ஸ்தபதி

சிற்பிகளில் நான்கு படிநிலைகள் உண்டு. ஸ்தபதி, சூத்ரகாரி, வர்தஹி, தச்சன். தொடக்க நிலையில் இருப்பவர் தச்சன். படிப்படியாக மேலே சென்று, அனைத்துக்கும் உச்சத்தில் உள்ள நிலையை அடைபவர் ஸ்தபதி. ரிக் வேதத்திலும் அதர்வ வேதத்திலும் ஸ்தபதி என்ற சொல் தலைமையானவர் என்ற பொருளில் இடம்பெறுகிறது.
ஸ்தபதிக்கு என்ன குணங்கள், தகுதிகள் இருக்கவேண்டும்?
* ஸ்தபதி என்றால் கோவில்களைக் கட்டுபவர் என்று பொருள். * இவர் விஸ்வகர்மா குலத்தில் பிறந்தவராக இருக்கவேண்டும்
* உயர்ந்த குடும்பத்தில் பிறந்திருக்கவேண்டும்.
* வேதங்களில் விற்பன்னராக இருக்கவேண்டும்.
* சிற்ப சாத்திரங்களைக் கரைகண்டவராக இருக்கவேண்டும்.
* கணிதம், சோதிடம், வானியல், பல்வேறு தத்துவங்கள், பல்வேறு பொறியியல் துறைகள் ஆகியவற்றில் நல்ல தேர்ச்சி பெற்றவராக இருக்கவேண்டும்.
* பரிவு, பாசம், பிறர்மீது கருணை போன்ற குணங்களை உடையவராக இருக்கவேண்டும்.
* உடலில் எந்த ஊனமும் இருக்கக்கூடாது.
* சூதாட்டம், குடி, பெண்ணாசை போன்ற எதுவும் கூடாது.
சிற்ப சாத்திரங்கள் எவை எவை?
* விஸ்வகர்ம பிரகாசா
* விஸ்வகர்ம தர்சனா
* மானசாரா
* மாயாமதா
* சகலாதிகாரா
* சரஸ்வதிய சித்ரகர்ம சாஸ்த்ரா
* சமராங்கன சூத்ரதாரா
* சில்பரத்னகோசா
* சில்ப ப்ரகாசா
* ஸ்ரீ காஷ்யப சில்ப சாஸ்த்ரா
* விஸ்வகர்ம வாஸ்து சாஸ்த்ரா
* கார்கேய ஆகமா
* சில்பவித்யா ரஹஸ்யோபனிஷத்
* மூலஸ்தம்ப நிர்ணயா
இவை பலவும் இன்று சமஸ்கிருத மூல நூல் வடிவில் கிடைக்கின்றன. உமாபதி, பிறருடன் சேர்ந்து ஒரு நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். மேலே உள்ள பட்டியலில் ஓரிரு நூல்கள் இன்று கிடைக்காமல் இருக்கலாம்.
ஒரு சிற்பி, சிற்பத்தில் எவற்றையெல்லாம் கொண்டுவருவார்?
* ஆச்சர்ய கர்மா = வியப்பு
* சூக்ஷ்ம கர்மா = நுண்மை
* பஹுரூபா = பல வடிவம்
* சித்ரரூபா = ஒளி
* கௌசலா = மென்மை
* கர்ம கௌசலா = இயக்கம்
* யோகா = தியானம்
ஸ்தபதி எப்படி சிற்பத்தை அல்லது கட்டடத்தை வடிவமைப்பார்?
* முதலில் தியானத்தில் அமர்வார்.
* அடுத்து, பிரார்த்தனை மூலம் சமாதி நிலையை அடைவார்.
* சுயத்தை – ஆத்மனை அறியும் நிலை ஏற்படும். அப்போது கட்டட அல்லது சிற்ப வடிவம் அவருக்குப் புலனாகும்.
* புலனான வடிவத்தை அவர் பருப்பொருளில் வடிப்பார்.
* பக்தர் அந்த வடிவைக் காணும்போது, அவர் சமாதி நிலையை அடைந்து ஆத்ம தரிசனத்தைப் பெறுவார்.
தியானம் செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட வழிமுறை உண்டு. விஸ்வகர்மா என்னும் பிரஜாபதி – அவரது மகன் த்வஷ்டா என்னும் விஸ்வரூபா, அவரது மகன்கள் ரிபு, விபவன், வாஜா ஆகியோரை மனத்தில் இருத்தி பிரார்த்தனை செய்யவேண்டும்.
இந்த வழிமுறைகளை உமாபதி விளக்கியபிறகு, மாமல்லபுரத்தில் காணப்படும் சில துர்க்கை சிற்பங்களைக் காண்பித்தார். அவற்றில் நேராக நிற்கும் வடிவம், சற்றே வளைந்து நிற்கும் வடிவம் ஆகியவற்றைக் காண்பித்தார். பிறகு, மஹிஷாசுரமர்த்தினி மண்டபத்தில் இருக்கும் சிற்ப முழுமையைக் காண்பித்து முழு கேன்வாஸையும் விளக்கினார்.
எப்படி திரையில் கிடைமட்டத்திலும், நெடுக்காகவும், மூலைவிட்டத்திலும் பேலன்ஸ் – சம நிலை உள்ளது என்பதை விளக்கினார். சிற்பத்துக்கு மையம் – மர்மஸ்தானம் என்பது எவ்வளவு முக்கியம் (பார்வை அங்குதான் செல்லும்) என்றும் அது திரையின் மையமாக இருக்கவேண்டியது இல்லை என்றும் விளக்கினார். முந்தைய துர்க்கை சிற்பத்தில், துர்க்கையில் தொப்புள்தான் மர்மஸ்தானம். மேலே உள்ள படத்தில் துர்க்கையின் சிங்கம்தான் மர்மஸ்தானம்.
எப்படி சிற்பத்தில், இயக்கம் காண்பிக்கப்படுகிறது – துர்க்கையின் வில் ஏந்திய கையில் கொடுக்கப்படும் அழுத்தம், மஹிஷனின் வளைந்த காலில் கொடுக்கப்படும் அழுத்தம் ஆகியவை இதைக் காண்பிக்க உதவுகின்றன. துர்க்கையும் மஹிஷனும் மற்றவர்களைவிட அளவில் பெரியதாகச் செய்யப்பட்டுள்ளனர். காரணம் குவியம் அவர்கள்மேல் இருக்கவேண்டும் என்பதால். பூதகணங்கள் பலவாகச் செய்யப்பட்டிருந்தாலும் அவை ஒவ்வொன்றும் ஒரேமாதிரியாக இல்லாமல் வித்தியாசமாக உள்ளன.
துர்க்கையிடம் மூன்றுவித ஆயுதங்களும் உள்ளன. அதாவது ஒன்று எய்தபின் மீண்டும் திரும்பி வராது. ஒன்று கையிலேயே இருக்கும். மற்றொன்று, எய்தபின் எதிராளியைக் கொன்று, பின் மீண்டும் திரும்பி எய்தவரிடமே வந்துசேர்வது.
சிற்பத்தில் சில இடங்களில் ஆழத்தை அதிகரிப்பதன்மூலம் emphasis-ஐ அதிகப்படுத்தலாம். அதனால் கவனம் அங்கே அதிகம் குவியும். சிங்கம், மஹிஷனின் கால்களுக்கு அருகில், துர்க்கைக்கு அருகில் – இங்கெல்லாம் ஆழம் அதிகமாக உள்ளது.
சில கோடுகளின் உதவியுடன் சிற்பத்தின் சீரொருமையை (symmetry) நன்கு விளக்கினார். 

( K P உமாபதி ஆச்சார்யா அவர்களின் கருத்தரங்கிலிருந்து)

 

 

1 Comment on "ஸ்தபதி"

  1. கால பைரவர் சன்னிதி எந்த திசை நோக்கி இருக்கவேண்டும்

Leave a Reply to ramjee.N ( RAMASUBRAMANIA SHARMA) Cancel reply

Your email address will not be published.


*