மஹாவிஸ்வகர்மா ஸ்ரீ விருது 2026 பிரம்மஸ்ரீ டி டி பரந்தாமன் அவர்களுக்கு வழங்கும் விழா
திருச்செங்கோடு PRP ரிக்ஸ் மேலாண் இயக்குனர் பிரம்மஸ்ரீ TT பரந்தாமன் அவர்கள் ஆற்றி வரும் சமூகசேவை பாராட்டி “மஹாவிஸ்வகர்மா ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
பிரம்மஸ்ரீ T.T. பரந்தாமன் அவர்கள்
சக்தியும் சைவமும் இணைந்து அருள் வழங்கும் திருச்செங்கோட்டில் பிரபல சமூகப்பெரியவர் பிரம்மஸ்ரீ T.P.தங்கராஜ் திருமதி யமுனா தம்பதியரின் திருமகன் ஆவார். இயந்திரப் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றதோடு அகமதாபாத் இந்திய மேலாண்மைக் கழகத்தில் (IIMA) நிர்வாக மேலாண்மை பயின்றவர். தனது தந்தையார் நிறுவிய நீர் கிணறு, கனிம ஆய்வு மற்றும் புவி தொழில்நுட்ப துளையிடும் கருவிகள் தயாரிக்கும் PRD ரிக்ஸ் நிறுவனத்தை தந்தையுடன் இணைந்து மிகுந்த ஈடுபாட்டுடன் பல நிலைகளில் உயர்த்திய பெருமைக்குரியவர். இவரது நிறுவனம் 75 நாடுகளில் 2000 ரிக் இயந்திரங்களை ஏற்றுமதி செய்ததோடு, தமிழகத்தில் இரண்டும் மத்தியபிரதேசம் இந்தூரில் ஒன்றும் என மூன்று உற்பத்தி ஆலைகளின் வாயிலாகவும், வெளிநாட்டு சேவைகள் மூலமாகவும் 1100 குடும்பங்களில் ஒளி ஏற்றி வைத்து ஓர் முன்மாதிரி நிறுவனமாகத் திகழ்கிறது. இதுமட்டுமல்லாது தேச நலன் கருதி அண்மையில் உத்ரகாண்டில் ஏற்பட்ட சுரங்கத்தொழிலாளர்கள் மீட்பு நடவடிக்கையில் 40 தொழிலாளர்களை பத்திரமாக மீட்டெடுத்ததில் முக்கியப்பங்காற்றியது குறிப்பிடத்தக்கது. இந்திய அரசின் பொறியியல் மேம்பாட்டுக்கழகத்தின் 2021 & 2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஏற்றுமதி செயல் திறனுக்கான தேசிய விருதை பெற்றது இந்நிறுவனத்தின் ஓர் மைல்கல் ஆகும். தொழில் துறை மட்டுமல்லாது விளையாட்டுத்துறையிலும் குறிப்பாக தடகளம், கூடைப்பந்து ஆகியவற்றில் சிறந்து விளையாடி வெற்றி கண்டதோடு அதன் சங்க அமைப்பு பலவற்றில் பொறுப்பு வகித்து சேவை ஆற்றி வருவதோடு, இவரது தந்தையாரைப் போன்று தனது வாழ்க்கை மகுடத்தில் ஓர் மாணிக்கக் கல்லாக நமது விஸ்வகர்மா சமூக வளர்ச்சியில் மிகுந்த ஈடுபாடு கொண்டு பல நிலைகளில் உதவி வரும் பெருமகனார். ஆன்மீக நாட்டத்தின் பால் பல ஆலயங்களுக்கு திருப்பணி செய்வித்தும் புகழ் மிக்க திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேர் புதுப்பொலிவுடன் பவனி வர முக்கிய காரணியாக விளங்கிய பக்தியாளர். பல விருதுகளுக்கு பெருமை சேர்த்து அஷ்டாவதானியாகத் திகழும் பிரம்மஸ்ரீ T.T. பரந்தாமன் அவர்களை விஸ்வாஸ் உளமாற வாழ்த்தி மகிழ்கிறது.

