விஸ்வாஸ் வித்யா2022

விஸ்வாஸ் வித்யா2022 மஹா விஸ்வகர்மா விருது வழங்கும் விழா!
விஸ்வாஸ் சார்பாக கடந்த 2 அக்டோபர் 2022 அன்று 19ஆம் ஆண்டு விஸ்வாஸ் வித்யா 2022 & மஹா விஸ்வகர்மா விருது வழங்கும் விழா பொள்ளாச்சி எல்ஐஜி காலனி மகாலிங்கபுரத்தில் உள்ள விஸ்வகர்மா கல்யாண மண்டபத்தில் சிறப்புடன் நடைபெற்றது. விழாவில் திருநெல்வேலி பரசமயக் கோளரிநாதர் ஆதீனத்தின் 32ஆம் பீடாதிபதி  விஸ்வகர்மா ஜகத்குரு ஶ்ரீலஶ்ரீ புத்தாத்மானந்த சரஸ்வதி சுவாமிகள் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு “மஹாவிஸ்வகர்மா” விருதினை வழங்கி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும்,கல்வி உதவித்தொகைகளும் அளித்து ஆசியுரை வழங்கினார்கள்.
முன்னதாக விஸ்வாஸ் மகளிர் மங்கல விளக்கேற்றி வைக்க நிசாரி இசைப்பள்ளி ஆசிரியர் ஶ்ரீசுரேன் அவர்களின் இறை வணக்கத்துடன் விழா துவங்கியது.
இணை செயலாளர் திரு.மது ஜெகதீஸ் அவர்கள் வரவேற்புரை நல்கிட அதை தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
விஸ்வாஸ் அமைப்பின் 20 ஆண்டு கால வளர்ச்சியையும், எதிர்வரும் செயல்பாடுகள் குறித்தும் விஸ்வாஸ் அமைப்பின் தலைவர் திரு. ஆறு.தர்மபூபதி அவர்கள் தனது தலைமையுரையில் அழகுற எடுத்துரைத்தார்.
தர்மபுரி பென்னாகரம் டாக்டர் எஸ்.கனகராஜ் அவர்கள் மருத்துவம், சமுதாய வளர்ச்சியில் ஆற்றிவரும் சேவையை பாராட்டி சுவாமிஜியின் திருக்கரங்களால் “மஹாவிஸ்வகர்மா” விருது வழங்கப்பட்டது.
உலகிற்கே சனாதன தர்மத்தை பறை சாற்றும் விஸ்வகர்மா சமூகத்தின் சிறப்புக்களை பதிவிட்டு, மாணவர்களும் சமுதாய மக்களும் சமூக மற்றும் தேசிய உணர்வோடு நமது எதிர்காலத்தை சிறப்பாக்கும் வண்ணம் அமைந்த சுவாமிஜியின் ஆசியுரை விழாவிற்கு மேலும் மெருகூட்டியது.
மஹா விஸ்வகர்மா விருது பெற்ற டாக்டர் எஸ்.கனகராஜ் அவர்கள் அறிவியல் பற்றிய நுட்பமான வியாக்கியானங்களை ஆன்மீகத்துடன் இணைத்து அனைவரும் வியக்கும் அளவிற்கு சமுதாய பெருமைகளை எடுத்துரைத்ததோடு விஸ்வகர்மன் யார்? என்ற தலைப்பில் இன்றைய கல்வி, தொழில், தேசபக்தி, அறம் ஆகியவற்றின் அவசியத்தை தனது ஏற்புரையில் தெளிவாக குறிப்பிட்டது சமுக மக்களிடையே பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
விருதாளர் & பரிசு, உதவித்தொகை பெறும் மாணவ மாணவிகளையும், விழாவின் சிறப்பையும் பொள்ளாச்சி விஸ்வப்பிரம்ம சமூக கல்யாண மண்டப ஸ்தாபன அறக்கட்டளையின் உயர்மட்டக்குழு உறுப்பினராகிய திரு.ஏ.டி.கபீர்தாஸ் அவர்கள் தனது வாழ்த்துரையில் வெளியிட்டார்கள்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் விஸ்வாஸ் அமைப்பிற்கு விண்ணப்பித்த அளவில் பத்தாம் வகுப்பு  +2 தேறியவர்களில் முதல் மூன்று இடத்திற்கான பரிசுகளும் சிறப்பு மதிப்பெண் பெற்றமைக்காக ஊக்கப்பரிசுகளும், தகுதி அடிப்படையில் மாணவர்கள் மேற்படிப்பு பயில உதவித் தொகைகளும் (சுமார் இரண்டு லட்சம்) வழங்கப்பட்டது.இவ்வாண்டு 67 மாணவ மாணவிகள் பயனடைந்தனர்.
விஸ்வாஸ் தொடர்பு அலுவலர் திரு.அன்பழகன் அவர்கள் அனைவருக்கும் நன்றி நவில பின் நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.
அனைவருக்கும் மதியவிருந்து அன்புடன் வழங்கப்பட்டது. விழாவில் உள்ளூர் சென்னை, கரூர், திண்டுக்கல், திருச்சி, அரக்கோணம் உள்ளிட்ட வெளியூர் சமூக அன்பர்கள் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேற்படி நிகழ்ச்சிகளை விஸ்வாஸ் பொதுச்செயலாளர் திரு.திருநாவுக்கரசு அவர்கள் அழகுற தொகுத்து வழங்கினார்.

1 Comment on "விஸ்வாஸ் வித்யா2022"

  1. அனைத்து தகவல்களும் அருமை.

Leave a comment

Your email address will not be published.


*