப் பார்தாங்கி யாங்கெம்
குடிதாங்கி நல்லிசைமென் கோதை – முடிதாங்கு
கல்வி யுறுநீல கண்டன் றுணைவனலர்ச்
செல்வி யுறையுந் திருமார்பன்
இலையென்றல் கேட்பவுமின் னாதென் றிரப்போர்
நிலைகண்டாங் கெப்பொருளு நேர்வோன்
வந்து தன்சீர் பாடுநரை மண்மீதி லந்நிலையே
இந்திரன்றா னாக்கு மியல்பினான்…..
……மண் புலவர்
தம்மைவிழி காக்குந் தகவி னிமைபோலச்
செம்மை பெறக்காக்குஞ் சீருடையோன்…
வேலியறஞ் செய்து விளைவித்துக் கரும்பயிலக்
கூலி கொடுக்குங் குலத் தோன்றல் “
என்று அக்கவிஞர் பிரான் அவர் புகழைப் பலபடிப் பாடியுள்ளார். ஸ்வாமிகள் தாம் துறவியாக இருந்தும், ”எம் குடிதாங்கி “ என்று நாவாரக்கூறி வாழ்த்தும் பெருமை வாய்ந்த அண்ணாமலை ரெட்டியாருடைய புகழை வேறு எம்மொழிகளால் சொல்ல முடியும்?
அண்ணாமலை ரெட்டியார் தமக்குரிய கிராமங்களுள் ஒன்றாகிய வெங்கா னூரில் இருந்து வந்தார். அப்பொழுது ஒவ்வொரு பிரதோஷ தினத் திலும் விரத மிருந்து விருத்தாசலம் சென்று பழமலை நாதரையும் பெரியநாயகி யம்மையையும் தரிசித்து வருவது அவர் வழக்கம். இந்த நியமத்தில் என்றும் தவறாமல் அவர் நடந்து வந்தார். இடையில் ஓடும் வெள்ளாற்றில் அளவு கடந்த வெள்ளம் வந்துவிட்ட மையால் ஒரு பிரதோஷத்தன்று அவரால் விருத்தாசலத்துக்குப் போக இயலவில்லை. ஆதலின் மிகவும் மனமுடைந்தவராகி வருந்தினார். அன்றிரவு அவருடைய கனவில் பழமலை நாதர் தோன்றி, வெங்க னூரில் இன்ன அடையாளமுள்ள இடத்தில் ஒரு கோயில் அமைத்து அங்கே சிவலிங்கத்தையும் மற்ற மூர்த்திகளையும் பிரதிஷ்டை செய்து வழிபடுக வென்று கட்டளையிட்டு மறைந்தருளினார். இந்தச் செயலை, ‘ சிவபெருமான் வெங்கையில் வாசம் செய்தலை விரும்பினார். வாமபாகத் திலுள்ள பெண் ஆசையையும், சுந்தர மூர்த்தியார் பொன்னைத் திருமுருகன் பூண்டியிலே பறித்த பொன்னாசையையும் பெற்ற திருள்ளத்தில் மண்ணாசையும் உண்டாயிற்று; ஆதலின் தேவர் களும் விரும்பும் சிறப்பை அளிக்கக் கருதி, முன் மாவலிபாற்சென்று மண்ணை இரந்த திருமாலைப் போல் குறுகிய வடிவங்கொண்டு யாசியாமல் இயல் பானவுருவத்தோடே கனவிற் சென்று இரந்து பெற்றனர்.’ என்று அழகுபெறச் சிவப்பிரகாச ஸ்வாமிகள் கூறியுள்ளார்:
”வெங்கை நகரிருப்பு வேண்டியே – பங்குபடு
பெண்ணாசை நம்பிபசும் பொன்னாசை பெற்றவுளம்
மண்ணாசை தானு மருவுதலால் – விண்ணாசை
கொள்ளுஞ் சிறப்புக் கொடுப்பத் திருவுளங்கொண் டெள்ளுங் குறியவுரு
வின்றுபோய்த் – தெள்ளும் கனவு நனவுபோற் காட்டியிரந்து”
( வெங்கையுலா)
விழித்தெழுந்த அண்ணாமலைரெட்டியார் சிவபிரான் திருவருட்டிறத்தை எண்ணிப் பரவசராய் மனமுரு கினார். பிறகு சிவபெருமானாற் குறிப்பிக்கப் பெற்ற இடத்தைச் சென்று கண்டார்; சிவாலயம் அமைப்ப தற்குரியவற்றைச் செய்யத்தொடங்கினார்; நர்மதை நதியிலிருந்து பாணலிங்கம் வருவித்துத் தனியே பிரதிஷ்டை செய்வித்துத் தரிசனம் செய்துகொண்டு வந்தார். அக்காலத்தில் வடதேசத்தில் உண்டான பஞ்சத்தால் பல சிற்பிகளும் அவர்களுடைய தலைவனும் அங்கிருந்து தென்னாட்டை நோக்கி வந்தனர். அவர்கள் திரு வெங்கை வழியாகச் செல்லுகையில் அவர்களுடைய வருகையை அறிந்த அண்ணாமலை ரெட்டியார் தாம் மேற்கொண்ட சிவாலயத் திருப்பணியை அவர்களைக் கொண்டு செய்விக்க எண்ணினார். தம் கருத்தை அவர்களிடம் கூறவே, அவர்கள் பஞ்சகாலத்தில் அத்தகைய பேருதவி கிடைத்ததை யெண்ணி மிக மகிழ்ந்து உடன்பட்டுக் கோயிலைக் கட்டத் தொடங்கினார்கள்.
சிற்பிகள் வெங்கனூர்த் திருக்கோயிலை விதிப்படி ஊக்கத்தோடு கட்டி வந்தனர். உணவு முதலிய வற்றிலும் பிறவற்றிலும் அவர்களுக்கு யாதொரு குறைவும் நேராவண்ணம் எல்லாவற்றையும் அண்ணா மலை ரெட்டியார் செய்வித்து வந்தனர். அவருடைய அன்புடைமையினால் சிற்பிகள் மகிழ்ச்சி யுடன் தங்கள் கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றி வந்தார்கள். ஒவ்வொரு நாளும் அவர் சிவாலயத் திருப் பணியை மேற்பார்த்து வருவார். சிற்பிகளுக்கு ஏதேனும் குறையுண்டோவென விசாரித்தறிந்து அதனை நீக்குவார். அவர்களுடைய தலைவன் இடைவிடாமல் தாம்பூலம் போடுவதை யறிந்து அவனுக்கு ஓர் அடைப்பைக்காரனை அமைத்து அவன் வேலை செய்யுங் காலத்திலும் மற்றச்சமயங்களிலும் தாம்பூலம் உதவி வரும்படி செய்வித்தார். பிற இடங் களில் பெறுதற்கரிய உபசாரங்களை அங்கே பெற்றமையால் அத்தலைவனுக்கு மேன்மேலும் வேலையில் ஊக்கம் உண்டாயிற்று.
ஓரிடத்திற் பாவுகற்களின் உட்புறத்தில் சிற்பிகளின் தலைவன் சில சிற்பங்களை அமைத்துக் கொண்டி ருந்தான். சாரம் போட்டுக்கொண்டு அதன்மேற் படுத்தபடியே அண்ணாந்து பார்த்துச் சிற்றுளியால் நுட்பமான வேலைகளை மன வொருமையோடு செய்து கொண்டிருந்தான். அடைப்பைக் காரன் கீழே நின்று அடிக்கடி வெற்றிலை மடித்து அவனுக்குக் கொடுத்துக் கொண்டே யிருந்தான். ஒருநாள் வழக்கம் போல் அண்ணாமலை ரெட்டியார் சிற்பிகள் செய்து கொண்டிருக்கும் வேலையைப் பார்க்க வந்தார். அவர்கள் தங்கள் ஆற்றலால் கல்லைச் சித்திரிக்கும் அருங்கலைத்திறத்தை உணர்ந்து மகிழ்ந்தனர். பிறகு அவர்கள் தலைவன் இருந்த இடத்தில் மெல்லப் புகுந்தார். தம் வரவை அவன் அறிந்தால் அவனுடைய வேலை தடைப்படுமென்று ஓசைப்படாமல் சென்றார். சாரத்தின்மேலிருந்த சிற்பிகளின் தலைவன் படுத்தபடியே அண்ணாந்து திருப்பணி புரிந்தானாதலின் அவர் வரவைக் கவனிக்க வில்லை. அப்பொழுது அவன் வழக்கம்போல் தாம்பூலம் போட்டுக் கொள்ள வேண்டி இடக்கையைக் கீழே நீட்டினான். அவனுக்குத் தாம்பூலம் கொடுப் பவன் அந்தச்சமயத்தில் அயலிடம் சென்றிருந்தான். சிற்பி தாம்பூலத்திற்காகக் கையை நீட்டு கின்றானென்றறிந்த அண்ணாமலை ரெட்டியார் தமக்கு அருகில் இருந்த தம் அடைப்பைக்காரன் தமக்கு அப்பொழுது கொடுத்த தாம்பூலத்தை வாங்கிச் சிற்பியின் கையிற் கொடுத்தார். சிற்பி கீழே நடப்பது ஒன்றையும் அறியாமல் தன்னுடைய கைவினையிற் கண்ணாக இருந்தானாதலின் வழக்கம்போலத் தன் அடைப்பைக்காரனால் தரப்பட்ட தாம்பூலமென்றே யெண்ணி அதை வாயிலிட்டு மென்றான்.
அது மிக உயர்ந்த வாசனைப் பொருள்கள் சேர்த்த மைத்ததாதலின் மெல்லு கையில் பரிமளம் உண்டா யிற்று. அவன், அது தனக்குக் கொடுக்கப்படும் வெறும் வெற்றிலையும் சீவலுமாக இராமல் வாசனைத் தாம்பூலமாக இருத்தலை உணர்ந்து திரும்பிக்கீழே நோக்கினான்.ரெட்டியார் மீண்டும் சிற்பி கையை நீட்டும்பொழுது கொடுப்பதற்காகத் தாம்பூலத்தை ஸித்தமாக வாங்கி வைத்துக்கொண்டு நின்றார். அவரைக்கண்ட சிற்பி திடுக்கிட்டான்; அவனுக் குண்டான வியப்பிற்கும் அச்சத்திற்கும் எல்லையே யில்லை; உடனே கீழே குதித்தான்; சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினான்;
கருவிலே திருவுடைய செல்வச் சீமானும் சிவபெருமானைப் பிரத்தியட்சமாகக் கனவிற்கண்ட சிவபக்த சிகாமணியுமாகிய நீங்கள் இங்ஙனம் செய்யலாமா? என்பாற் பெரிய அபசாரத்தை ஏற்றி விட்டீர்களே !” என்று மனந்தடுமாற வாய்குழறக் கூறினான். கலை வல்லா ருடைய கலைத்திறத்தையே மதிப்பதில் ஒப்பற்றவராகிய ரெட்டியார், “நான் ஒன்றும் தவறுசெய்ய வில்லையே; தாம்பூலம் போட்டுக் கொள்ளாவிட்டால் ஊக்கம் குறையுமென்று கருதியே கொடுத்தேன்” என்றார்.
சிற்பி: தாங்கள் வந்ததை நான் தெரிந்துகொள்ள வில்லை.அடைப்பைக்காரன் தான் தருகிறானென்று நினைத்தேன். தாம்பூலத்தின் உயர்ந்த பரிமளம் என்னைக் கீழே பார்க்கச் செய்தது.எவ்வளவோ அடியார் களுக்கும் வறி யார்க்கும் அள்ளி அள்ளிக் கொடுக்கும் தங்கள் திருக்கரம் இந்த வேலையையா செய்வது! நான் இடக்கையையல்லவா நீட்டிவிட்டேன்!
அண்ணாமலை ரெட்டியார் :- குற்றமுள்ள வேலை யொன்றும் செய்ய வில்லையே, உம்முடைய கைகள் புண்ணியம் பண்ணிய கைகளல்லவா ? சிவபெருமானுக்கு ஆலயம் நிருமிக்கும் புண்ணியத் தொழிலைப் பலமுறை செய்து பயின்ற பெருமையை உடையன என்பது எனக்குத் தெரியாதா ? அக்கைகளால் அமைக் கப்படும் சிற்பம் நெடுங்காலம் மறையாமல் நிற்பதா யிற்றே ! அந்தக் கைக்குத் தாம்பூலம் கொடுப்பதனால் ஒரு குற்றமும் உண்டாகாது, உம்முடைய ஊக்கம் இடையிலே தடைப்படக் கூடாதென்று தான் அங்ஙனம் செய்தேன். சிற்பி :- பஞ்சத்தினால் வருந்திவந்த எங்களை அருஞ்சுரத்தில் தனி மரம்போல் ஆதரித்த தங்களுடைய உபகாரம் மிகப்பெரிது. அதனோடு இந்தச் செயல் என்பாற் பெரிய கடனைச் சுமத்தி விட்டது. தங்களையும் தங்கள் அருஞ்செயலையும் ஏழுபிறப்பிலும் மறவேன். தங்கள் விஷயத்தில் நான் என்ன செய்யப் போகிறேன் ! என்னுடைய முழு ஆற்றலையும் கொண்டு எனக்குத் தெரிந்த சிற்ப வகைகளை யெல்லாம் காட்டி இந்தக் கருப்பக் கிருகம் முதலியவற்றை அமைப்பேன். எனக்குத் தெரிந்தவற்றைத் தங்களுக்குரிய இந்த இடத்தில் அமைக்க நான் எவ்வளவோ புண்ணியம் பண்ணி இருக்கவேண்டும். எங்களுக்கு ஆகாரத்தையும் உடையையும் அளித்தாலே போதும். இனிக் கூலியே வாங்கமாட்டோம்.
பிறகு அவன் ரெட்டியாருடைய அனுமதி பெற்றுக் கருப்பக்கிருகம் முதலி யவற்றைப் பிரித்துவிட்டு மீண்டும் சிறப்பாகப் பல அரிய சிற்பங்களோடு அமைத்தான். வெறுங்கூலிக்குச் செய்யாமல் அன்புக்குச் செய்த பணியாதலின் அவை மிக அழகாக அமைந்திருக்கின்றன. ஆலயம் கட்டி முடிந்தவுடன் கும்பாபிஷேகம்2 சிறப்பாக நடைபெற்றது. அண்ணா மலை ரெட்டியார் பலமுறை வற்புறுத்தியும் சிற்பி கூலி பெற மறுத்துவிட்டான். ஆயினும் தக்கபரிசுகளை அவனுக்கும் மற்றச் சிற்பிகளுக்கும் ரெட்டியார் அளித்துப் பாராட்டினார்.
காவியப் புலவர்களை ஆதரித்துக் காத்த பெருந்தகைமையுடைய அண்ணாமலை ரெட்டியார் $ ஓவியப் புலவர்களையும் ஆதரிக்கும் இயல்பை இவ்வரலாறு நன்கு விளக்கி யாரிடத்தும் எளியராயிருக்கும் அவருடைய உயர்ந்த சீலத்தையும் தெரிவிக்கின்றது. அவருடைய அன்பின் பயனாகவே சிவப் பிரகாசருடைய சொற்சிற்பங்களும் வெங்கனூர்க்கோயிற் கற்சிற்பங்களும் நின்று நிலவுகின்றன.
அடிக்குறிப்பு –
கோவைகளுள் திருச்சிற்றம்பலக் கோவையார் அரசென்றும் திருவெங்கைக்கோவை மந்திரியென்றும் கவிஞர்கள் கூறுவர்.
1 நான் பெரும்புலியூர்த்தாலுகாவிலுள்ள இடங்களி லிருந்து இளமையில் படித்துக்கொண்டுவந்த காலத்தில் இவ்வரலாற்றைச் செங்கணம் விருத்தாசல ரெட்டியார் முதலியவர்கள் மூலமாகக் கேட்டேன். இதனைச் சிறிது வேறு படுத்தியும் வேறுதலங்களோடு சார்த்தியும் கூறுவாரும் உளர்.
2 கும்பாபிஷேகம் நடைபெற்ற காலம் சாலிவாகன சகாப்தம் 1545-ம் (கி.பி 1622) வருஷமென்று தெரிகிறது.
3 இவருடைய பரம்பரையோர் வெங்கனூரில் மேற் கூறிய ஆலயப்பணியைச் செய்து கொண்டும் நித்திய நைமித்திகங்களைச் செவ்வனே நடத்திக் கொண்டும் வாழ்ந்து வருகிறார்களென்று கேள்வியுற்றிருக்கிறேன்.
    

Be the first to comment on "வெங்கனூர்க் கோயிற்சிற்பம்"

Leave a comment

Your email address will not be published.


*