புலவர் பொற்கொல்லன் வெண்ணாகனார்

சங்க காலத்தில் விஸ்வகர்மா சமூகத்தை சார்ந்த பெரும் புலவர்  நன்பாட்டு  புலவர் தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார் ஆவார்.

பழங்காலத்தில் தமிழகத்தில் வழங்கி வந்த தமிழ் மொழியில் தோன்றி வளர்ந்த இலக்கியங்களில் ஒரு பகுதி இன்று வரையில் காக்கப்பட்டு வருகிறது. அத்தகைய தொன்மையான தமிழ் இலக்கியங்களையே சங்க இலக்கியங்கள் என்ற பெயரால் அறிஞர்கள் குறிக்கின்றனர். சங்க இலக்கியங்கள் என்ற தொகுப்பில் உள்ள பாடல்களின் காலம் கி.மு.500 முதல் கி.பி.100 வரையில் என்று கூறுவர். சங்க இலக்கியங்களில் பாடல்களைப் பாடிய புலவர்கள் நாட்டின் மூலை முடுக்குகளிலும் நகரங்களிலும் தோன்றி ஆங்காங்கு பலவகைப் பாடல்களை இயற்றியிருந்தனர். அவை பல்லாயிரக்கணக்கில் புலவர்களிடத்தும் அரசர்களிடத்தும் இருந்தன. நாட்டின் பல பகுதிகளிலும் சிதறுண்டு கிடந்த அவற்றில் பல காலப்போக்கில் அழிந்தன. பனை ஓலையில் எழுதப்பட்டதால் அவை சில தலைமுறைகளில் அழிந்து போவது எளிது. அவ்வாறு அழிந்து மறைந்தவை போக எஞ்சியிருந்த பாட்டுக்களைக் காப்பது எவ்வாறு என்ற கவலை கி.பி. முதல் இரண்டாம் நூற்றாண்டுகளில் ஏற்பட்டது. அப்போது புலவர் சிலரும், புரவலர் சிலரும் முன்வந்து அவற்றில் சிறந்தவற்றை மட்டுமாவது காப்பாற்ற முயன்றார்கள் அவர்களின் நல்ல முயற்சியினால் தொகுக்கப்பட்டவைகள் தான் எட்டுத்தொகையும், பத்துப் பாட்டும் ஆகும். அவைகளே சங்க இலக்கியங்கள் என்று கூறப்படுகின்றன.

சங்கப் புலவர்கள் பலர் மலையையும் காட்டையும் வயலையும் சார்ந்த சிற்றூர்களில் பிறந்து வளர்ந்தவர்கள். அவர்களின் பெயர்களுக்கு முன்னே அடையாக உள்ள ஊர்ப்பெயர;கள் இந்த உண்மையை அறிவிக்கின்றன. புலவர்களின் பெயருக்கு முன்னால் அவர்களது ஊர்ப்பெயரும், தந்தை பெயர் ஆகியவை இணைந்தும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. சில புலவர்களின் பெயர்கள் ஊர்ப்பெயருடனும் அவர்கள் செய்த தொழிலுடனும் இணைந்து அமைந்துள்ளன. அவ்வாறு ஊர்ப்பெயர் தொழிற்பெயர் என இரண்டும் இணைந்த பெயருடையவராக விளங்கும் சங்கப் புலவரே தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார் ஆவார்.

இச்சங்க காலப் புலவரின் இயற்பெயர் வெண்ணாகன் என்பதாகும். இவர் பிறந்த ஊர் தங்கால் என்ற ஊராகும். விஸ்வகர்மா சமூகத்தைச் சார்ந்த இவர் பொன்னால் நகை செய்யும் தொழிலைச் செய்து வந்தார். இதனை இவருடைய பெயரில் பொற்கொல்லன் என்று வருவதைக் கொண்டு அறிந்து கொள்ளலாம். ஊராலும், தொழிலாலும் இணைந்து இவரது பெயர் வழங்கப்படுகிறது. இப்புலவர் பிறந்த தங்கால் எனும் ஊர் தற்போது திருத்தங்கால் என்று வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வூர் விருதுநகர் மாவட்டம் திருவில்லிப்புத்தூருக்கு அருகில் உள்ள பாண்டிய நாட்டைச் சேர்ந்த ஊராகும் அகநானூற்றில் இப்புலவரின் பெயர் பொற்கொல்லன் வெண்ணாகன் என்று குறிக்கப்பட்டுள்ளது. இவரது பெயர் தங்கால் பொற்கொல்லனார், தங்கால் முடக்கோவலனார், தங்கால் பூட் கொல்லனார், தங்கால் பூட் கோவலனார், தங்கால் தாட்கோவலனார், தங்கால் முடக்கொற்றனார், தங்கால் முடக் கொல்லனார், தங்காற் பொற்கொல்லனார், முடக்கொல்லனார், தங்காட் நாட்கோவலனார், முடிக்கோவலனார் எனப் பல பதிப்புகளில் பல வேறுபாடுகளுடன் காணப்படுகிறது. இத்தனை வேறுபாடுகளுக்கு இடையிலும் தங்கால், தண்கால் என்னும் இருவகையில் மட்டுமே ஊர்ப்பெயர்கள் சிதையாமல் இயற்பெயருடன் இணைந்து வருகின்றது. எனவே இவர் பிறந்த ஊர் தங்கால் என்பது தெளிவாகிறது. இவர் பெயரோடு பொற்கொல்லன் என்ற தொடராலும் நற்றிணைப் பாட்டுக் குறிப்பாலும் இவர் பொன்னால் அணிகலன் செய்யும் தொழிலை மேற்கொண்டவர் என்பது தெளிவாகிறது மேலும் தங்காலைத் தண்கால் எனவும், பொற்கொல்லன் என்பதைப் பூட்கொல்லன் எனவும் ஏடுகள் குறிக்கின்றன. அதிலும் குறிப்பாக இவரது பெயர் குறுந்தொகையில் தங்கால் முடக்கொல்லனார் என்றும் நற்றிணையிலும் புறநானூற்றிலும் தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார் என்றும் அகநானூற்றில் 355- ஆம் பாடலில் தங்கால் பொற்கொல்லனார், 48-ஆம் பாடலில் தங்கால் முடக்கொற்றனார், 108-ஆவது பாடலில் தங்கால் பொற்கொல்லனார் என்றும் காண்படுகிறது. இவ்வாறு பலவாறாகக் குறிப்பிடப்படினும் இவர் ஒருவரே ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. பதிப்பித்தலின் காரணமாகவோ, வேறு ஏதேனும் காரணங்களாலோ இங்ஙனம் பெயர் மாற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கலாம் என்று கருதுவதற்கு இடம் உண்டு.

இவர் அகநானூற்றில் மூன்று பாடல்களையும், குறுந்தொகையில் ஒரு பாடலையும், நற்றிணை, புறநானூறு ஆகியவற்றில் தலா ஒவ்வொரு பாடலையும் என மொத்தம் எட்டுத்தொகையில் ஆறு பாடல்களைப் பாடியுள்ளார். வெண்ணாகனாரது பாடல்களில் இயற்கையான நிகழ்வுகள் பதிவுகளாக இடம்பெற்றிருப்பது சிறப்பிற்குரியதாகும்.

இப்புலவர் ஒருமுறை மறக்குடித்தலைவன் ஒருவனது இல்லத்திற்குச் சென்றிருந்தார். அம்மறவனது மனைவி விருந்தோம்பும் பண்புடையவளாகவும், அவன் பகைவரின் யானைகளைக் கொன்று அவற்றின் முகத்தில் உள்ள பொன்னைக் கொணர்ந்து தன்னிடம் வரும் பாணர் முதலிய பரிசிலருக்குப் பரிசில் நல்குபவனாகவும் இருப்பதை அறிந்து அவனது சிறப்பினையும் அவனது மனைவியின் சிறப்பினையும் வாகைத் திணையில் மூதின் முல்லைத் துறையில் அமைந்த, ‘ஊர்முது வேலிப்பார் நடைவெரு இருட்பகை வெரீஇய நாகிளம் பேடை’ என்ற பாடலைப் பாடினார். இப்பாடல் புறநானூற்றில் 326-ஆவது பாடலாக இடம்பெற்றுள்ளது.

இரவிலே காட்டுப்பூனைக்கு அஞ்சிய இளம் பெட்டைக் கோழியொன்று உயிர் நடுக்குற்று தொண்டை வறளக் கூவ, அவ்வேளையிலே பருத்தி நூல் நூற்கும் பெண்ணானவள் பஞ்சில் கலந்திருக்கும் குப்பைகளை அகற்றுவதற்குச் சிறு அகல்விளக்கினை ஏற்றிக் கொண்டு எழுந்தாள். அதனால் ஏற்பட்ட ஒளியிலே தன் அருகே தூங்கும் தன் சேவலைக் கண்டு பெட்டைக் கோழியானது தனது அச்சத்தைப் போக்கிக் கொள்ளும்.

அத்தகைய கோழிக் கூடுகள் இருக்கக் கூடிய வீட்டிலுள்ள இல்லத் தலைவியானவள் வேட்டுவச் சிறுவர்கள் மடுக்கரையிலே பிடித்துக் கொண்டு வந்த உடும்பின் இறைச்சியைச் சமைத்துத் தயிரோடு கூழையும் பிற நல்ல உணவுப் பொருள்களையும் செய்து பாணரோடு கலந்து உண்ண வேண்டும் என்ற விருப்பம் கொண்டிருப்பவள். அவளது கணவனும் அவளைப் போன்றே அரிய போரிலே பகைவர்களைத் தாக்கி அழித்து அப்போரிலே வேந்தர்களின் யானைகள் அணிந்து வந்த பொற்பட்டங்களைப் பறித்து வந்து அவற்றைப் பரிசிலர்க்கு வழங்கி மகிழும் வீரமும் ஈகையும் உடையவனாவான். ஆதலால் பாணனே! நீ அவனிடமே செல்வாயாக’ என்று கூறுகிறார்.

புலவரின் பாடலில் பழந்தமிழரின் பண்பாடன விருந்தோம்பல் சிறப்பும், இல்லறத்தின் மாண்பும் தமிழரின் ஈகைக் குணமும் சிறப்பாக எடுத்துரைக்கப்பெற்றிருப்பது போற்றுதற்குரியதாகும். புலவரின் புலமைக்கும் நன்றி மறவாத் தன்மைக்கும் இப்பாடல் சான்று பகர்வதாக உள்ளது. மேலும் இப்பாடலில் கணவனும் மனைவியும் ஒன்றுபட்ட உள்ளத்துடனும் எண்ணத்துடனும் இல்லறம் நடத்துகின்ற சிறப்பு புலவரால் குறிப்பிடப் பெற்றுள்ளது வியப்பிற்குரிய ஒன்றாகும். இப்புலவர் தாம் மட்டும் பரிசில் பெற்றது மட்டுமல்லாது தம்போற் பிறரும் பரிசில் பெறவேண்டும் என்ற உயர்ந்த விருப்பத்தின் காரணமாக பாணனை அவனிடம் ஆற்றுப்படுத்தும் முறை சிறப்பிற்குரியதாக உள்ளது. புலவரின் அகப்பாடல்களில் நான்கு பாடல்கள் தோழி கூற்றாகவும் ஒரு பாடல் தலைவி கூற்றாகவும் அமைந்துள்ளன. அதிலும் அகநானூற்றின் 355-ஆவது பாடல் மட்டும் பாலைத்திணைப் பாடலாகவும், மற்ற நான்கு பாடல்கள் குறிஞ்சித் திணைப் பாடல்களாகவும் அமைந்திருப்பது சிறப்பிற்குரியதாகும் இவ்வகைப் பாடல்கள் தலைவன் தலைவியின் பண்பு நலன்களை விளக்குகின்ற வண்ணம் அமைந்துள்ளன. இப்பாடல்களில் தலைவியின் கற்பின் திண்மை புலவரால் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. தலைவியின் எண்ணங்களைத் தோழி வெளிப்படுத்துமாறு அனைத்துப் பாடல்களும் அமைந்துள்ளன. இவ்வகையில் நற்றிணையில் அமைந்துள்ள புலவரின் பாடல் குறிப்பிடத்தக்கது.

தலைவன் தினைக் கொல்லையின் வேலிப்புறமாக வந்திருப்பதைத் தோழி அறிகின்றாள். அவனுக்குத் தலைவியை விரைவில் மணம் செய்து கொள்ளும் எண்ணம் தோன்றும் வகையில் அவனுக்குக் கேட்கும் வகையில் தலைவியிடம், ‘‘தோழி தினைப்புனத்தில் கதிரை அறுவடை செய்யும் பருவம் வந்தது. தினையின் மேல் உள்ள இலைகள் காய்ந்து போயின. காய்ந்த இலை அசையும் ஓசை மலையருவி ஒலித்தமை போன்று இருக்கின்றது. அதனால் நாம் இதனைவிட்டுவிட்டு நம் ஊருக்குத் திரும்பிச் செல்வோம் என்று எண்ணுகிறேன். இவ்வாறு இருக்கையில் வேங்கை மரத்தில் தினமும் காலையில் மலரும் புதிய பூ பொன் வேலை செய்யும் பொற்கொல்லனுடைய கைவினை வண்ணம்போல் மிக அழகாக இருக்கும். இந்நிலையில் நம்மை நீங்கிச் சென்ற தலைவனை நாம் எவ்வாறு காண்பது?’’ என்று தலைவியிடம் கூறுவது போன்று தலைவனுடைய காதுகளில் விழுமாறு கூறுகின்றாள் இதில் தலைவனைப் பார;த்து, தலைவியை விரைவில் மணம் முடித்துக் கொள்க என்று கூறும் தோழியின் உயரிய எண்ணம் வெளிப்பட்டு நிற்கின்றது. காய்ந்த தினை இலைகள் அசையும் ஓசைக்கு, ‘’தோடுபுலர;ந்து அருவியின் ஒலித்தல் ஆனா’ என்றும் வேங்கைப் பூ மலர்ந்திருப்பதற்கு, ‘‘பொன்செய் கம்மியன் கைவினை கடுப்ப’’என்றும் புலவர் உவமை கூறியிருப்பது சிறப்புடையதாக உள்ளது. மேலும் ஆசிரியர் இயற்கையைக் கூர்ந்து கவனிக்கும் திறத்தைப் புலப்படுத்துவதாகவும் இவ்வுவமைகள் அமைந்துள்ளன. இப்புலவரின் குறுந்தொகைப் பாடல் தலைவியின் பழிக்கஞ்சும் மனநிலையைப் படம்பிடித்துக்காட்டுகிறது. இப்பாடலும் தோழி கூற்றாக அமைந்திருப்பது நோக்கத்தக்கது. தோழியானவள் தலைவனுடைய நிலையை எண்ணி வருந்தினாள். பின்னர் தலைவியைப் பார்த்து, ‘‘தினைகிளி கடிதலின் பகலும் ஒல்லும்; இரவுநீ வருதலின் ஊறும் அஞ்சுவல்; யாங்கு செய்வாம் எம் இடும்பை நோய்க்கு? என ஆங்குயான் கூறிய அனைத்திற்குப் பிறிது செத்து

ஓங்குமலை நாடன் உயிர;த்தோன் மன்ற; ஐதேய் கம்ம யானே; கழிமுதுக் குறைமையும் பழியும் என்றிசினே’’ என்று நவில்கின்றாள். ‘‘தாய் தினைப்புனக் காவலுக்குத் தங்களைப் போகவிடாமையால் தலைவனைப் பகலில் காண்பது அரிதாயிற்று. இரவில் தலைவனுக்கு ஏதேனும் துன்பம் நேரும் என்பதால் தலைவி அஞ்சினாள். அதனால் இரவுக்குறியிலும் தலைவனைக் காண்பது அரிதாயிற்று. தலைவனைக் காணாது தலைவி வருந்தினாள். தலைவனும் பெருமூச்செறிந்தான். தலைவன் திருமணம் செய்து கொள்ளாது இரவிலும் பகலிலும் தலைவியைப் பார்த்துச் செல்வது பழியோடு வரும் இன்பமாகும். அதனால் தலைவன் உன்னை உடன் அழைத்துச் சென்று மணம் செய்து கொள்வதற்கு இசைவாயாக என்று தோழி தலைவியிடம் கூறுகின்றாள் தோழியின் பழிக்கஞ்சும் பண்பினை, ‘‘ஐதேய் கம்ம யானே! கழிமுதுக் குறைமையும் பழியும் என்றிசினே!’’ என்ற வரிகள் மூலம் புலவர் தெளிவுறுத்தியிருப்பது அவரின் புலப்பாட்டு நெறியைக் காட்டுவதாக உள்ளது எனலாம். மேலும் தோழி அறிவு நுட்பம் வாய்ந்தவள். பிறர் மனதில் என்ன கருத்தினைக் கொண்டிருக்கின்றனர் என்று அறிந்து கொண்டுவிடும் திறனுடையவள் என்பதனை,‘‘ஆங்கு யான் கூறிய அனைத்திற்குப் பிறிது செத்துஓங்குமலை நாடன் உயிர;த்தோன் மன்ற’’என்ற வரிகள் மூலம் புலவர் தெளிவுறுத்துகிறார்.

தலைவியை இரவிலும் பகலிலும் பார்க்க முடியவில்லையே என்று தலைவன் வருந்தி பெருமூச்செறிந்தான். அதனை உணர்ந்த தோழி தலைவன் எவ்வாறேனும் தலைவியை மணமுடித்தல் வேண்டும் என்ற நோக்கத்திலிருக்கிறான் என்பதனை அவனது செயலை வைத்து உணர்ந்து கொண்டு அதனைத் தலைவியிடம் எடுத்துரைத்து அவளைத் தலைவனின் கருத்துக்கு உடன்பட வைக்கின்றாள். இக்குறுந்தொகைப் பாடலில் குறிஞ்சித்திணையின் புணர்தலும் புணர்தல் நிமித்தமும் என்ற உரிப்பொருள் சிறந்து நிற்றலை நன்கு உணரலாம். ஒத்த அன்புடையாரின் எண்ணக் கருத்தை அவர்களைப் போன்று ஒத்த உணர்வுடையவர்களே உணர்வர் என்பதனை இப்பாடல் நமக்குத் தெளிவுறுத்துகின்றது. பழிக்கஞ்சி நாணும் தமிழ்ப் பண்பாட்டின் உயர்ந்த பண்பினை விளக்கும் கலைப்படைப்பாகவும் இக் குறுந்தொகைப் பாடல் அமைந்திலங்குகிறது எனலாம். இங்ஙனம் தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார் சிறந்த நன்பாட்டுப் புலவராகவும், பாடல்வழி பண்பாட்டை உணர்த்தும் பாவலராகவும் விளங்குகிறார்.

Be the first to comment on "புலவர் பொற்கொல்லன் வெண்ணாகனார்"

Leave a comment

Your email address will not be published.


*