திருச்செந்தூர் வட்டாரத்தில் பாடப்படும் என்ற வில்லுப்பாட்டு விஸ்வகர்மா சமூகத்தை சார்ந்த ஆறுமுக ஆச்சாரி என்ற தச்சரை பற்றிய சுவையான செய்திகளை கூறுகிரது. முன்னொரு காலத்தில், செந்திலாண்டவர் கோயிலில் கொடிமரம் இல்லாத நிலை தோன்றியதால் மாசித் திருவிழா நடை பெறவில்லை. ஆகவே ஊர்மக்கள் ஒன்றுகூடி, திருச்செந்தூரில் தச்சுத்தொழிலில், தலை சிறந்தவரும், சிறந்த முருக பக்தருமான ஆறுமுக ஆச்சாரி என்பவரிடம் சென்று செந்தில் முருகன் கோயிலுக்குச் சிறந்த முறையில் கொடிமரம் ஓன்று செய்து தருமாறு கேட்டுக்கொண்டனர். இத்திருப்பணியை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்ட ஆறுமுக ஆச்சாரி தமக்குத் துணையாக இருபது நபர்களைத் தேர்ந்தெடுத்தார். தகுதியான மரத்தைத் தேர்ந்தெடுத்து, வெட்டிக்கொண்டு வருவதற்காக இருபத்தோரு நபர்களைக் கொண்ட அந்தக்குழு மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள காக்காச்சி மலைப்பகுதிக்கு ஆறுமுக ஆச்சாரி தலைமையில் புறப்பட ஆயத்தமாயிற்று.