
நிகழ்ந்தது. எதன் காரணமாகவோ தேர் மிகக் கடுமையாக ஒருமுறை குலுங்கியது. அந்தக் குலுங்கலில் செங்கோல் ஏந்திய சிற்பியார் நிலை தடுமாறிக் கீழே விழுந்தார். தேரை எவராலும் நிறுத்த முடியவில்லை. முட்டுக்கட்டை, ஆரைக்கோல் போடுவோர் அலமலந்து நிற்க, அத்தேர் சிற்பிமீது ஏறி இறங்கி, நசுக்கிய பிறகுதான் நின்றது. மக்கள் பதறியெழுப்பிய ஆஹாஹாம், ‘ஓ’வென்ற அலறல், ‘ஐயோ’ என்னும் பரிதாப ஒலிகளுக்கு நடுவே மருது பாண்டியர் இரு வரும் பாய்ந்தோடிச் சிற்பியருகே மண்டியிட்டு அமர்ந்தனர். திருஷ்டி கழிக்க ஆரத்தி கொட்டியது போன்று செங்குருதி பெருகி வழிந்த நிலையிலும், உயிரைக் கையில் பிடித்தபடி குப்பு முத்து ஆசாரியார், ராஜ முத்திரைக் கணையாழியையும் செங்கோலையும் பெரிய மருதுவிடம் ஒப்படைத்தபடி, “அரசே! நான் தேர் செய்யத் தொடங்கியதும், முதல் சிற்பமான விநாயகரின் தும்பிக்கை உடைந்துபோயிற்று. உடனே நான் ஜோதிட சாஸ்திரப்படி கணக்கிட்டுப் பிரச்னம் பார்த்தேன். இந்த ஒச்சம் அரசன் உயிரைக் காவு வாங்கும்’ என்று பதில் வந்தது. நம்பிக்கையோடு தேரைச் செய்து முடித்தாலும் ஜோதிடப்படி, நாடாளும் தங்கள் உயிருக்கு ஊறு நேரக் கூடாது என்று எண்ணி, மிகுந்த துணிவுடன், சில மணி நேரம் நானே மன்னனாகும் நிலையை விரும்பிக் கேட்டுப் பெற்றேன். இனி மக்கள் தங்கள் உயிராகக் கருதும் மருது பாண்டியருக்கு ஆபத்தில்லை என்கிற மகிழ்வோடு நான் என் உயிரை ஈசனுக்கு அர்ப்பணிக்கிறேன்” என்றார். அக்கணமே சிற்பியாரின் ஆவி பிரிந்தது. மன்னன் உயிரைக் காக்கத் தன் இன்னுயிரை நீத்த அந்தச் சிற்பியாரின் தியாக உள்ளம் கண்டு மக்கள் கண்ணீர் உகுத்தனர். இன்னொரு தேருலா போன்று சிற்பியாரின் இறுதி ஊர்வலம் நிகழ்ந்தது.