அண்ணன் தனது தங்கைக்கு தரும் அறிவுரைகள் அடங்கியதாக இந்தப் பாடல் வெளிப்பட்டது. இந்தப்பாடல் அன்றைக்கு பட்டித் தொட்டி எங்கும் போய் முட்டியது. இதையும் மீறி ஒவ்வொரு திருமண வீட்டிலும் மங்கல இசையாக நின்று நிலைத்தது. இந்தப் பாடலை பாடிய போது திருச்சி லோகநாதனுக்கு 34 வயது. இப்படி திரை இசை பின்னணி உலகம் இருக்கும் வரை அழியாத புகழை ஈட்டிய லோகநாதனின், தந்தை பெயர் சுப்பிரமணியன். 1924 ஆம் ஆண்டு ஜூலை 24ம் நாள் விஸ்வகர்மா சமூகத்தில் பிறந்த திருச்சி லோகநாதனுக்கு அப்பாவின் நகை செய்யும் தொழிலில் ஆர்வமில்லை. திருச்சி மலைக்கோட்டைக்குப் பக்கத்தில் தான் வீடு. மனதின் அளவை விட, மனதுக்குள் இருந்த சங்கீதப் பித்து, மலையளவு இருந்தது. அரை நிஜார் பைகளுக்குள்ளே அந்தக்காலத்து இசை ஞானியான ஜி.ராமநாதனின் பாடல்களை நிரப்பி வைத்துக்கொண்டு, எப்போதும் பாடிக்கொண்டே இருப்பார். ‘லோகு நல்லாப் பாடுறாம்பா. எங்கே… ஒரு பாட்டுப் பாடு லோகு’ என்று கேட்டதும் காவிரி வெள்ளமென கரை புரண்டோடி வந்தது போல், உதடு தாண்டி வந்து விழுந்தன பாட்டுகள். கேட்டதும் பாடியதும் முதல் முயற்சி; பயிற்சி. பின்னர், நடராஜன் என்பவரிடம் சங்கீதம் பயின்றார். அங்கே தான் இன்னும் இன்னுமாகப் பட்டை தீட்டப்பட்டார். அந்தச் சிறுவயதிலேயே உச்ச ஸ்தாயிக்குச் சென்றுவிட்டு, அழகாகக் கீழிறங்கிய சங்கதிகளில் சொக்கிப் போனார்கள் திருச்சியில். காலமும் நேரமும் சேர்ந்து வந்தது. எந்த ஜி.ராமநாதனின் இசையில் திளைத்தாரோ… அதே ராமநாதன் இசையில் முதன் முதலாகப் பாடினார். அந்தப் பாட்டு… ‘வாராய் நீ வாராய்… போகுமிடம் வெகு தூரமில்லை… நீ வாராய்’! ‘வாராய்….’ என்று திருச்சி லோகநாதன் குரலுக்காகவே ஒவ்வொரு முறையும் தியேட்டருக்கு ஓடி வந்தார்கள் ரசிகர்கள். வாய்ப்புகளும் அப்படித்தான் வந்தன அவருக்கு. உற்சாகமான பாடல், வாழ்க்கையையே வெறுத்த பாடல்… இந்த இரண்டும் கிழக்கு, மேற்கு. ஆனால், இந்த இரண்டுக்கும் பொருந்துகிற குரலைக் கொண்டவர் தான் திருச்சி லோகநாதன். ‘ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே’ என்று இவர் பாடினார். டெண்ட் கொட்டகையில் மணல் திட்டில் உட்கார்ந்திருந்த ரசிகர்களை அப்படியே ஓடத்தில் ஏற்றிக்கொண்டு ஒரு ரவுண்டு வருவார்.