அநுமன் கொடி

வாயு  பகவானுக்கும், மஹாதவசியும், பதி விரதையுமான அஞ்சனா தேவிக்கும் ஜனித்த அநுமன் தன் கர்ப்ப காலம் முடிந்ததும் குழந்தை பிறவாமல் தாமதமாகி வேதனைப்படும் தன் மனைவியை கண்ட வாயு பகவான் ஏதும் தோன்றாதவாராகி மும்மூர்திகளையும் வேண்ட அவர்களாலும் இயலாது போகவே இது  ஏதோ “தேவ ரகசியமாக” இருக்கும் என்று எண்ணிய மும்மூர்த்திகள் பிரபஞ்சத்தில் சகல ஜீவ ராசிகளையும் சிருஷ்டித்து காக்கும் ஸ்ரீ விஸ்வகர்மாவை தியானித்தார்கள். ஸ்ரீவிஸ்வகர்மா தோன்றி அஞ்சனா தேவியின் மூர்ச்சையை சஞ்சீவி மூலிகைகளால் தெளிவித்து சிசுவை நோக்கி,”வெளிவர ஏன்? தாமதமெனக் “கேட்க அச்சிசு, “ஓ! விஸ்வகர்மப் பிரபுவே! நமஸ்கரிக்கின்றேன். நான் என் மாதாவின் கருவறையில் நிர்வாணமாக இருக்கின்றேன். அப்படியே நான் வெளி வந்தால் மிகுந்த பாதகனாவேன், ஆகையால்  ஐயன்மீர்! எனக்கு பொன்னாலான கௌபீனத்துடன், பொற்பூணூல், குண்டல, கமண்டலங்களுடன் என் உடல் பருமனையும் குறைத்து என் அன்னைக்கு வேதனையின்றி நான் வெளிப்பட அநுக்கிரகம் செய்யவேண்டும். இதனால் நான் தேவரீருக்கு நன்றி மறவாமல் உமக்கு என்றென்றும் நன்றி உடையவனாக உமது துவாஜத்தில் (கொடியில்) இருப்பேன்” எனவும் குழந்தை சத்தியம் செய்தது.
இதைக் கேட்ட ஸ்ரீ விஸ்வகர்மா மனமகிழ்ந்து அஞ்சனை வயிற்றில் பிறந்ததால் ஆஞ்சநேயர் என்றும் சஞ்சீவ மூலிகைகளால் மயக்கம் தெளிந்து பேசியதால் சஞ்சீவராயன் எனவும் பெயர் பூண்டு மரண பயமின்றி சிரஞ்சீவியாக வாழ்வாய்  என ஆசிர்வதித்து அருளினார். ஸ்ரீ விஸ்வகர்மாவிற்க்கு அளித்த சத்திய வாக்குபடியே அநுமன் அவரது கொடியில் அரோகணித்தார்.  இதுவே அநுமர் விஸ்வகுலக் கொடியில் இருக்கும் காரணமாகும்.
இதை “ஸ்காந்தம் நாகர காண்டம் விஸ்வகர்மோ பாக்யானத்தில்” கூறப்பட்டுள்ளது. இத்துடன் கம்ப ராமயண உத்திர காண்டத்தில் அநுமப்படலத்தில் ஸ்ரீவிஸ்வகர்மா அநுமனுக்கு வரம் அளித்ததை கூறுமிடத்து,
வாதாமகன் சாவொழிகவென வானோர் தச்சன் வரங்கொடுத்தான்” என்பதாலும், விஸ்வபுராணம் பஞ்ச கிருத்திய காண்டத்தில், “அடுக்கிய அகழி சூழ்ந்த அழகுள்ள சிகரி தோறும் கொடுத்திடும் வானமுட்ட வனுமந்தத் துவஜ நாட்டி என்பதாலும் ஸ்ரீவிஸ்வகர்ம, அநுமன் தொடர்பும் விஸ்வகுலக  அநுமக் கொடிபற்றியும் அறியப்படுகிறது.
கொடி அமைப்பைப்பற்றி, “மூலஸ்தம்ப நிர்ணயத்திலும், “ஸ்காந்த புராணம் நாகரகாண்டம் த்ரீதியாத்யாய ஸ்லோகத்திலும்” முறைப்படுத்தப் பட்டுள்ளது. அநுமன் உருவம் கொண்ட,  ஐந்து நிறங்களைக் கொண்ட, (மனு, மய, துவஷ்டா, சில்பி, விஸ்வக்ஞ)  அநுமக் கொடி விஸ்வகுலக் கொடியாக முறைப் படுத்தப்பட்டுள்ளது.

1 Comment on "அநுமன் கொடி"

  1. சூப்பர்

Leave a comment

Your email address will not be published.


*